“ரெஸ்பெக்ட்” என்பது எவ்வளவு பெரிய வார்த்தை? – உங்களுடைய மெசேஜை பார்த்த பிறகும் பதில் அளிக்காதவர்களை என்ன செய்யலாம்?

நடிகர் விஜய் ஆண்டனியின் இரண்டாவது படமான அதாவது ஹீரோவாக நடித்த இரண்டாவது படமான சலீம் படத்தில் ரெஸ்பெக்ட் என்ற வார்த்தையின் அர்த்தத்தை மிக ஆழமாக விளக்கி இருப்பார்கள். சாதாரண கூலித் தொழிலாளியின் மகளை 4 பணக்கார வீட்டுப் பிள்ளைகள் கற்பழித்து விட்டார்கள் என்பதற்காக அந்த நான்கு இளைஞர்களையும் சலீம் என்கிற விஜய் ஆண்டனி கடத்திக் கொண்டுவந்து துப்பாக்கிமுனையில் வைத்திருப்பார். உடனே சலீமை தீவிரவாதி என்று முத்திரை குத்தி விடுவார்கள் ஊடகத்தினரும் போலீஸ்காரர்களும். சைக்கோ கடத்தல்காரனுக்கு என்ன மரியாதை என்று அவன் இவன் என்று சலீமை ஒருமையில் அழைப்பார்கள். சம்பவம் நடந்து கொண்டிருக்கும் அந்த இடத்திற்கு பொறுப்பாளியாக இருக்கும் காவல் துறை அதிகாரி செழியன், சலீமிற்கு போன் செய்கிறார். விஜய் ஆண்டனியின் சலீம் என்கிற பெயர் முஸ்லிம் மத பெயர்   என்பதால் காவல்துறை அதிகாரியான செழியன் போனை அட்டன் செய்ததும் அஸ்ஸலாமு அலைக்கும் பாய் என்று தொடங்குகிறார்.  நீ எந்த இயக்கத்தைச் சேர்ந்தவன் அல்கொய்தா என்று தொடங்கி ஒவ்வொரு தீவிரவாத இயக்கத்தை பற்றி விசாரிக்கிறார் செழியன்.  அதற்கு விஜய் ஆண்டனி, “சார் சலீம்ங்கறது வெறும் பேரு தான் சார்… இந்தப் பேரு உங்களை இவ்வளவு தூரம் சிந்திக்க வைக்குதுனா நீங்க வேணும்னா என்னை விஜய் என்று கூப்பிடுங்கள் அல்லது ஆண்டனி என்று கூப்பிடுங்கள்” என்று சொல்வார். சலீமின் பேச்சை பிடிக்காத செழியன் தொடர்ந்து எரிச்சலாக பேச, சலீம் திடீரென்று துப்பாக்கி எடுத்து சுடுகிறான். துப்பாக்கி சத்தம் கேட்டு செழியன் அதிர்ந்து போய்,  உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க அப்போது சலீம் “ரெஸ்பெக்ட்” என்று அழுத்தமாகச் சொல்வார். 

இந்த “ரெஸ்பெக்ட்” என்ற வார்த்தையின் அர்த்தம் தொழில் ரீதியான சண்டைகள் வரும்போது முற்றிலும் மறைந்து விடுகிறது. சினிமா துறையில் இரண்டு பிரபலங்களுக்குள் நடந்த சண்டைகள் பற்றிப் பார்ப்போம். முதலில் இயக்குநர் பாலாவுக்கும் இயக்குனர் பாரதிராஜாவுக்கும் இடையில் நடந்த சண்டை. “குற்றப்பரம்பரை” என்கிற ஒரு வரலாற்று சம்பவத்தை மையமாக வைத்து இருவரும் இருவேறு கதைகள் அமைத்து படமாக எடுக்க இருந்தார்கள். ஆனால் அதை தவறாக புரிந்துகொண்ட பாரதிராஜா பாலாவை,  “நாய்” என்றும், பாலா என்னுடைய எச்சிலை எடுத்து தின்பவன் என்றும் கூற,  பாலா சீறி எழுந்தார். அப்போது அவர் “பாரதிராஜா வயதில் பெரியவர், அவர் என்னை எப்படி வேணாலும் சொல்லி இருக்கட்டும். ஆனால் அதற்காக நாய் என்றும் எச்சிலைத் தின்பவன் என்றும் சொன்னால் எனக்கு எதிர்வினை ஆற்ற வேண்டும் என்கிற ஒரு எண்ணம் வருகிறது,  நான் ஒன்னும் குட்டைக்குள் கிடக்கும் மட்டை கிடையாது, என்னையவே அவர்கள் குத்திக்கொண்டே இருப்பதற்கு” என்று பாலா சுட்டிக்காட்டியிருந்தார். 

