கூலி தொழிலாளியின் மகன் சினிமா துறையில் இயக்குனராக சாதிக்க முடியுமா?

Can the son of a laborer succeed as a director in the film industry

பெரிய பெரிய தொழிலதிபர்களின் மகன்கள், மகள்கள் கைப்பிடியில் இருக்கிறது சினிமா துறை. கூலி தொழிலாளிகளுக்கு மகனாகப் பிறந்தவனும் வீட்டிற்கு ஒரே ஒரு பையனாக இருப்பவனும் சினிமா துறையை  தேர்ந்தெடுக்கலாமா? சினிமா துறையில் சாதிக்க நினைக்கலாமா? என்ற ஒரு கேள்வி எழுகிறது. 

தமிழ் சினிமா உலகின் மிக முக்கியமான மனிதராக இருக்கும் தனஞ்செயன் அவர்கள் ஒரு பேட்டியில், உங்களுடைய வருமானம் இல்லை என்றாலும் உங்கள் குடும்பம்  அவர்களது அடிப்படைத் தேவைகளை  பார்த்துக்கொள்ளும், அந்த அளவுக்கு ஆள் பலமும்  மனத்திடமும்  உங்கள் குடும்பத்தினருக்கு இருந்தால் மட்டுமே நீங்கள்  என்னுடைய பாஃப்டா  நிறுவனத்திற்கு வந்து சேர வேண்டும் என்று ஒரு முறை ஒரு பேட்டியில் கூறியிருந்தார். 

பசங்க, பசங்க 2, மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் பாண்டிராஜ்  ஆனந்த விகடனுக்காக எழுதிய பிளாஷ்பேக் என்ற தொடரில்  நான் குப்பத்தில் இருந்து வந்தவன் என்று எழுதியிருந்தார். அதை பார்த்துவிட்டு கமல் இப்படிச் சொன்னாராம்,  நீங்க எல்லாம் இப்படி எழுதி வைச்சுறீங்க. ஆனா அத படிக்கிறவன் சரியான புரிதல் இல்லாமல் சினிமா மேல இருக்குற ஆசை காரணமாக குடும்பத்தைவிட்டு விட்டு வந்து இங்கேயும் சாதிக்க முடியாமல் குடும்பத்தையும் கவனிக்க முடியாமல் அல்லல் பட்டுக்கொண்டு இருக்கிறான் என்று பாண்டிராஜை கடிந்து கொண்டாராம். 

நாம் இங்கு பணக்கார வீட்டுப் பிள்ளைகளை விட்டு விடுவோம். அவர்களுக்கு உதவ ஆள் பலம் இருக்கிறது, ஜாதி பலம் இருக்கிறது, சொத்து இருக்கிறது. இப்படி ஏதோ ஒரு விதத்தில் அவர்கள் தங்களை தேற்றிக் கொண்டு மேலே வந்து விடுகிறார்கள். ஆனால் சிறு வயது முதலே சினிமா பார்த்து பார்த்து வளர்ந்த சினிமா மீது அதிக காதல் கொண்ட  இளைஞர்கள் குடும்பத்தினரின் பேச்சை கேட்காமல்  சென்னைக்கு நடையைக் கட்டி விடுகிறார்கள். 

