தயாரிப்பு : v கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தாணு.
எழுத்து இயக்கம் : வெற்றிமாறன்
மூலகதை : எழுத்தாளர் பூமணி
இசை : ஜீவி பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : ஆர் வேல்ராஜ்
எடிட்டிங் : ஆர் ராமர்
கலை இயக்குனர் : ஜாக்கி
சண்டைப் பயிற்சி இயக்குனர் : பீட்டர் ஹெய்ன்
நடிகர் நடிகைகள் : தனுஷ், மஞ்சு வாரியர், பசுபதி, கென் கருணாஸ், டீஜே, அம்மு அபிராமி, பிரகாஷ் ராஜ், பாலாஜி சக்திவேல், சுப்ரமணிய சிவா, பவண், ஆடுகளம் நரேன்
வெக்கை நாவலின் மூல கதை:
விவசாய நில பிரச்சனையில் நடந்த கொலையின் தொடர்ச்சிதான் வெக்கை. எதிரியின் கையை வெட்ட நினைத்து, தவறுதலாக மார்பின் விலாவில் குத்தி சாகடித்துவிட்டு ஓடும் 15 வயது சிறுவனாகிய செலம்பரத்தின்(சிதம்பரம்) பிம்பத்துடன் நாவல் தொடங்குகிறது. ஒருவார கால இடைவெளியில் நீதிமன்றத்தில் சரணடைவதற்கு முன்பு தனது தந்தையுடன் தலைமறைவாக எங்கெல்லாம் சென்று பதுங்கி வாழுகிறான் என்பதுதான் கதை. கிட்டத்தட்ட இதே மாதிரியான கதைக் களத்தில் சுசூந்திரனின் பாண்டிய நாடு படம் வெளியாகி ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்திலிருந்து அசுரன் எப்படி வேறுபட்டு உள்ளது, புதுமையாக என்னென்ன விஷியங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை பார்ப்போம்.
கே ஏகாதசியின் பாடல் வரிகளில் வேல்ராஜ், ராஜலட்சுமி, நெப்போலியா ஆகியோரின் குரலில் ஒலிக்கும் கத்தரி பூவழகி பாடல், ஏக்நாத்தின் பாடல் வரிகளில் டீஜே அருணாச்சலம், சின்மயி ஆகியோரின் குரலில் ஒலிக்கும் எம் மினுக்கி காத்திருக்கா பாடல், யுகபாரதியின் பாடல் வரிகளில் தனுஷ், ஜீவி பிரகாஷ் குமார், கென் கருணாஸ், டீஜே ஆகியோரின் குரலில் ஒலிக்கும் பொல்லாத பூமி பாடல் என்று படத்தில் உள்ள அத்தனை பாடல்களும் மனதை கவர்கிறது. கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது. குறிப்பாக ஏக்நாத்தின் பாடல் வரிகளுக்கு விருதுகள் எதிர்பார்க்கலாம். அருண்ராஜா காமராஜாவின் பாடல் வரிகளில் அவரே பாடிய வா எதிரில் வா பாடலில் ரத்தம் தெறிக்கிறது. படத்திலயே இந்தப் பாடல் கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கிறது. எட்டு வருடத்திற்குப் பிறகு தனுசும் ஜீவியும் இணைந்துள்ளார்கள். பெரிய எதிர்ப்பார்ப்புடன் இருந்த ரசிகர்களை ஏமாற்றாமல் திருப்தி படுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ். ஆடுகளம் பட பாடல்கள் ரசிகர்களை எப்படி அதிக அளவில் கவர்ந்ததோ அதே போல இந்தப் பட பாடல்களும் ரசிகர்களை ஈர்த்துள்ளது. பின்னணி இசையிலும் மிரட்டி உள்ளார் ஜீவி. குறிப்பாக அசுர வா அசுர வா பாடலின் தீம் செம மாஸாக உள்ளது.