இதே போல இயக்குனர் மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் நடந்த சண்டையில் இயக்குனர் மிஸ்கின் முதலில் அமைதியாக இருந்த போதிலும் விஷால் அவரை தூண்டும் விதத்தில் சில அறிக்கைகள் வெளியிட்டார்.  கொதித்தெழுந்த மிஸ்கின் விஷாலை நாய் என்றும் திருட்டு பையா என்றும் பொறுக்கி என்றும் நீ தமிழனா என்றும் தாறுமாறாக வாய்க்கு வந்தபடி திட்டி தீர்த்தார். 

இந்த மூன்று சம்பவங்களையும் எடுத்துக்கொள்ளுங்கள். மோதல் என்று வந்து விட்டால் ஒரே மாதிரியான சிந்தனை கொண்டவர்களாக இருந்தாலும் அவர்கள் ரெஸ்பெக்ட் என்ற ஒரு வார்த்தையை மறந்து விடுகிறார்கள்.  எவ்வளவு பெரிய மேடையாக இருந்தாலும் எவ்வளவு பேர் கேட்கக்கூடிய ஊடகமாக இருந்தாலும் அங்கு “அவனே இவனே” என்று ஒருமையில் பேசப்படுகிறது. “எதா இருந்தாலும் நமக்குள்ள பேசி முடித்துக் கொள்ளலாம் என்று நான் பாரதிராஜாவுக்கு தொடர்ந்து போன் பண்ணினேன் ஆனால் அவர் எடுக்கவே இல்லை” என்றார் பாலா. இதே மாதிரியான பதிலைத்தான் இயக்குனர் மிஷ்கினும் விஷால் மீது குற்றச்சாட்டாக வைத்தார். 

மேற்கண்ட உதாரணங்களில் இயக்குனர் மிஷ்கினும் விஷாலும் இப்போது சமரசம் ஆகி விட்டார்கள். அதேபோல் இயக்குனர் பாலாவும் பாரதிராஜாவும் சமரசம் ஆகி விட்டார்கள். அதனால் அதைத் தொடர வேண்டாம். 

இப்படி ஒருமையில் பேசும் போது கூட அந்த “ரெஸ்பெக்ட்” என்ற ஒரு விஷயம் நமக்கு கிடைக்கவில்லை என்று உண்டாகிற வருத்தத்தை விட,  மோதல் வேண்டாம் எதுவாக இருந்தாலும் பேசிக்கொள்ளலாம் என்று நாம் அவரை செல்போனில் அழைத்தாலும் அல்லது தகவல் அனுப்பினாலும் மெசேஜ் செய்தாலும் கடிதம் எழுதினாலும் மெயில் அனுப்பினாலும் எதற்கும் அவர்கள் பதில் அளிக்காமல் இருப்பது தான் உச்சகட்ட அவமானத்தை தருகிறது. 

ஒரு கட்டத்தில் பொறுமை தாங்காமல் எந்த பிரச்சினையாக இருந்தாலும் உங்களிடம் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என நினைத்தேன். ஆனால் நீங்கள் அதற்குத் தயாராகவே இல்லை. எத்தனை முறை போன் செய்தாலும் எவ்வளவு மெசேஜ்கள் அனுப்பினாலும் நீங்கள் அதை கண்டுகொள்வதே இல்லை என்று நேரில் சென்று அந்த நபரிடம் பேசினால் அவர்கள் மிக எகத்தாளமாக பேசுகிறபோது என்னடா நமக்கு ரெஸ்பெக்ட்டே இல்லை என்கிற ஒரு தாழ்வு மனப்பான்மை வந்துவிடுகிறது. அந்த அளவுக்கு நாம் என்ன கேவலமாகவா போய் விட்டோம் என்ற எண்ணம் பிறக்கிறது. வாழ்க்கையின் மீதான ஒரு ஈர்ப்பு குறைந்து விடுகிறது. இந்த மாதிரியான மோதல்கள் தொழிலில் மட்டும் வருவதில்லை. உறவுகளில் கூட வருகிறது.  

