கூலித் தொழிலாளிகள் ஏமாற்றி சம்பாதிப்பவர்களா? – பழி சுமத்துதல்!

about Wage workers

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலைஞர் டிவியில் ஒளிபரப்பான நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றிமாறன் நடுவராக பங்கேற்றார். அப்போது அவர் பல படங்களுக்கு மிக காட்டமான விமர்சனம் தந்திருந்தார். அதிலும் குறிப்பாக உதயன் கதிரவன் என்று ஒரு இளம் இயக்குனர்  “ஒரு நாளைக்கு ஒரு ஜிபி” என்றொரு படம் எடுத்து இருந்தார். 

ஒரு நாளைக்கு ஒரு ஜிபி இந்த படத்தின் கதை இதுதான். குப்பை மேட்டில் வசிக்கும் இரண்டு  இளைஞர்கள். அந்த இரண்டு இளைஞர்களும் படிக்காதவர்கள். குப்பை அள்ளுபவர்கள். அதில் ஒரு இளைஞன் பெயர் வெள்ளை. இன்னொரு இளைஞன் பெயர் சப்பை.  சப்பை என்கிற இளைஞனுக்கு குப்பை கூளத்திலிருந்து ஒரு ஆண்ட்ராய்டு போன் கிடைக்கிறது. அந்த போனை எடுத்து கொண்டு செல்போன் கடைக்குபோய் அதை சரி செய்து கொண்டு அதை எப்படி உபயோகிப்பது என்று தெரிந்து கொள்கிறான். அதைத் தெரிந்துகொண்ட பிறகு  போனிற்கு, ஒரு நாளைக்கு ஒரு ஜீபி நெட் பேக் போட்டு கொண்டு  நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஆபாச படமாக பார்த்து தள்ளுகிறான். நண்பன் வெள்ளை அவனுடைய போனை கேட்டாலும் அதற்கு கொடுக்க மறுக்கிறான் சப்பை.  ஒருநாள் சாலையில்  சப்பை குப்பை வண்டியை பழுது பார்த்துக் கொண்டிருக்க அப்பொழுது ஒரு சிறுமி வந்து அண்ணா இங்க வந்த பாலை பார்த்தீர்களா என்று கேட்க, அவன் அந்த சிறுமியின் சின்ன உடையை கூர்ந்து கவனித்து விட்டு கீழே இருந்து மேல் வரை அந்த சிறுமியை உற்றுப் பார்க்கிறான். அவனுக்குள் ஒரு வக்கிர புத்தி ஏற்படுகிறது. அப்போது வண்டியின் பின்புறம் பந்தை எடுத்துக் கொண்டிருந்த அந்த சிறுமியை காலால் மிதித்து குப்பை வண்டியில் தூக்கிப் போட்டுக் கொண்டு சென்று குப்பையில் வைத்து அந்த சிறுமியை ரேப் செய்து, தான் ரேப் செய்வதை அவன் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து வைக்கிறான்.  அடுத்த நாள் ரேப் செய்யப்பட்டு இறந்து போன சிறுமி குறித்து போலீசார் அந்த குப்பைமேட்டில் விசாரிக்கின்றனர். அப்போது வெள்ளை வந்து சப்பையிடம் இந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்துவிட்டது என்று சொல்கிறான், சப்பை அதை பெரிதாகக் கண்டுகொள்ளாமல் செல் போனை வைத்துவிட்டு பாத்ரூமிற்குள் குளிக்க செல்கிறான். அந்த நேரத்தில் சப்பையின் நண்பன் வெள்ளை  அவனுடைய செல்போனை எடுத்து நோண்டி பார்க்கிறான். அதில் அந்த சிறுமியை ரேப் செய்த வீடியோ இருக்கிறது. அதை பார்த்து அதிர்ந்த வெள்ளை அந்த செல்போனை எடுத்துக்கொண்டு சென்று போலீசிடம் ஒப்படைக்கிறான்.  போலீஸார் கைது செய்து கொண்டு போகிறது. இதற்குப் பிறகு அந்த வெள்ளை தன் கையில் இருக்கும் அந்த ஆண்ட்ராய்டு போனை தூக்கி வீசுகிறான். அதாவது இந்த செல்போனால் தான் இன்றைக்கு நிறைய பாலியல் குற்றங்கள் நடக்கிறது என்ற பொருளில் அந்த கிளைமாக்ஸை வைத்திருந்தார். 

