கடமை, கண்ணியம், கட்டுப்பாடு – இது தான் அண்ணாயிசம்!

anna

காஞ்சித்தலைவன், தென்னாட்டு காந்தி, தென்னாட்டு பெர்னாட்ஷா, பேறிஞர், நூற்றாண்டு தலைவர் என்று பலவாறு  போற்றப்படும் தமிழகத்தின் ஒப்பற்ற தலைவர் அண்ணா என்கிற சி.என். அண்ணாதுரை [ காஞ்சிபுரம் நடராஜர் மகன் அண்ணாதுரை ].

இவர் வழிவந்த ஆட்சியில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அண்ணாயிசம் குறைந்துகொண்டே வந்தாலும் எல்லா தவறையும் செய்துவிட்டு அண்ணா சமாதியில் மலர் தூவி அரசியல் செய்வது, அண்ணா நாமம் வாழ்க என்று வெறுமனே போற்றுவது போன்ற அரசியல் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. அண்ணாவுடன் இவர்களை ஒப்பிடுவதா என்று கோபப்படுபவர்கள்,  நாங்கள் அண்ணாவின் வழியிலே ஆட்சி நடத்துகிறோம் என்று இவர்கள் கூறும்போதும் கோபம் கொள்ள வேண்டும்.

அண்ணாவைப் போல இன்றைய அரசியல்வாதிகள் திறம்பட  செயல்படாததற்கு காரணம்?

அவர்களுடைய இளமைக்காலமும் குணநலன்களும் அப்படி அமையப்பெற்றிருப்பது. இவர்களிடமிருந்து அண்ணா எப்படி தனித்து தெரிகிறார்? ஏன் முன்னோடியாக விளங்குகிறார்? என்றால் அவருடைய இயற்கையான குணநலன்கள் அப்படி.

இளமைக்காலம்

திருக்குறளுக்கு இனிய உரை எழுதிய பரிமேலழகர் பிறந்த ஊரான, பல்லவர்களின் தலைநகரமான, உலகப்புகழ்பெற்ற பட்டு சேலைகள் நெய்யப்படும் இடமான காஞ்சியில் சாதாரண குடும்பத்தில் நடராஜன் பங்காரு தம்பதிக்கு 1909 செப்டம்பர் 15 அன்று மகனாக பிறந்தவர். எளிய குடும்பம் என்பதால் கல்வி கற்பதற்கு அரும்பாடுபட்டவர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணக்கு பாடத்தில் பல முறை தோல்வியுற்ற போதிலும் இன்றைய தலைமுறையினர் போல் இல்லாமல் தொடர்ந்து முயற்சி செய்து அதிக மதிப்பெண்ணுடன் வெளியேறியவர். பள்ளி கல்லூரி காலத்திலிருந்தே மூக்குப்பொடி, வெற்றிலை போடும் பழக்கம் இருந்தாலும் மற்ற கீழ்த்தனமான பழக்கங்கள் அவரிடம் வேறேதுவுமில்லை. அதிலும் வெற்றிலை போடும் பழக்கத்தை கல்லூரி காலத்திலயே விட்டொழித்தார்.  அவருடைய பரம்பரை தொழில் நெசவுத்தொழில். ஆதலால் அரசுப்பள்ளிகளில் படிக்கும்  இன்றைய ஏழை மாணவர்களைப் போல சனி, ஞாயிறுகளில் கால் அணா கூலிக்கு வேலைக்கு சென்றவர்.

இன்றைக்கு இருப்பவர்கள் எப்படி?

பலரை பழிவாங்கி, பண்ணாத அட்டூழியங்கள் செய்து வேலையே செய்யாமல் ரிசார்ட்டில் குத்து நடனம் ஆடிக்கொண்டு மாசாமாசம் ஒரு லட்சத்திற்கும் மேல் சம்பளம் வாங்கிக் கொண்டு  மக்கள் பணத்தில் வயிற்றை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் கொக்கி குமாரையே மிஞ்சியவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய இளமைக்காலம் அப்படி. அடுத்தவனை ஏமாத்தி சொகுசாகவே வாழ்ந்து பழகியவர்கள்.

