உயர் பொறுப்பில் உள்ள அரசு அதிகாரிகள் முதல் கடைநிலை அரசு ஊழியர்கள் வரை அனைவரும் அரசு மருத்துவமனையை நம்ப வேண்டும் என்பதற்கு உதாரணமாக தெலுங்கானாவில் உள்ள ஒரு மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் தன் மனைவியை அரசு மருத்துவமனை ஒன்றில் பிரசவத்திற்கு அனுமதித்துள்ளார். எந்த பிரச்சினையும் இல்லாமல் நல்ல படியாக அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியானதும் மக்கள் பலரும் இந்த ஆட்சியரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
அரசு மருத்துவமனையும் தமிழகமும்:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை குறைவு காரணமாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருந்தது. அப்போது அவர் அரசு மருத்துவமனைக்கு செல்லாமல் அப்பல்லோ மருத்துவமனை என்கிற தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அதேபோல முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் உடல்நிலை குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட போது அவரும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அந்த இரண்டு நிகழ்வுகளின்போதும் ஒரு அரசியல்வாதி உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டால் அவரை ஏன் அரசாங்க மருத்துவமனையில் அனுமதிக்க தயங்குகிறார்கள் என்று பலரும் கேள்வி எழுப்பினர். பெரிய பெரிய பதவியில் இருப்பவர்கள் அரசு மருத்துமனையை நம்பினால்தான் எளிய மக்களும் அரசு மருத்துவமனையை நம்புவார்கள் என்று பலரும் கருத்துக் கூறினார்கள். ஆனால் அந்த கருத்து சில நாட்களில் யாராலும் கண்டுகொள்ளப்படாமல் போனது.
இப்படி தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சரியான பராமரிப்பின்றி சீர்கெட்டு காணப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு நடிகை ஜோதிகா தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி அங்கு சரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அவருடைய கோரிக்கையை ஏற்று தஞ்சாவூர் அரசு மருத்துமனையில் நிறைய வசதிகள் செய்யப் பட்டது.
அரசு மருத்துவமனையும் தெலுங்கானாவும்:
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பத்திராத்திரி கொத்தா கூடம் பகுதியின் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வருபவர் அனுதீப். இவருடைய மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருவுற்றிருந்தார். கருவுற்ற ஆரம்ப மாதம் முதலே அந்த ஆட்சியர் தன்னுடைய மனைவியை அரசு மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை செய்து வந்தார். இந்நிலையில் பிரசவத்திற்காக அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட ஆட்சியரின் மனைவிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இது சமூக வலைதளங்களில் தீயாக பரவ அரசு மருத்துவமனையை அரசு அதிகாரிகள் நம்பினால்தான் எளிய மக்களும் அரசு மருத்துவமனைகள் அரசு கல்லூரிகள் அரசு பள்ளிகள் என்று அரசாங்கத்தை நம்புவார்கள் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
Be the first to comment on "மக்களின் பாராட்டுக்களை பெற்ற தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த மாவட்ட ஆட்சியர்!"