இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கி சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் கனா – உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்!
ஆண் கிரிக்கெட் விளையாட்டைப் பற்றி எத்தனையோ திரைப்படங்கள் வந்துவிட்டது. ஆனால் பெண்கள் கிரிக்கெட் விளையாட்டைப் பற்றி உலகில் எந்த மொழியிலும் திரைப்படம் உருவாக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
பெண்கள் விளையாட்டு என்றால் ஹாக்கி, குத்துச்சண்டை (இறுதிச்சுற்று, தங்கல், மேரி கோம்) பற்றிய படங்கள் மட்டுமே வந்துள்ளது. மகளிர் கிரிக்கெட் என்ற ஒன்று இருக்கிறது என்பதை இந்த திரையுலகினர் ஏன் இவ்வளவு நாட்கள் கண்டுகொள்ள வில்லை என்பது ஆச்சர்யம். மகளிர் கிரிக்கெட் தானே என்ற இளக்காரமான பார்வை அது! குந்தானிங்க அப்படி என்ன பெருசா விளாண்டு கிழிச்சுட போறாளுங்க… என்ற இளக்காரம். உலக அளவிலான ஆணாதிக்கத்தை காட்டுகிறது இப்படிபட்ட இளக்காரப் பார்வை!
விவசாயத்தையும் கிரிக்கெட்டையும் ஒருங்கிணைத்துச் செல்லும் விதம் அருமை. அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் டாட். ஆகையால் குறைகளை சொல்வதை வலுக்கட்டாயமாக தவிர்க்க வேண்டியுள்ளது.
ரசனை மிகுந்த காட்சிகள்… / கைதட்டல் வாங்கிய காட்சிகள்
1.டைட்டில் கார்டில் இயக்குனர் அணி எனக் குறிப்பிட்டது.
2.இளவரசு சார் கதாபாத்திரம் (குறிப்பாக எலி மருந்து காட்சியில் அவர் செய்த செயல்)
3.காளையை அண்ணனாக நினைத்து வளர்த்தல்… செல்லப் பிராணிகளுக்கு பிரியமானவர்களின் பெயரை வைத்து அழைத்தல்…
4.கௌசி பவுலிங் போடும் போது பால்ஸ் ஆடிட்டே வந்துச்சா அதான் கவனிக்க முடில என்று இரட்டை அர்த்த வசனம் பேசும் இடத்தில் காதலன் பொங்கி எழுதல்
5.ஆண்களின் வக்கிரப் புத்திக்கு வக்காலத்து வாங்காதீங்க… எளவட்டப் பசங்க தான் ஆபாசமா பேசுன இளவட்டப் பசங்கள அடிச்சு நொறுக்குனது… ஆபாசங்கறது உடைல இல்ல… பிறப்புலயும் வளர்ப்புலயும் இருக்கறது… என்ற வசனம்…
6.சோத்த திங்கறியா இல்ல பீய திங்கிறியா என்று முருகேசனை சாடையாகப் பேசிவிட்டு வங்கி மேலாளர் தயிர் சாதாத்தை வப்வப்பென்று அள்ளித் தின்பது…
7.நிலம் நிலம் என்று மெடிக்கல் காலேஜ் கட்டுவதற்காக சுற்றித்திரியும் அரசியல்வாதி இக்கட்டான சூழலில் கூட நிற்பது.
8.சாதனையாளராக கௌசி மைக் பிடித்ததும் என் வெற்றிக்கு என் அம்மா அப்பா தான் காரணம் என்பதை முதலில் சொல்வார் என எதிர்பார்த்திருந்தால் அவரோ சிறுமியாக இருந்தபோது விளையாட்டில் சேர்த்துக்கொண்ட அண்ணன்களை முதலாவதாக குறிப்பிட்டுவிட்டு அப்பா அம்மாவை அடுத்ததாக சொல்கிறார்! நின்னுட்டிங்க டைரக்டர் அருண்ராஜா!
கிரிக்கெட்ட்ல நான் ஜெயிச்சதும் காசு தர இந்தப் பேங்க்ல தான் எங்கப்பா விவசாயக் கடன் வாங்கிருக்காரு… விளையாட்டப் பத்தி பேசுறோம் விலாசாயத்தப் பத்தி பேச மாட்டிங்குறோம்… என்று கூறி அந்த 5 லட்சம் பணத்தை அப்படியே திருப்பித் தரும் காட்சி விவசாயிகளுக்கு லோன் தர மறுக்கும் வங்கி மேலாளருக்கு செருப்படி!
இவற்றை எல்லாம் விட மிகவும் ரசனை காட்சி எது தெரியுமா?
அனைவரும் டிவி முன்பு உட்கார்ந்து பதட்டத்தோடு டிவியையே பார்த்துக் கொண்டிருக்க…
அம்மா…
முருகேசனையே பார்த்துக் கொண்டிருப்பார்… முருகேசனின் முகபாவனைகளை வைத்து மனமகிழ்வார்… இப்படி ஒரு காட்சியை எந்த சினிமாவிலும் பார்த்தது இல்லை! கவிதை போல் தெரிந்த காட்சி!
- ஆசைப்பட்டா மட்டும் போதாது! அடம் பிடிக்கத் தெரியணும்! நம்ம பிடிக்குற அடத்துல தான் நமக்கு அது எவ்வளவு பிடிச்சிருக்குனு தெரியும்! என்று அம்மா முருகேசனை கரம் பிடித்த கதையை சொல்லும் இடம் அருமை!
- கைதட்டல்னா சும்மாவா… கைதட்டுற மாதிரி எதாவது செய்யுங்க… நாங்களே தட்டுவோம்… என்று பணத்தை வாங்க மறுத்து கைதட்டல் என்பது விலைமதிப்பற்றது என்பதை உணர்த்தும் காட்சி அற்புதம்… !
ஏற்கனவே சொன்னது போல் அனைவரும் கட்டாயமாகப் பார்க்க வேண்டிய படம் டாட்.
Be the first to comment on "கைதட்டல் வாங்கறது அவ்வளவு சாதாரணமா போச்சா! – கனா திரைப்பட விமர்சனம்!"