இந்தக் குறும்படத்தைப் பார்த்ததும் இயக்குனர் வெற்றிமாறன் கொடுத்த கமெண்ட் இது: 

இந்த படம் பார்த்து நான் ரொம்ப கோபமாக இருக்கிறேன். கருப்பா இருக்கிற அவன் ஏன் தப்பு பண்ணனும். வெள்ளையா இருக்கிறவன் நல்லவன் கருப்பா இருக்கிறவன் கெட்டவன்,   இந்த மாதிரியான பார்வையை தான் ஒரு வளரும் இயக்குனர் உடைத்து நொறுக்கனும். அதிகமான பாலியல் வன்முறை எங்கு நடக்கிறது என்றால் அது எளிய மக்களுக்கு தான் நடக்கிறது. அதை நிகழ்த்துபவர்கள் எளிய மக்கள் கிடையாது.  தவறு யாரோ செஞ்சிருக்க எளிய மக்கள் மீது பழியை சுமத்தி எளிய மக்களை கைது செய்வார்கள். இந்த மாதிரி தவறு செய்யும் எளிய மக்கள் மிகக் குறைவாகத் தான் இருக்கிறார்கள். அப்படியே எளிய மக்கள் இந்த தவறை செய்கிறார்கள் என்றால் அதை சரியான அணுகு முறையுடன் நல்ல அறிவுடன் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார். இந்த குறும்படம் குறித்த வெற்றிமாறனின் கருத்து சமூக வலைதளங்களில் பெரிய அளவில் வைரல் ஆனது. காலம் காலமாக இந்த நாட்டில் நடக்கும் மிகப்பெரிய பிரச்சினைகளுக்கெல்லாம் எளிய மக்கள்தான் காரணம் என்று சொல்லப்படுவது எந்த விதத்தில் நியாயம் என்று பல இளைஞர்கள் சமூக ஊடங்களில் கேள்வி எழுப்பினர். இந்தக் குறும்பட இயக்குனர் மீது குற்றம் சுமத்தி எந்த பயனும் இல்லை. இங்கே பெரும்பாலானோரின் கருத்து இப்படித்தான் இருக்கிறது. அதாவது சரியான படிப்பு அறிவு இல்லாதவன், அன்றாட பிழைப்பாளிகளாக இருப்பவன் இந்த மாதிரியான தவறுகளை அதிகம் செய்கிறான் என்கிற ஒரு பார்வை இந்த வருடத்திலும் கூட நிறைய பேரிடம் இருக்கிறது. ஆனால் இந்த சமூகத்தில் காலங்காலமாக நடந்து கொண்டிருப்பது என்ன? மெத்த படித்தவர் தான் அதிக தவறுகள் செய்கிறார்கள். தவறு செய்துவிட்டு நான் செய்த தவறுக்கு இதுதான் காரணம் என்று சமாளிக்கிறான். அப்படி இல்லையெனில் எதிர்த்து கேள்வி கேட்க திராணி இல்லாதவன், அவனுக்கு சப்போர்ட் இல்லை என்று தெரிந்து விட்டால் அந்த எளியவன் மீது பழியை சுமத்தி விட்டு குற்றம் செய்தவன் தப்பித்துக் கொள்கிறான். 

கொத்தனார்கள்: 

இப்படி மேல்மட்ட நிலையில் இருக்கும் அந்த மேதாவி திருடர்கள் எல்லாம் எளிய மக்கள் மீது எப்படி எப்படி பழி சுமத்துகிறார்கள் என்று பார்ப்போம். அப்படிப் பார்த்தால் முதலில் அவர்கள் கூழித் தொழில் செய்யும் கொத்தனார்கள் மீது தான் பழி சுமத்துவதில் குறியாக இருக்கிறார்கள்.  8:00 மணி வேலை என்று சொன்னால் அவர்கள் 9 மணிக்கு  வேலையை தொடங்குவார்கள். இடையில் அவர்களுக்கு பலகாரமும் டீயும் வாங்கி தர வேண்டும். மதிய உணவு இடைவேளை ஒரு மணி நேரம்,  அதில் கால் மணி நேரத்திற்குள் சாப்பிட்டு விட்டு மீதியை ஒரு கால் மணி நேரம் ஜாலியாக அரட்டை பேசிக்கொண்டு அல்லது துண்டை விரித்து படுத்து தூங்குகிறார்கள்.   அடுத்த சில மணி நேரங்களுக்குள் மீண்டும் டீ மற்றும் பலகாரம்.  அஞ்சு மணிக்கு வேலை முடிகிறது என்றால் நாளே முக்காலுக்கே  சாமான்களை எடுத்து கழுவ ஆரம்பித்து விடுகிறார்கள். இது மட்டுமில்லாமல் அவர்கள் வாயில் புகையிலை போட்டுக் கொண்டு வேலை செய்யும் கட்டிடத்துக்குள் துப்புகிறார்கள்.  இப்படிப்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 700 ரூபாய்க்கு மேல் சம்பளம் கேட்கிறார்கள். இதில் சிலர்  கட்டிடத்திற்கு அவர்களிடமே பேருந்து பயணத்திற்கு காசு வாங்கிச் செல்கிறார்கள். 

