நகரத்துப் பேத்திக்கும் கிராமத்து பாட்டிக்கும் இடையேயான மோதலும் காதலும்! – செத்தும் ஆயிரம் பொன் படம் ஒரு பார்வை!

a view on sethum-aayiram-pon movie

நகரத்துப் பேத்திக்கும் கிராமத்து பாட்டிக்கும் இடையேயான மோதலும் காதலும்! – செத்தும் ஆயிரம் பொன் படம் ஒரு பார்வை! 

தமிழ் சினிமா விமர்சகர்கள் எல்லோரும் ஏதாவது ஒரு நல்ல படம் வந்து விட்டால் “தமிழ்சினிமாவில் எப்போதாவதுதான் இந்த மாதிரி குறிஞ்சி மலர் பூக்கும், அப்படிப்பட்ட குறிஞ்சி மலர் தான் இந்தப் படம்” என்று அந்தப் படத்தை சிறப்பித்து எழுதுவார்கள். அதைப்போலவே  பல ஆண்டுகளுக்குப் பிறகு  சினிமாவில் பூத்திருக்கும் குறிஞ்சி மலர் என்றால் அது கண்டிப்பாக நிவேதிதா நடித்த “செத்தும் ஆயிரம் பொன்” படம் தான். 

இணையதள விமர்சனங்களை பார்த்து தான் “செத்தும் ஆயிரம் பொன்” படம் பார்க்க நேரிட்டது. ஒரு கிடாயின் கருணை மனு, கேடி என்கிற கருப்புதுரை, பாரம் படத்திற்குப் பிறகு இந்தப் படத்தை அதிகம் ரசிக்க முடிந்தது. சினிமாவில் மேக்கப் மேனாக இருக்கும் மீரா என்கிற சென்னை பெண் செல்போன் டவர்கூட இல்லாத ஒரு கிராமத்திற்கு கிருஷ்ணவேணி எனும் தன்னுடைய பாட்டியை தேடி வருகிறாள். ஊருக்குள் நுழைந்த பிறகு தான் தெரிகிறது தன்னுடைய பாட்டி ஒப்பாரி பாடுபவள் என்று. இந்த சென்னை பெண்ணுக்கும் (கிராமத்திற்கு வந்ததும் அவள் பெயர் குஞ்சம்மாவாக மாறிவிடுகிறது) ஒப்பாரிக் கிழவிக்கும் இடையில் நடக்கும் மோதலும் காதலும் தான் கதை. 

நடிகர் நடிகைகள் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக குஞ்சம்மாவும் ஒப்பாரிக்கிழவியும் சினிமாத்தனம் இல்லாத ஈகோ பிடித்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்துள்ளார்கள். கிராமத்துக்குள் நுழைந்து வாழ்ந்ததை போன்ற உணர்வை தருகிறது ஒளிப்பதிவு. போதுமான இடங்களில் மட்டுமே ஒலிக்கும் பின்னணி இசையும் நுணுக்கமான எடிட்டிங்கும் படத்திற்கு பலம். 

ஒருவரின் உடலை அடக்கம் செய்வதற்கு முன் முகத்திற்கு சாயம் பூசி அடக்கம் செய்வார்கள் என்பது புதிய தகவலாக இருக்கிறது. எந்த பகுதியில் இப்படியொரு வழக்கம் இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. படத்தின் மையக்கதை தி வே ஹோம், தலைமுறைகள், கேடி என்கிற கருப்புதுரை, பாரம் ஆகிய படங்களை நினைவூட்டியது. இந்தப் படங்களில் எல்லாம் தாத்தா – பேரன், பாட்டி – பேரன் என்ற உறவு முறையை காட்டி இருப்பார்கள். ஆனால் செத்தும் ஆயிரம் பொன் படத்தில் சற்று வித்தியாசமாக பாட்டி – பேத்தி உறவு காட்டப்பட்டிருக்கிறது. இந்த உறவின் அழகை விவரிக்கும் காட்சிகளை அதிகம் ரசிக்க முடிந்தது. 

படத்தின் முதல் பத்து நிமிடங்கள் அநியாயத்திற்கு மெதுவாக செல்கின்றன. அந்தப் பத்து நிமிடங்களுக்குப் பிறகு நல்ல சினிமா ரசிகர்களுக்கு விருந்து தான். குபேரன் கூடவே சுத்திக் கொண்டிருக்கும் சிறுமி எப்படி செத்தால், கிருஷ்ணவேணி பாட்டி எப்படி செத்தால் என்பதை இன்னும் தெளிவாக காட்டி இருக்கலாம். கிளைமேக்ஸில் கிருஷ்ணவேணி பாட்டிக்கு ஊர் வழக்கப்படி குபேரன் மேக்கப் போடுவானா அல்லது சொந்தப் பேத்தியான குஞ்சம்மா போடுவாளா என்று எதிர்பார்க்க சற்றும் எதிர்பார்க்காத வேறொன்று நடக்கிறது. 

