அஞ்சிறைத் தும்பி – உங்களை தீவிர சிந்தனை ஆளராக மாற்ற கூடிய புத்தகம்!

A view on _Ananda Vikatan Anjiraithumbi Book_

ஆனந்த விகடன் இதழில் 50க்கும் மேற்பட்ட குறுங்கதை தொடராக வந்த தொகுப்புதான் அஞ்சிறைத் தும்பி. இந்த குறுங்குகதை தொடரில் உள்ள ஒவ்வொரு குறுங்கதையும் புதுவிதமான அனுபவத்தையும் வித்தியாசமாக சிந்திக்கும் திறனையும்  கூர்மையான பார்வையும் தருகிறது என்று சொல்லலாம். “காஞ்சாஹசி” என்கிற குறுங்கதை தான் இந்தத் தொடரில் முதல் கதையாக இருக்கிறது. நரிக்குறவர்களின் வாழ்க்கை முறையை விவரிக்கும் இந்த கதையில்,  நரிக்குறவர் இன பெண்கள் பற்றியும் நரிக்குறவ இன சிறுவர்கள் என்ன மாதிரியான சங்கடங்களை அனுபவிக்கிறார்கள் என்பதும் விவரிக்கப் பட்டிருக்கும். அதிலும் குறிப்பாக நரிக்குறவ இன மக்களில் கூட எருமைக்கடா தின்பவர்கள் ஆட்டுக்கறி தின்பவர்கள் என்ற வேறுபாடு உண்டு என்பதை பற்றியும் நரிக்குறவ இன மக்கள் யாராவது பிச்சை எடுத்து பார்த்திருக்கிறீர்களா? திருடி பார்த்திருக்கிறீர்களா? நரிக்குற பெண்கள் விபச்சாரம் செய்து பார்த்திருக்கிறீர்களா? என்று நரிக்குற இன ஆண் ஒருவர் கேள்வி கேட்கும் இடம் அவ்வளவு உணர்வுப்பூர்வமாக இருந்தது. 

“தற்கொலை பிளாட்” என்கிற குறுங்கதையில் தமிழ்ச்செல்வன் என்கிற ஒரு பத்திரிகையாளரின் வாழ்க்கை  காட்டப்பட்டிருக்கும். அந்த பத்திரிக்கையாளர் ஆணவக் கொலைகள் பற்றி பதிவு செய்த புத்தகம் வெளி வருவதற்குள் மூன்று ஆணவக் கொலைகள் நடந்து முடிந்தது, அவருடைய சிலோன் தங்கை விமானத்தில் பயணிக்கும் போதெல்லாம் நடுக்குமான உணர்வை அனுபவிப்பது, தொடர்ச்சியாக சாவை பார்த்தவர்களுக்கு பேய் பயம் இருக்காது என்று மரணங்களை பார்த்தவனின் மனநிலையை விளக்கியது என்று இந்த கதையில்  ஆணவக் கொலைகள் இனப் போராட்டம் சகமனிதனை கார்னர் செய்து நெருக்கடிக்குள் தள்ளுவது போன்ற விஷயங்கள் நுணுக்கமாக பேசப்பட்டிருக்கும். 

ஜெயமோகன் நகர், சாரு நிவேதிதா தெரு என்ற  இந்த குறுங்கதையில் இரவின் மகிமையையும் இரவு நேரத்தில் பேருந்து, லாரி, டெம்போ போன்ற வாகனங்களை ஓட்டிச் செல்லும் ஓட்டுநர்களுக்கும் இளையராஜாவுக்கும் உள்ள உறவு எப்படிப்பட்டது  என்பதும் மிக அழகாக விளக்கப்பட்டிருக்கும்.  அதற்கு அடுத்த குறுங்கதையான இளையராஜாவின் பார்வையாளர் நேரம் என்கிற குறுங்கதையில்,  பார்வை திறன் இல்லாத பாடகர்களுக்கு இளையராஜாவின் பாடல்கள்  எப்படி கை கொடுக்கிறது அவர்கள் பாடும் மேடைகளில் எல்லாம் ரசிகர்கள் எந்த படத்திலிருந்து ஒரு பாடலை அதிகம் படிக்கிறார்கள் இளநீர் பதநீர் நுங்கு போன்றவை குடிப்பதற்கும் டீ குடிப்பதற்கும் உள்ள வித்தியாசம் என்ன போன்ற பல தகவல்களை இந்த குட்டி கதைக்குள் தெரிந்துகொள்ளலாம். 

