கோட்டுக்கு அந்தப்பக்கம் இருக்கிறவன் நல்லவன், இந்தப்பக்கம் இருக்கிறவன் கெட்டவன்… இது கருப்பு இது வெள்ளை… இவன் நல்லவன் இவன் கெட்டவன்… இவன் போலீசு இவன் கிரிமினல்… செஞ்சவனா இல்ல செய்ய சொன்னவனா… தொழிலா செண்டிமெண்டா இதுல நீ எங்க… கோட்டுக்கு இந்தப் பக்கமா இல்லை அந்த பக்கமா, இல்ல ஒட்டுமொத்த கோடும் அழிஞ்சு எல்லாரும் ஒரு வட்டத்துக்குள்ள இருக்குறமா… யாரால பதில கண்டு பிடிக்க முடியுமோ அவிங்க கிட்ட தான் கேள்வியை கேட்க முடியும்… இப்படிப்பட்ட மாஸ் வசனத்தை விக்ரம் வேதா படத்திற்காக எழுதியவர்தான் நம் மணிகண்டன்.
சென்னை போரூரில் பிறந்து வளர்ந்த பொறியியல் மாணவர் தான் மணிகண்டன். சிறுவயது முதலே துருதுருவென ஏதாவது செய்துகொண்டே இருக்கும் மணிகண்டன் கல்லூரி படிக்கும் காலத்தில் எல்லா மேடைகளிலும் தன்னுடைய பலகுரல் திறமையை காட்டினார். இப்படி பள்ளி கல்லூரி என்று கிடைத்த மேடைகள் அனைத்திலும் தன்னுடைய திறமையை காட்டிக் கொண்டே இருந்த மணிகண்டன் தன்னுடைய நண்பரின் அறிவுறுத்தலால் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்டார். இயக்குனர் பாண்டிராஜ், உமா ரியாஸ்கான் நடுவராக பங்கேற்ற கலக்கப்போவது யாரு பாகம் நான்கில் மணிகண்டன் போட்டியாளராக கலந்து கொண்டு பலவித குரல்களில் நகைச்சுவை செய்து கைதட்டலும் விசிலும் அள்ளிக் குவித்தார்.
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ரன்னராக வந்த மணிகண்டன் அதைத்தொடர்ந்து பிக் எஃப்.எம், ஆஹா எஃப்.எம் போன்ற ரேடியோக்களில் வேலை பார்த்தார். டிஸ்கவரி சேனலில் அப்போது அவர் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றத் தொடங்கினார். இயக்குநர் பாலாவின் நான் கடவுள் படத்தில் ரஜினி போன்று வேடமணிந்து இருந்த ஒருவருக்கு ரஜினி குரலில் டப்பிங் பேசினார்.
ஒருமுறை ஆவணப்படம் ஒன்றிற்கு கமல்ஹாசன் போல் குரல் கொடுக்க அதற்கு வெளிநாடுகளிலிருந்து மணிகண்டனுக்கு நல்ல பாராட்டுக்கள் கிடைத்தது. அங்கிருந்து நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்கு போனார். 8 தோட்டாக்கள் ஸ்ரீ கணேஷ், முண்டாசுப்பட்டி ராம், இன்று நேற்று நாளை ரவிக்குமார், கனா அருண் ராஜா காமராஜ், சூது கவ்வும் நலன் குமாரசாமி ஆகியோரின் குறும் படங்களில் உதவி இயக்குனராக வசனகர்த்தாவாக நடிகராக பணியாற்றினார்.
நாளைய இயக்குனர் என்ற ஒரு குறும்படப் போட்டி நிகழ்ச்சியிலேயே இவர் தன்னுடைய முத்திரையை பதித்து விட்டார். அருண்ராஜா காமராஜ் எழுதி இயக்கிய “என் இனிய பொன் நிலாவே” குறும்படத்தில் மணிகண்டன் வசனம் எழுதியிருந்தார். அந்தக் குறும் படத்தை பார்த்த இயக்குனர் பிரதாப் போத்தன் மற்றும் எழுத்தாளர் மதன் இருவரும் அந்த வசன கர்த்தா யார் என்று அவரை பற்றி விசாரித்து அவரை மேடைக்கு அழைத்து, நீங்க ரொம்ப நல்லா வசனம் எழுதி இருக்கீங்க தமிழ் சினிமாவின் மிக முக்கியமான வசனகர்த்தாவாக வருவதற்கு உங்களுக்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது வாழ்த்துக்கள் என்று பாராட்டினார்கள். சிறந்த வசனகர்த்தா என்ற விருதும் தந்தார்கள்.
