மலம் அள்ளுபவர்களுக்கு எதற்கு மரியாதை? மலக்குழி மரணங்களை ரசிக்கிறதா அரசு?

Does the government enjoy fecal deaths_ (1)

“ராணுவத்தில் இறந்து போகிறவர்களை மரியாதையாக பார்க்கும் இந்த சமூகம் மல குழிக்குள் இறங்கி மரணம் அடைபவர்களை ஏன் கேவலமாக பார்க்கிறது கண்டுகொள்ளாமல் இருக்கிறது.  இரண்டுமே ஒன்று தானே!” –  இயக்குனர் சாந்தகுமாரின் மகாமுனி படத்தில் இடம் பெற்றிருக்கும் வசனம் இது. 

இந்த வசனம் மலக்குழி  அள்ளுபவர்களை பற்றி நிறைய சிந்திக்க வைத்தது. அந்த வகையில் இணையங்களில் தேடும்பொழுது மலக்குழி மரணங்கள் குறித்து  நிறைய தகவல்கள் கிடைத்தன. உலக அளவில் அதிக மலக்குழி மரணங்கள் இந்தியாவில் தான் நடக்கின்றன. இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்தில் தான் அதிகம் நடக்கின்றன, மலக்குழி மரணத்தில் தமிழகம் முதலிடம் என்ற தகவல் கிடைத்தது. 

கையால் மனித மலம் அள்ளும் அவலத்தை ஒழித்துக் கட்டுங்கள் என்று மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டார் 2014 ஆம் ஆண்டு தலைமை நீதிபதி சதாசிவம். தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கிய மோடி அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் அந்த நீதிபதியின் உத்தரவுக்கு தகுந்தார்போல்  எடுக்கவில்லை என்று நினைக்கும்போதுதான் எரிச்சலாக இருக்கிறது. 

மல குழிக்குள் இறங்கி மரணித்துப் போகும் மனித உயிர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வந்தாலும் அதை இன்னும் முற்றிலும் ஒழியவில்லை.  2020 வந்துவிட்டது ஏகப்பட்ட தொழில்நுட்பங்கள் இந்தியாவிற்குள் வந்து விட்டன. ஆனால் இந்த மலக் குழியை சுத்தம் செய்வதற்கு ஒரு இயந்திரத்தை கண்டுபிடிக்கும்  அளவிற்கு அறிவாளிகள் இந்தியாவில் யாரும் இல்லையா என்ற கேள்வி தொடர்ந்து எழுந்துகொண்டே இருக்கிறது. 

மலக்குழி மரணங்கள் குறித்து பதிவு செய்யப்பட்ட தமிழ் படைப்புகள்: 

ஜூலை 30 2017, சென்னை காமராஜர் அரங்கத்தில் ஜெய்பீம் மன்றம் மற்றும் பா ரஞ்சித் – ன் நீலம் புரோடக்சன்ஸ் சார்பில் ஸ்ரீஜித் சுந்தரம் இயக்கத்தில்,  ஜெயராணியின்  திரைக்கதை மற்றும் வசனத்தில் “தவிர்க்கப்பட்டவர்கள்: இந்தியாவின் மலம் அள்ளுபவர்கள்” என்ற விஜயசாயின் மொழி பெயர்ப்பு நூலின் கருவை அடிப்படையாகக் கொண்டு “மஞ்சள்” நாடகம் எடுக்கப்பட்டது. ஆதவன் தீட்சண்யாவும் இமையமும் அதற்கு விருது கொடுத்து பாராட்டினர். அந்த மஞ்சள் நாடகம் குறித்து தன்னை அழைத்துப் பேசிய ஒவ்வொரு ஊடகங்களிலும் நிறைய விவாதித்தார் இயக்குனர் பா. ரஞ்சித். 

காலம் காலமாக நடந்து வரும் இந்த அவலம் குறித்து வழக்கறிஞர் திவ்யா பாரதி என்பவர் “கக்கூஸ்” என்கிற ஒரு ஆவணப் படம் எடுத்தார்.  அந்த ஆவணப்படம் விழிப்புணர்வு பதிவாக இருந்தது.  நிறைய விருதுகளை வென்றது.  நிறைய விவாதங்களை உருவாக்கியது. 