பெயிண்டர்கள்: 

கொத்தனார்களை அடுத்து பழி சுமத்துவது பெயிண்டர்கள் மேல் தான். கிட்டத்தட்ட கொத்தனார்கள் மீது எப்படி எல்லாம் பழி சுமத்தி இருக்கிறார்களோ அதே மாதிரியான குற்றச்சாட்டுகளை தான் இவர்கள் மீதும் வைப்பார்கள். சரியான நேரத்திற்கு வருவதில்லை. பெயிண்ட்டை மிச்சம் பண்ண தெரியாமல் இஷ்டத்திற்கு அள்ளி அள்ளி அடிக்கிறார்கள். ஒரு சீராக பெயிண்ட் அடிக்க இவர்களால் முடியவில்லை பெயிண்ட் அடித்த இடங்கள் நிறைய இடங்களில் சொட்டை சொட்டையாக இருக்கிறது. ஒரு இடங்களில் பளிச்சென்றும் இன்னொரு இடத்தில் மங்கலாகவும் இருக்கிறது. தரமான பொருட்களை வாங்கிப் போட்டாலும் இவர்கள் சரியான முறையில் வேலை செய்வதில்லை. சரியான சம்பளம் கொடுத்தாலும் இவர்கள்  வேலை செய்யாமல்  எப்படி இன்னும் நாட்களை கடத்தலாம் என்று நினைக்கிறார்கள். 

தூய்மை பணியாளர்கள்: 

அடுத்த கட்டமாக தூய்மைப் பணியாளர்கள் மீது இந்த பொது சமூகம் அளவுக்கு அதிகமாகவே பழி சுமத்துகிறது. குறிப்பாக மருத்துவமனைகளில் வேலை செய்யும் தூய்மைப் பணியாளர்கள் மீது இந்த சமூகத்திற்கு நிறைய கோபம் இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் மருத்துவமனை சம்பளம் தந்த போதிலும் மருத்துவமனைக்கு இக்கட்டான நிலையில் வரும் நோயாளிகளிடம் அவர்களுடைய உதவிக்கு சென்று, ரூமை சுத்தம் செய்வதற்க்கும் கட்டிலை சுத்தம் செய்வதற்கும் கழிவறையை சுத்தம் செய்வதற்கும் அவ்வப்போது கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி சூழலை புரிய வைத்ததற்கும் ஒட்டு மொத்தமாக சேர்த்து  செலவுக்கு காசு கொடுங்க டீக்கு காசு கொடுங்க என்று ஒவ்வொரு வரிடமும் வந்து நச்சரிக்கிறார்கள். ஏற்கனவே தள்ளாடிக் கொண்டிருக்கும் நோயாளிகளின் உறவினர்கள் அந்த மாதிரியான சூழலில் தூய்மைப் பணியாளர்கள் மீது கடும் கோபம் அடைகின்றனர். 

100 நாள் வேலை செய்பவர்கள்: 

அடுத்ததாக 100 நாள் வேலை செய்பவர்கள் மீது அவர்கள் பழி சுமத்துகிறார்கள். இவர்கள் காலை 8 மணிக்கு சென்று மதியம் 2 மணிக்கு வீடு திரும்புகிறார்கள். இதில் காலை 8 மணிக்கு வேலைக்கு சென்றால் பத்து மணி வரை மட்டும் வேலை செய்து விட்டு மீதி நேரங்கள்  வெயிலடிக்குது இதுக்கு மேலே எங்களால வேலை செய்ய முடியாது என்று சொல்லிவிட்டு மரத்தடி நிழல்களில் ஜாலியாக படுத்துக்கொண்டு அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இவர்கள் இப்படி குறைந்த நேரம் வேலை செய்து விட்டு மீதி நேரங்களில் சொகுசாக இருந்து விட்டு ஒரு நாளைக்கு 200 ரூபாய் 250 ரூபாய் என்று சம்பளம் வாங்குவதால்  இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது.  விவசாயம் அழிந்து போகிறது. விவசாயம் அழிந்து போனால் இந்த நாடே சீர் கெட்டுப் போகிறது. அப்படி என்றால் இந்த 100 நாள் வேலை திட்டம் மூலம் நாடு மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்து கொண்டு இருக்கிறது. 

