இவ்விடம் உங்கள் பணம் நல்ல முறையில் குட்டி போடும்

mutual fund

நீங்கள் அன்றாடம் வேலைக்குச் சென்று திரும்பும் எளிய வாழ்க்கையை வாழும் ஒரு சாமானியர். சிறுக சிறுக மயிலிறகுகளைச் சேமித்து வைத்திருப்பவர். ஒரு பெரிய புத்தகம் ஒன்று இருக்கிறது. அதில் மயிலிறகுகளை வைத்தால் குட்டி போட்டுத் திருப்பி தரும். ஆனால் பல முறை அந்தப் புத்தகத்தில் உங்கள் மயிலிறகுகளை வைத்தும் அது குட்டி போடவில்லை, மாறாக உங்கள் மயிலிறகுகளும் அந்தப் புத்தகத்தில் தொலைந்து போயின. அந்தப் புத்தகத்தின் எந்தப் பக்கத்தில் வைத்தால் மயிலிறகு குட்டி போடும் என்ற சூட்சுமம் உங்களுக்குப் பிடிபடவே மாட்டேன் என்கிறது. இந்தச் சூழலில் தான் உங்களுக்குப் ‘பரஸ்பரம்’ என்ற நண்பன் அறிமுகம் ஆகிறான். உங்களுக்காக, உங்களின் சார்பாக உங்கள் மயிலிறகுகளை அவன் அந்தப் புத்தகத்தில் வைக்கிறான். அப்படி அவன் வைக்கும் ஒவ்வொரு முறையும் மயிலிறகு குட்டி போடுகிறது. புத்தகத்தின் எந்தப் பக்கத்தில் வைத்தால் மயிலிறகு குட்டி போடும் என்ற சூட்சுமம் அவனுக்குத் தெரிந்திருக்கிறது. அவன் அதற்காகவே படித்து பட்டமும் பெற்றிருக்கிறான். உங்களுக்காக அவன் செய்து தரும் வேலைக்காக ஒரு சிறு சம்பளத்தை, அவனுக்குச் சன்மானமாக தருகிறீர்கள்.

மியூச்சுவல் பண்ட் என்றால் என்ன?

பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்வது எப்படி என்று தெரியாதவர்கள்  அல்லது  பங்குச் சந்தையில் முதலீடு செய்து தங்கள் பணத்தை இழந்தவர்கள் அல்லது பங்குச் சந்தையில் லாபம் ஈட்ட முடியாமல் தவிப்பவர்களுக்கான சரியான மாற்று மியூச்சுவல் பண்ட. எளிமையாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், பல முதலீட்டாளர்களிடமிருந்தும் பணத்தை பெற்று, லாபம் ஈட்டி தரும் பல திட்டங்களில் முதலீடு செய்து, சம்பாதித்து திருப்பி தருவதுதான் தான் மியூச்சுவல் பண்ட்.

இன்னும் விளங்கவில்லையா?

சாமானியன் = முதலீட்டாளர்

நண்பன் பரஸ்பரம் = மியூச்சுவல் பண்ட்

பெரிய புத்தகம் = பங்குச் சந்தை

மயிலிறகு = உங்கள் முதலீடு

மயிலிறகு குட்டி = லாபம்

இந்த கட்டுரையின் முதல் பத்தியை மீண்டும் ஒருமுறை வாசித்து விட்டு வாருங்கள், நிச்சயம் உங்களுக்கு புரியும்.

பெயர்க் காரணம்?

முதலீடு செய்பவர், அவர் சார்பாக சரியான திட்டங்களை தேர்ந்தெடுத்து லாபம் ஈட்டுபவர் என இரண்டு தரப்புக்குமே(Mutual) லாபம் என்பதால் இதற்கு மியூச்சுவல் பண்ட என்ற பெயரால் அழைக்கிறோம் .

எங்கே முதலீடு செய்யப்படுகிறது?

நம் கண் முன் இருக்கும் ஒரே வாய்ப்பு பங்குச் சந்தை தான். மியூச்சுவல் பண்டும் பங்குச் சந்தையில் பங்குகளாகவே முதலீடு செய்யப்படுகின்றன. ஒரே வித்தியாசம், மியூச்சுவல் பண்டில் முதலீட்டாளர்  சார்பாக மத்தியில் ஒருவர் இருந்து அதே வேலையைச் செய்கிறார்.

