புத்தகத் திருவிழா என்றாலே தீவிர புத்தகப் பிரியர்களுக்கு உற்சாகம் பெருக்கெடுத்து ஓடும். காரணம் தங்கtளுக்கு பிடித்த புத்தகங்களை சிறப்பு தள்ளுபடி விலையில் வாங்கிக் கொள்ளலாம். (பொதுவாக பத்து சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஒரு சில இடங்களில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மட்டும் பதினைந்து சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.)
மாதத்திற்கு ஒரு மாவட்டம்:
இந்த புத்தகத் திருவிழாக்கள் மாதந்தோறும் ஒரு மாவட்டத்தில் நடைபெறுகிறது. ஜனவரியில் சென்னையில் தொடங்கி பிப்ரவரியில் திருப்பூர் புத்தகத் திருவிழா, ஜூன் மாதத்தில் நெய்வேலி புத்தகக் கண்காட்சி, ஜூலையில் கரூர், நாமக்கல், கோவை புத்தகக் கண்காட்சி, ஆகஸ்ட்டில் ஈரோடு புத்தகக் கண்காட்சி என்று ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு மாவட்டத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
எதாவது ஒரு கல்யாண மண்டபத்தை வாடகைக்கு எடுத்தோ, அல்லது பள்ளி விளையாட்டு மைதானத்தை வாடகைக்கு எடுத்தோ அல்லது எதாவது ஒரு ஊருக்குப் பொதுவான வெளி மைதானத்தை வாடகைக்கு எடுத்தோ குறைந்தபட்சம் முப்பது அரங்குகளையாவது அமைத்து பத்து நாட்களுக்கு புத்தகத் திருவிழா நடத்துகிறார்கள். அதிலும் ஒரு சில இடங்களில் மாணவ மாணவிகளுக்கு இலக்கிய போட்டிகள், வாசகர்களுக்கு சிறுகதைப் போட்டிகள், குறும்பட போட்டிகள் என்று விதவிதமாகப் போட்டிகள் நடத்தப்பட்டு பலர் முன்னிலையில் பரிசு அளித்து பாராட்டுகிறார்கள்.
அதே போல ஒவ்வொரு நாள் காலையும் மாலையும் முக்கியமான எழுத்தாளர்களை, கலைஞர்களை, அறிஞர்களை, விஞ்ஞானிகளை அழைத்து வந்து சிறப்புரை ஆற்றச் செய்கிறார்கள். இப்படி பலவித சிறப்பு அம்சங்களுடன் நடைபெறும் இந்தப் புத்தகத் திருவிழாக்கள் தமிழ் நாட்டில் பெரிய அளவில் கொண்டாடப் படுகிறதா என்று கேள்வி எழுப்பினால் சலிப்பாக விடும் பெருமூச்சு தான் பதிலாகக் கிடைக்கும்.
சென்னை, ஈரோடு தவிர:
புத்தகத் திருவிழாக்களில் அரங்கு அமைக்க ஒவ்வொரு நாளைக்கும் வாடகை கொடுத்து, புத்தக விற்பனையாளர்கள் தங்குவதற்கு, உண்பதற்கு என்று தனியாக பணம் செலவு செய்து என்று பலவித சிரமங்களுடன் விற்பனைக்கு அரங்கு அமைக்கிறார்கள்.
ஆனால் விற்பனை நிலவரமோ படுமோசமாக இருக்கிறது. நாமக்கல், கரூர் போன்ற மாவட்டங்களில் அரங்கு அமைத்தவர்கள் எல்லாம் எங்கப்பா வெறிச்சோனு இருக்கு. சேல்ஸ்ஸே ஆக மாட்டிங்குது. பெருமைக்கு கடை போட்ட கணக்கா ஆயிடுச்சு. புத்தக நல்லா சேல்ஸ் ஆயி மனசுக்குத் திருப்தி தர இடம்னா அது ஈரோட்லயும் சென்னலயும் தான். சென்னைலலாம் எவ்வளவு புக்ஸ் போகுதுனே சொல்ல முடியாத அளவுக்கு சேல்ஸ் இருக்கு. இங்கலாம் அப்படியே ஆப்போசிட்டா இருக்கு.
தொடுதிரையும் காகிதமும்:
இப்பலாம் எங்கப் பாத்தாலும் டச் போன்தான். கட்ட விரல வச்சு தடவுறதுல இருக்குற சுகம் புத்தகத்த படிச்சு நாலு நல்ல விஷியம் தெரிஞ்சிக்கிறதுல இல்ல போல. இப்பத்து பசங்க தான் இப்படி இருக்காங்கன்னா அவிங்க அம்மா அப்பாவாவது இது மாதிரி இடங்களுக்கு கூட்டிகிட்டு வரலாம்ல. ஆனா அவிங்களே இங்க எட்டிப்பாக்க மாட்டிங்கிறாங்க. அப்புறம் எப்படி புத்தக வாசிப்பு ஆர்வம் அடுத்த தலைமுறைக்கு வரும்.
சிந்தனையற்ற செம்மறி ஆட்டுக் கூட்டங்களாகத் தான் தமிழக மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை அப்பட்டமாகக் காட்டும் விதமாகத் தான் புத்தகத் திருவிழாக்கள் பெரிதும் கொண்டாடப்படாமல் வெறிச்சோடி கிடக்கிறது. நல்ல சமுதாயம் உருவாக வேண்டும் என்று நினைப்பவர்கள் உங்கள் நட்பு வட்டாரத்துடனோ அல்லது குடும்ப உறுப்பினர்களுடனோ குறைந்த பட்சம் ஒரு முறையாவது உங்கள் பகுதிகளில் நடந்துகொண்டிருக்கும் புத்தகத் திருவிழாவிற்குச் சென்று வாருங்கள்.
Be the first to comment on "தமிழ்நாட்டில் புத்தகத் திருவிழாக்கள் வெகுஜன மக்களால் கொண்டாடப்படுகிறதா?"