அதைத் தொடர்ந்து “காஸி அட்டாக்” போன்ற டப்பிங் படங்களுக்கு வசனம் எழுதும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஒரு பக்கம் வசனம் எழுதுதல் இன்னொரு பக்கம் டப்பிங் கலைஞராக பணியாற்றுதல் என்று தொடர்ந்து தன்னுடைய திறமைகளை காட்டிக்கொண்டே வந்தார். நாளை இயக்குனரில் குறும்பட இயக்குனராக இருந்தவர்கள் பெரிய திரைப்படங்களை இயக்க ஆரம்பித்ததும் மணிகண்டனை அதில் நடிக்க வைத்தனர். 8 தோட்டாக்கள் படத்தில் திருட்டுத்தனம் நிறைந்துள்ள ஒரு ரவுடியாக நடித்திருப்பார். நளனின் காதலும் கடந்து போகும் படத்தில் ரவுடி தொழிலில் சாதிக்க விரும்பும் அப்பாவி இளைஞனாக நடித்திருப்பார். விக்ரம் வேதா படத்தில் போலீஸ் துறையில் புதிதாக சேர்ந்த இளைஞராக நடித்திருப்பார்.
பா.ரஞ்சித்தின் காலா படத்தில் லெனின் என்கிற புரட்சிகர இளைஞனாக… ரஜினியை சரிக்கு சமமாக எதிர்த்துப் பேசிவிட்டு வீட்டை விட்டு வெளியேறும் அவருடைய மகனாக… அப்பா அம்மா சென்ற கார் ஆக்சிடன்ட் ஆகிவிட்டது என்றதும் அப்பா என்று கத்திக் கொண்டு ஓடிப்போய் கால்கள் வலுவிழந்து தரையில் விழும் காட்சியில் மணிகண்டன் அசத்தியிருப்பார்.
இப்படி நடிப்பில் அசத்த இன்னொரு பக்கம் வசனம் எழுதுவதிலும் திறன் வாய்ந்தரவாக இருக்கிறார். விக்ரம் வேதா படத்தில் போலீசாக நடிக்க இவரை அழைத்தபோது, இயக்குனர் புஷ்கர் காயத்ரி விக்ரம் வேதா படத்தின் திரைக்கதை புத்தகத்தை இவர் கையில் கொடுத்து இருக்கிறார். மணிகண்டன் அதைப் படித்துப் பார்த்துவிட்டு நிறை குறைகளை எழுதி கொடுத்திருக்கிறார் அதை கவனித்த புஷ்கர் காயத்ரி இந்த படத்திற்கு நீங்களே வசனங்கள் எழுதுங்கள் என்று சொல்ல மணிகண்டன் அதை செவ்வனே செய்து முடித்தார். அதற்காக அவருக்கு நிறைய பாராட்டுகளும் விருதுகளும் கிடைத்தது. குறிப்பாக சிறந்த வசனகர்த்தா என்ற பிகைன்ட்வுட்ஸ் கோல்டு மெடல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து சில்லுக்கருப்பட்டி படத்தில் முகிலன் என்கிற அழகான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்திற்கு பிறகு முகிலன் என்கிற அந்த மணிகண்டனுக்கு பெண் ரசிகர்கள் கூட்டம் எக்கச்சக்கமாக அதிகரித்துவிட்டது. பூவரசம் பீப்பீ, சில்லுக்கருப்பட்டி போன்ற அழகான படங்களை இயக்கிய ஹலித்தா சமீமின் அடுத்த படமான ஏலே படத்தில் மணிகண்டன் தான் ஹீரோ.