படம் பார்த்து முடித்ததும் ஒரு சிறுகதை படித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. சினிமா வழியாக இந்த உணர்வை அவ்வளவு எளிதில் யாராலும் தந்துவிட முடியாது. நம் வாழ்வியலை மனித உறவுகளை மிக ஆழமாக கவனித்து ரசித்து எழுதினால் மட்டுமே இப்படியொரு படைப்பு உருவாக்க முடியும். மிக எளிமையான அழகான கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். 

கிராமத்திலிருந்து கிளம்புவதற்கு முன் குஞ்சம்மா குபேரனுக்கு ஒரு கிஸ் கொடுத்திருந்தால் இன்னும் அதிகம் மகிழ்ந்திருக்கலாம். 

ஓடிடி ரிலீஸ்: 

ஓடிடி ரிலீஸ் குறித்துப் பேசி ஆக வேண்டும். கொரோனா வருவதற்கு முன்பே, அதிக எண்ணிக்கையிலான படங்களின் உருவாக்கம் காரணமாக சரியான எண்ணிக்கையில் தியேட்டர் கிடைக்காமல் சில படங்கள் தடுமாறின. பரியேறும் பெருமாள் கதிர், மெட்ராஸ் கலையரசன், சென்னை 28 வைபவ் போன்ற ஓரளவுக்கு பிரபலமான நடிகர்களின் படங்களுக்கே தியேட்டர் கிடைப்பதில்லை. கதிரின் சிகை படம், கலையின் களவு படம் zee5 தளத்தில் நேரடியாக வெளியானது. வைபவ்வின் ஆர்.கே.நகர் படமும் நேரடியாக ஓடிடியில் தான் ரிலீஸ் ஆனது. இதை தொடர்ந்து கொரோனா காரணமாக, ஜோ – பார்த்திபன் கூட்டணியில் உருவான பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின், வரலட்சுமி சரத்குமாரின் டேனி, காயத்ரி ரகுராமின் யாதுமாகி நின்றாள், வைபவ்வின் லாக்கப் போன்ற படங்கள் அடுத்தடுத்து ஓடிடியில் ரிலீஸ் ஆகி அட்டர்பிளாப் ஆகின. ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள் என்றால் அது கண்டிப்பாக மொக்கை படமாக தான் இருக்கும் என்று இப்போது எல்லோரும் கூறி வருகின்றனர். 

ஓடிடியில் ரிலீசானதாலோ என்னவோ அந்தப் படங்கள் பெரிய அளவில் கவனம் பெறாமல் போய்விட்டது. இப்படிப்பட்ட படங்களுக்கே இந்த நிலைமை என்றால் துளியும் ஹீரோயிசம் இல்லாத இரண்டு பெண்களுக்கு இடையேயான கதையை சொல்லும் இந்தப் படத்தின் நிலைமையை யோசித்துப் பார்த்தாலே கஷ்டமாய் இருக்கிறது. 

சரி அந்த விஷயம் அப்படியே இருக்கட்டும். ஓடிடியில் நேரடியாக வெளியான இந்தப் படத்திற்கு விருதுகள் எதாவாது கிடைக்குமா? காரணம் இந்த படம் இன்னும் சென்சார் போர்டு சர்டிபிகேட் வாங்கியதாக தெரியவில்லை. அந்த சர்டிபிகேட் இல்லாமல் படம் தேசிய விருது குழுவுக்கு எப்படி பரிசீலிக்கப்படும் என்ற கேள்வி எழுகிறது. 

நல்ல நுண்ணறிவு கொண்டுள்ள செத்தும் ஆயிரம் பொன் படத்தின் இயக்குனருக்கு உண்மையில் எதாவது லாபம் கிடைத்ததா? விருதுகள் ஏதேனும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விகளும் எழுகிறது. இந்தப் படத்தின் இயக்குனர் அடுத்த படம் எப்போது எடுக்கப் போகிறார்? நல்ல கதையறிவு கொண்ட பெரிய நடிகர்கள் இந்தப் படத்தை பார்த்தார்களா? பாராட்டினார்களா? இப்படி, இந்த மாதிரியான இயக்குனர்களை தமிழ் சினிமா தவற விட்டுவிடக் கூடாது என்று நல்ல சினிமா ரசிகர்களின் மனம் அடித்துக் கொள்கிறது. 

