செய்தி ஊடகங்களில் பணியாற்றுவது எவ்வளவு சிரமமான காரியம்?

How difficult is it to work in the media_

6 மெழுகுவர்த்திகள் என்கிற ஒரு படம். அந்த படத்தில் தன்னிடம் இருக்கும் உண்மைகளை எங்கே போய் சொல்வது என்று தெரியாமல் ஒரு ஜீவன் தவித்துக் கொண்டிருக்க அப்போது நடிகர் சியாம் ஒரு பத்திரிக்கை அலுவலகத்தை காட்டி இங்கு போய் உன்னுடைய பிரச்சினைகளை சொல், கண்டிப்பாக உனக்கான தீர்வு கிடைக்கும் என்று பத்திரிகை அலுவலகத்திற்கு அனுப்புகிறார். அதேபோல “ஜிகர்தண்டா” படத்தில் பத்திரிக்கையாளர்கள் பற்றி காட்டியிருப்பார்கள். ரௌடி ஒருவனை பற்றி பத்திரிகையில் “உண்மை”யை எழுதி விட்டார் என்பதற்காக அந்த பத்திரிக்கையாளரை பெட்ரோல் ஊற்றிக் கொழுத்துவார் அசால்ட் சேது. அப்போது ஹீரோ கார்த்திக்கின் மாமா “ஒரு பத்திரிக்கை காரன உயிரோடு எரிச்சு இருக்கான், நாங்க சும்மா விடுவோமா” என்று சொல்வார். அப்படிப்பட்ட பத்திரிக்கையாளரை உறவினராக கொண்ட கார்த்திக், அசால்ட் சேது அருகே செல்லும் போது, நீ பத்திரிகை காரனா இல்ல சினிமா காரனா என்று கேள்வியை எழுப்புவான்.  அதற்கு கார்த்திக் நான் சினிமா காரன் என்று சொல்ல சினிமா காரன் தானே அப்படியென்றால் என் கதையை எடுத்துக் கொள் என்று சொல்லிவிடுவான். அதற்கு காரணம், “பத்திரிக்கை காரன் உண்மையை எழுதுவான்”  என்கிற பயம் அவனுக்குள் இருப்பதே. 

ஆனால் உண்மையான செய்திகள் எழுதக்கூடிய பத்திரிகைகள் இன்று ஏதாவது இருக்கிறதா என்று கேட்டால் பத்திரிகைகளை வாசிக்கும் எல்லா மக்களும் கிட்டத்தட்ட அப்படி ஒரு பத்திரிக்கை இப்போது பெரும்பாலும் இல்லை, அரிதினும் அரிதாகத்தான் அந்த மாதிரியான பத்திரிகைகளை பார்க்க முடிகிறது என்று பதில் கூறுகின்றனர். ஆனால் எல்லா பத்திரிக்கைகளும் தங்களுடைய பத்திரிக்கையின்   தலைப்பு பெயருக்கு கீழ்  உண்மை, நம்பிக்கை, தரம், அறம் போன்ற வார்த்தைகளை  வைத்திருக்கின்றன. இப்படிப்பட்ட வார்த்தைகளை அந்த வார்த்தையின் அர்த்தத்தை புரிந்துகொண்ட சில  சில மனிதர்கள் பத்திரிக்கை துறையில் வேலை செய்ய வேண்டும் என்கிற ஒரு ஆர்வத்தில் அதற்கான படிப்பை எடுத்துப் படித்து  பத்திரிக்கை துறைகளில் பணியாற்ற விரும்புகின்றனர். ஆனால் அப்படிப்பட்ட பத்திரிக்கை துறையை மிக மனப்பூர்வமாக நேசிக்கும் பத்திரிக்கையாளர்களை அந்த பெரிய பெரிய பத்திரிக்கை நிறுவனங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்கிறதா என்று கேட்டால் அவர்களை அடிமாடுகளாக தான் பயன்படுத்துகிறது என்றே பெரும்பாலும் பதில் வருகிறது. காரணம் அந்த பத்திரிகை நிறுவனங்கள் செய்தி சொல்லக்கூடிய முறையை முற்றிலும் மாற்றிவிட்டன. முதலில் செய்தியை செய்தியாக சொல்லி வந்தனர். ஆனால் நாளுக்கு நாள் நிறைய பத்திரிக்கை ஊடகங்கள் பெருகிவிட, போட்டி அதிகமானது. யார் முதலில் செய்தி சொல்கிறார்கள்? யார்  சுவாரசியமான செய்தி சொல்கிறார்கள்?  என்கிற போட்டி வந்துவிட, உண்மை என்கிற வார்த்தையின் வீரியம் முற்றிலும் குறைந்து விட்டது. அதனால் தான் இன்றைக்கு நிறைய செய்தி சேனல்களில் ஒவ்வொரு செய்திக்கு பின்பும் பின்னணி இசை ஒலிக்கப்படுகிறது.  சில செய்தி சேனல்கள் மீம் போட ஆரம்பிக்கின்றனர், வீடியோ மீம்கள் செய்து வருகின்றனர். செய்தி ஊடகங்களில் ஏற்பட்ட இத்தகைய மாற்றங்களுக்கு யாரை குறை சொல்வது? சூது கவ்வும் படத்தில் நியூஸ் பேப்பர் குறித்து ஒரு வசனம் வைத்திருப்பார் நலன் குமாரசாமி. “ஒரே மாதிரியான செய்தியை தினமும் தேதி மாற்றி மாற்றி விற்றுக் கொண்டு இருக்காங்க இந்த நியூஸ் பேப்பர் காரங்க” என்ற வசனம் தான் அது. 

