எம்.எம். தீன் எழுதிய “யாசகம்” நூல் ஒரு பார்வை! 

“தாயிடம் பாசப் பிச்சை தந்தையிடம் அறிவுப் பிச்சை குருவிடம் ஞானப் பிச்சை மனைவியிடம் இச்சைப் பிச்சை… பிள்ளைகளிடம் உறவுப் பிச்சை முதலாளியிடம் வாழ்வுப் பிச்சை எல்லோரிடமும் அன்புப் பிச்சை சாகுகையில் புண்ணியப் பிச்சை எடுப்பதே வாழ்வின் எச்சை. -கொங்கணச் சித்தர், சட்டைமுனிக்குச் சொன்ன உபதேசம். ” – இவை தான் யாசகம் புத்தகத்தில் இடம்பெற்றிருந்த முதல் பக்க வரிகள். இந்த வரிகள் புத்தகம் படிப்பதற்கான ஆவலை அதிகம் தூண்டின. 

இந்த நாவல் தனது முதல் அத்தியாயத்துலயே நல்ல வேகமாக செல்கிறது. கதாபாத்திர அறிமுக பகுதிகளிலயே ஒவ்வொருவரின் குறையையும் சொல்லிவிடுவது சிறப்பான விஷியம். இந்த நாவலை காட்சிகளாக நன்கு பார்க்க முடியும் வகையில் இயற்கை சூழல் தன்மை அருமையாக எழுத பட்டிருந்தது. தக்கரை, சூசை, முத்தாச்சி, வில்லுப் பாட்டுக்காரி முத்துலட்சுமி, வெறகு வெட்டி கருத்தப்பாண்டி, அய்யாக்கண்ணு வக்கீல், சோத்துப்பெட்டி, ஆறுவிரல் கருப்பன் போன்ற கதாபாத்திரங்கள் நாவலை நகர்த்தி செல்கின்றன.  

கடுமையான பசியில் இருக்கும் ஒருவனின் கால் சதையில் கொடுக்குகள் இறக்கி வலியை உண்டாக்கும் வகையில் கறுத்த எறும்பு கடிக்கும் காட்சி செம மாஸ். பசியால் சோர்வுற்ற உடலை துளி சக்தி இல்லாத உடலை கொண்ட பிச்சைக்காரன் ஒருவனின் நிலையை இந்த எறும்பு கடிக்கும் காட்சியை வைத்து எழுதிய எழுத்தாளரை பாராட்ட தோன்றுகிறது. 