 ஃப்ரீலான்ஸ் போட்டோகிராபராக பணியாற்றிக் கொண்டிருக்கும் இளைஞர் பழனி குமார் மலம் அள்ளுபவர்களின் அவல நிலையை சமுதாயத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டும்  வகையில் தொடர்ந்து “மலம் அள்ளும் மனிதர்கள்” என்ற  தலைப்பில் புகைப்படங்கள் எடுத்து  அதன் மூலம் விழிப்புணர்வு செய்து வருகிறார். 

மலம் அள்ளுபவர்களின் வாழ்க்கை முறை குறித்து அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து தோழர் பிரசன்னா பாலச்சந்திரன் தன்னுடைய நக்கலைட்ஸ் சேனலில் இரண்டு குறும்படங்கள் எடுத்து பதிவேற்றம் செய்துள்ளார்.  ஒன்று முகமூடி இன்னொன்று பகடை என்று இரண்டு குறும்படங்கள்.  முகமூடி என்ற குறும்படத்தில் மலக்குழிக்குள் இறங்கி  மூச்சு திணறி சாகும் தருவாய்க்குச் சென்று மீண்டு வந்து வீட்டில் முடங்கிக் கிடக்கும் ஒரு இளைஞனின் கதை. அந்த இளைஞனைப் பார்க்க அரசு அதிகாரி ஒருவர் வருகிறார். அந்த இளைஞனின் மனைவியிடம் ரொம்ப நல்லவன் போல தன்னை காட்டிக் கொள்கிறார்.  அந்த இளைஞனுக்கும் அந்த இளைஞனின் மனைவிக்கும் ஆறுதல் மொழிகள் எல்லாம் சொல்கிறார். அந்த இளைஞனின் மனைவி பேசும் வசனங்கள் , “பொழச்சு வரதுக்கலாம் சந்தோஷப்படுற வாழ்க்கையா சார் இது?”, “பீ அள்ளுறதற்கு எல்லாம் எதுக்கு சார் நம்பிக்கை மசுரு”  போன்ற வசனங்கள் சுளீர் சுளீர் என இருந்தன. 

தங்களுடைய வாழ்க்கை எவ்வளவு பாதிப்புக்கு உள்ளானது என்பதை  வலியோடு தெரிவிப்பார் அந்தப் பெண்.  அதையெல்லாம் ரொம்ப நல்லவன் போல் கேட்டுக் கொண்டிருக்கும் அந்த அதிகாரி  கடைசிவரை அந்த வீட்டுப் பெண் கொடுத்த டீ டம்ளரை தொடாமலே அங்கிருந்து செல்கிறார். 

அடுத்ததாக இவர்களுடைய பகடை குறும்படத்தைப் பார்ப்போம்.  இந்த படத்தில்  அப்பா மல குழிக்குள் இறங்கி வேலை செய்பவராக இருக்கிறார்.  அரசு பள்ளியில் படிக்கும் அவரது மகனை அந்தப் பள்ளி ஆசிரியர் அவனின் அப்பா செய்யும் தொழிலையே பள்ளிக்கூடத்தில் செய்ய வைக்கிறார்.  அதற்கு பிறகு அவனுடன் படிக்கும் சக மாணவர்கள் அவனை நாற்றமடிக்கும் ஒரு பொருளாக பார்க்கிறார்கள்.  அதனால் அவனுடைய  பள்ளிப்படிப்பு முடிந்து வாழ்க்கையே மாறுகிறது.  இப்படியே சந்ததி சந்ததியாக அந்த தரப்பு மக்களை மலக்குழிக்குள் இறங்க வைத்து சாகடிக்கும் இந்த அரசாங்கத்தை கேள்வி கேட்கும் வகையில் பகடை என்ற குறும்படம் எடுக்கப்பட்டிருந்தது. 

மலக்குழி மரணங்கள் குறித்து தமிழ் படைப்பாளிகள் கூறும் கருத்துக்கள்:

இந்தியாவைத் தவிர வேறு எந்த உலக நாடுகளிலும்  மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் அவலம் நடக்கவில்லை – கிருத்திகா உதயநிதி

இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளின் ஐரோப்பா ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் கூட ஒரு சில மக்களை மலம் அள்ள வைக்கும் மாதிரியான செயல்களில் ஈடுபடுத்த படுகின்றனர்.  நம் நாட்டின் இதிகாசங்கள் சாஸ்திரங்கள் இந்த சமூக மக்கள் மலம் அள்ளலாம் என்பதை நீதியாக சொல்கிறது.  நம் மலத்தின் நாற்றத்தை நம்மாலயே தாங்கிக்கொள்ள முடியாது.  இந்நிலையில் சக மனிதனை மலம் அல்ல வைப்பது என்பது மனிதத் தன்மையற்ற செயல். –  இயக்குனர் மிஸ்கின். 