எதற்காக மத்தியில் இன்னொருவர்?

பங்குச் சந்தை என்றால் என்னவென்றே தெரியாமல், அதில் நுழைந்து தவறான முடிவுகளால் அனைத்து பணத்தையும் இழக்கும் அபாயம் மியூச்சுவல் பண்டில் இல்லை. அது குறித்து ஆழமான அறிவும், அனுபவமும் கொண்ட மத்தியஸ்தர்கள் நமக்காகச் சரியான திட்டங்களில் முதலீடு செய்யும் ஆபத்தான பணியை துணிந்து செய்வர்.

யாரெல்லாம் செய்கிறார்கள்?

மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களை வங்கிகளே நடத்துகின்றன. வங்கிகள் தவிர, பெரிய பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்காக இந்த வேலையைச் செய்து வருகின்றன.

பயன்கள் ஏராளம்

1) பங்குச் சந்தை பற்றிய பெரிய அளவுக்கு அறிவு இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

2) பங்குச் சந்தையில் தினம் தினம் என்ன நடக்கிறதென்று தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டிய தேவை இல்லை

3) முதலீடு செய்துவிட்டு, அவ்வப்போது அதன் நிலையைத் தொடர்ந்து கவனித்து வந்தால் போதுமானது.

4) என்ன நடக்கிறது என்றே தெரியாமல், எல்லா பணத்தையும் இழந்து முதலுக்கே மோசம் என்ற நிலை மியூச்சுவல் பண்டில் கிடையாது

5) லாபம் இல்லை என்று தோன்றும் தருணத்தில், பிரச்சனையின்றி எந்த நேரத்திலும் வெளியேறலாம்.

6) மொத்தமாக ஒரு மனையில் முதலீடு செய்வது போல் அல்லாமல், மாதம் மாதம் 1000 என்ற அளவில் கூட கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்யலாம்.

எங்கே சென்று முதலீடு செய்வது?

காப்பீடு முகவர்களைப் பார்த்து நாம் ஓடிய காலம் ஒன்று இருந்தது. அவர்களுக்கு நிகராகவே இன்று மியூச்சுவல் பண்ட் முகவர்களும் இருக்கிறார்கள். மிக எளிதில் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியும். உங்கள் வீட்டுக்கே வந்து, உங்கள் திறன் மற்றும் எதிர்ப்பார்ப்புகளை அடிப்படையாகக் கொண்டு, உங்களுக்கு ஏற்றத் திட்டங்களை பரிந்துரைப்பார்கள்.

மியூச்சுவல் பண்ட் முகவரை எப்படிக் கண்டுபிடிப்பது?

இது மிக எளிதான காரியம்.  https://www.amfiindia.com/ என்ற இணையதளத்தில் உங்கள் பகுதியிலுள்ள மியூச்சுவல் பண்ட் முகவர் அல்லது மியூச்சுவல் பண்ட் ஆலோசகரை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

இது தவிர, நாட்டின் அனைத்து நகரங்களிலும் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் கிளைகள் அமைந்திருக்கின்றன. நேரடியாக அங்கே செல்வதன் மூலமும் கூட முதலீடு செய்ய முடியும். வங்கிகளின் மியூச்சுவல் பண்ட்களை, அதன் கிளைகளிலேயே பெற முடியும். மேலும் இணையத்திலும் கூட முதலீடு செய்யும் வாய்ப்புகளும் இருக்கின்றன.

பணம் முதலீடு செய்வது எப்படி?

உங்கள் பணத்தை மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்வது என்று முடிவு எடுத்தாயிற்று, எங்கே சென்று முதலீடு செய்வது என்பதையும் முடிவு செய்து விட்டீர்கள், அடுத்து என்ன?

எந்தத் திட்டத்தில் முதலீடு செய்வது மற்றும் எப்படி முதலீடு செய்வது?

திட்டங்களை எப்படித் தேர்ந்தெடுப்பது?

மியூச்சுவல் பண்ட் குறித்து முகவர்களின் மூலமும், தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களின் மூலமாகவும் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம். திட்டங்களைக் கீழ்க்காணும் காரணிகளைக் கொண்டு முடிவெடுக்கலாம்

1 ) உங்கள் வயது

2 ) ரிஸ்க் எடுக்கும் திறன்

3 ) உங்களது பண தேவை

4 ) நீண்டகால முதலீடா?

