தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு கதாபாத்திரம் காதல் கொண்டேன் வினோத் கதாபாத்திரம். இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் அதை பற்றி பேசிக்கொண்டே இருப்போம். தனுஷ் போல மிமிக்ரி செய்பவர்கள் எல்லோருமே இந்தக் கதாபாத்திரத்தை தான் பெரிதும் பேசுகிறார்கள். அப்படிப்பட்ட வலிகள் நிறைந்த வலிமையான கதாபாத்திரம் அது.
அதேபோல சமீபத்தில் வெளியாகி அனைவரையும் மிரள வைத்த படம் ராட்ச்சசன். படம்
பார்த்தவர்களால் அவ்வளவு எளிதாக கிறிஸ்டோபர் கதாபாத்திரத்தை மறக்க முடியாது.
இப்போது இங்கு வினோத்தையும் கிறிஸ்டோபரையும் குறிப்பிட்டு பேச காரணம் இருவரும்
ஒருவரின் அன்புக்காக ஏங்கிக் கிடந்து ஏமார்ந்தார்கள் என்பதே.
வினோத் மற்றும் திவ்யா :
கல்லூரியின் முதல் வகுப்பிற்கு வியர்த்து விறுவிறுக்க ஓடிவருவான் வினோத். அந்த தருணத்தில்
ஆசிரியர் அவனை கேவலமாகப் பார்க்க, வகுப்பறையில் இருக்கும் மாணவ மாணவிகளும்
அவனை கேவலமாகப் பார்க்கிறார்கள் திவ்யா உட்பட. வகுப்பில் இருக்கும் யாருக்குமே அவனை
பிடிக்கவில்லை. ஐய ச்சி இவனா… என்று அவனைப் பார்த்து முகம் சுளித்து புறக்கணிக்கிறார்கள்.
அவனுக்கும் யாரிடம் போய் என்ன பேச வேண்டும் எப்படி பேச வேண்டும் என்ற விவரம்
தெரியவில்லை. தனிமையாகவே இருக்கிறான். அவனைப் பார்த்து பரிதாபப்பட்டு, அவனுடன்
பேசத் தொடங்குகிறாள். கொஞ்சம் கொஞ்சமாக அவனுடன் நெருங்கிப் பழகி தோழி ஆகிறாள்.
நமக்காக யாருமே இல்லை என்ற போது திவ்யாவின் ஆறுதல் வார்த்தைகள் அவனை
தாலாட்டுகிறது. அம்மாவின் தோளில் விளையாடுவது போல திவ்யாவின் தோளில் ஏறி தவழ்ந்து
விளையாடுகிறான். தன் கடந்த கால இன்ப துன்பங்களை உரிமையோடு பகிர்ந்துகொள்கிறான்.
ஐ… வாழ்க்கை முழுக்க எனக்காக திவ்யா இருக்கிறாள் என்று உறுதியாக நம்புகிறான்.
திவ்யா எனக்காகவே பிறந்தவள் என்று அதீத நம்பிக்கை வைக்கிறான். அப்பொழுது திவ்யாவுக்கு
வேறொருவருடன் காதல் ஏற்படுகிறது. அந்தக் காதலனுடன் முதலில் வினோத்திடம் பழகுவதைப்
போல பழகுகிறாள் பிறகு வினோத்தைவிட காதலன் மீது அதிகம் கவனம் செலுத்துகிறாள்.
எனக்காக மட்டுமே என்றிருந்தவள் இப்போது வேறொருவனுடன் சிரித்துப் பேசுகிறாளே, ஊர்
சுற்றுகிறாளே என்று திவ்யாவின் காதலன் மீது வினோத்துக்கு கோபம் வருகிறது. நீ இருந்தால்
தானே திவ்யா உன்னுடன் அன்பை பகிர்ந்துகொள்வாள் நீ இல்லாமல் போய்விட்டாள்
கடைசிவரை திவ்யா எனக்கானவளாகவே இருப்பாள் தானே என்று முடிவு செய்து திவ்யாவை
தனியாக அழைத்து வருகிறான். அவளோடு தனிமையை கழிக்கிறான். சாகசங்கள் செய்து
அவளை வியக்க வைக்கிறான். கோமாளித்தனம் செய்து அவளை சிரிக்க வைக்கிறான். தனக்கு
இருக்கும் அறிவை வைத்து அவளை சந்தோசமாக வைத்துக்கொள்கிறான். அதே சமயம்
அவளுக்காக, தன்னை வளர்த்த பாதிரியர் நாகேஷை கொலை செய்கிறான், அதைத் தொடர்ந்து
திவ்யாவின் காதலனையும் கொலை செய்ய முற்படுகிறான். அதேபோல சிறுவயதில் ஒரு
தொழிற்சாலையில் வேலை செய்யும் போது ஒரு சிறுமியை மிக அதிகமாக நேசிக்கிறான். ஆக,
ஒருவர் மீது வைக்கும் பேரன்பு அவனை என்னவாக மாற்றுகிறது?
