இந்தியாவில் அதிக காற்று மாசு நடைபெறும் இடம் நாட்டின் தலைநகரான டெல்லி என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளி கொண்டாட்டத்தின் போது டெல்லியில் நடந்த காற்று மாசுபாடு இதற்கு நல்ல உதாரணம். இந்த சூழலை மாற்றியமைக்கும் விதமாக டெல்லி ஐஐடியில் காற்று மாசுக்கு எதிரான தனிப்பிரிவு ஒன்றை தொடங்கியுள்ளது.
காற்று மாசுபாடு
மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக இன்று சுவாசிக்கும் காற்று கூட தூய்மையாக இல்லாமல் போயிற்று. அந்த அளவுக்கு வாகன பயன்பாடு, தொழிற்சாலை பயன்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை போன்ற நகரங்களில் காற்று மாசுபாடு பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை.
அதிலும் குறிப்பாக கடந்த நவம்பரில் டெல்லியின் நிலைமை மிக மோசமாக இருந்தது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வராதபடி, பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அரசாங்கமே விடுமுறை அளிக்கும் வகையில் காற்று மாசுபாடு உச்சத்தில் இருந்தது.
ஆராய்ச்சிப் படிப்பு
இந்நிலையில் ஐஐடியின் டெல்லி கிளை காற்று மாசுக்கு எதிரான தனி ஆராய்ச்சி பிரிவை சமீபத்தில் தொடங்கியிருக்கிறது. இது CERCA எனப்படும் சென்டர் ஆப் எக்சலன்ஸ் பார் ரிசர்ச் ஆன் கிளீன் ஏர் என்ற இந்த பிரிவு காற்று மாசுபாடு குறித்த திட்டங்கள், தீர்வுகள் பற்றி ஆராய உள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகளின் நிதி உதவியுடன் வரும் காலங்களில் இதற்கான கருத்தரங்குகளை தொடர உள்ளது.
நம் கடமை
இப்போதே காற்று மாசுபாடு பற்றிய ஆராய்ச்சி படிப்பு தொடங்கிவிட்டோம். இனி வரும் காலங்களில் ” இன்றைய தூய்மையான காற்றின் விலை ” என்ற அவல நிலைக்கு உள்ளாகலாம். ஆதலால் முடிந்த அளவுக்கு பொது போக்குவரத்தை கடைபிடிப்பது நம் கடமை.
Be the first to comment on "டெல்லி ஐஐடியில் காற்று மாசுக்கு எதிரான தனி ஆராய்ச்சி பிரிவு தொடக்கம்!"