புத்திக்கூர்மை

அறிஞர், பேரறிஞர், ஆகச்சிறந்த எழுத்தாளர், பேச்சாளர், நாடக ஆசிரியர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், பத்திரிக்கையாளர், சமூக சீர்திருத்தவாதி என்று பன்முகம் கொண்டவர். இத்தனைக்கும் காரணம் அவருக்குள் இருந்த புத்தகம் படிக்கும் ஆர்வம். இரவு உறக்கத்தை மறந்து விடியவிடிய புத்தகம் படித்தவர். கல்லூரி காலங்களில் மற்ற மாணவர்கள் வேறு விஷியங்களில் கவனம் செலுத்த இவர் மட்டும் நூல்நிலையங்களை தேடிச்சென்றார். கன்னிமாரா நூலகத்தில் அவர் தொடாத புத்தகங்களே இல்லை என்று பலர் கூறுவதும் உண்டு. ஆசிரியர் சொல்லிக்கொடுத்ததை காட்டிலும் பாட புத்தகத்தில் இருப்பதைக் காட்டிலும் அதிக விஷியங்களை எழுதி ஆசிரியரை வியப்பிற்குள் ஆழ்த்தியவர்.

ஒருமுறை படித்தாலே புரிந்துகொள்ளும் திறன் உடையவர். மக்களை கவரும் வகையில் பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் கொண்டவர்.

திராவிடநாடு, காஞ்சி  இதழ்களில் அவர் தம்பிமார்களுக்கு எழுதிய கடிதங்கள் இன்றும் போற்றத்தக்கவை. கேட்டார்ப்பிணிக்கும் தகையவாய் குரலுக்கு சிறந்த சான்றாக அவரது மேடைப்பேச்சு இருக்கும். எவ்வளவு நேரமானாலும் அவருடைய பேச்சைக் கேட்க வேண்டும் என்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கால் கடுக்க  காத்து நின்றனர். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்று மற்றவர் கருத்தையும் காது கொடுத்து கேட்பவர். சட்டசபையில் அவரை எதிர்த்து வீண் விவாதம் பேசுபவரை அவருக்கே உரித்தான சொல்லாடல் திறன், இலக்கிய மேற்கோள் எடுத்தாளும் திறன், நகைச்சுவை திறன், பழமொழிகளை கையாளும் திறன், அரிய சொல்லாட்சியைக் கையாளும் திறன், புராணங்களை எடுத்தாளும் திறன், ஆங்கிலத்தில் தோய்ந்த அறிவு என்று  தனது புத்திக்கூர்மையால் பதிலடி கொடுப்பவர்.

அவர் முதல்வராக இருந்த போது, அரசுப்பேருந்துகள் அனைத்திலும் திருவள்ளுவர் படமும் யாகாவா ராயினும் நாகாக்க குறளையும் இடம் பெறச் செய்தார். அதை ஏளனப்படுத்தும் நோக்கில் சட்டசபையில, ” இந்த குறள் யாருக்கு? “என்று எதிரணி வினா தொடுக்க, அடுத்த கணமே, ” நாக்கு உள்ள அனைவருக்கும் ” என்று பதிலடி கொடுத்தார்.

இன்றைக்கு எப்படி?

கேள்விக்கென்ன பதில் பாண்டேவுக்கு பம்புகிறார்கள். கமலின் 140 எழுத்து டுவிட்டுக்கு பதில் சொல்ல முடியாமல் சிதறியடித்து ஓடுகிறார்கள். கம்பராமாயணம் எழுதியது சேக்கிழார் என்கிறார்கள். சுதந்திர தினம் டிசம்பர் மாதத்தில் என்கிறார்கள். சந்தைக்கடை தோற்று போகும் அளவுக்கு முட்டாள் தனமாக சட்டசபையில் செயல்படுகிறார்கள். கோட்டரும் கோழி பிரியாணியும் கொடுத்து மேடைப்பேச்சைக் கேட்க பொதுமக்களை அழைத்து வருகிறார்கள்.

துணிச்சல் – மரியாதை

பெரியாரை குருவாகக் கொண்டவராயினும் சுதந்திர தினத்தை, துக்க நாளாக அனுசரிக்க வேண்டும் என்று பெரியார் கூறிய போது இல்லை சுதந்திர தினத்தை கொண்டாடுங்கள் என்று துணிச்சலாக சொன்னவர். பெரியார் மணியம்மை திருமணத்தில் முரண்பட்டு திராவிடர் கழகத்திலிருந்து அவர் வெளியே வந்த போதிலும் , தன்னுடைய குருநாதரின் பிறந்தநாளில் தனியாக திராவிடர் முன்னேற்ற கழகம் ஆரம்பித்து தேர்தலில் நின்று வெற்றி பெற்று முதல்வர் ஆனதும் முதல்வேளையாக தன்னுடைய குருவிடம் வந்து வாழ்த்துப்பெற்றவர். எம்.ஜி.ஆர், கலைஞர் போன்ற சக அறிஞர்களை போற்றியவர். அவர்களுக்கு உரிய மரியாதையை வழங்கியவர். இந்தி திணிப்பை எதிர்த்து போராடி வெற்றி கண்டவர். சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று மாற்றியவர்.