பிடித்த வரிகள்

  1. நாவல் மரத்திற்கு ராவணனைப் போல கிளையெல்லாம் தலைதான்.
  2. ஒவ்வொரு பறவைக்கும், பிராணிக்கும் ஒவ்வொரு குணம் இருக்கிறது. பூனைக்கு இருப்பது தனிக் குணம். தன்னைத்தான் கொஞ்ச வேண்டும், தடவிக் கொடுக்கவேண்டும் என்று எண்ணுபவை. சொந்த வீட்டிலும் யாருமில்லாத வேளையில் திருடித்தான் தின்ன வேண்டும். என்று எண்ணும்.
  3. பிச்சைக் கேட்கும் ஒவ்வொருவரும் ஒரு தனிப் பாவனை வைத்துக் கொள்கிறார்கள். பாதிப் பார்வை உள்ளவன், குருடனைப் போலவும், கால்களில் சின்ன புண்ணுக்குப் பெரிய கட்டுப் போட்டுக் கொள்வதாலும். புதிய மேக்கப்பில் இறைத் தொண்டரைப் போலவும்  மாறிவிடுகிறார்கள். அவர்களின் முதலீடு இதுதான். தினமும் அதைக் காப்பாற்ற ஒப்பனையைத் தொடர வேண்டியதும் இருக்கிறது. 
  4. பிச்சைக்காரர்களுக்கென்று ஒரு தனி வாழ்வும், மொழிகளும் இருக்கிறது. தங்களுக்கு வருமானம் வருகிறதோ இல்லையோ கொடுப்பவர்கள் நேரத்தில் அவர்கள் யாருக்கும் ஒட்டோ உறவோ நட்போ இல்லாததுபோல் மாறி  விடுகிறார்கள். எல்லோரும் தனித்தனியான மனிதர்கள், தனித்த கோரிக்கைகள், தனித்த வருமானம் என்று ஆகி விடுகிறார்கள். ஒருத்தருக்கு ஒருத்தர் தெரிந்தவர் என்று சொன்னால் ஒண்ணும் கெட்டுப் போவதில்லை தான். ஆனாலும் அது அவர்களுக்கான வருவாயைக் குறைத்துவிடக் கூடும்.  அதனாலே பெரும்பகுதி ஒவ்வொருவரும் தனித்தனி மனிதர்கள் நாங்கள் என்கிற முகபாவனைகளிலே இருப்பார்கள்.  அப்படி இருந்தால்தான் கொடுக்கிற கைகள் இருக்கின்ற தலைகளைக் கணக்கு பண்ணிக் கொடுக்கும்.
  5. ஒவ்வொரு மனிதருக்குள் ஓராயிரம் எண்ணங்களும், கவலைகளும் ஒன்றுக்கொன்று எதிர்நீச்சல் போட்டபடிதான் இருக்கின்றன.
  6. சொர்க்கத்தில் இருந்து ஒருதுளி பருக்கை வந்து விழாதா தன் வயிற்றுக்குள் என்ற எண்ணம் அவனுக்கு வந்துபோனது.
  7. எத்தனையோ விதமானப் பசிகளைப் பார்த்தவன் அவன். கழனியைக் குடித்துவிட்டு ரெண்டுநாள் கிடந்திருக்கிறான். கஞ்சியிருந்தும் குடிக்க முடியாமல் காய்ச்சலோடு பசியோடுக் கிடந்திருக்கிறான். எதையாவது சாப்பிட்டு விட்டு அத்தனையும் வாந்தி பேதியில் வயிற்றில் ஒன்றுமில்லாமல்  பசியில் அழுது இருக்கிறான். ஆனால் இதுபோன்ற நடையைத் தள்ளாடச் செய்யும் பசியை இன்றுதான் உணர்கிறான். கிடைக்கும்போது கழுகு போலச் சாப்பிடுவதும், கிடைக்காத போது பட்டினி கிடப்பதும் பிச்சையெடுப்பவனுக்குத் தேவையான குணம். அதனால்தான் எதுவும் இன்றி அவனால் வாழ முடிந்திருக்கிறது.
  8. பொம்பளைட்ட நகை அக்கிறவன் பேடி. நான் ஒரு நாளும் பேடியாக இருக்கமாட்டேன். 
  9. மற்றவர்களைப் போல பேருலகக் கற்பனைகளோ, மாயா உலகத்தில் வாழும் கனவுகளோ, அதற்கானப் பிராயாசைகளோ, பரிபாசைகளோ பிச்சைக்காரர்களுக்கு என்றுமிருப்பதில்லை. அவர்கள் மனம் ஒரு கட்டுக்குள் இருக்கிறது. அல்லது குறைந்த தேவைகளுக்கான எண்ணங்களுக்கு மேலாக எதுவும் இருப்பதில்லை. அவர்கள் எப்போதும் அன்றுள்ள அப்பத்தை நோக்கியே வாழ்கிறார்கள். அதற்காக ஒரு பிச்சைக்காரன் பலகிலோ மீட்டர் தூரம் நடக்கிறான். மற்றவன் அதே இடத்திலேயே இருந்து பெற்றும்விடுகிறான். எந்த ஊருக்கு பயணம் போகிறோம் என்று தெரியாமல் பயணம் செய்பவர்களாக இருக்கிறார்கள். எந்தஊரிலும்தான் அவர்களுக்கான உணவும் தேவையும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு யாசகர்கள் பயணப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
  10. பிச்சைக்காரனுக்கு ஏதுடா ஜாதியும் மதமும். நாம வீட்டை விட்டு, சொத்து சுகத்த விட்டு, சொந்த பந்தங்களை வுட்டுட்டு இங்கே தனிக்கட்டை ராஜாவா இருக்கோம். நமக்கு சாதியும் வேணாம் மதமும் வேணாம்டா. எப்பமும் நாம வேறு எதையும் பத்தி எண்ணாமெ இருக்கணும்டா. நாமதாண்டா உலகத்துலேயே சுதந்திரமான ஆம்புளை. அதை வுட்டுட்டு இல்லாததையும் பொல்லாததையும் எண்ணி ஆசைப்பட்டு எல்லாத்தையும் இழந்துட்டு தெருவுல நிக்காதே. பாத்துக்கோ. 
  11. அநேகமாகப் பிச்சைக்காரர்கள் அனைவரும் சொல்லி வைத்தார்போல ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள். சாதி, மதம், சமூகக் கட்டுப்பாடுகள் என எல்லாவற்றையும் தின்றுச் செரித்துவிட்டுத்தான் இருக்கிறார்கள். பெரிய கடவுள் பயமோ, கொள்கையோ அதற்காகக் கோவிலுக்குச் சர்ச்சுக்கு, மசூதிக்கு போவதோ கிடையாது. பிச்சைக்காரர்கள் எல்லோரும் சர்ச்சுக்கு, கோவிலுக்கு, தர்க்காவுக்கு முன்தான் இருப்பார்கள். ஆனால் சாமி கும்பிடுவது மட்டும் பெரியதாய் இருக்காது. அப்படியே கும்பிட்டாலும் அது பெயரளவிற்கு அன்று யாசகம் அதிகமாகக் கிடைப்பதற்காகக் கூட  இருக்காது. ஏதோ எல்லோரும் சாமி கும்பிடுகிறார்களா, நாமும்   கும்பிட்டு வைப்போம் என்பதாகத்தான் இருக்கும். அவர்களுக்குப் பெரிதாகக் கடவுள் என்ன கொடுக்க வேண்டியதிருக்கிறது.
  12. “எங்களுக்கு என்னய்யா இருக்கு. புள்ளையா குட்டியா. எதுக்குப் போயி நாங்க யார்ட்ட நிக்கணும். அல்லேலூயால்லாம் உங்களுக்குத்தான். எங்களுக்கு கடவுள்ட்ட கேக்குற அளவுக்கு பெரிய எந்த வேண்டுதலும் கிடையாது. கடவுளு எங்களுக்கு வேண்டியதைக் கொடுக்காரு. எந்த வேலையும் செய்யவிடாம, எங்கள் சாப்பாட்டுக்கும், செல்லும் செலவுக்கும் தாராரு. உங்களவிட எங்களுக்கு எல்லாம் கெடைக்குது. இன்னிக்கு பிரியாணி, நாளைக்கு சொதி அதுக்கு அடுத்த நாளைக்கு நெய்ச்சோறு. வந்துக்கிட்டே இருக்கும். அது மட்டுமல்ல எங்களுக்கு எல்லாச் சாமியும் வரம்கொடுக்கும். பொதன் கெழம ராமசாமிகோவிலு, வெள்ளிக்கிழமெ பள்ளிவாசலு, நாயத்திக்கிழமன்னா சர்ச்சு எங்கயும் அவரு வந்து நிக்கிறாரு. எங்களுக்கு எந்தக் கடவுள்ட்டயும் விரோதம் கிடையாது. எல்லாக் கடவுளும் எங்களுக்கு ஒண்ணுதாய்யா… எங்களுக்குக் கொடுக்குற எல்லா மனுசரும் எங்களுக்கு கடவுள்தான்…
  13. வேஷம் போட்டு யாசகன் கேட்கிறது பொழைப்புக்குத்தான்.  அதுக்காகத்தான் அவுங்க வேஷம் போட்டுக்கிட்டு காவி உடுத்தி,  மஞ்ச பொட்டு வச்சிக்கிட்டு திரியுறாங்க. அவுங்க போடுற வேஷமெல்லாம் காசுக்காக தான். ஆனா கண்ணு தெரியாதவங்களையும், கைகால் இல்லாதவங்களையும் சொல்லுங்க, அவுங்க பயபக்தியா சாமி கும்புடுவாங்க. அவுங்க வேற வழியில்லாம பிச்சை எடுக்குறாங்க. பலபேர் கை கால் இல்லாட்டியும் உழைச்சி சாப்பிடத்தான் பிரியப்படுவாங்க. ஆனால் பிச்சையெடுக்கவுங்க கோயிலுக்கு பயபக்தியா சாமி கும்புடுவர்றன்ட்ட பிச்சை கேட்டு  வாங்குறாங்க அவங்களும் சாமிய நெனச்சிக்கிட்டு குடுக்குறாங்க. மத்தபடி எந்த பிச்சைக்காரன் என்னைக்கு சாமி கும்பிட்டான்.

