“காளைகளுக்காகப் போராடிய நாம் எருமைகளுக்காகவும் போராடவேண்டும்” – நக்கலைட்ஸ் பாலச்சந்திரன்!

About Nakkalites Prasanna Balachandran

தமிழ் யூடியூப் உலகைப் பொருத்தவரை எந்த போலித்தனமும் இல்லாமல் உண்மையான அறச் சீற்றத்துடன் சமூக அவலங்களை பேசி வரும் ஒரே சேனல் என்றால் அது நக்கலைட்ஸ் சேனல் மட்டுமே. அப்படிப்பட்ட நக்கலைட்ஸ் சேனலை வெற்றிகரமாக நடத்தி வருபவர், பிரசன்னா பாலச்சந்திரன். அவரைப் பற்றி சில தகவல்களை இங்கு பார்ப்போம். 

2020 மார்ச் மாதத்தில் இவர் 40 வயதை கடந்து இருக்கிறார். 1992ஆம் ஆண்டு இவர் தன் தந்தையை இழந்தார். எல்ஐசி ஏஜென்ட் இடம் அசிஸ்டெண்டாக வேலை செய்திருக்கிறார். பைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் சூப்பர்வைசராக வேலை செய்திருக்கிறார். கொரியர் கம்பெனியில் கொரியர் பாயாக வேலை செய்திருக்கிறார்.  ரோடு டிவைடருக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்திருக்கிறார். பில்டிங் கான்ட்ராக்ட்டர் இடம் சூப்பர்வைசராக வேலை செய்திருக்கிறார். இத்தனை சிரமத்திற்கு உள்ளான காலங்களிலும் அவர் புத்தகங்கள் வாசிப்பது மட்டும் நிறுத்தவே இல்லை. வறுமையில் வாடியபோதும் இவர் புத்தகங்களை தனது சொந்தக் காசு போட்டு வாங்கி படித்து வந்தவர். நண்பர்களுடன் சேர்ந்து அரிசி வியாபாரம் செய்து வந்தார். அந்த தொழில் வெற்றிகரமாக சென்ற போதிலும் அவருக்கு அதில் ஈடுபாடு இல்லை. சமூக அக்கறை கொண்ட  பிரசன்னா ஒரு கட்சியில் தீவிர அரசியல் செயல்பாட்டாளர் ஆகவும் ஐந்து வருடங்களாக பணியாற்றி இருக்கிறார். 

 30 வயதில் அவருக்கு திருமணம் நடைபெற்றது. முப்பதாவது வயதில் அவர் ஒரு புத்தகப் பதிப்பாளர் ஆக மாறி இருந்தார். இருந்தாலும் அந்த தொழிலும் அவருக்கு மன திருப்தியை கொடுக்கவில்லை. இந்த சூழலில்தான் இயக்குனர் ராஜேஷை பிரசன்ன பாலச்சந்திரன் சந்திக்கிறார். இருவரும் சேர்ந்து 2014ஆம் ஆண்டு ஆண்ட பரம்பரை என்கிற ஒரு குறும்படம் ஒன்றை எடுக்கிறார்கள். அவர்கள் எடுத்த அந்த குறும்படம் அவர்களின் வாழ்க்கையை வேறொரு திசைக்கு  அழைத்துச் செல்கிறது. ஆண்ட பரம்பரை என்ற அந்தக் குறும்படம் “மதுபான கடை” திரைப்பட இயக்குனர் கமலக்கண்ணனிடம் பிரசன்னா பாலச்சந்திரனுக்கும் ராஜேஸ்வருக்கும்  உதவி இயக்குனர் வாய்ப்பு வாங்கித் தருகிறது. 2018 ஆம் ஆண்டு நக்கலைட்ஸ் குழுவினருக்கு தமிழகத்தின் தலைசிறந்த இளைஞர்கள் என்ற விருதினை அளித்தது ஆனந்த விகடன். 