இந்த மாதிரி படங்கள் எல்லாம் திரைப்பட விழாக்களுக்காகவே எடுக்கப்பட்டது. அவற்றின் வணிக வெற்றி பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் திரைப்பட விழாக்களில் பங்கேற்று பரிசு பெற்று சம்பாதித்து கொள்வார்கள் என்று சிலர் சொல்கிறார்கள். இந்த மாதிரி படங்கள் எல்லாம் சர்வதேசத் திரைப்பட விழாவிற்காக எடுக்கப்பட்ட படம், இந்த மாதிரி படங்கள் எல்லாம் தியேட்டர்களுக்கு எடுக்கப்பட்ட ஒரு படம் என்ற வரையறையை உருவாக்கி வைத்தவர்கள் யார்? இப்படி ஒரு வரையறையை வைத்து கோடு கிழித்து இந்த கோட்டை தாண்டி நீங்கள் போக கூடாது என்று சொன்னால் கலை எப்படி மென்மேலும் வளரும். ஏதேதோ திரைப்படங்களை கல்லூரி மாணவர்களுக்கு சில கல்லூரிகள் திரை இட்டுக் காட்டுகிறார்கள். ஆனால் இந்த மாதிரியான தமிழகத்தின் உண்மையான வாழ்வியலை பிரதிபலிக்கும் படங்களை யாரும் கண்டுகொள்ளாமல் இருக்கும் போது தான் “இதைவிட சிறப்பான ஒரு படம் வேற எப்படி எடுக்க முடியும்?” என்கிற ஒரு கோபம் வருகிறது. 

ஒப்பாரி கலைஞர்கள், சாயம் பூசறவங்க என்று சொல்லப்படும் ஒப்பனைக் கலைஞர்கள்…  இவர்களைப் பற்றி இந்த தலைமுறை இளைஞர்களுக்கு என்ன தெரியும்? அவர்களுக்கு பெரியவர்களும் வீட்டில் இருக்கும் அம்மா அப்பாக்களும் பெரிதாய் சொல்ல போவதில்லை. இந்த காலகட்டத்திலும் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் கிராமத்து ஒப்பனை கலைஞர்கள் இந்த படங்களை பார்த்திருப்பார்களா? சாயம் பூசறவங்க என்று சொல்லப்படும் ஒப்பனைக் கலைஞர்களும் இந்த படங்களை பார்த்து இருப்பார்களா? அல்லது அவர்களின் சந்ததி மக்களாவது இந்த படங்கள் பார்த்திருக்கிறார்களா?  இந்த படம் குறித்து அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்து கொண்டே போகின்றன. ஆனால் இப்படி யார் பார்க்க வேண்டுமோ, அந்த எளிய மக்களே பார்க்காதபோது…  படம் அவர்களைச் சென்று அடையாத போது…  எதற்கு அவ்வளவு சிரத்தை எடுத்து இந்த மாதிரி படங்கள் எடுக்க வேண்டும்? ஏன் இந்த படத்தை எடுத்த குழுவினருக்கு ஒரு குத்துப்பாட்டு, ஒரு வெளிநாட்டு டூயட் சாங்,  ஒரு கில்மா சாங், 2 சண்டைக்காட்சிகள், நான்கு மொக்கை காமெடி கள் போன்றவற்றை வைத்து ஒரு குப்பை படம் எடுக்கத் தெரியாதா? இந்த படத்தை மென்மேலும் பல இடங்களுக்கு, எளிய மக்களுக்கு என்று எல்லோருக்கும் கிடைக்க கூடிய வசதியை கொண்டு போகக்கூடிய  அந்த ஆக்கபூர்வமான மனிதர்கள் யார்? இது வணிக ரீதியாக எடுக்கப்பட்ட படமாக இல்லாமல் முழுக்க முழுக்க கலைக்கும் கலைஞர்களுக்கும் மரியாதை கொடுக்கக் கூடிய ஒரு படைப்பாக இந்த படத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள். அப்படி என்றால் இந்த படத்தை கலையை நம் வாழ்க்கையோடு இணைத்து கொண்டாடிக் கொண்டிருக்கும் சாமானிய மக்களாகிய நாம் தான் இந்த படத்தை மென்மேலும் பலருக்கு கொண்டு செல்ல வேண்டும். 

