சில தினங்களுக்கு முன்பு சேலத்தில் நூறு டிகிரி பாரன்ஹீட் பதிவாகியிருக்கிறது. மார்ச் மாதமே
இந்த நிலைமை என்றால் மே மாதங்களில் என்னென்ன பாடுபட போகிறோமோ? அளவுக்கு
மிஞ்சிய காடுகள் அழிப்புகளால், வாகன பயன்பாடுகளால் புவி வெப்பமயமாதல் தொடர்ந்து
அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த பருவநிலை மாறுதல்களை தவறு செய்த,
செய்துகொண்டிருக்கும் மனிதர்கள் எப்படியும் தாக்குப்பிடித்துக் கொள்வார்கள். ஆனால் ஆறு,
ஏரி, குளங்களை மட்டுமே நம்பியிருக்கும் வாயில்லா ஜீவன்களின் நிலைமை என்ன
ஆகிறப்போகுது என்பதை நினைத்தால் மயக்கமே வந்துவிடும். அவைகளின் நீர் ஆதாரங்களில்
பெரிய பெரிய கட்டிடங்கள் எழுந்து நின்று பல்லை இழித்துக்கொண்டிருக்கிறது. இது
மனிதர்களுக்கான உலகம் ஆயிற்றே!
வானிலை அறிக்கை
இந்திய வானிலை மையம் அறிவிப்புப்படி இந்த வருடத்தின் கோடை காலங்களில் நாடு
முழுவதுமே வெயில் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்பதால் வெயில் தாக்கத்திலிருந்து
தங்களை பாதுகாத்துக்கொள்ள மக்கள் விழித்துக்கொள்ள வேண்டியுள்ளது. மார்ச் முதல் மே
வரையிலான காலங்களில் குறைந்தபட்ச வெப்பமே வழக்கத்திற்கு மாறான கூடுதலான
செல்சியஸில் இருக்கப்போவதால் பெரும்பாலான நாட்கள் அனல்காற்று வீசும் என்பதில்
சந்தேகமில்லை.
ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், இமாசல பிரதேசம், மத்திய
பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வெப்பம் 1.6 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ்
வரையில் அதிகரிக்க இருக்கிறது. மத்திய, வடக்கு, கிழக்கு மாநிலங்களிலும் மார்ச் தொடக்கம்
முதலே வெப்பம் அதிகரித்துவிட்டது. 2010 முதல் 2015 வரையிலான காலத்தில் ஆண்டுக்குச்
சராசரியாக 1300 முதல் 2500 பேர் வரை இறக்கிறார்கள்.
ஆகவே வெப்பம் சிறிதளவு உயர்ந்தால் கூட சரியான குடியிருப்பு இல்லாதவர்கள் பெரும்
அவதிக்குள்ளாக நேரிடலாம். முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், குழந்தைகள்
போன்றோர் வெப்ப மயக்கத்துக்கு உள்ளாகி உயிருக்கே ஆபத்தான சூழலில் தள்ளப்படலாம்.
உடலில் நீர்ச்சத்து வற்றல், தலைசுற்றல், வெப்ப மயக்கம், தசைபிடிப்பு, கட்டி கொப்புளங்கள்
தோன்றுதல் அம்மை அக்கி போன்ற கோடைகால நோய்களால் பாதிக்கப்படலாம்.
கோடைகாலங்களில் எப்படி இருக்க வேண்டுமோ அதற்குத்தகுந்தாற் போல் முறையான
உணவுகளை உண்டு ஆரோக்கியத்தை பேணுவது நம் கடமை. வெயில் தாக்கத்தால்
பாதிக்கப்படுவோருக்கு முறையான சிகிச்சை அளிப்பதற்கு டெங்கு விவகாரம் போல் இல்லாமல்
முன்னரே தயாராக இருப்பது அரசின் கடமை.
Be the first to comment on "மார்ச் மாதமே மண்டைய பிளக்கும் வெயிலா? – முதியோர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் உஷார்!"