ஏப்ரல் மாதம் 2018 ஆம் ஆண்டு  தமிழ்நாடு டிஜிட்டல் மீடியா அசோசியேசன்  சார்பாக சென்னையில் நடந்த  காவிரி மேலாண்மை அமைக்க கோரியும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரியும் யூடியூப் இளைஞர்களால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்தது.  அதில் பங்கேற்ற இளைஞர்கள் பலரும் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.  பிரசன்னா பாலச்சந்திரனும் வெறும் இரண்டரை நிமிடங்களுக்குள் ஒரு தனது உணர்வு பூர்வமான கருத்துக்களை வெளிப்படுத்தினார். 

அந்த நிகழ்வில் பிரசன்னா பாலச்சந்திரன் பேசியது: அரசாங்கம் நம்மள கட்டுபடுத்துவது போலீஸ் நம்மளை கட்டுப்படுத்துவது நம்மளோட போராட்டத்திற்கு தடை விதிக்கிறது இதுல ஆச்சர்ய படுத்துவதற்கு எதுவுமே இல்ல அவங்க எப்பவுமே அப்படிதான் இருப்பாங்க இதுதான் அவிங்களோட டிசைன். ஆனா நமக்கு பிரச்சனை யாரு அப்படினா ரொம்ப படிச்ச சயின்ஸ் டெக்னாலஜிலாம் தெரியும் அப்படிங்கிற  அப்பர் மிடில் கிளாஸ் குரூப் இருக்கு அவங்க தான் நமக்கு பெரிய பிரச்சினையா இருக்கிறாங்க… நியூட்ரினோ பிரச்சினை பற்றி பேசினால் உனக்கு சயின்ஸ் தெரியுமா அப்படின்னு கேட்கிறான்,  ஸ்டெர்லைட் பிரச்சனை பற்றி பேசினால் உனக்கு சயின்ஸ் தெரியுமா அப்படின்னு கேட்கிறான்… உன் சயின்ஸ் என்ன உன் டெக்னாலஜி என்ன அப்படிங்கறது எங்களுக்குத் தெரியும், கடல்ல எண்ணெய் கலந்தப்ப பக்கெட்ல மோந்து ஊத்தினவந் தான நீ…  உங்க சயின்ஸ் என்னானு எங்களுக்கு தெரியாதா… ஆர்கானிக் ஃபுட் சாப்பிடுவ,  ஆனா குளத்துக்குள்ள போயி வீடு கட்டுவ…  இதான் உன் டெக்னாலஜி… டெக்னாலஜி பத்தி எங்க கிட்ட சொல்லாத…  நாளைக்குக் கழுவறதுக்கு தண்ணீர் இல்லாதப்ப தோனி சொம்புல கொண்டு வந்து தண்ணி கொடுக்க மாட்டாரு… அவரு விளையாடிட்டு போயிருவாரு இங்க நமக்குதான் காஞ்சு போய்க் கிடக்கும்…  நீ படிச்சியா சம்பாதிச்சியா, நீ சந்தோசமா இருந்தியா அதோட இரு… அதை பற்றி எங்களுக்கு பிரச்சினை இல்லை…  இங்க உண்மையா கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கிற மக்களோட உணர்வுகள காயப்படுத்தாத கொச்சைப்படுத்தாத…  நியூட்ரினோவை தடை செய்யணும் அப்படின்னு ஒரு வீடியோவில் சொன்னதற்காக அடாமிக் பிசிக்ஸ் படித்த ஒருவர் ஒருமுழம் நீளத்திற்கு எங்களுக்கு அட்வைஸ் செய்து விட்டு போகிறார்…  எனக்கு பிரச்சனை சயின்ஸ் இல்ல, நீ என் வீட்டை காலி பண்ண சொல்ற அதான் பிரச்சினை, அடுத்து நான் எங்க போவேன் அப்படிங்கறது தான் பிரச்சினை…  சயின்ஸ் பேசுறவன் டெக்னாலஜி பேசுறவன் இவங்கள எல்லாம் தூக்கி ஓரமா வச்சுடுங்க…  மக்களுடைய பிரச்சினைகளை புரிந்து கொண்ட உண்மையான உணர்வுள்ள இளைஞர்களுக்கு தலை வணங்குகிறேன்… ஒரு ஜனநாயக நாட்டில் கடைசிப் புகலிடம் நீதிமன்றம் தான் அப்படின்னு சொல்லுவாங்க… ஆனால் அந்த நீதிமன்றம் சொன்னதுக்கு அப்புறம் கூட அரசாங்கம் அத கேக்கல அப்படின்னா  போராடுவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை…  போராடுவதைத் தவிர அவர்கள் நமக்கு வேறு எந்த வாய்ப்பும் தரவில்லை…  நம்ம போராடிக்கிட்டு இருக்கறதுக்கு அவிங்க தான் காரணம்…  மேட்ச் பாக்கறவங்க மேட்ச் பார்க்கட்டும் நாளைக்கு அவங்க காஞ்சு போய் உட்கார்ந்து இருக்கட்டும்… நம்ம தண்ணீரை எப்படிக் கொண்டு வருவது என்று யோசிப்போம்… என்று அவர் பேசிய பேச்சு  அவ்வளவு உணர்வு பூர்வமாக இருந்தது. 