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நீங்கள் என்ன செய்தீர்கள்? நாடு முழுக்க கழிவறை கட்டினீர்கள். ஆனால் அந்த கழிவறையிலிருந்து வெளியேறும் கழிவுகளை சுத்தம் செய்வது யார்?  உலக நாடுகள் இந்த மாதிரியான செயலுக்கு தகுந்த கருவிகளைப் பயன்படுத்தும் போது இந்தியா மட்டும் அதை பயன்படுத்தாமல் இருப்பது ஏன்?  மலம் அள்ளும் தொழிலாளிகள் இந்திய நாட்டில் கிடையாது என்று ஐநா சபையிலும் உலக அரங்கிலும் அறிவித்திருக்கிறது இந்தியா. ஒரு மனிதன் பொய் சொல்லலாம் ஒரு நாடே பொய் சொல்லலாமா? –  இயக்குனர் ராம்

மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பற்றி பேசும்போது எனக்கு பகத்சிங் நினைவுக்கு வருகிறார். அவரை தூக்கிலிடுவதற்கு முன் அவரிடம் உன்னுடைய கடைசி ஆசை என்ன என்று கேட்கிறார்கள். அதற்கு அவர் நான் பேபியின் கையில் சோறு சாப்பிட விரும்புகிறேன் என்கிறார்.  பேபி என்பவர் அந்த சிறைச்சாலையில் கழிவுகளை அகற்றக் கூடிய தொழிலாளி. காலம் மாறிவிட்டது, ஆனால் அப்போது முதல் இப்போது வரை பேபிகளின் நிலைமை மாறவில்லை. –  இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன்.

இந்த காலத்துலயும் இந்தியாவில் ஜாதி இருக்கிறதா என்று கேட்பார்கள்.  அப்படிலாம் இருக்கிற மாதிரி ஒன்னும் தெரியலையே என்பார்கள்.  அவர்களுக்கெல்லாம் நான் ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன். லைலா மஜ்னு கதையில் மஜ்னு லைலாவை விழுந்து விழுந்து காதலிப்பார்.  மற்றவர்களோ மஜ்னு சொன்ன அளவுக்கு லைலா ஒன்னும் அவ்வளவு அழகு இல்லையே என்பார்கள்.  அதற்கு லைலாவின் அழகை ரசிப்பதற்கு மஜ்னுவின் கண்கள் வேண்டும் என்று சொல்வார்கள்.  அதுபோல இந்தியாவிலிருக்கும் ஜாதி கொடுமைகளை தெரிந்துகொள்வதற்கு புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் கண்கள் வேண்டும்.  நீ அந்த கண்களில் பார்த்தால்தான் அது உனக்கு புரியும். உன்னுடைய கண்களில் பார்த்தால் உனக்கு எதுவும் தெரியாது.  ஏனா நீ ரொம்ப சௌகரியமாக உட்கார்ந்து கிட்டு இருக்க. நீங்கறத என்னையும் சேர்த்துதான் சொல்றேன்.  ஏன்னா நான் அந்த கொடுமையை அனுபவிச்சது இல்லையே.  இந்த அவலத்தை நான் அனுபவிச்சது இல்லை.  என்னைக்காச்சும் ஒரு நாள் டாக்டர் மோசன் டெஸ்ட் எடுக்கணும் என்று சொன்னால் நாம் அதை எடுத்து வருவதற்கு ஒரு நாள் முழுக்க யோசிப்போம்.  ஒரு ஸ்பூன் எடுத்து நம்ம மோசனை போய் நம்மலே எப்படி எடுப்பது என்று யோசிப்போம். ஒரு சினிமாவுக்கு திரைக்கதை எழுதுவது கூட ஈஸி ஆனால் இந்த காரியத்தை செய்வது அவ்வளவு கஷ்டம்.  அப்ப அடுத்தவனுடைய மலத்தை அள்ளுவது என்பது எவ்வளவு கொடுமையான விஷயம்.  இதுக்கு மிஷின் கண்டுபிடிக்கணும் மிஷினை கண்டுபிடிக்கணும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருக்கிறோம்.  ஆனாலும் அது நடக்கவில்லை.   ஒரே ஒரு சட்டத்தை மட்டும் உருவாக்கணும் அது என்னவென்றால் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு ஜாதிக்காரன் மலக்குழிக்குள் இறங்க வேண்டும்.  உடனே ஆயிரக்கணக்கான மிஷின்கள் கண்டுபிடித்து தள்ளிவிடுவார்கள் பலவிதமான மிஷின்கள் வரும். – நடிகர் சத்யராஜ்