டீக்கடை என்ற சொல்லுக்கும் இவருடைய வாழ்வுக்கும் ரொம்ப நெருங்கிய தொடர்பு உண்டு என்று தான் சொல்ல வேண்டும். இவ்வளவு நாள் எங்கே இருந்தீங்க என்று கேட்டால் நம்ம டீக்கடையில் தான் என்பார், எங்கடா இருக்க என்று யாராவது போன் பண்ணி கேட்டால் நம்ம டீக்கடைல தான் என்பார். யூடியூப்பில் டீக்கடை தாட்ஸ் என்ற ஒரு சேனலை உருவாக்கி அதன் மூலம் சமகால அரசியலை நையாண்டி தனத்துடன் எழுதி இயக்கி வரும் மணிகண்டன் இயக்குனராகவும் மிளிர இருக்கிறார்.
அவர் இயக்கிய குறும்படங்கள் ஆவணப்படங்கள் போன்றவை சர்வதேச திரைப்பட விழாக்களில் எல்லாம் கலந்து கொண்டு பரிசு பெற்று வருகின்றன. குறிப்பாக நரை எழுதும் சுயசரிதம் என்னும் படத்தை அவரே எழுதி இயக்கி பல விருதுகள் வென்றுள்ளார்.
கிட்னியில் கல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில் அவர் தன்னுடைய முதல் வெள்ளி திரைப்படத்திற்கு வசனம் எழுதினார் அந்த படம் பீட்சா 2 வில்லா. அப்பா மகள் பாசத்தை மிக உணர்ச்சி பூர்வமாக திரையில் காட்டிய விசுவாசம் படத்தில் வசனகர்த்தாவாகவும், அக்கா தம்பி பாசத்தை ரொம்ப அழகாக காட்டிய கார்த்தி ஜோதிகா நடித்த தம்பி படத்தின் வசனகர்த்தாவாகவும் மணிகண்டன் பணியாற்றி இருக்கிறார் என்பது நிறைய பேர் அறியாத தகவல். இந்தியா பாகிஸ்தான் படத்தில் வாடி குட்டி லேடி பாடலில் நடன கலைஞராக அசத்தியிருப்பார்.
மிர்ச்சி யூடியூப் சேனலில் ஆர்ஜே சிவசங்கரி அவர்களுடன் நடந்த உரையாடலில் மணிகண்டன் தன்னுடைய மிமிக்ரி திறமையை காட்டி இருப்பார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இருந்த குரல் வளத்திற்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது மணிகண்டனின் குரல் வளத்திற்கும் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. குறிப்பாக அவர் ஜனகராஜ், பொல்லாதவன் கிஷோர் போன்றவர்களின் குரலில் மிமிக்ரி செய்து அசத்திய வீடியோக்கள் ஃபேஸ்புக் வாட்ஸ்அப் போன்றவைகளில் வைரலாகியது.
தொலைக்காட்சியில் இருந்து சினிமா துறைக்கு வந்து சாதித்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். குறிப்பாக சிவகார்த்திகேயன், அருண் ராஜா காமராஜ், விஜய் சேதுபதி போன்றோர் இந்த வரிசையில் அடங்குவார்கள். இவர்களுக்குப் பின் மணிகண்டனும் ஒரு உறுதியான இடத்தை பிடிக்கிறார்.
பெண்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் சிவகார்த்திகேயன், பெண்களின் வளர்ச்சியை மையமாக வைத்து படத்தை எடுத்த அருண்ராஜா காமராஜ், சிறுமி குமரி கிழவி வரை அனைத்து பெண்களுக்கும் ரசிக்கும்படியான நடிப்பை தரும் விஜய் சேதுபதி, அப்பா படத்தின் மூலம் ஒட்டு மொத்த குடும்ப பெண்களின் ஆதரவைப் பெற்ற சமுத்திரகனி, தமிழ் சினிமாவில் அரிதாக முளைக்கும் பெண் இயக்குனர்களில் நங்கூரம் போல் தனது முத்திரையைப் பதித்த புஷ்கர் காயத்ரி, அழகியல் என்பதை தன்னுடைய தனித்தன்மையாக வைத்திருக்கும் சில்லுக்கருப்பட்டி ஹலிதா சமீம், காலா படத்தின் மூலம் பெண்ணியம் பேசும் பெண்களிடம் ஹாட்டின்களை அள்ளிய பா.ரஞ்சித் போன்ற படைப்பாளிகள் உடன் திரும்பத் திரும்ப அவர் பணியாற்றிக் கொண்டே இருப்பதால் பெண்களின் மனதில் அவர் நன்கு பதிந்து தனக்கென ஒரு பெண் ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கி விட்டார்.
