லக்ஷ்மி, மா எனும் இரண்டு அட்டகாசமான குறும்படங்களை தந்தவர் இயக்குனர் சர்ஜூன் கேஎம். முழுநீள திரைப்படமாக எடுத்த “எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்” என்ற படம் தோல்வியை சந்தித்தது. தற்போது இரண்டாவது முழுநீள திரைப்படம் ரிலீஸ் ஆகி உள்ளது.
நயன்தாரா ஏன் தொடர்ந்து பேய் கதைகளை தேர்ந்தெடுக்கிறார் என்று தெரியவில்லை. மாயா என்ற ஒரு பேய் கதை நன்றாக ஓடிவிட்டது என்பதால் டோரா, ஐரா என்று தொடர்ந்து அவர் பேய் கதைகளில் நடிப்பது சலிப்பைத் தருகிறது.
பத்திரிக்கையாளராக இருக்கும் நயன்தாரா திருமணம் செய்துகொள் என்று அம்மா அப்பா நச்சரித்ததால் அங்கிருந்து கிளம்பி தன் பாட்டி ஊருக்குச் செல்கிறார். பாட்டி வீட்டில் பேய் இருப்பதை உணர்கிறார். அந்தப் பேய் யார்? பேய்க்கும் தனக்கும் என்ன தொடர்பு? பேயை விரட்ட என்ன வழி? என்பதை தெரிந்துகொள்கிறார். இறுதியில் பேய் என்ன ஆனது என்ற அரதப் பழசான டெம்ப்ளேட்.
பவானியாக நடித்த கேப்ரியலா, நயன்தாரா இருவருமே பாராட்டத்தக்கவர்கள். நயன்தாராவுக்கு பவானி கதாபாத்திரம் விருதுகள் வாங்கி தருவதற்கு வாய்ப்புகள் உண்டு. யோகிபாபு அவ்வப்போது சிரிக்க வைக்கிறார். மாதீவனுக்கு இது நல்ல அறிமுகம்.
எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் படத்தில் மனதை கவர்ந்த இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி கேஎஸ் இந்தப் படத்தில் எந்த விதமான உணர்வுகளையும் ஏற்படுத்தவில்லை. பிளாஸ்பேக் அழுத்தமாக இருந்தாலும் கிளைமேக்ஸ் டுவிஸ்ட் எளிதில் யூகிக்க கூடியதாக இருந்ததால் படம் அவ்வளவு சுவாரஸ்யம் இல்லாததாக போய்விடுகிறது.
Be the first to comment on "கருவாச்சிக்கு கல்யாணம் கேக்குதா – ஐரா விமர்சனம்"