இப்படிப்பட்ட மனநிலையில் தான் பெரும்பாலான மக்கள் இருக்கிறார்கள்.  இவர்களின் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்க்க வேண்டும் என்றால் அதற்கு அந்தப் பத்திரிகை நிறுவனங்கள் என்னென்ன வேலை செய்ய முடியுமோ அத்தனை வேலையும் செய்கிறார்கள். அதற்கு பலி ஆடுகளாக மாறிப் போகிறவர்கள் தான், பத்திரிகை துறையை மிக நேசித்து படித்து அந்த வேலைக்கு வந்த பணியாளர்கள். அப்படி பத்திரிகை துறைகள் ஒரு செய்தியை சுவாரசியமாக கவனயீர்ப்புக்காக சொல்ல வைப்பதற்காக அந்த ஊடக நிறுவனங்கள் பத்திரிக்கையாளர்களை எப்படி இப்படி அலைய விடுகிறது என்பதை சில தமிழ் சினிமாக்களில் நன்கு காட்டி இருப்பார்கள். குறிப்பாக கேவி ஆனந்த் அவர்களின் “கோ” மற்றும் “கவண்” இந்த இரண்டு படங்களிலும் பத்திரிகை நிறுவனங்களில் வேலை செய்யும் பத்திரிகையாளர்கள் என்னென்ன பிரச்சனைக்கு ஆளாகிறார்கள் என்பதை தெளிவாக காட்டி இருப்பார்கள். 

கோ படத்தைப் பார்ப்போம். அந்தப் படத்தில் ஒரு பெண் பத்திரிகையாளர், அரசியல் கட்சி ஒன்று செய்த  திருட்டுத் தனத்தை அந்தப் பெண் பத்திரிக்கையாளர் தன் பத்திரிகையில் செய்தியாக போட்டு உண்மையை வெளியே கொண்டு வர, அடுத்த நாள் அந்த பெண் பத்திரிக்கையாளரை தேடி அரசியல் கட்சித் தலைமை உறுப்பினர்கள் அனைவரும் அந்த பத்திரிக்கை அலுவலகத்திற்குள் தடாலடியாக நுழைவார்கள். அந்தப் பெண் பத்திரிக்கையாளரை அடிப்பதற்கு கையை ஓங்குவார்கள். பகிரங்க மன்னிப்பு கேட்கவில்லை என்றால் இந்த பத்திரிக்கை அலுவலகம் பெரிய பிரச்சனையை சந்திக்கும் என்று மிரட்டி விட்டுச் செல்வார்கள். இப்படிப்பட்ட பெண் பத்திரிகையாளர்கள் மிரட்டலுக்கு உள்ளானால் அவர்கள் வேறு விதமான செய்தியை எழுதப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். “குற்றம் கடிதல்” என்கிற படத்தில் செழியன் என்ற மாணவன் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்க, அந்த விஷயத்தை எப்படியாது செய்தியாக்க வேண்டும் என்ற முயற்சியில் ஒரு பெண் பத்திரிக்கையாளர், செழியனின் அம்மாவிடம் நெருங்கிச் சென்று கேள்வி கேட்க செழியனின் அம்மா அந்த பெண் பத்திரிக்கையாளரை அடித்து துரத்தி விடுவார். இதேபோல 8 தோட்டாக்கள் படத்திலும் பெண் பத்திரிக்கையாளர் ஒருவரை காட்டியிருப்பார்கள். ஆதரவும் வேலையையும் இழந்த ஒரு இளைஞன் தனக்கு நேர்ந்த  துன்பத்தை பத்திரிகையாளரிடம் நம்பிக்கையுடன் சொல்லி அவரிடம் உதவி பெற முயல்கிறார். அந்த பெண் பத்திரிகையாளர் தன்னால் முடிந்த உதவிகளை செய்கிறார். ஆனால் அந்த பெண் பத்திரிகையாளர், அவர் பணி செய்யும் பத்திரிகை நிறுவனத்தில் ஒரு பிரச்சினையை சந்திக்க, தன்னுடைய வேலையை தக்க வைத்துக் கொள்வதற்காக நண்பனின் ரகசியங்களை செய்தியாக்கி வெளியே விட்டு விடுவார்.  இதைப்போல ஆண்டவன் கட்டளை படத்திலும் கார்மேககுழலி என்கிற ஒரு பெண் பத்திரிக்கையாளரை காட்டியிருப்பார்கள். அவர் அரசியல் கட்சி சார்ந்த மீட்டிங் நடக்கும் இடத்திற்கு சென்று இருக்க அரசியல்வாதி ஒருவரிடம் கேள்வி எழுப்புவார். அதற்கு அந்த அரசியல்வாதிகள் பெண் பத்திரிக்கையாளரை மட்டம் தட்ட நினைப்பார்கள். அவர்களுக்கு சரியான சவுக்கடி கொடுத்து விட்டு வெளியேறுவார் பெண் பத்திரிக்கையாளர் கார்மேககுழலி. 