பகடை என்ற குறும்படத்தில் மாரி என்கிற தூய்மை பணியாளராக நடித்திருப்பார்.  நடித்திருப்பார் என்று சொல்வதைவிட வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆம் அவர் அந்தக் குறும்படத்தில் சாக்கடைக் குழிக்குள் இறங்கி மரணிக்கும் போது  நம் கண்கள் கலங்குகிறது. நக்கலைட்ஸ் சேனலில் வரும் வீடியோக்களில் பெரும்பாலும் அப்பா கேரக்டர் தான் செய்து கொண்டிருக்கிறார்.  அப்பா கேரக்டர் என்றாலும் அதிலும் விதவிதமான அப்பாக்களை வெளிக்கொண்டு வருகிறார்.  நகரத்து அப்பா, கிராமத்து அப்பா,  ஜாலியான அப்பா, அல்லல்படும் அப்பா என்று அவர் பலவிதமான அப்பாக்களை  கண்முன் கொண்டுவந்து எல்லா தரப்பு மக்களையும்  கவர்வதில் வல்லவராக இருக்கிறார். 

இவர் நடித்ததில் மிக மிகப் பிரமாதமான ஒரு வீடியோ என்றால் அது தமிழ் பீரியட் அலப்பறைகள் என்று சொல்லலாம். அதில் ஒரு தனியார் பள்ளியில்  வேலை செய்யும் தமிழ் ஆசிரியராக பிரசன்னா நடித்திருப்பார்.  தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியருக்கு கொடுக்கப்படும் மரியாதை என்ன என்பது அந்த வீடியோவில் நன்கு தெரியும். ஒரு பக்கம் பள்ளி நிர்வாகி அம்மா வந்து இன்னும் சிலபஸ்ச முடிக்காம என்ன பண்ணிட்டு இருக்கீங்க, தமிழ்தானே சீக்கிரம் முடிக்க முடியாதா என்று அதட்ட…  இன்னொரு பக்கம் சார் தமிழ் தானே அப்புறம் பார்த்துக்கலாம் முதல்ல மேக்சுக்கு டைம் கொடுங்க உங்க பீரியட நான் எடுத்துகிறேன் என்று கணித ஆசிரியர் வந்து தொந்தரவு செய்வார். இதற்கு நடுவில் கொஞ்சம் கூட தமிழ் ஆர்வமே இல்லாத மாணவர்கள் அவரை காமெடி பீஸாக பார்க்க, அவர் தமிழ் னா என்னனு தெரியுமா தமிழ் இலக்கியங்களோட வலிமை என்னன்னு உங்களுக்குத் தெரியுமா என்று மாணவர்களிடம் ஆக்ரோசம்  அடைந்துவிட்டு சிலப்பதிகாரத்தில் கண்ணகி நீதி கேட்கும் காட்சியை அப்படியே உணர்வுபூர்வமாக பேசியிருப்பார். கண்ணகியைத் தன் உடலுக்குள் கொண்டுவந்து மிரட்டி இருப்பார். அவர் வாயிலிருந்து பிறக்கும் ஒவ்வொரு தமிழ் வார்த்தைகளும்  மயிர்க் கூச்செறிய செய்தன. 