கிறிஸ்டோபர் மற்றும் சோஃபியா :
வினோத்துக்கு கல்லூரி காதல் என்றால் கிறிஸ்டோபருக்கு பள்ளி காதல். அவனுடைய உருவத்
தோற்றம் காரணமாக வகுப்பறை தோழர்கள் யாவரும் அவனை கேலி செய்து புறக்கணிக்க
அவனோ மனமுடைந்து போகிறான். எனக்கென யாருமே இல்லை என்று தனிமையை உணர
ஆரம்பிக்கிறான். அப்பொழுது சோஃபியா என்ற மாணவி மட்டும் அவனோடு அன்பாகப்
பழகுகிறாள். சோஃபியா மீது அவன் வைத்திருக்கும் நட்பு காதலாக மலர்கிறது. நீ தான் என் உயிர்
என்று சோஃபியா மீது பேரன்பு வைக்கிறான். தன் காதலை சொல்கிறான். ஆனால் அவளோ
ஆண்மை குறைவை காரணம் காட்டி அவனை புறக்கணிக்க வகுப்பில் உள்ள அனைவரும்
பழையபடி அவனை கேலிசெய்து அவமானப்படுத்துகிறார்கள். அவமானம் தாங்காதவன் எனக்கு
கிடைக்காத நீ யாருக்குமே கிடைக்க கூடாது என்று சோபியாவை கொலை செய்கிறான்.
ஒருவர் மீது அளவு கடந்த நேசம் வைக்கும் போது அந்த ஒருவர் நம்மைவிட்டு பிரியப் போகிறார்,
வேறொருவருடன் அன்பை பகிர்ந்துகொள்கிறார் எனத் தெரிந்ததும் நம்மால் பொறுத்துக்கொள்ள
முடியவில்லை. இருந்தால் நீ என் கூட தான் இருக்கணும், பேசினால் என் கூட மட்டும் தான்
பேசணும் என்று மனம் அடித்துக்கொள்கிறது. இதனை பொசிசிவ்னெஸ் என்கிறோம். தன்
காதலியோ மனைவியோ வேறொருவருடன் பேசினால் “அவன் யாரு… ” என்று சந்தேகக்
கண்ணோடு கேள்வி எழுப்புகிறோம். காதலனோ கணவனோ வேறொரு பெண்ணுடன் சிரித்துப்
பேசினால் “அவ யாரு…” என்று சந்தேகக் கண்ணுடன் கேள்வி எழுப்புகிறோம். இது போன்ற இடங்களில் பேரன்பு பேராபத்தாக மாறிவிடுகிறது.
பேரன்பு என்றதும் நிச்சயம் இயக்குனர் ராம் நம் எல்லோருடைய மனதிலும் வந்து செல்வார்.
அவருடைய இரண்டு படைப்புகளை பற்றி இங்கு பேசுவோம். ஒன்று கற்றது தமிழ் இன்னொன்று
தரமணி.
கற்றது தமிழ் பிரபாகர் தன் காதலி ஆனந்தியின் மீது அளவு கடந்த நேசம் வைத்திருப்பார்.
ஆனந்திக்காக பிணவறை முன்பு சண்டை போடுவார். கிடைத்த இரண்டாயிரம் ரூபாய்
சம்பளத்தில் ஆயிரம் ரூபாய்க்கு துணி வாங்கித் தருவார். ஆனந்தியை தேடி அலைந்து போகும்
போது அவள் விலைமாதுவாக மாறி இருப்பாள். அங்கிருந்து அவளை மீட்டு வரும் பிரபாகர்
ஆனந்தியிடம் “உன்னை எத்தனை பேர் அனுபவித்தார்கள் ” என்ற கேள்வியை கேட்கவே மாட்டார். எனக்கு என் ஆனந்தி கிடைச்சிட்டா அது போதும் என்பார். இதுவும் பேரன்பு.
தரமணி படத்தில் முன்னால் காதலி தந்த ஏமாற்றத்தால் தாடி வளர்த்துக் கொண்டு தனிமையில்
திரியும் பிரபுநாத்துக்கு ஆல்தியா அறிமுகமாகிறாள். இருவரும் சிநேகம் கொள்கிறார்கள்.
காதலர்களாக மாறுகிறார்கள். கலவி கொள்கிறார்கள். அதன் பிறகு ஆல்தியா முழுக்க முழுக்க
எனக்குத்தான். அவளுக்கு நான் மட்டுமே. ஆல்தியா என்னிடம் மட்டுமே பேச வேண்டும்,
என்னிடம் மட்டுமே நேரம் கழிக்க வேண்டும் என்று எண்ணுகிறான். அதனால் அவள் வேறு
யாருடன் பேசினாலும் அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. " அவன் யாரு… அவனுக்கு எப்படி உன் சைஸ் தெரிஞ்சிருக்கும்… " என்று சந்தேகக் கண்ணுடன் கேள்வி கேட்டு அவளை மன உளைச்சலுக்கு உள்ளாக்குகிறான். இதுவும் பேரன்பு. இந்த இடத்தில் தவறாக செயல்படுகிறது.
இதே போல பல படங்களில் அதீத அன்பு காட்டி பிறகு ஏமாந்து கொலை செய்யும் அளவுக்குப்
போகும் கதாபாத்திரங்கள் காட்டப்பட்டிருக்கிறது ( அமரகாவியம் கிளைமேக்ஸ் போன்று பல
படங்கள் ).
கல்லூரி வாசலில் மாணவி வெட்டிக்கொலை, ரயில்வே ஸ்டேசனில் மாணவி வெட்டிக்கொலை
போன்ற செய்திகளுக்குள்ளும் ஒரு புரிதலற்ற பேரன்பு ஒளிந்திருக்கிறது.
எனக்காகவே நீ வாழ வேண்டும் என்று ஒருவரின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு பெயர் பேரன்பு
அல்ல. அன்பிற்கு எல்லை இல்லை என்பது எப்படி மறுக்க முடியாத உண்மையோ. அதே போல
அளவுக்கு மிஞ்சினால் அன்பும் நஞ்சாகும் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
Be the first to comment on "பேரன்பு பேராபத்தானதா? காதல் கொண்டேன் வினோத் & ராட்ச்சசன் கிறிஸ்டோபர் போல நிஜ மனிதர்கள் இருக்கிறார்களா?"