முதலில் ஏழ்மைச் சூழலில் பிறந்து வளர்ந்து யாருடைய  உதவியும் இல்லாமல் சினிமா துறையில் சாதித்து காட்டிய சில மனிதர்களை பற்றிப் பார்ப்போம். முதலில் இயக்குனர் சமுத்திரக்கனி.  ஏழ்மை சூழலில் பிறந்து வளர்ந்த இவர் விறகு வெட்டும் தன் அம்மாவை விட்டுவிட்டு சினிமா மீது உள்ள ஆசை காரணமாக வீட்டை விட்டு ஓடி வந்துவிட்டார்.  ஓடி வந்து பல இடங்களில் அலைந்து திரிந்து  எப்படியோ இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தரின் உதவி இயக்குனராக சேர்ந்து கொண்டார்.  அவரிடம் சேர்ந்த பிறகு சின்னத்திரை தொடர்களில் நடிகராக வலம் வந்தார். அப்படியிருந்தும் அவர் சினிமா துறையில் சாதிக்க பல வருடங்கள் ஆகிவிட்டது. ஒருவேளை இவருக்கு இயக்குனர் கே பி பாலசந்தரிடம் உதவி இயக்குனர் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து ஏதோ ஒரு  ஏமாற்று இயக்குனரிடம் சேர்ந்திருந்தால் இவருடைய வாழ்க்கை என்னவாயிருக்கும்?  இவருக்கு கிடைத்த மாதிரி எல்லோருக்கும் இந்த மாதிரியான பெரிய இயக்குனரிடம் வாய்ப்பு கிடைக்கிறதா என்ன? 

அடுத்ததாக மூடர் கூடம் நவீனை பற்றி பார்ப்போம். மூடர் கூடம் நவீன் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்.  இவருடைய அப்பா வேலாயுதம்பாளையம் டிஎன்பிஎல் என்ற காகித நிறுவனத்தில் ஊழியராக இருந்தவர். அம்மா பீடி சுற்றும் குடிசை தொழில் செய்து வந்தார்.  இப்படிப்பட்ட சூழலில் இருந்து வந்த மூடர் கூடம் நவீன் முதலில் டெல்லியில் ஒரு கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தார்.  பிறகு சினிமா மீது கொண்ட ஆர்வம் காரணமாக வேலையை விட்டுவிட்டு  இயக்குநர் சிம்புதேவனிடம் உதவி இயக்குனராக சேர்ந்து கொண்டார்.  பெரிய இயக்குனரிடம் உதவி இயக்குனராக சேர்ந்து கொண்ட போதிலும் அவர் சினிமாத் துறையில் சாதிக்க பல வருடங்கள் ஆகிவிட்டது.  அவர் ஏழ்மையான சூழலில் இருந்து வந்தவர் என்றாலும் அவர்கள் குடும்பத்தை கவனிக்க அக்கா என்று ஒருத்தர் இருந்தார். ஆக வீட்டுக்கு ஒரே மகனாக இருப்பவன் சினிமாவிற்கு வரலாமா? 

இயக்குனர் நித்திலனை எடுத்துக்கொள்வோம். இவருடைய அப்பா ஆடு மேய்ப்பவர்.  அப்படிப்பட்ட ஏழ்மை சூழலில் இருந்த போதிலும்  நித்திலனுக்கு சினிமா மீது இருந்த ஆர்வம் போகவில்லை. ஏழ்மை சூழ்நிலையிலும் விஸ்காம் எடுத்துப் படித்தார். நண்பர்கள் உதவியுடன்  நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு  டைட்டில் வின்னர் ஆக வெற்றி கண்டார். அப்படியிருந்தும் அவர் சினிமாத் துறையில் தன்னுடைய முதல் படத்தை கொடுக்க நீண்ட வருடங்கள் ஆகிவிட்டது. 

இயக்குனர் ஸ்ரீ கணேசும் இதே மாதிரி தான். இவரும் நித்திலனை போலவே ஏழ்மை சூழலில் இருந்து வந்தவர்.  8 தோட்டாக்கள் என்ற வெற்றிகரமான படம் கொடுத்த போதிலும் இன்றும் கூட அவர் என்னுடைய அம்மாவை நான் இன்னும் பத்திரமாக பார்த்துக் கொள்ள முடியவில்லை என்று வருந்துகிறார். அவருக்கும் உடன்பிறந்தவர்கள் இருக்கிறார்கள். மேல்கண்ட மூடர்கூடம் நவீன் இயக்குனர் நித்திலன் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இவர்கள்  ஏழ்மை சூழலில் இருந்து வந்து சாதித்துக் காட்டிய போதிலும்,  தங்களுடைய இரண்டாவது படத்தை ரிலீஸ் செய்வதில்  மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். 