படிக்காத அம்மா அப்பாவுக்குப் பிறந்த முதல் தலைமுறை பட்டதாரி இளைஞர்களே… படித்த அம்மா அப்பாவாக இருக்கும் பெரியோர்களே… உங்களிடம் ஆன்லைன் சப்ஸ்கிரைப்சன் இருந்தது என்றால் தயவு செய்து இந்தப் படத்தை உங்கள் டிவியுடன் கனெக்ட் செய்து குடும்பத்துடன் பார்த்து மகிழுங்கள். கண்டிப்பாக பெரியவர் முதல் சிறியவர் வரை எல்லா தரப்பினருக்கும் இந்த படம் மனதுக்கு மிக நெருக்கமான படமாக இருக்கும். 

நெட்பிளிக்சில் செத்தும் ஆயிரம் பொன் படம் வெளியாகி உள்ளது. கண்டிப்பாக அனைவரும் ஒருமுறை பார்க்க வேண்டிய படம் அது.

* சினிமா மேக்கப் மேன்கள் எல்லோரும் இந்த படத்தை பார்த்தால் கிராமத்தில் சாயம் பூசக் கூடிய அந்த ஒப்பனைக் கலைஞர்கள் தேடிச் சென்று அந்த தொழிலில் உள்ள நுணுக்கங்களை இன்னும் ஆராய்ந்து கற்றுக் கொள்வார்கள். –  இட் இஸ் பிரசாந்த்.  அவர் அளித்த மதிப்பெண் 75/100

* படம் பார்க்கும் நாமும் அவர்களிடையே உலவுகிறோம், சிரிக்கிறோம், அழுகிறோம், வாழ்கிறோம். இவற்றைவிட உயர்வான எதை ஒரு திரைப்படம் நமக்கு அளித்துவிட முடியும். – இந்து தமிழ் திசை

*நவீனகால பூவே பூச்சூடவா படம் தான் செத்தும் ஆயிரம் பொன். பூவே பூச்சூடவா படத்தில் மேல்தட்டு வர்க்கத்தின் பேத்தி – பாட்டி உறவை பேசியிருப்பார்கள், இந்த படத்தில் கிராமத்து பாட்டி – பேத்தியின் உறவை பேசி இருக்கிறார்கள். டப்பிங் கலைஞரான ஸ்ரீலேகா ராஜேந்திரனை மிகச்சரியாக பயன்படுத்தி இருக்கக்கூடிய படம். ஐம்பது வருடங்கள் கழித்து வாழும் மக்களுக்கு இந்த மாதிரி படங்கள் தான் காலக் கண்ணாடியாக அமைகிறது – ஜாக்கி சேகர், மதிப்பெண் – 3/5.

பஞ்சாரத்து கிளி ஒன்னு என் கூடுவிட்டு பறந்துடுச்சாம்… 

இந்த பாவி முகத்தை பார்க்காம ஒசரத்துல பறந்துடுச்சாம்…

Related Articles

நீங்கள் எத்தனை வயது வரை உயிரோடு இருப்பீர... சாகற நாள் தெரிஞ்சிடுச்சுனா வாழ்ற நாள் நரகமாயிடும். சிவாஜி படத்தில் ரஜினி பேசிய வசனம் இது. வசனமாக இதை ரசித்தாலும், நம்முடைய ஆயுட்காலம் பற்றி தெரிந்துகொ...
வாத்தியார் பிள்ளைகள், டாக்டர் பிள்ளைகள் ... நீட் தேர்வுக்கும் தமிழகத்துக்கும் எப்படிப்பட்ட பொருத்தம் என்பது அனைவரும் அறிந்ததே. ஒருபுறம் கீர்த்தனா என்ற மாணவி நீட் தேர்வில் இந்திய அளவில் குறிப்பிட...
ஒரு படம் எப்படி இருக்கனும் எப்படி இருக்க... வேற்று மொழி படங்களை ரீமேக் செய்யும்போது தமிழுக்கு (ரீமேக் செய்யப்படும் மொழி பேசும் மக்கள் ரசனைக்கு) தகுந்தாற்போல சில மாறுதல்கள் செய்ய வேண்டும். ...
பெரியார் பற்றிய 20 தகவல்கள்!... ஈரோட்டில் 1879ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி பிறந்தார். பெற்றோர் வெங்கட்ட நாயக்கர் - சின்னத் தாயம்மாள். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ராமசாமி. இவர...

Be the first to comment on "நகரத்துப் பேத்திக்கும் கிராமத்து பாட்டிக்கும் இடையேயான மோதலும் காதலும்! – செத்தும் ஆயிரம் பொன் படம் ஒரு பார்வை!"

Leave a comment

Your email address will not be published.


*