அஞ்சிறைத் தும்பி என்கிற இந்த குறுங்கதை தொடரில் மிக அல்டிமேட் ஆன ஒரு குறுங்கதை என்றால் அது ஜீன்ஸ் பெரியார் தான்.  பெரியார் இன்றைய காலத்திற்கு வந்து இருந்தால் எப்படிப்பட்ட உடைகளை அணிந்து இருப்பார், பெரியாரின் கொள்கைகள் எவ்வளவு தூரம் இளைஞர்களிடம் சென்றிருக்கிறது, சினிமாவில்  முற்போக்குக் கருத்துகள் எவ்வளவு தூரம் பேசப்படுகிறது, அறிவியல் வளர்ந்த பின்பும்  தொழிநுட்ப சாதனங்களில் ஜாதியை மென்மேலும் வளர்வதற்கு  சில மனிதர்கள் தீவிரமாய்  உழைப்பது போன்றவற்றையெல்லாம் பெரியார் பார்த்தால் அவருடைய கருத்துகள் என்னவாக இருக்கும் என்கிற இந்தக் குறுங்கதையில் கற்பனை வளமும் சிந்திக்கக் கூடிய திறனும்  மிகுந்து காணப்பட்டு இருக்கும். 

 நாய் அம்மை என்கிற குறுங்கதை. இந்த கதையில் சுப்பிரமணி என்கிற கிராமத்தில் பெரிய மனிதர் தன் வீட்டில் நாய்களை சிங்கம் மாதிரி வளர்த்தி வருகிறார். அதே போல தன் பெண்ணையும் செல்லமாக வளர்த்து வருவார். அப்படிப்பட்ட பெண் கீழ் சாதிக்காரன் ஒருவனுடன் ஓடிப் போய் விட்டான் என்றதும் தன் மகளை சரியாக பாதுகாக்காத அந்த சிங்கம் மாதிரியான நாய்கள் எல்லாம் சுட்டுத் தள்ளுகிறார் சுப்பிரமணி. மகளையும் அவளுடைய காதலனையும் வீட்டிற்கு அழைத்து வந்து அவமானப்படுத்தி சாகடிக்கிறார் சுப்பிரமணி. அதன் பிறகு அந்த வீட்டிலிருக்கும் சுப்பிரமணியின் மனைவி எப்படி மாறினார்? சுப்பிரமணி அதன் பிறகு என்ன ஆனார்? என்பதை விவரிக்கும் கதை. கிட்டத்தட்ட ஒரு முழுநீள படத்திற்கான கதை குறுங்கதையாக எழுதப்பட்டிருக்கிறது. நிச்சயம் இது சினிமாவாக எடுக்கப்பட்டால் அது மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற கூடிய படமாக இருக்கும். 

கொண்டாட படாத மகளிர் தினம் என்கிற குறுங்கதையில்,  மகளிர் தினம் என்கிற ஒரு தினம் எப்படி உருவானது? அது எதற்காக உருவாக்கினார்கள், ஆனால் இன்றைய பெண்கள் அதை எப்படி கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றியும் ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறதா? கொண்டாடப்பட வேண்டியதன் அவசியம் என்ன? மகளிர் தினத்தன்று பிறந்த பெண்கள்  மகளிர் தினத்தை கொண்டாட முடிகிறதா? இப்படி பலதரப்பட்ட விஷயங்களை பலதரப்பட்ட மனிதர்களின் சூழ்நிலைகளை மிக அருமையாக விளக்கப்பட்டிருக்கும் குறுங்கதை தான், இந்த கொண்டாடப்படாத மகளிர் தினம் குறுங்கதை. 

“சாதிவனம்” என்கிற ஒரு குறுங்கதையில்  மனிதர்கள் வாழும் பகுதி எப்படி மிருகத்தனமாக இருக்கிறது என்பதையும் மிருகங்கள் வாழும் வனம் எப்படி அழகான இடமாக இருக்கிறது என்பதை பற்றியும் விளக்கும்  இந்தக் கதை கூறும் கதையில் நாயகன் வில்டுலைஃப் போட்டோகிராஃபர் ஆக இருப்பார். அப்படிப்பட்ட நாயகன் தன் நண்பனின் வீட்டிற்குச் செல்கிறார். வீட்டிற்குச் சென்றபோது நண்பனின் வீட்டில் இருக்கும் அம்மா ஜாதி ரீதியாக நாயகனை  தாழ்மை படுத்துகிறார். என்ன தான் மெத்த படித்து இருந்தாலும் நம்மால் இந்த சாதி என்கிற உணர்வுக்குள் இருந்து வெளியே வர முடியவில்லை என்பதை நண்பர்களை வைத்து மிக அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கும் கதை சாதி வனம். 