இப்போது மீண்டும் கே. வி. ஆனந்த் அவர்களின் கோ மற்றும் கே. வி. ஆனந்த் அவருடைய இரண்டு படங்களும் பார்ப்போம். இந்த இரண்டு படங்களிலுமே செய்தி நிறுவனங்களில்  அரசியல் கட்சி சார்ந்த பத்திரிகையாளர்கள்,  மதம் சார்ந்த பத்திரிக்கையாளர்கள் பத்திரிக்கை ஊடகங்களில் கருப்பு ஆடுகளாக வேலை செய்வதை வெளிக் காட்டியிருப்பார்.  அதேபோல பத்திரிகையாளர்களுக்குள் இருக்கும் கருத்து மோதல் உருமாறி ஈகோவாக சண்டையாக வெளிப்பட்டு அவர்கள் அந்த பத்திரிக்கை நிறுவன ஐடி கார்டை கழட்டி குப்பை தொட்டியில் வீசுவது போன்ற காட்சிகளையும் வைத்திருப்பார். இப்படி நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களுக்கு எல்லாம் சென்று களத்தில் நின்று செய்தி எழுதும் பத்திரிக்கையாளர்கள் இப்படிப்பட்ட பிரச்சினைகளை சந்திக்க, “பரபரப்பு” இது ஒன்று மட்டுமே நோக்கம் என்ற காரணத்திற்காக நடத்தப்படும் விவாத மேடை நிகழ்ச்சிகள் அதைவிட கொடுமையாக இருக்கின்றன.  இந்த பரபரப்பாக்காக நடத்தப்படும் விவாத மேடை நிகழ்ச்சிகளை  காக்கா முட்டை, குற்றம் கடிதல், கவண், வாயை மூடி பேசவும், தொடரி போன்ற படங்களில் தோலுரித்துக் காட்டி இருப்பார்கள். 

அதிலும் குறிப்பாக “வாயை மூடி பேசவும்” படத்தில் விவாத மேடை நிகழ்ச்சி நடத்தும் பத்திரிகையாளரை செய்தி நிறுவனங்கள் எப்படி வேலை வாங்குகிறது என்பதை தெளிவாக காட்டி இருப்பார்கள். பிரச்சினை சாதாரணமாக போய்க் கொண்டிருந்தாலும் நெருப்பை பற்ற வைத்துவிட்டு கொழுந்துவிட்டு எரிய வைத்து பிறகு அதை அணைத்தால் அணைப்பவருக்கு நல்ல பெயர் கிடைக்கும்  என்கிற ரீதியில் அவர்களை ஊடக நிறுவனங்கள் வேலை வாங்குகின்றனர் என்பதை சுட்டிக் காட்டியிருப்பார் இயக்குனர் பாலாஜி மோகன். அதேபோல “கவண்” படத்தில் காரசாரமான கேள்வி பதில் என்ற நிகழ்ச்சியில் ஒரு அரசியல்வாதியை பேட்டி எடுக்க அந்த ஊடக நிறுவனங்கள் அந்தப் பணியாளரை எப்படி எல்லாம் கேள்வியை மாற்றி கேட்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். நம்ம செய்தி நிறுவனத்திற்கு அந்த அரசியல் கட்சியின் பலம் தேவை என்பதனால் அவருக்கு பிடித்த மாதிரியான அவரை நல்லவர் போல் வெளிக்காட்டும் மாதிரியான கேள்விகளை கேளுங்கள் என்று சொல்ல அந்த பத்திரிக்கையாளர் அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறி விடுவார். 