குறிப்பாக காதலர்களுக்குள் இந்த மாதிரியான ரெஸ்பெக்ட் பிரச்சனை அதிகமாக வரும்.  இருவருக்குள் ஏதாவது கருத்து வேறுபாடு அல்லது சந்தேகம் போன்ற காரணங்களால் லேசான பிரிவு ஏற்பட்டால் போதும்.  உடனே இருவருக்கும் “ரெஸ்பெக்ட்” என்ற வார்த்தையின் மீதான மரியாதை தெரியாமல் போய்விடுகிறது. ஒரு ஆண் வலிந்து சென்று மன்னிப்பு கேட்டாலும், பேசு என்று கெஞ்சினாலும் அந்தப் பெண்  அந்த ஆணின் பரிதவிப்புகளை சரியாக புரிந்து கொள்வதில்லை. தன்னுடைய ஈகோவை காட்டுகிறாள். உனக்கு எதுக்கு மரியாதை? உன்னை எதுக்கு திருமணம் செய்ய வேண்டும்? உன்னுடைய கேள்விகளுக்கெல்லாம் ஏன் பதில் சொல்லவேண்டும்? என்கிற குறுகிய மனப்பான்மையுடன் அந்த ஆணை அலைய விடுகிறாள். அந்த ஆண் என்ன செய்வது என்று தெரியாமல் வேலையிலும் கவனம் செலுத்த முடியாமல் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களிடமும் சரியாக பேச முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகிறான்.  அந்த போனை எடுத்து ஏதாவது ஒரு பதில் சொல்லிவிட்டால் அது ஆணுக்கு நிம்மதியாக இருக்கும். ஆனால் அந்த நிம்மதியை மட்டும் அந்த பெண்கள் தரப்போவதில்லை. 

இதே போலத்தான் ஆண்களும், குறிப்பாக திருமணமான ஆண்களுக்கு சந்தேக புத்தி அதிகமாக வருவது இயற்கையான ஒரு விஷயமாகவே மாறிவிட்டது என்று சொல்கின்றனர். சுற்றி இருப்பவர்கள் ஏற்றி விடுவது கேட்டுக் கொண்டு அந்த பெண் மீது தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக சந்தேகப்படுகிறான், பிறகு திடீரென ஒரு நாளில் வீட்டை விட்டுக் கிளம்புகிறான். திடீரென அந்த பெண்ணை வீட்டை விட்டே துரத்துகிறான். இப்படி தேவையில்லாத பிரச்சினைகள் தேவையில்லாத கற்பனைகள் தேவையில்லாத சந்தேகங்கள் ஆண்களால் உருவாக்கப்பட்டு அது சிறிய அளவிலிருந்து பூதாகரமாக மாறி பல மனிதர்களின் இதயத்தை நொறுங்கும் படி செய்துவிடுகின்றது. 

வாட்ஸ்அப் மெசேஜ், பேஸ்புக் மெசஞ்சர் என்று நாம் அனுப்பிய செய்திகள் அத்தனையையும் அவர்கள் பார்த்த பிறகும் எந்த பதிலும் சொல்லாமல் இருப்பது அதைவிட வேதனை அளிக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது.  ஒரு கட்டத்தில் பொறுமை தாங்க முடியாமல் தொழில்ரீதியான மோதல்ளாக இருந்தாலும் சரி, உறவுகளாக இருந்தாலும் சரி அவர்களை தேடிப்பிடித்து, “ஏன் மரியாதையைக் கொடுக்க மாட்டேங்கறீங்க எத்தனை மெசேஜ் பண்ணி இருப்பேன்… எத்தனை கால் பண்ணி இருப்பேன்… எத்தனை முறை உங்களை தேடி வந்து இருப்பேன்… ஆனால் நீங்கள் கண்டு கொள்ளவில்லையே” என்று ஒரு வார்த்தையை கேட்டு விட்டால் போதும் அந்த ரோச காரர்களுக்கு பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது.  இந்த மாதிரி பேசுற வேலை வெச்சுக்காதீங்க இந்த “கண்டுக்கல” அப்படிங்கிற வார்த்தையை இனிமேல் என்கிட்ட பயன்படுத்தாதீர்கள், எனக்கும் குடும்பம் இருக்கிறது, வேலைப்பளு இருக்கிறது” என்று அதிகாரத் தோரணையில் பேசும்போது அவர்கள் மீதான மரியாதை கெட்டுப் போய்விடுகிறது. 