5 ) குறுகியகால முதலீடா?

6 ) தொடர்ந்து வருமானம் வர விருப்பமா?

7 ) குறுகிய காலத்துக்கு மட்டும் வருமானம் வந்தால் போதுமா?

கவனமாக நமது தேவைகளை புரிந்து கொள்வதன் மூலம், நிறுவனங்கள் வழங்கும் நிறையத் திட்டங்களுக்கு நடுவே நமக்கு உகந்தது எது என்பதைத் தீர்மானித்து முதலீடு செய்ய முடியும்.

மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்வதற்கு கட்டாயம் இருந்தாக வேண்டிய ஆவணம் பான்கார்டு. அது இல்லாமல் நீங்கள் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய இயலாது. குறைந்தபட்சம் பான்கார்டு விண்ணப்பித்ததற்கான அடையாளமாவது இருக்க வேண்டும்.

என்ன திட்டம் என்று முடிவு செய்த பிறகு, முதலீட்டை மொத்தமாகச் செலுத்த போகிறீர்களா அல்லது மாதம் மாதம் செலுத்த போகிறீர்களா என்பதைத் தீர்மானித்து கொள்ளுங்கள். மியூச்சுவல் பண்டில் பணத்தைக் காகிதமாக முதலீடு செய்ய இயலாது. காசோலை அல்லது வரவோலை மூலமாக மட்டும் தான் முதலீடு செய்ய இயலும். மாதம் மாதம் முதலீடு செய்பவராக இருந்தால் ஒருமுறை காசோலை மூலம் முதலீடு செய்தால், அடுத்த மாதத்திலிருந்து தானாகவே மியூச்சுவல் பண்ட நிறுவனங்கள் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்ளும்.

எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்?

உதாரணத்திற்கு உங்கள் வயது முப்பது என்று வைத்துக்கொள்வோம். உங்களால் மாதம் பத்தாயிரம் முதலீடு செய்ய முடியும் என்ற பட்சத்தில், நீண்ட கால முதலீடாக இருபது ஆண்டுகளுக்கு நீங்கள் முதலீடு செய்யலாம். இதன்மூலம் பனிரெண்டு முதல் பதினைந்து சதவீதம் வருமானம் கிடைக்கும் என்று வைத்துக்கொண்டால் கூட, எண்பது லட்சத்திலிருந்து ஒரு கோடி வரைக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது.

பங்குச் சந்தையா அல்லது மியூச்சுவல் பண்டா?

இதை முடிவு செய்வதற்கு முன்பு, நீண்ட கால முதலீடா அல்லது குறுகிய கால முதலீடா என்பதில் தெளிவாக இருங்கள். நீண்ட கால முதலீடு மற்றும் அதற்கு உண்டான ரிஸ்க் எடுக்க தயாராக நீங்கள் இருந்தால் பங்குச்சந்தையில் முதலீடு செய்யுங்கள். குறுகிய கால முதலீடு என்றால் எந்த யோசனையும் இல்லாமல் நீங்கள் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யலாம்.

இந்தியாவின் நம்பகமான மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள்

1 ) கனரா ரொபெகோ

2 ) ரிலையன்ஸ்

3 ) சுந்தரம் பிஎன்பி பரிபாஸ்

4 ) யுடிஐ

5 ) லோட்டஸ் இந்தியா

6 ) HDFC

7 ) AIG Investments

மியூச்சுவல் பண்ட்  வகைகள்

வளர்ச்சி திட்டங்கள், வருவாய் திட்டங்கள், உடனடி திட்டங்கள், சேமிப்பு திட்டங்கள், வெளிநாடு முதலீடு திட்டங்கள், பங்குச்சந்தை குறியீட்டு எண் திட்டங்கள், அரசு பத்திரங்களில் முதலீடு செய்யும் திட்டங்கள், அதிரடி திட்டங்கள் என்று மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் பல வகை உண்டு. தேவைகளுக்கு ஏற்ப, எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இதில் ஏதாவதொரு திட்டத்தை முதலீடு செய்ய விரும்புவோர் தேர்ந்தெடுத்து கொள்ள முடியும்.