தனுஷ், மஞ்சு வாரியர், பசுபதி, கென் கருணாஸ், டீஜே, அம்மு அபிராமி, பிரகாஷ் ராஜ், பாலாஜி சக்திவேல், சுப்ரமணிய சிவா, பவண், ஆடுகளம் நரேன் என்று நடிப்பு அசுரர்கள் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். மஞ்சு வாரியருக்கு இது முதல் தமிழ்ப் படம். அவருடைய நடிப்பை பற்றி சொல்ல தேவையில்லை. பார்ப்பதற்கு கொஞ்சம் அனுஷ்கா சாயலில் இருக்கிறார். இனி தமிழ் சினிமா உலகில் வலம் வருவார் என எதிர்பார்க்கலாம். தனுஷ் மிக எளிமையாக அறிமுகமாகிறார். டீஜேவுக்கும் கென்னுக்கும் அப்பாவாக சிவசாமி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தனுஷ். மகனுக்காக ஊரார் காலில் தனுஷ் விழும் காட்சிக்கு தியேட்டரே கதறுகிறது. டீஜே இறந்த பிறகு தனுஷ் அழும் காட்சியில் நம் கண்களும் கலங்குகிறது. முட்டு முட்டு என்ன முட்டு பாடல் புகழ் டீஜே முதன்முறையாக படத்தில் முருகன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அளவான நடிப்பைத் தந்துள்ளார். நிஜ வாழ்க்கையில் மிக கலகலப்பாக இருக்கும் கென் கருணாசுக்கு இந்தப் படத்தில் கொஞ்சம் சீரியசான கேரக்டர். சிதம்பரம் கதாபாத்தீரத்தை நன்றாகவே செய்துள்ளார். லவ் யூ சிதம்பரம்! என்று சொல்லும் அளவுக்கு கதாபாத்திரத்தில் பொருந்தி உள்ளார் கென். பெரிய எதிர்காலம் உண்டு கென். வடக்கூரானாக ஆடுகளம் நரேன், சிதம்பரத்தின் தாய் மாமாவாக பசுபதி. இருவரும் தங்களது வேலையை சரியாக செய்துள்ளார்கள்.
வெற்றிமாறன், தனுஷ், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், ஜீவி பிரகாஷ் குமார் இவர்கள் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்திருக்கும் படம். எதிர்பார்ப்பு ரொம்ப அதிகமாகவே இருக்கிறது. வெற்றிமாறன் படத்தில் எடிட்டிங் எப்போதும் கன கச்சிதமாக இருக்கும். இந்தப் படத்திலும் அப்படியே உள்ளது.
சாமுராய், காதல், வழக்கு எண் 18/9, கல்லூரி ஆகிய வெற்றிப் படங்களைத் தந்த இயக்குனர் பாலாஜி சக்திவேல் முதன்முறையாக நடித்துள்ளார். அதுவும் அலட்சியம் நிறைந்த போலீஸ் வேடத்தில். கனக்கச்சிதமாக அவருக்கு அந்த வேடம் பொருந்தி உள்ளது. அதே போல திருடா திருடி பட இயக்குனர் சுப்பிரமணிய சிவாவும் முதன்முறையாக நடித்துள்ளார். நிறைய இடங்களில் சிலிர்க்க வைக்கிறது வேல்ராஜின் ஒளிப்பதிவு.
கலை இயக்குனருக்கு தேசிய விருது கிடைக்க வாய்ப்புண்டு. காரணம் அவருடைய உழைப்பு அப்படி உள்ளது. வட சென்னை படத்திற்காக தேசிய விருது பெற்றிருக்க வேண்டியவர் ஏனோ தவறவிட்டுவிட்டார். இந்தப் படம் பீரியட் படம் என்பதால் அதற்கேற்றார் போல கலை இயக்கம் இருக்கிறது. அடுத்ததாகப் பாராட்டப்பட வேண்டியவர் காஸ்ட்யூம் டிசைனர் மற்றும் மேக்கப் மேன்கள். பரதேசி படத்திற்குப் பிறகு இந்தப் படம் தான் காஸ்ட்யூம் மற்றும் அலங்கார ஒப்பனையில் கவனம் பெறுகிறது. சண்டைப் பயிற்சி இயக்குனராகப் பீட்டர் ஹெய்ன் பணியாற்றி உள்ளார். ஹாலிவுட்டுக்கு நிகரான சண்டை, சாதாரண கிராமத்து சண்டை என்று எப்படிப்பட்ட சண்டைக்காட்சியாக இருந்தாலும் அதை சிறப்பாக செய்து முடிக்க அவரால் மட்டும் எப்படி முடிகிறது, வியப்புக்குரிய உழைப்பு!