இன்றைக்கு எப்படி?

நேற்று வரைக்கும் தலைமையை எதிர்த்து பேச திராணியில்லாமல் டயரில் விழுந்து கிடந்தவர்கள் இன்று ஆளுக்கொரு திசையில் பிரிந்து நின்று ஒருவரையொருவர் சகட்டுமேனிக்கு சாடிக்கொள்கிறார்கள். கேட்டால் தர்மயுத்தம் நடத்துகிறோம் என்று பீத்திக்கொள்கிறார்கள். நீட் தேர்வை எதிர்த்து போராட வக்கில்லாமல் இருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு தடைக்கு முக்கி முனகி விலகல் வாங்கி வருகிறார்கள்.

மக்கள் பணத்தில் – கட்டுப்பாடு

அறுபது வயதை தொட்டுக்கொண்டிருந்த காலத்தில் கடும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு அது புற்றுநோய் என்று தெரிந்ததும் அமெரிக்காவிலுள்ள நியூயார்க் மெமோரியல் ஹாஸ்பிட்டலுக்கு டாக்டர் மில்லர் தலைமையில் நடக்க இருந்த அறுவை சிகிச்சைக்கு முதல்வர் என்பதால் அரசு கஜானாவில் இருந்து பணம் எடுக்கலாம் என்றிருந்த போதிலும் அது மக்கள் பணம் என்பதால் அதை தவிர்த்து, கட்சி நிதியில் சிகிச்சை பெற்று வந்து, டாக்டர் கூறிய முறைகளை பின்பற்றாமல் சமூகப்பணியில் இறங்கி மீண்டும் உடல் நலம் குன்றி இரண்டாவது முறையாக அடையார் புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பலனின்றி 1969 பிப்ரவரி 2, நள்ளிரவு 12.20 மணிக்கு உயிர்நீத்தார். இவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட மக்களின் எண்ணிக்கையை பார்த்து வியந்தவர்கள் பல. அது கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைக்கு எப்படி ?

எளிமையாக நடத்த வேண்டிய விழாக்களை மக்கள் பணத்தில் ஆடம்பரமாக நடத்திவிட்டு டெங்கு நோயிலிருந்து மக்களை விடுபடுத்துவதற்கு நிதியில்லை என்று கையை விரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அப்பல்லோவில் நாடகம் நடத்துகிறார்கள். அம்மாவும் அப்பல்லோவும் என்ற ரீதியில் முதல்வர் சிகிச்சை பெற்றதை வீடியோவாக வைத்துக்கொண்டு அதை தேர்தலுக்கு முந்தைய நாள் டீசராக வெளியிட்டு உலக மகா அரசியல் செய்கிறார்கள். மொத்தத்தில் மக்களை கோமாளி ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த லட்சணத்தில் இருப்பவர்கள் தான் அண்ணா வழியில் ஆட்சி, அண்ணா வழியில் ஆட்சி என்று கூவிக்கொள்கிறார்கள். இது அண்ணாயிசமா?

Related Articles

இந்த ஒருநாளில் அரசு அனுமதியுடன் நீங்கள் ... அமெரிக்கா தன் நாட்டில் நடைபெறும் வன்முறை சம்பவங்களை குறைக்கும் விதமாக குற்றம் புரிந்தவர்களை மற்ற நாள்கள் கடுமையாக தண்டித்து ஆண்டின் ஒரேயொரு ஒரு நாள் இ...
குழந்தைகளிடம் கேள்வி கேட்ட சிவகார்த்திகே... பசுமரத்தாணி போல என்பதற்கேற்ப ஒரு குழந்தை அதன் பத்து வயதிற்குள் என்ன என்ன பழக்கங்களை கற்றுக்கொள்கிறது? என்ன மாதிரியான சம்பங்களை பார்க்கிறது? என்ன மாதிர...
உலக புத்தக தினம் – ஏப்ரல் 23... ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 23ம் தேதி உலக புத்தக தினம் என்று கொண்டாடப் படுகிறது. ஆனால் ஏப்ரல் 23ல் கொண்டாடுவதற்கான காரணம் என்ன என்று நம்மில் பாதி பேருக்கு...
பிரெய்லி வடிவ புத்தகமாகத் திருக்குறள் வெ... மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த ராம்குமார் என்ற பார்வையற்ற வக்கீல் திருக்குறளை தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் பிரெய்லி வடிவில் வெளியிட வேண்டுமென்று மதுரை ஐ...

Be the first to comment on "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு – இது தான் அண்ணாயிசம்!"

Leave a comment

Your email address will not be published.


*