2020ஆம் வருடத்திலும் வெறும் மூவாயிரம் நான்காயிரம் சம்பாதிக்கும் இளைஞர்களின் நிலைமை என்ன?

கற்றது தமிழ் படம் வந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது.  அந்தப் படத்தின் கதை எழுதி 15 ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும்.  அப்போது ஒரு பட்டதாரி இளைஞனுக்கு மாத சம்பளமாக  இரண்டாயிரம் தருவார்கள். காலம் மாறிக்கிட்டே இருக்கு ஆனா அந்த அடிப்படை சம்பளம் மட்டும் மாறவே மாட்டேங்குது ஏன் என்ற ஒரு வினாவை கற்றது தமிழ் படத்தில் இயக்குனர் ராம் அழுத்தமாக பதிய வைத்திருப்பார். 

சென்னை போன்ற நகரத்தில்  தண்ணியை காசு இல்லாமல் பயன்படுத்த முடியாது.  அப்படிப்பட்ட சூழலில் அவன் எப்படி வாடகை கொடுப்பான், அவன் எப்படி பேருந்து பயணம் செய்வான், அவன் எப்படி மூன்று வேளையும் நிம்மதியாக சாப்பிடுவான்.  தன்னை நம்பியிருக்கும் உறவினர்களுக்கு அதில் எந்த தொகையை மிச்சம் பண்ணி கொடுப்பான். 

இப்படி இரு பல கேள்விகள் பல ஆண்டுகளாக கேட்கப்பட்டு கொண்டே வருகிறது. ஆனால் இந்தக் கேள்விக்கான விடை இன்றும் தெரிந்த பாடில்லை. சதுரங்க வேட்டை படத்தில் காந்தி என்ற நாயகனின் பிளாஸ்பேக் வரும். அந்த பிளாஷ்பேக்கில் அவன் சாலையோர கூலி தொழிலாளிகளுக்கு மகனாக பிறந்து இருப்பான். அப்போது ஏற்பட்ட கார் விபத்தில் அப்பா  இறந்து விட அம்மா மட்டுமே இருப்பாள், அம்மாவும் உடம்புக்கு முடியாமல் இருப்பாள். அம்மாவை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அந்த காந்தி என்கிற சிறுவன் ஓடி ஓடி உழைப்பான். 

ஆனால் அவன் கையில் கொஞ்சம் காசு கூட மிஞ்சாது. அவனை வைத்து வேலை வாங்கும் முதலாளி நன்றாக சம்பாதிப்பானே ஒழிய அவனுடைய கைக்கு காசு வரவே வராது.  என்னடா உலகம் இது? நம்மை இப்படி மெணக்கட்டு வேலை வாங்குபவனின் வாழ்வில் வளர்ச்சி இருக்கும். ஆனா நம்மளோட அடிப்படை தேவைக்கு கூட காசு இல்லாமல் இருக்கே என்று அந்த சிறுவன் மண்டையை பிடித்துக் கொள்வான். அவன் தன் உடலில் நெருப்பு எரிந்து கொண்டிருப்பது போல உணர்வான். 

வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயன் இதே மாதிரியான ஒரு மனநிலையை விளக்கி இருப்பார். வேலை கிடைத்து விட்டது என்றதும் அந்த வேலைக்கு நேர்மையாக இருந்து எப்படியாவது முன்னேறி குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்று வெறித்தனமாக ஓடிஓடி உழைப்பார்.  எப்போதும் மோட்டிவேஷன் பொன்மொழிகள் அந்த இளைஞனின் செல்போனில் நிரம்பிக் கிடக்கும். அதை பார்த்துக்கொண்டே விடக்கூடாது எப்படியாவது மேலும் வரணும் என்று  கொடுக்கும் அத்தனை வேலைகளையும் மாங்கு மாங்கு என்று மாடு போல செய்வார்.  ஆனால் கடைசியில் மாத சம்பளத்தில் செலவுகள் போக பார்த்தால் சல்லி பைசா மிஞ்சியிருக்காது. சிவகார்த்திகேயன் அதிர்ந்து எழுந்து விடுவார். என்னடா இத்தனை கஷ்டப்பட்டு உழைக்கிறோம் கையில் ஒரு சல்லி பைசா மிச்சம் பண்ண முடியலையே இந்த காசெல்லாம் எங்குதான் போகுது என்று உள்ளம் வெகுண்டெழுந்து  தன் அம்மாவிடம் கத்துவார். தன் நண்பர்களிடம் கத்துவார். இந்த சமூகத்தை பார்த்து கத்துவார்.  என் காசு எங்க தாண்டா போகுது என்று உரக்க கத்துவார்.  ஜாலியாக இருந்த ஒரு இளைஞனின் மன நிலையை முற்றிலுமாக அந்தக் காசு என்கிற விஷயம் மாற்றிவிடுகிறது. அதைத் தொடர்ந்து அந்த இளைஞன்  இந்த சமுதாயத்தில் காசு எப்படி எப்படி புழங்குகிறது யாரெல்லாம் உட்கார்ந்த இடத்திலேயே சம்பாதிக்கிறார்கள் யாரெல்லாம் ஓடி ஓடி உழைத்து ஒன்றுமில்லாமல் போகிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் அவ்வளவு ஆழமாக அலசி ஆராய்ந்து தெரிந்து கொள்கிறான்.  ஆனால் நிஜத்தில் அந்த மாதிரியான இளைஞர்கள் இவ்வளவு தூரம் யோசிப்பதில்லை. யோசிக்கவும் இந்த சமூகம் விடுவதே இல்லை. எல்லாவற்றிற்கும் காசு என்று இருக்கும்போது காசில்லாமல் அவன் என்ன செய்வான்?  யோசிக்க நேரமில்லாமல் சந்தோசமாக வாழ முடியாமல் தூக்கத்தை கெடுத்து கொண்டு அந்த சொற்ப வருமானத்திற்காக நாயை விட கேவலமாக ஓடி ஓடி உழைக்கிறான்.  ஆனால் அந்த மாதிரியான இல்லாத பட்ட குடும்பங்களில் இருந்து வந்த இளைஞர்களின் வறுமையை பயன்படுத்தி கொண்டு இந்த முதலாளிகள் எல்லாம் அவர்களை வைத்து பெரிய லாபம் சம்பாதித்து விட்டு நல்ல பெயரை சம்பாதிக்கிறான். ஆனால் இந்த வேலைக்கும் நற்பெயருக்கும் காரணமான வேலைக்காரனை மட்டும் தொரத்தி தொரத்தி ஓட விட்டுக் கொண்டே இருக்கிறான். 

வேலைக்காரன் படத்திலாவது சிவகார்த்திகேயன் குறைந்தபட்ச சம்பளமாக அதாவது முதல் மாத சம்பளமாக பத்தாயிரம் வாங்குவார் என்று காட்டி இருப்பார்கள். ஆனால் இன்னமும் மூவாயிரத்திற்கும் நான்காயிரத்திற்கும் வேலை பார்க்கும் இளைஞர்கள் இருக்கிறார்கள் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா அதுவும் லட்சம் லட்சமாக பணம் கட்டி படித்த  பொறியியல் கல்லூரி மாணவர்கள் எல்லாம் இந்த மாதிரி மூவாயிரத்திற்கும் 4 ஆயிரத்திற்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால் உங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடிகிறதா அவர்களின் வலியை புரிந்து கொள்ள முடிகிறதா? 