இதைத் தாண்டியும் மியூச்சுவல் பண்டை இரண்டு வகையாகப் பிரிக்க முடியும் . ஒன்று ஓப்பன் எண்டட், இன்னொன்று குளோஸ்ட் எண்டட்.

ஓப்பன் எண்டட் (Open Ended)

இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் பணத்தை போடலாம், எடுக்கலாம். எப்போது வேண்டுமானாலும் இந்தத் திட்டத்திலிருந்து வெளியேறும் சுதந்திரம் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

குளோஸ்ட் எண்டட் (Closed Ended)

இந்தத் திட்டத்தின் கீழ் பணத்தை முதலீடு செய்யும் பட்சத்தில், குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு பணத்தை வெளியே எடுக்க முடியாது. அதே போல, இந்தத் திட்டம் காலாவதி ஆகும்போது தான் பணத்தை வெளியே எடுக்க முடியும். இந்தத் திட்டத்தின் கால அளவு குறைந்தது மூன்று ஆண்டுகள் முதல் அதிகபட்சம் பதினைந்து ஆண்டுகள் வரை இருக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்ய விரும்புவோர் அது தொடங்கப்படும் போது மட்டுமே முதலீடு செய்ய முடியும்.

லாபத்தை எப்போது தான் பார்ப்பது?

எல்லாம் செய்து முடித்தாகிவிட்டது. திட்டத்தை தேர்தெடுத்து, முதலீடும் செய்தாகி விட்டது. இனி என்ன லாபம் பார்ப்பது தான் இல்லையா?

லாபம் உங்கள் கைகளுக்கு வந்து சேர்வதை இரன்டு விதங்களில் நீங்கள் முடிவு செய்யலாம். ஒன்று டிவிடெண்ட் மற்றொன்று குரோத்.

உங்கள் முதலீடு வேகமாக வளர்ந்து வருகிறது என்று வைத்துக்கொள்வோம். இடையிலேயே அதன் லாபத்தை எடுத்து பயன்படுத்த விரும்பினால் நீங்கள் டிவிடெண்ட் முறையை பின்பற்ற வேண்டும். அப்படி எடுக்கப்படும் தொகைக்கு வரி பிடித்தம் கிடையாது.

திட்டத்தின் காலம் முடியும் போது லாபம் பார்த்தால் போதுமானது என்று நீங்கள் எண்ணினால், குரோத் முறையை நீங்கள் பின்பற்றலாம்.

ஒரு ஆயிரம் ரூபாயை எடுத்து வையுங்கள், முதலீடு செய்து தான் பார்ப்போம்.

Related Articles

உங்கள் வீடுகளில் படிக்கும் அறை அல்லது வீ... எல்லோர் வீட்டிலும் சமையலறை, படுக்கை அறை, பூஜை அறை, கழிவறை என்று பல அறைகள் இருக்கும். ஆனால் எத்தனை பேர் வீடுகளில் படிக்கும் அறை இருக்கிறது? படிக்கும் அ...
முடிஞ்சா முதுகுல குத்திக்க – விருத... 2018ம் ஆண்டு முடிவுக்கு வந்த நிலையில் பல தனியார் அமைப்புகள் திரை உலகுக்கு விருது வழங்கும் பணியை தொடங்கி உள்ளனர். அவற்றில் பல இடங்களில் பா. ரஞ்சித்தின்...
செல்போன்களிடம் இருந்து குழந்தையை பாதுகாப... Nomophobia (No mobile phobia) என்ற புது விதமான மன நோய்,  இப்போது உள்ள குழந்தைகளை அதிகம் பாதித்து வருகிறது. இந்த மாதிரியான மனநோய் குறைபாடு உள்ள குழந்தை...
கோழி மேல பரிதாபப்பட்டா 65 சாப்பிட முடியா... இந்த உலகத்துல பணம் சம்பாதிக்கற மாதிரி ஈஸியான வேலை வேற எதுவுமே இல்ல... அதுக்கு நீங்க ஒன்னே ஒன்னு தான் பண்ணனும்... உங்கள மாதிரியே நிறைய பணம் சம்பாத...

Be the first to comment on "இவ்விடம் உங்கள் பணம் நல்ல முறையில் குட்டி போடும்"

Leave a comment

Your email address will not be published.


*