இப்போது பெரிய பெரிய இயக்குனர்களை பற்றிப் பார்ப்போம். பெரிய இயக்குனர் என்றால்  இயக்குனர் பாலசந்தர், இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் பாலுமகேந்திரா, இயக்குனர் மணிரத்தினம், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் வெற்றிமாறன், இயக்குனர் பாலா, இயக்குனர் வசந்தபாலன்,  இயக்குனர் ராஜுமுருகன் இயக்குனர் பா ரஞ்சித் இயக்குனர் மாரிசெல்வராஜ் போன்றோரை பற்றிய குறிப்புகள் இது. 

இயக்குனர் பாலசந்தரை எடுத்துக்கொள்வோம். அவருடைய குடும்பம் அந்தக் காலத்திலேயே படிப்பறிவு பெற்ற குடும்பமாக இருந்தது. அவர் அப்போதைய அரசு பணியில் இருந்தவர். சிறுவயது முதலே நாடகங்கள் நடத்தத் தொடங்கி  திரைத்துறையில் இயக்குனர் ஆனவர். இவருடைய குடும்பம் கொஞ்சம் செழிப்பான குடும்பம் தான். 

இயக்குனர் பாரதிராஜா. இவரும் அந்த காலத்திலேயே அரசுப் பணியில் இருந்தவர். இவருடைய குடும்பம் கொஞ்சம் செழிப்பான குடும்பம் தான். இவர் கிராமப்புறத்தில் பிறந்து வளர்ந்து இருந்தாலும் இவரை சுற்றி இருந்த மனிதர்கள் கொஞ்சம் அறிவார்ந்தவர்கள் தான். அந்தக் காலத்துலயே அரசுப்பணியில் இருந்தவர் பாரதிராஜா. 

இயக்குனர் பாலுமகேந்திரா. இவர் இலங்கையில் இருந்து தமிழகம் வந்து இருந்தாலும் அந்தக் காலத்திலேயே புனே திரைப்படக் கல்லூரியில் படித்தவர். 

இயக்குனர் மிஸ்கினை எடுத்துக்கொள்வோம் அவருடைய அம்மா டெய்லர் என்ற போதிலும் அவர் சிரமப்பட்டு சினிமாவில் சாதித்துள்ளார். எந்த பின்புலமும் இல்லாமல் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்துள்ளார். மாஸ் ஹீரோக்களை வைத்து படம் இயக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று கெத்தாக கூறக் கூடியவர் மிஸ்கின்.  அவர் எந்த அளவுக்கு வரக்காரணம் அவருடைய உழைப்பு என்றாலும் அவருக்கு ஆறுதலாக அவருடைய தம்பி இருந்தார் என்பது முக்கியமான விஷயம்.  ஒருவேளை அவருக்கு தம்பி என்று ஒருத்தர் இல்லாமல் இருந்திருந்தால் மிஸ்கின் இவ்வளவு தூரம் வந்திருப்பாரா என்பது ஒரு கேள்விக் குறியே. 

இயக்குனர் பாலா இளம் வயதிலேயே வீட்டை விட்டு சென்னைக்கு  ஓடி வந்தவர். அவர் ஓடி வந்தாலும் அவருடைய குடும்பத்தை கவனித்துக் கொள்ள அவருடைய சகோதரர்கள் சகோதரிகள் இருந்தனர். மேலும் அவருடைய குடும்பம் கொஞ்சம் செல்வச் செழிப்பான குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது.  இருந்தாலும் இவர் எளிய மக்களின் வாழ்வியலையே சினிமாவில் காட்டிக் கொண்டிருக்கிறார் என்பது பாராட்டத்தக்க விஷயம். 