” கூழ கும்பிடு போட்டுக்கிட்டு இருந்தவங்களுக்கு எங்கிருந்து இவ்வளவு தைரியமும் ரோசமும் வந்தது “, ” நமக்கு தேவையானத நம்ம தான் அடிச்சு வாங்கனும் “, ” நம்மகிட்ட காடு இருந்தா எடுத்துக்குவானுங்க… ரூபா இருந்தா புடுங்கிக்குவானுங்க… படிப்ப மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது சிதம்பரம் !” , ” இந்த மாதிரி தைரியசாலிங்க எப்பயாவது தான் பொறப்பானுங்க… அவன பயன்படுத்திக்கிறவன் தான் தைரிய சாலி “, ” பொண்டாட்டிய பாத்துக்கறதல தான் அம்மாவ எவ்வளவு மதிக்கறம்னு தெரியும்… “, ” நாய் போச்சேனு கவலை படுறான்… நான் நாயோட போச்சேன்னு கவலபடுறேன்.., ” போன்ற வசனங்கள் கவனம் பெறுகின்றன. கைதட்டல் பெறுகின்றன. திருநெல்வேலி வட்டார வழக்கு அனைத்து கதாபாத்திரங்களுக்கும் கனக் கச்சிதமாகப் பொருந்தி உள்ளது. எதற்காக விருது கிடைக்கிறதோ இல்லையோ வட்டார வழக்கு வசனத்திற்காக கண்டிப்பாக விருது பெறும். ஆடுகளத்தில் மதுரை வட்டார வழக்கு, வட சென்னையில் மெட்ராஸ் வட்டார வழக்கு, அசுரனில் திருநெல்வேலி வட்டார வழக்கு என்று எந்த உச்சரிப்பாக இருந்தாலும் அதை உறுத்தல் இல்லாமல் செயற்கையாக இல்லாமல் சரியாக பேச வைக்க எப்படித்தான் வெற்றிமாறனால் முடிகிறதோ! எழுத்தாளர் சுகா வசனகர்த்தாகவா பணியாற்றி உள்ளார். சிறப்பான பணி! இரண்டாம் குழு இயக்குனரான மணிமாறன் வெற்றிமாறனோடு சேர்ந்து திரைக்கதை அமைப்பிலும் பணியாற்றி உள்ளார். வழக்கம் போல வெற்றிமாறனின் படம் நாவல் படிப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. வழக்கம் போல கெட்ட வார்த்தைகளும் வருகின்றன.
விசாரணை, வட சென்னை ஆகிய படங்கள் தவறவிட்ட ஆஸ்கர் விருதை அசுரன் கண்டிப்பாக பெறும் என்று தனுஷ் ரசிகர்கள் ஆசையோடு இருக்கிறார்கள். கொஞ்சம் பேராசை படுகிறார்களோ என்று தோன்றுகிறது அதே சமயம் இந்தப் படம் பல விருதுகளை பெறும் தகுதி உடையது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
அண்ணன் தம்பிகள் இந்தப் படத்தைப் பார்த்தால் நிச்சயம் நிறைய இடங்களில் ஆக்ரோசம் அடைவார்கள்… கண் கலங்குவார்கள். வடக் கூரானின் ஆட்கள் முருகனை கொல்லும் போது அழுத ரசிகர்கள் வடக் கூரானை சிதம்பரம் அசால்ட்டாக வெட்டும் காட்சியில் தியேட்டரே அதறுகிறது. வட சென்னை படத்தைப் போல இந்தப் படத்திலும் வாய்ஸ் ஓவரில் கதையை விளக்குகிறார் வெற்றிமாறன். அந்தப் பாணியை தவிர்த்திருக்கலாம்.
Be the first to comment on "லவ் யூ சிதம்பரம்! – அசுரன் விமர்சனம்!"