அவர் மாணவர்களைப் பார்க்க அவர்கள் மிரண்டு போய் அமர்ந்திருப்பார்கள். அந்த  வசனங்களை பேசி முடித்த பிரசன்னா அருணை எழுப்பி இந்த மாதிரி உன்னால் பேச முடியுமா என்று கேட்பார். அதற்கு அருண் எழுந்து அண்ணாமலை படத்தில் ரஜினி நீதி கேட்கும் “அசோக் இந்த நாளை நீ ஞாபகம் வச்சுக்கோ” என்ற காட்சியை அப்படியே நடித்துக் காட்டிவிட்டு,  இதுவும் நீதி கேட்கும் காட்சி தான் சார் என்று அருண் பதிலளிப்பார்.  இப்போது தமிழ் ஆசிரியரான பிரசன்னா மிரண்டு போய் நிற்பார்.  அந்த வீடியோவை பலருடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களில் ரயில்களாகப் பார்க்க முடிந்தது. 

அந்த வீடியோவிற்கு பிறகு பிரசன்னாவை பலரும் தமிழ் ஐயா தமிழ் ஐயா என்றுதான் செல்லமாக அழைத்து வருகின்றனர். எல்லா பிரச்சினைகளின் போதும் வீடியோ போட்ட நக்கலைட்ஸ் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஏன் எந்த வீடியோவும் போடவில்லை  என்று கேட்டதற்கு பிரசன்னா பாலச்சந்திரன் அளித்த பதில்: 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடந்து கொண்டிருந்த போது நாங்கள் அதற்காக வீடியோ பண்ணவில்லை.  எல்லோரும் எங்ககிட்ட கேட்டாங்க அதை செய்ய சொல்லி, நாங்க அப்ப அதை செய்யல. எங்களுக்கு அதுல கொஞ்சம் மாற்றுக்கருத்துக்கள் இருந்தது.  நாங்க காளை மாட்டை காப்பாற்றுவதை விட எருமை மாட்டை காப்பாற்றுவதில் ரொம்ப ஆர்வமாக இருந்தோம்.  ஏனா எருமைகளைப் பற்றி பேசுவதற்கு தமிழ்நாட்டில் யாருமே கிடையாது.  குழந்தைகள் அதிகமாக குடிக்கிறது எருமைப்பால் தான் பசும்பால் அல்ல.  ஆனால் எருமைகள் என்பது புறக்கணிக்கப்பட்டதாக இருக்கிறது. எருமைக்காக யாரும் போராடவில்லை.  இன்னைக்கு வரைக்கும் அதை பற்றி யாரும் பேசவில்லை. ஏன்னா எருமையை பார்த்து யாரும் மீசையை முறுக்குவது இல்லை. 