நெடுநல்வாடை என்ற ஒரு சின்ன படம். அந்த படத்தில் நாயகன் டிப்ளமோ முடித்து இருப்பார்.  கேம்பஸ் இன்டர்வியூ கல்லூரிக்கு வந்த பொழுது,  அங்கு இருக்கும் அந்த கம்பெனி நிர்வாகிகள் எல்லோரும் அந்த இளைஞனிடம் ஒரு கேள்வி கேட்பார்கள். உன்னுடைய லட்சியம் என்னப்பா என்பதுதான் அந்த நிர்வாகிகள் கேட்ட கேள்வி. அதற்கு அந்த படத்தின் நாயகன் “ஒரு நல்ல வேலைக்கு போகணும் சார்… என்னுடைய குடும்பத்தை காப்பாத்தனும்… இதுதான் என்னுடைய லட்சியம் என்று சொல்கிறான்.  அதற்கு அந்த நிர்வாகிகள்,  இது எல்லோருக்கும் இருக்கக்கூடிய பொதுவான பிரச்சினைப்பா… நாங்கள் அதைக் கேட்கவில்லை நாங்கள் கேட்டது உன்னுடைய லட்சியம் என்ன என்றுதான் கேட்டோம். அதற்கு அந்த இளைஞன் என்னை மாதிரி பசங்களுக்கு எல்லாம்  மூணு வேளை சோறு ஒழுங்கா சாப்பிடு அப்பா அம்மா அவங்களுக்கு சரியான சாப்பாடு போட்டு அவர்களுக்கு மருத்துவம் செய்து எப்படி குடும்பத்தை காப்பாற்றுவது என்பது தான் சார் லட்சியமே… அதைத் தாண்டி எங்களுக்கு வேற இலட்சியங்களை யோசிக்க கூட எங்களுக்கு நேரமில்லை சார் என்று சொல்வான் அந்த இளைஞன். அந்த மாதிரியான இளைஞர்களை தான் இந்த திருட்டு முதலாளி கூட்டங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்கிறது. நெடுநல்வாடை பட நாயகனை லட்சியம் என்ன என்று கேட்ட அந்த கம்பெனி தேர்ந்தெடுக்கவில்லை அவன் வேலை கிடைக்காமல் வேறொரு கம்பெனிக்கு செல்கிறான். அங்கு கேள்வி கேட்கிறார்கள் நீங்கள் உங்களுடைய முதல் மாத சம்பளம் எவ்வளவு எதிர்பார்க்கிறீர்கள் என்று.  அதற்கு அந்த இளைஞன் எடுத்ததும் 25,000 30,000 என்றெல்லாம் சொல்லாமல் பத்தாயிரம் கிடைச்சா போதும் சார் என்கிறான். ஆனால் அவன் சொல்லும் பதிலை வைத்துக் கொண்டு அங்கு இருக்கும் நிர்வாகி ஒருவன் இந்த கம்பெனியில் நான் நாலு வருஷமா வேலை செய்யிறேன் வெறும் 15 ஆயிரம் தான் தருகிறார்கள். நீ இப்பதான் புதுசா வந்திருக்கிற எடுத்ததும் பத்தாயிரம் கேட்கிற. உன்னுடைய முதல் மாத சம்பளம் 4,500 ரூபாய். ஆறுமாதத்திற்கு ஒரு தடவை கொஞ்சம் கொஞ்சமாக  ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சொல்கிறார்கள். கிடைத்த இந்த வேலையாவது ஒழுங்காக செய்வோம் என்று அந்த வேலையை ஏற்றுக் கொள்கிறான். ஆனால் அவனை சுற்றி இருக்கும் சுற்றம் எல்லாம் எப்படி பார்க்கிறது?

இந்த காலத்துல போயி மாசம் நாலாயிரம் ரூபாய் தான் சம்பாதிக்கிறான்னா,  அவனெல்லாம் எப்ப முன்னேறி எப்ப செட்டிலாகி அவன பாத்துகிறதுக்கே அவன் பத்து வருஷம் வரைக்கும் உழைக்கனும், இந்த லட்சணத்துல இவனெல்லாம் எங்கே போய் யாரை கல்யாணம் பண்ணி எப்படி குடும்பம் நடத்துவான் என்று தொடர்ந்து அவன் மீது விமர்சன குப்பைகளை அள்ளி வீசிக் கொண்டே இருக்கிறார்கள். 

இதே நெடுநல்வாடை படத்தில் அந்த நாயகன் தன்னுடைய சொந்தக்காரர் பெண் ஒருவரை காதலிக்க அந்த பெண்னும் அவனை உயிருக்குயிராக காதலிப்பாள்.  அந்த மாத சம்பளம் rs.4000 வேலையை வைத்துக் கொண்டு அது ஒரு தகுதி என நினைத்துக்கொண்டு அந்த ஹீரோ தன் காதலி வீட்டிற்குச் சென்று பெண் கேட்க, பெண் வீட்டினர் மாசம் ரெண்டாயிரம் 3000 சம்பாதிக்கறவனுக்கலாம் பொண்ணு கொடுக்க முடியாது என்று சொல்லி முகத்தில் அடித்தது போல் பேசி அவர்களை வெளியே விரட்டி அடிக்கிறார்கள். 

உயிருக்கு உயிரான காதலியை திருமணம் செய்து கொள்ள முடியாமல், அந்த சொற்ப வருமானத்தை வைத்து குடும்பத்தை காப்பாற்ற முடியாமல் அந்த இளைஞன் தவித்து அலைகிறான். 

அந்த இளைஞனைப் போல கோடிக்கணக்கான இளைஞர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா இத்தனைக்கும் அந்த இளைஞர்கள் எல்லோரும் லட்சம் லட்சமாக லோன் வாங்கி பணம் கட்டி படித்து பட்டம் வாங்கியவர்கள்.  அதிலும் குறிப்பாக இன்ஜினியரிங் படித்தவர்கள் எல்லோரும் வாட்ச்மேன் வேலை, கார் டிரைவர் வேலை,  தியேட்டரில் டிக்கெட் கிழித்து கொடுக்கும் வேலை போன்ற வேலைகளை எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த அதிகார வர்க்கம் புரிந்து கொள்கிறதா? 