நம்மளை விட வயதில் சிறியவன் தானே, நம்மளை விட வசதியில் சரிந்தவன் தானே, நம்மிடம் சம்பளம் வாங்குபவன் தானே, நம்மளை விட அறிவில் குறைந்தவன் தானே என்ற காரணங்களை முன்வைத்து ஒருமையில் பேசுவது, நீ எல்லாம் ஒரு ஆளுன்னு உனக்கு நான் வந்து பதில் சொல்லணுமா என்று எகத்தாளமாக பேசுவது,  கையிலேயே போன் இருந்தாலும் வேண்டுமென்றே போன் எடுக்காமல் இருப்பது,  போன் பேச விரும்பாமல் அருகில் இருப்பவர்களிடம் போனை கொடுத்து “அவர் இல்லைங்க போன் என்கிட்ட இருக்கு நீங்க இனிமேல் போன் பண்ணி தொந்தரவு பண்ணாதீங்க கொஞ்சமாவது புத்தி ஓட நடந்துக்கங்க மூளை இருக்கு தானே உங்களுக்கு” என்று மற்றவர்களை பேச வைப்பது  போன்ற தகடு தத்தம் வேலையை செய்யும்போது நம்முடைய மனம் பொங்கிக்கொண்டு எழுகிறது.  இத்தனை நாட்கள் அவர்களுடைய பதில்களுக்காக நாம் சொந்த வேலையை எல்லாம் விட்டுவிட்டு விருப்பு வெறுப்புகளை விட்டுவிட்டு அலைந்து திரிந்து மன உளைச்சலுக்கு ஆளாகித் தவித்த அத்தனை கோபத்தையும் ஒன்று திரட்டி அவர்களை நாம் திட்டி தீர்க்கும் போது “இங்க பாரு எங்கிட்ட இந்த மாதிரி பேசாத என்னோட மதிப்பு என்னனு தெரியாம நீ பேசிட்டு இருக்க… நான் நினைச்சா உன்னை என்ன வேணாலும் பண்ண முடியும் சரியா…” என்று சினிமா வில்லன்களை போல மிரட்டி விட்டு,  “மரியாதைனா என்னான்னு தெரிஞ்சுக்கு சரியா? நம்ம பேசுற வார்த்தையில தான் நம்மளோட மரியாதை இருக்கு” என்று அந்த ஈகோ மனநோயாளிகள் நமக்கு அறிவுரை சொல்லும் போது தான்  ஒட்டுமொத்த மனித சமூகத்தின் மீது கடும் கோபம் வருகிறது. 

இந்த லட்சணத்தில் அந்த மனநோயாளிகள் மற்றவர்களிடம் போய் என்ன சொல்வார்கள் தெரியுமா? அதாவது அவர்களிடம் எதிர்த்து கேள்வி கேட்ட நாம், “அவர்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை” என்றும் கேள்வி கேட்ட நம்மைப் பற்றி, “தராதரம் பாக்காம பழகுனது தப்பா போச்சு… இன்னைக்கு கண்ட கண்ட நாயெல்லாம் நம்மளை எதிர்த்து கேள்வி கேட்குது…” என்றும் அவர்கள் உலகமகா யோக்கியர்கள் போல மற்றவர்களிடம் பொரிந்து தள்ளுவார்கள். மரியாதை என்பது தலைவர் செந்தில் சொன்னது போல, “Give respect take respect”  என்பதுதான். 

அறிவு உங்களுக்கு அதிகாரத்தை வழங்கலாம் குணம் தான் உங்களுக்கு மரியாதையை பெற்றுத் தரும்! – நடிகர் புரூஸ் லீ. 

 

Related Articles

இவர்களில் “பொன்னியின் செல்வன̶்... கல்கி எழுதிய பொன்னியின் செல்வனை படமாக எடுத்தால் எப்படி இருக்கும்? என்ற கேள்வி பல வருடங்களாகவே புத்தக வாசிப்பாளர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் மத்தியில...
ஜீவாவின் கீ படம் எப்படி இருக்கு?... இயக்குனர் காளீஸ் இயக்கத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி உள்ள படம் கீ. பல மாதங்களுக்கு முன்பே ரிலீசாகி இருக்க வேண்டிய படம். தற்போது வெளியாக...
எவிடென்ஸ் கதிர் எழுதிய சாதி தேசத்தின் சா... சாதியும் சாம்பல் பறவையும், சாதிக் களமாகும் பள்ளிக்கூடங்கள், அன்பினை இழக்கும் சமத்துவம், போராட்டமும் வாழ்வும், தாக்குதல்களும் சவால்களும் சாதனைகளும், நட...
நடந்து, சைக்கிளில் சென்று கர்நாடக வாக்கா... காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடக வாக்காளர்களைக் கவரும் வகையில் நடந்து, சைக்கிளில் சென்று, அட்டையில் செய்த எரிவாயு உருளையைத் தலையில் சுமந்து மலூர...

Be the first to comment on "“ரெஸ்பெக்ட்” என்பது எவ்வளவு பெரிய வார்த்தை? – உங்களுடைய மெசேஜை பார்த்த பிறகும் பதில் அளிக்காதவர்களை என்ன செய்யலாம்?"

Leave a comment

Your email address will not be published.


*