இந்த மாதிரியான எளிய மக்கள் செய்யும் தவறுகளால் தான் இந்த நாடு மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்து கொண்டு இருக்கிறது. அவர்களால் தான் பாலியல் குற்றங்கள் கொலை குற்றங்கள் திருட்டுக் குற்றங்கள் போன்றவை அதிகமாகின்றன என்று மேல் நிலையில் இருக்கும் மக்கள் ஒரு தோற்றத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட மேல்நிலை மக்கள் தங்கள் வீடுகளில் ஏதாவது ஒரு பொருள் திருடு போய்விட்டால் உடனே தங்கள் வீட்டில் வேலை செய்யும் சமையற்காரர், வீடு துடைப்பவர், தோட்டங்களில் வேலை செய்பவர், டிரைவர் அல்லது வீடு கட்டும் பணியில் இருந்த கொத்தனார்கள், சித்தாள்கள், பெயிண்ட் அடிக்க வந்த பெயிண்டர்கள், வீட்டில் குவித்து வைத்திருந்த குப்பையை அள்ளி செல்ல வந்த தூய்மைப் பணியாளர்கள்  இவர்களெல்லாம் தான் எடுத்திருக்க பெரும்பான்மையான வாய்ப்புகள் இருக்கிறது என்று சொல்வார்கள். போலீஸ்காரர்களும் அந்த மேல்நிலை மக்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு இந்த மாதிரியான கூலிக்கு வேலை செய்யும் எளிய மக்களை தான் துருவித்துருவி விசாரிப்பார்கள். விசாரிப்பதுடன் நிறுத்தமாட்டார்கள். அவர்களுடைய வீடுகளுக்குச் சென்று பரிசோதித்து பார்க்கிறேன் என்கிற பெயரில் அவர்களுடைய வீட்டை நாச கேடு செய்து விட்டு வருகிறார்கள். ஏனென்றால் எளிய மக்கள் மீது  பழி சுமத்தினால் அவர்கள் மிஞ்சி மிஞ்சி ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் எதிராக குரல் கொடுப்பவர்கள். அதற்குமேல் அவர்களுக்குள் ஒற்றுமை இருக்காது, வயிற்றுப் பசி தாங்காமல் அவர்களுடைய வேலையை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஓடிவிடுவார்கள். பழி சுமத்தப் பட்ட இந்த எளியவன் கடைசிவரை வலியை சுமந்து கொண்டு தண்டனையை அனுபவித்துக் கொண்டு இருப்பான்

Related Articles

இந்தியா வருகிறார் கனடா பிரதமர்... கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ வரும் பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி முதல் 23 வரை இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இருதரப்பு உறவுகளையும் மேம்படுத...
ஸ்லிம் சிவாஜியின் வடசென்னை படம் எப்படி இ... வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி என்பதால் ஒட்டுமொத்த தமிழகமும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த படம் இது. ரவுடிசம் சார்ந்த படம் என்பதால் புதுப்பேட்டை பாகம் இ...
எல்லோரும் செய்றதனால தப்பு சரின்னு ஆகிடாத... நூறு நாட்களை தொட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கான எதிர்ப்புப் போராட்டம் பல இழப்புகளை சந்தித்து ஓரளவுக்கு வெற்றி கண்டு உள்ளது. மற்றொரு போராட்டம் பல தலைமுறைகளாக தொ...
ஒழுக்கமில்லாதவர்களால் தமிழகம் ரத்தக்காடா... வாழ்க்கை மிக எளிதான ஒன்று ஒழுக்கத்தை கடைபிடிப்பவனுக்கு. அது இல்லாமல் இருப்பவர்களால் வாழ்க்கையில் நேரும் பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் மன உளைச்சலால...

Be the first to comment on "கூலித் தொழிலாளிகள் ஏமாற்றி சம்பாதிப்பவர்களா? – பழி சுமத்துதல்!"

Leave a comment

Your email address will not be published.


*