“இப்பலாம் யாரு சார் சாதி பாக்குறாங்க…” என்று கேட்பவர்கள் இருக்கும் இதே காலத்தில் தான் ” நீங்க என்ன ஆளுங்க… ” என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். நகரத்தில் சாதி பாகுபாடு அவ்வளவாக இல்லாதது போல் தோன்றினாலும் நகர்மிராண்டிகளின் உள்ளத்தில் சாதிவெறி உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
வளர்ந்து வரும் தலைமுறையின் மீது சாதிவெறியை திணிப்பதை ஒரு கடமையாகவே வைத்துள்ளனர் பெரியவர்கள். வாட்சப், பேஸ்புக் மூலமாக சாதிவெறியை பரப்பிய போதிலும் அவர்களுக்கு நிம்மதி இல்லை போலும். திருவிழாக்கள், விருந்துகள் போன்ற வெளி விஷேங்களுக்கு சென்ற போதிலும் சாதி வாரியாக அணி அணியாக பிரிந்துகொண்டு சாதி சாதியாக வலம் வருகின்றனர். இவை எல்லாம் ஒருபுறம் இருக்க, இளைஞர்கள் சிறுவர்கள் போன்றோர் தங்கள் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வந்தால் அந்த நண்பர்களிடம் சாதியைப் பற்றி விசாரிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
சாதியை பற்றி விசாரிப்பவர்கள், விசாரிப்பதோடு நிறுத்திக் கொள்வதில்லை. எஸ் சி பசங்க என்று தெரிந்துவிட்டில் அதுவரை மரியாதை கொடுத்து வந்தவர்கள் திடீரென அந்தப் பிள்ளைகளிடம் வா, போ என்று ஒருமையில் பேச ஆரம்பித்துவிடுகின்றனர். வீட்டிற்கு வந்த நண்பர்களுக்கோ ஏன்டா இங்க வந்தோம் என்று தோன்றும் அளவுக்கு பெற்றோர்களின் செய்கையும் சாதிப் பார்வையும் தீவிரமாய் இருக்கிறது.
இப்படிபட்ட பெற்றோர்களை கொண்ட பிள்ளைகளோ என்ன செய்வது? எது சரி என்று தெரியாமல் திக்கித் தவிக்கின்றனர். பள்ளி கல்லூரிகளிலோ சாதி பார்த்து பழகுதல் கூடாது என்று சொல்லித் தர, வீட்டில் உள்ளவர்களோ அதற்கு எதிராக உள்ளனர். அதோடு அவர்கள் நிறுத்திக் கொள்வதில்லை. எஸ் சி பசங்கள வீட்டுக்கு கூட்டிட்டு வராத என்று மூஞ்சியில் அடித்தது போலவே சொல்கின்றனர்.
ஒரே சாதியைச் சார்ந்தவர்கள் மட்டுமே நண்பர்களாக இருக்க வேண்டும் என்பது அவர்கள் கணக்கு. அப்படிப்பட்ட அம்மா அப்பாக்களை கொண்ட இளைஞர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது.
சாதி பார்த்து பழகுதல் கூடாது என்பதை அந்தப் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப் போவது யார்? காலங்காலமாக இந்த சூழல் மறையாமல் இருந்து வருகிறதே இதற்கு காரணம் என்ன? என்று யோசித்தால் தலைவலி தான் மிச்சம். பேஸ்புக், யூடுயூப் என்று அப்டேட்டான அப்பா அம்மாக்களும் சாதி பார்த்து பழகுதலை தவிர்க்க வில்லை.
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே என்ற பாடல்களை தாய்மார்கள் தங்கள் வாழ்வில் ஒருமுறைகூட கேட்டது இல்லையா?
Be the first to comment on "SC பசங்கள வீட்டுக்கு கூட்டிட்டு வராத! – எச்சரிக்கும் சாதிவெறி பிடித்த பெற்றோர்கள்!"