 இப்படி அரசியல் கட்சிகளுக்கு விலைபோன ஊடகங்கள் மற்றும் மதவாதிகளுக்கு விலை போன ஊடகங்கள், சாதி சங்கங்களுக்கு விலைபோன ஊடகங்கள், பெரிய பெரிய வணிக நிறுவனங்கள் உடன் கைகோர்த்துக் கொண்டு செயல்படும் ஊடகங்கள்  இவற்றில் பணியாற்றும் நேர்மையான பத்திரிக்கையாளர்கள் அத்தனை பேரும் பாவப்பட்டவர்கள்.  “அறம்” என்பதை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு இந்த மாதிரியான ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் பத்திரிக்கையாளர்கள் ஒரு அரசியல் கட்சியின் தவறான நடவடிக்கைகளை சுட்டிக்காட்டும் வகையில் செய்தி கொண்டு சென்றால், அதற்கு பத்திரிகையின் தலைமை இடம் இந்த செய்தி எழுதாதீர்கள் என்று சொல்லும்.  சாதாரண மக்களின் பிரச்சினைகளை தலைப்புச் செய்தியாக சொல்ல முயன்றால் அந்த பத்திரிக்கையாளர்களுக்கு முட்டுக்கட்டை போடும்,  தங்களுடைய பத்திரிக்கை நிறுவனங்களுக்கு  ஸ்பான்சராக இருக்கும் நிறுவனங்களில் நடைபெறும் ஊழல்கள், பாலியல் தொந்தரவுகள் குறித்த செய்தியை எழுதிக் கொண்டு சென்றால் இதுவும் கூடாது என்று சொல்லும். இது போக இன்னும் சில பத்திரிகை நிறுவனங்கள் மதம் அடிப்படையில் பணியாளர்களை புறக்கணிக்கின்றன. குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினர், இந்து மதத்தைச் சார்ந்த ஒருவர் நடத்தும் பத்திரிக்கையில் பணிக்கு சேர வேண்டும் என்றால் அவருக்கு உங்களுடைய முஸ்லிம் பெயரை மாற்றுங்கள் என்று கட்டளை விதிக்கப்படுகிறது. முஸ்லிம் பெயர் வைத்திருக்கிறார் என்பதற்காகவே அந்த பத்திரிக்கையாளரை கொஞ்சம் சந்தேக கண்ணுடன் பார்ப்பது அவர் எழுதும் செய்திகளில் முஸ்லிம்களை பற்றி நல்லவிதமாக காட்டுவது போல் சில வார்த்தைகள் இருந்தால் அவற்றைச் சுட்டிக் காட்டி பணியை விட்டு வெளியேற்றுவது போன்ற சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. இப்படி செய்தி நிறுவன தலைமை யாளர்களிடம் திட்டு வாங்கிக் கொண்டு அவர்களுடைய கட்டளைக்கு தலையாட்டிக்கொண்டு பணியாற்றும் பத்திரிகையாளர்கள் பொதுமக்களிடமும் பெரும்பாலும் கெட்ட பெயர்தான் வாங்குகிறார்கள். மக்களோட உண்மையான பிரச்சினைகளை பேசாமல் எந்த பிரச்சினைகள் காசாக மாறுமோ அந்த பிரச்சினைகள் தான் நீங்கள் பேசுகிறீர்கள் என்று அவர்களை குற்ற பார்வையுடன் பார்க்கிறது இந்த சமூகம். 

Related Articles

சாவு வீட்டில் சிரித்துக்கொண்டே செல்ஃபி எ... இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் அது சொல்லாக மட்டும் தான் இருக்கிறதே தவிர செயலில் யாரும் பின்பற்றுவதாகத் தெரியவில்லை...
தன்னுடைய சொந்தக் கட்சியையே தோற்கடித்த மல... தேவைப்பட்டால் நான் என் சொந்தக் கட்சியைக் கூட எதிர்ப்பேன் என்று கமல் தெரிவித்து உள்ளார். அதை வைத்து பல மீம் பேஜ்கள் கலாய்த்து வருகின்றனர்.ஆனால் உண்...
மஹிந்திரா எக்ஸ்.யு.வி 500 டபுள்யூ 9 – இந... வந்து விட்டது  மஹிந்திரா எக்ஸ்.யு.வி 500 டபுள்யூ 9 (Mahindra XUV500 W9) கார்!!அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த மஹிந்திரா எக்ஸ்.யு.வி 500 டபுள்யூ 9 (M...
ஹாட்டின்களை அள்ளும் ஹலிதா சமீம்! –... தமிழ் சினிமாவில் ஒரு அழகான படம் வந்து... ஒரு பாஸிட்டிவ் எனர்ஜியை அள்ளிக் கொடுக்கிற மாதிரி ஒரு படம் வந்து... ரொம்ப நாளாச்சுப்பா என்ற ஒரு பேச்சு ரசிகர்க...

Be the first to comment on "செய்தி ஊடகங்களில் பணியாற்றுவது எவ்வளவு சிரமமான காரியம்?"

Leave a comment

Your email address will not be published.


*