கடந்த ஆண்டு கேரள பொறியியல் கல்லூரி மாணவர்கள் பேண்டிகூட் ரோபோட் என்னும் மலம் அள்ளும் நவீன கருவியை கண்டுபிடித்து இருந்தார்கள். அந்தக் கருவியை கேரள முதல்வர் பினராயி விஜயன் மாநிலம் முழுவதும் பயன்படுத்த உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து தமிழகத்திலும் கும்பகோணம் தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் பேண்டிகூட் ரோபோட்டின் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியுள்ளது.  தற்போது அந்த இளைஞர்களின் கண்டுபிடிப்பை டாட்டா நிறுவனம் வாங்குவதற்கு முன் வந்துள்ளது.  அது போல பல கருவிகளை தயாரித்து நாடு முழுவதும் பயன்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது. ஆனால் அந்த செயல்பாடுகள் எந்த அளவுக்கு வெற்றிகரமாக நடந்துகொண்டு இருக்கின்றன என்பது யாரும் அறியாத தகவல். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிராமணர் ஒருவர் பீ அள்ளுற நாய்க்கு என்ன மரியாதை என்று பொதுவெளியில் கேள்வி கேட்டிருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. பிறகு அந்த வயதானவரை கைது செய்தனர்.  அந்த வயதானவருக்கு இருந்த மனநிலை தான் பெரும்பாலான மக்களுக்கு இருக்கிறது. 

நாடு முழுக்க இன்றும் நடந்து வரும் இந்த அவலம் குறித்து “மனித கைகளால் மலம் அள்ள வைப்பதை  மத்திய மாநில அரசு நிறுத்த வேண்டும்” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே உத்தரவு அளித்திருக்கிறார். நாடு முழுக்க ஏகப்பட்ட போராளிகள் இது குறித்து தொடர்ந்து பேசி வருகின்றனர்.  விவாதங்கள் எழுப்புகின்றனர். போராட்டங்கள் நடத்துகின்றனர்.  ஆனாலும் அரசின் செவிகளுக்கு இந்த அவலம் குறித்த தகவல்கள் செல்வதே இல்லை.  இத்தனை தொழில்நுட்பம் வந்தபிறகும் மனிதர்களை மலக்குழிக்குள் இறங்க வைப்பது  என்பது ஒரு திட்டமிட்ட செயலாகத் தான் தெரிகிறது. இந்த அரசுக்கு மனித பற்று இல்லை என்பதுதான் உண்மை.  மல குழிக்குள் இறங்கும் மனிதர்களின் அழுகுரல்களை அவர்களது குடும்பங்களின் அழுகுரல்களை இந்த அரசாங்கம் ரசித்துக்கொண்டு இருக்கிறது என்பதனால் தான் இன்று வரை பல மரணங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. 

Related Articles

“தப்ப நான் செஞ்சுட்டு தண்டனைய அவனு... இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இயக்குனர் புனித். இவர் இயக்கி உள்ள " காதல் ஒன்று கண்டேன் " என்ற குறும்படம் யூடூப்பில் வெளியான ஒரே நா...
பூமிகா திரைவிமர்சனம் – பூமிய மனுசங... இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பூமிகா.  நேரடி ஓடிடி ரிலீசாக இந்த படம் வெளியாகியுள்ளது. ஒ...
125 விருதுகளை வென்ற தமிழ் குறும்படம் ... சில தினங்களுக்கு முன்பு திருச்சியை கதைக்களமாகக் கொண்டு சுற்றுப்புறத் தூய்மையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட "முதலிடம் நோக்கி" என்ற குறும்படம் சமூக வலைதளங...
கூலித் தொழிலாளிகள் ஏமாற்றி சம்பாதிப்பவர்... கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலைஞர் டிவியில் ஒளிபரப்பான நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றிமாறன் நடுவராக பங்கேற்றார். அப்போது அவர் பல படங்...

Be the first to comment on "மலம் அள்ளுபவர்களுக்கு எதற்கு மரியாதை? மலக்குழி மரணங்களை ரசிக்கிறதா அரசு?"

Leave a comment

Your email address will not be published.


*