இயக்குனர் ராம் எடுத்துக்கொள்வோம். அவர் சினிமா துறைக்கு வருவதற்கு முன் விளம்பர கம்பெனியில் பணியாற்றி தன்னால் இயன்றவரை பணம் சம்பாதித்து அதை வீட்டினருக்கு கொடுத்துவிட்டு பிறகு தான் அவர் வீட்டை விட்டு விலகி சினிமாவை நோக்கி பயணிக்க ஆரம்பித்தார்.  இயக்குநர் தங்கர்பச்சான் இயக்குனர் பாலுமகேந்திரா போன்றோரிடம் பணியாற்றிய இவர் தொடர்ந்து எளிய மக்களின் சினிமாவையே எடுத்து வருகிறார்.  இவர் இன்னும் சொந்தமாக கார் கூட வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இயக்குனர் வெற்றிமாறனை எடுத்துக்கொள்வோம். அவருடைய குடும்பம் படிப்பறிவுள்ள குடும்பம். அப்பா வெட்னரி மருத்துவர். அம்மா நாவலாசிரியர்.  அதுமட்டுமன்றி வெற்றிமாறன் உதவி இயக்குநராக இருந்தபோது அவருடைய கைச் செலவுக்காக அவருடைய அம்மா மற்றும் அவருடைய காதலி ஆகியோர் மாறி மாறி பணம் அனுப்புவார்கள். அவருக்கு அவருடைய குடும்ப சப்போர்ட் இருந்ததால் அவர் இந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ளார் என்பது தான் உண்மை. 

இயக்குனர் ராஜுமுருகனை எடுத்துக்கொள்வோம். எவரும் எளிய மக்களின் சினிமாவாக எடுத்து வருகிறார். ஆனால் இவர் எளிய குடும்பத்தில் இருந்து வந்தவரா என்ற கேள்வி கேட்டால் கண்டிப்பாக இல்லை. அவருடைய குடும்பமும் கொஞ்சம் வசதியான குடும்பம் தான்.  இவருடைய அப்பா கொஞ்சம் கெத்தாகவே இருப்பார். இவருக்கும் வீட்டை சமாளிக்க சகோதரர்கள் இருக்கிறார்கள். 

இயக்குனர் மாரி செல்வராஜை எடுத்துக்கொள்வோம். அவர் இயக்கிய முதல் படம் “பரியேறும் பெருமாள்” எளிய மக்களின் வலியை பதிவு செய்த படம்.  அவரும் வீட்டைவிட்டு ஓடி வந்து சென்னையில் அலை அலை என்று அலைந்து கடைசியில் இயக்குனர் ராமின் அலுவலகத்தில் ஆபிஸ் பாயாக வேலைக்கு சேர்ந்து ஒரு கதை சொல்லத் தொடங்கி கதை எழுத தொடங்கி இயக்குனராக மாறியவர். இவருக்கும் வீட்டை சமாளித்து கொள்ள கூட உடன்பிறந்தவர்கள் இருந்தார்கள்.  இந்த மாதிரி எளிய மக்களின் வாழ்வியலை சினிமாவில் பதிவு செய்யும் இயக்குனர்கள்  எல்லோருமே கொஞ்சம் பெரிய குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்தான் என்பது கவனிக்கத்தக்க வேண்டிய விஷயம். 

பணக்கார வீட்டுப் பிள்ளைகளின் காதல் படங்களை இயக்கி  தங்களுக்கென தனி கூட்டம் வைத்திருக்கும் இயக்குனர் மணிரத்தினம் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் போன்றோரெல்லாம் தனிரகம் இவர்களெல்லாம் மேட்டுக்குடி வகையைச் சார்ந்தவர்கள். 

இயக்குனர் செல்வராகவனின் அப்பா ஒரு இயக்குனர். இயக்குனர் மோகன் ராஜா  அவர்களின் அப்பா ஒரு சினிமா எடிட்டர். இயக்குனர் ஏ எல் விஜய் அவர்களின் அப்பா ஒரு தயாரிப்பாளர்.  இயக்குனர் வெங்கட் பிரபுவின் அப்பா ஒரு இசையமைப்பாளர் பாடகர் இயக்குனர். 