இயக்குனர் பாலா படத்தில் ரஜினி மாதிரியான ஒரு நடிகருக்கு குரல் கொடுத்து பிறகு அதே ரஜினிக்கு மகனாக நடித்த மணிகண்டன், பிரதாப் போதனும் மதனும் சொன்னதுபோல் சினிமாவின் மிக முக்கியமான வசனகர்த்தாவாக மாறி சிறந்த வசனகர்த்தா விருது வாங்கிய போது அதை ரஜினி குரலில் பேசியதும் ரசிகர்களிடம் இருந்து வந்த கரகோஷத்தை பார்க்கனுமே எங்கேயோ போயிருவீங்க மணிகண்டன்.
ஒரு பக்கம் ஹரிஷ் கல்யாண், இன்னொரு பக்கம் நானி, துல்கர் சல்மான், விஜய் தேவர்கொண்டா போன்ற நடிகர்கள் எல்லாம் இளம் பெண்களின் மனதை வசீகரித்து கொண்டிருக்க, கருப்பு சட்டையை அதிகம் விரும்பும் பிளாக் அண்ட் ஒயிட் போட்டோக்களை அதிக விரும்பும் கருப்பு ஹார்டீன்களை சமூக வலைதளங்களில் பயன்படுத்தும் நம்ம ஊர்ப் பெண்களின் இதயத்தில் சத்தமில்லாமல் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறார் மணிகண்டன்.
உடல் நலக்கோளாறு, பொருளாதார பின்னடைவு, குடும்ப சச்சரவு போன்ற பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் தொடர்ந்து எழுத்து, நடிப்பு, குரல் என்று பல கலைகளிலும் பல துறைகளிலும் தன்னுடைய திறமையை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே வந்தால் கமல், விக்ரம், தனுஷ், சித்தார்த், சார்லி, எம்எஸ் பாஸ்கர், ராதாரவி, நாசர், பிரகாஷ்ராஜ் போன்ற நடிகர்களின் வரிசையில் நிச்சயம் இவர் இடம் பிடித்துவிடுவார்.
மணிகண்டன் விக்ரம் வேதா படத்திற்காக எழுதிய வசனங்களில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களில் அதிகம் வலம் வரும் சில வசனங்கள்:
*எப்பவுமே பிரச்சனைனா பிரச்சனையை பார்க்காத… பிரச்சினைக்கான காரணத்தை பாரு…
*நம்ம சாவு நம்ம கையில இருக்குறது ஒரு தனி கெத்து தான சார்!
*முட்டை உடைஞ்சிருச்சு அப்படினா முட்டை உடைஞ்சிருச்சு உடைஞ்சிருச்சுனு புலம்பிட்டே இருக்கக் கூடாது… உடைஞ்ச முட்டைய ஆம்லெட் போட்டமா சாப்பிட்டமானு இருக்கணும்…
*நீ விதி விதினு ஆயா மாதிரி சொல்லிட்டே இரு… லைஃப்பு சான்ஸ் எடுத்துட்டு வந்து சேது இந்தா புடின்னு நமக்கு கைல கொடுக்காது… உனக்கு ஒன்னு தேவைனா அதுக்காக ட்ரை பண்ணாம இருக்குறது தான் தப்பு…
விக்ரம் வேதா படத்தில் வரும் அந்த ரதரத ரத தான் என்கிற மாஸ் பிஜிஎம் மணிகண்டனுக்கு ஒலிக்க ரொம்ப நாள் ஆகப்போவதில்லை.
Be the first to comment on "சத்தமில்லாமல் சாதித்துக் கொண்டிருக்கும் ஒரு பன்முகக் கலைஞன் – இளம் நடிகர் மணிகண்டன் பற்றி ஒரு பார்வை!"