நெடுநல்வாடை படத்தில் சொன்னது போல் இந்த இளைஞர்கள் எப்போது பணம் சம்பாதிக்க தொடங்கி அவர்கள் கையில் எப்போதும் பணம் மிச்சம் இருக்கும் எப்போது செட்டிலாகி எப்போது நல்ல பெண் கிடைத்து எப்போது திருமணம் குழந்தை என்று அவர்களுடைய வாழ்க்கையைத் தொடங்குவார்கள்.  இதெல்லாம் அந்த இளைஞனின் வாழ்க்கையில் நடக்க வேண்டும் என்றால் அந்த இளைஞனின் வயது அப்போது 40 வயது ஆக இருக்கும் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. 

சொந்த பந்தங்கள் முன்னிலையில் தலைகாட்ட முடியாமல் விசேஷ துக்கம் போன்ற நிகழ்வுகளுக்கு எல்லாம் செல்ல முடியாமல் கூனிக்குறுகி ஏதோ ஒரு அற்ப புழுவைப் போல தலை குனிந்து கொண்டே வாழும் இளைஞர்கள் இன்னமும் நம் தேசத்தில் இருக்கிறார்கள். அந்த மாதிரி அப்பாவி இளைஞர்களை தான் இந்த மெத்தப் படித்த மேதாவி முதலாளி, அதிகார வர்க்கம் போன்றவை சக்கையாக பிளிந்து பயன்படுத்திவிட்டு  இனி எனக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று துரத்திவிடுகிறது. 

இந்தியாவில் இருக்கும் கோடிக்கணக்கான படித்த பட்டதாரிகளில் நிறைய இளைஞர்கள் இன்றும் காலை உணவை சரியாக சாப்பிடுவதில்லை என்று சொல்கிறது ஆய்வு.   பணத்தை மிச்சம் செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டு கொண்டு மீதி வேலைகளில் தண்ணீர், ஜூஸ், டீ, கம்மங்கூழ் போன்ற திரவ உணவுகளை மட்டுமே வயிற்றை நிரப்பும் பொருளாக பயன்படுத்திக் கொண்டே இந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது இந்த முதலாளி வர்க்கங்களுக்கு தெரியுமா? தன் தொப்பையை வளர்த்துக் கொள்வதிலும் தன் பேரன் பேத்திகளுக்கு சொத்து பிடித்து வைப்பதிலும் குறியாக இருக்கிறார்களே தவிர கொஞ்சம் கூட மனிதநேயம் என்பது இல்லாமல் வாழ்கிறார்கள் முதலாளிகள். அவர்களிடம் சார் சம்பளம் கொஞ்சம் கூட்டி கொடுங்க என்று கேட்டால் அவ்வளவுதான் பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது கோபம். 

 

Related Articles

மனைவிக்கு கார் ஓட்டக் கற்றுக்கொடுக்கும் ... சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் துரைவேலன் மற்றும் அவரது மனைவி ஜெயந்தி. இவர்களது ஏழு வயது மகள் பவித்ரா யாரும் எதிர்பாராத வகையில் கார் விபத்தில்...
நண்பர்களோடு பார்க்க வேண்டிய படம்! –... இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி மற்றும் இயக்குனர் கரு பழனியப்பன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் நட்பே துணை.மீசைய ...
தமிழ் எழுத படிக்கத் தெரியாத தமிழ்பிள்ளைக... விஜய் தொலைக்காட்சிக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. காரணம் நீயா நானாவில் சமீப காலமாக மிக முக்கிய தலைப்புகளில் விவாதங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வ...
அஞ்சிறைத் தும்பி – உங்களை தீவிர சி... ஆனந்த விகடன் இதழில் 50க்கும் மேற்பட்ட குறுங்கதை தொடராக வந்த தொகுப்புதான் அஞ்சிறைத் தும்பி. இந்த குறுங்குகதை தொடரில் உள்ள ஒவ்வொரு குறுங்கதையும் புதுவித...

Be the first to comment on "2020ஆம் வருடத்திலும் வெறும் மூவாயிரம் நான்காயிரம் சம்பாதிக்கும் இளைஞர்களின் நிலைமை என்ன?"

Leave a comment

Your email address will not be published.


*