இயக்குனர் அட்லீயின் அப்பா செல்வச் செழிப்பானவர்.  இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜின் அப்பா படித்தவர். சரி இவர்களை விட்டு விடுவோம் இயக்குனர் பா ரஞ்சித்தை எடுத்துக் கொள்வோம்.  அவர் எளிய குடும்பத்திலிருந்து வந்தவர் தான் அவருடைய அம்மா அப்பா பெரிய அளவில் படிப்பறிவு இல்லாதவர்கள் தான்.  இருந்தாலும் அவருக்கு சினிமா துறையில் பிரபலமாக இருந்த அவர்களின் நட்பு கிடைத்தது.  முதல்படமே இயக்குனர் வெங்கட் பிரபுவின்  படத்தில் பணியாற்றினார் அவருக்கு மாதமாதம் சரியான சம்பளம் வெங்கட் பிரபுவிடம் இருந்து கிடைத்து விட்டதால்  அவர்களது குடும்பத்தை சமாளித்துக் கொள்ள எளிதாக இருந்தது.  மேலும் குடும்பத்தை சமாளிக்க பா ரஞ்சித்திற்கு உடன்பிறந்த சகோதரர்கள் இருக்கிறார்கள். அதனால் தான் அவரால் சாதிக்க முடிந்தது. 

இயக்குனர் வசந்தபாலனின் அப்பா ஒரு அரசு ஊழியர். அவர் சினிமா ஆசையில் வீட்டை விட்டு சென்னைக்கு கிளம்பி வந்தபோது அவருக்கு உதவ சினிமா துறையில் பிரபலமாக இருந்த ஒருவர் முன் வந்தார்.  ஒருவேளை அவர் உதவி செய்யாமல் இருந்திருந்தால் இன்று வசந்தபாலன் இவ்வளவு பெரிய இயக்குனராக மாறி இருக்க மாட்டார். 

இப்படி நல்ல நல்ல சினிமாக்களை எடுத்து வைத்து தங்களுக்கு என தனி ரசிகர் கூட்டம் வைத்திருக்கும்  இயக்குனர்கள் எல்லாம் யாரோ ஒருவருடைய  உதவியை பெற்று தான் அவர்கள் இவ்வளவு பெரிய இடத்திற்கு வந்து இருக்கிறார்கள். 

அப்பா அம்மா இருவரும் கூலித்தொழிலாளியாக இருக்கும்போது  அந்த அம்மா அப்பாவுக்கு நீங்கள் ஒரே ஒரு மகன் அல்லது மகள் ஆக இருக்கும்போது  சரியான வருமானம் கிடைக்காத இந்த சினிமா துறையில் நீங்கள் சாதிக்க வேண்டும் என்று நினைத்து வீட்டை விட்டு ஓடி வருவது சரியா என்பதை யோசித்துக் கொள்ளுங்கள்.

Related Articles

இளைஞர்களுக்கான கதைசொல்லியை பற்றி தெரிந்த... திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் மற்றும் கதைசொல்லி பவா செல்லத்துரை. நிறைய இளைஞர்களை தன் வசீகர குரலால் இலக்கிய உலகிற்கு அழைத்து வரும் இந...
சிறுமி ஹாசினியை கொலை செய்த தஷ்வந்த்க்கு ... சென்னை குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஹாசினி கடந்தாண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். அதற்கான தண்டனை பற்றிய விவரங...
தனுஷை விட சாய் பல்லவி தான் அதிக கவனம் ஈர... இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் மாரி 2. கலவையான விமர்சனங்களுடன் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.ய...
ஜோதிடம் நம் வாழ்க்கையில் எந்த மாதிரியான ... உலகம் எவ்வளவு வேகமாக இயங்கினாலும் எவ்வளவு வேகமாக மாறினாலும் விஞ்ஞானம் எவ்வளவோ தொழில்நுட்பங்களைக் கொண்டு வந்தாலும் எல்லாமே இயந்திர செயல்பாடுகள் என்று ம...

Be the first to comment on "கூலி தொழிலாளியின் மகன் சினிமா துறையில் இயக்குனராக சாதிக்க முடியுமா?"

Leave a comment

Your email address will not be published.


*