பெண்ணியம் சார்ந்த கேள்விக்கு அவர் அளித்த பதில்: குறிப்பாக பெண்கள் சார்ந்த விஷயத்தில் ரொம்ப ரொம்ப பிற்போக்கான விஷயம் தான் ஓடிக்கிட்டு இருக்கு.   நிறைய ஆன்லைன் சேனல்கள் பெண்ணியம் பேசுவதில் உலக அளவில்  பர்ஸ்ட் வேவ் செகன்ட்வேவ் என்று சென்று கொண்டிருக்கின்றன. ஆனால் நம்ம தமிழகத்தில் இன்னும் பாரதியாரின் கும்மியடி பெண்ணே கும்மியடி பெண்ணே என்ற பாடலை தான் பாடிக் கொண்டிருக்கிறார்கள். நம்ம பெண்களை ஆண்கள் தான் போய் காப்பாற்ற வேண்டிய சூழல் இருக்கிறது என்று ரொம்ப பிற்போக்குத்தனமாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள். 

“சமூகத்தைச் சீரழிக்கும் பெண்களை தாழ்த்திப் பேசும், உருவ கேலி செய்யும் எந்த ஒரு காட்சியும் நக்கலைட்ஸ் வீடியோக்களில் இடம்பெறக் கூடாது என்பதுதான் எங்களுடைய அடிப்படை கொள்கை” என்று விகடன் பேட்டியில் பதிலளித்திருக்கிறார் பிரசன்னா. இப்படிப்பட்ட எண்ணம் இருப்பதனால்தான் அவர் இன்று பல இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து வருகிறார். இப்படி தன்னுடைய பள்ளி கல்லூரிப் படிப்பை சரியாக முடிக்காமல் அந்தத் தொழில், இந்த தொழில் என்று ஒவ்வொரு தொழிலாக மாறி மாறி… புரட்சி போராட்டம் என்று கட்சிகளுக்கு எல்லாம் வேலை செய்து கொண்டிருந்த போதிலும்… குடும்ப உறுப்பினர்கள் இனி இவன் உருப்பட மாட்டான் என்று  சொன்ன போதிலும்… பிரசன்னா பாலச்சந்திரன் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் கடைபிடிக்க தவறியதில்லை. அது புத்தக வாசிப்பு. எந்தச் சூழ்நிலைகளிலும் புத்தக வாசிப்பை கைவிட்டு விடாதவர்கள் எப்படியும் ஒருநாள் சாதித்துக் காட்டி விடுவார்கள் என்பதற்கு பிரசன்னா பாலச்சந்திரன் ஒரு நல்ல உதாரணம்.

Related Articles

அறம் திரைப்பட வசனங்கள் ஒரு பார்வை!... நயன்தாராவின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படம் "அறம்". அந்தப் படம் ரிலீசான சமயத்தில் அந்தப் படத்தின் வசனங்கள் மிகப் பெரிய அளவில் கவனம் பெற...
ரஜினியின் 100 மரணமாஸ் வசனங்கள் ஒரு பார்வ... எனக்கு மரியாதை வேண்டாம், வேலைக்கு மரியாதை கொடுங்க... இது எப்படி இருக்கு? எப்போதுமே ஒருத்தர குறைச்சி மதிப்பிடக் கூடாது. ஆஞ்சநேயர ராவணன் குற...
இயக்குனர் சாந்தகுமாரின் அட்டகாசமான வசனங்... மௌனகுரு, மகாமுனி என்ற இரண்டு அட்டகாசமான படங்களை இயக்கிய சாந்த குமாருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக அவருடைய வசனங்கள் என்றும் பேசப்படு...
இயக்குனர் பாலா பற்றிய சுவாரஸ்யமான தகவல்க... மதுரை பெரியாஸ்பத்திரியில் பிறந்தார். ௧ம்பம் அருகே நாராயணத் தேவன்பட்டி தான் பாலாவின் பூர்வீகம். பெரிய குடும்பம். எட்டு பிள்ளைகள். அப்பா வங்கி வே...

Be the first to comment on "“காளைகளுக்காகப் போராடிய நாம் எருமைகளுக்காகவும் போராடவேண்டும்” – நக்கலைட்ஸ் பாலச்சந்திரன்!"

Leave a comment

Your email address will not be published.


*