 

Related Articles

தூய்மையான நகரங்களின் பட்டியலில் முதல் பத... கடந்த 2015ம் ஆண்டு தூய்மை இந்தியா திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தில் 2016ம் ஆண்டு 73 நகரங்கள், 2017ஆம் ஆண்டு 434 நகரங்கள், 2018ஆம் ஆண்டு 4 ஆய...
2020ம் ஆண்டு சென்னை புத்தகத் திருவிழாவை ... நீலம் பதிப்பகம்அண்ணல் அம்பேத்கர் முன்னுரைகள் - தொகுப்பு: வாசுகி பாஸ்கர்  எம்.சி.ராஜா சிந்தனைகள் - தொகுப்பும் பதிப்பும்: வே.அலெக்ஸ்  பௌத...
நமது மாநில மரமான பனை மரங்களின் சிறப்பம்ச... கோடை காலம் வந்துவிட்டது. சாலையோரங்களில் நுங்கு விற்பனையாளர்களை காண முடிகிறது. ஒரு நுங்கின் விலையைக் கேட்டால் தலை சுற்றுகிறது. இளம் பருவத்தில் நண்பர்கள...
தாய்ப்பால் கொடுக்காததால் ஆண்டுதோறும் 8.2... உலக சுகாதார தினம் வருடந்தோறும் ஏப்ரல் ஏழாம் தேதி பின்பற்றப்படுகிறது. அதனையொட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு டபிள்யூஎச்ஓ - யுனிசெப் அமைப்புகளின் சார்...

Be the first to comment on "எம்.எம். தீன் எழுதிய “யாசகம்” நூல் ஒரு பார்வை! "

Leave a comment

Your email address will not be published.


*