“அன்புள்ள ரஜினி கணேஷ்” என்கிற குறுங்கதையில் ரஜினியின் தீவிர ரசிகன் ஒருவரின் வாழ்க்கையைப் பற்றி எழுதப்பட்டிருக்கும் இந்தக் கதையில் வரும் ரஜினி கணேஷ் என்பவர் அச்சு அசலாக ரஜினி மாதிரியே பேசுவார் ரஜினி மனசிலே நடப்பார் அவனுடைய செயல்பாடுகள் அனைத்தும் ரஜினி மாதிரி இருக்கும் ஆடலும் பாடலும் போன்ற நிகழ்ச்சிகளில் அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கும்.  ஆனால் தொழிநுட்ப சாதனங்களில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைய வந்து விட்டதால் அந்த மாதிரியான கலைஞர்களின் வாழ்க்கை எவ்வளவு பாதிக்கப்படுகிறது என்பதை ரொம்ப வலியுடன் பதிவு செய்யப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட ரஜினியின் தீவிர ரசிகரான ரஜினி கணேஷ் டிக்டாக்கில் தன் மகன் ரஜினியைப் போன்று நடித்துக் கொண்டிருப்பதை பார்த்து ஆவேசப்பட்டு தன் மகனை வெறி கொண்டு அடிக்கும் இடம் அவ்வளவு வலி நிறைந்ததாக இருந்தது. 

“சேகுவாராவின் கண்கள்”  என்ற குறுங்கதையில் கல்லூரி காலத்தில் எந்த அதிகாரத்தையும் எதிர்த்து கேள்வி கேட்கக்கூடிய துணிச்சல் பெண்ணாக இருப்பார் ஜெயலட்சுமி. கல்லூரி காலத்தில் வாயை துணியால் மூடிக்கொண்டு போராட்டம் நடத்திய ஜெயலட்சுமி,  கொரோனா காலத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு அடக்கமான ஒரு பெண்ணாக செல்வதை தொடர்புபடுத்தி இந்தக் கதை கூறியிருக்கும். திருமணத்திற்கு முன் பெண்கள் எப்படி இருக்கிறார்கள் திருமணத்திற்கு பின் பெண்கள் எப்படி இருக்கிறார்கள் என்ற கேள்விகளெல்லாம் இந்த குறுங்கதை எழுப்புகிறது. ஜீவநதி என்கிற குறுங்கதையில்,  செப்டிக் டேங்க் கிளீன் பண்ணுபவர்களின் வாழ்வியலை பதிவு செய்யப்பட்டிருக்கும். அவர்களிடம் இந்த நாகரீக மனிதர்கள் பேரம் பேசுவது அவர்களை ஏன் குடிக்கிறீர்கள் என்று கேள்வி கேட்பது? மழைக்காலத்தில்  சாலையில் ஓடும் நீருடன் சாக்கடை நீர் கலந்தால்  அதில் என்னென்ன பொருட்கள் அடங்கியிருக்கும் என்பதை விளக்கிய வரிகளில் வாசகர்களை சாக்கடைக்குள் இறக்கி விட்டு அந்த அனுபவம் எப்படி இருக்கிறது பார்த்துவிட்டு மேலே வா என்று சொன்னது போல்  எழுதப்பட்டிருந்தன. 

“மொட்டை மாடி கொலைகள்” என்கிற குறுங்கதையில் மொட்டை மாடிக்கும் வானத்திற்கும் உள்ள உறவு எப்படிப்பட்டது? மொட்டைமாடி இரவு எவ்வளவு அழகானது? என்பதை ரொம்ப சுவாரசியமாக விளக்கப்பட்டிருக்கும். அதேசமயம் மொட்டை மாடி எப்படிப்பட்ட தவறான காரியங்களுக்கும் களமாக அமைந்து விடுகிறது  என்பதும் வலியுடன் விவரிக்கப்பட்டிருக்கும். ஜீன்ஸ் பெரியார், நாகம்மை குறுங்கதைகளுக்குப் பிறகு ரொம்பவே அழுத்தமான  குறுங்கதை என்றால் கண்டிப்பாக சலிப்பின் கடவுள் குறுங்கதையைப் பற்றி சொல்லலாம்.  நாம் என்னதான் புதுப்புது விஷயங்களால் புது புது இடங்களில் புதுப்புது மனிதர்களால் இந்த வாழ்க்கையை புதுப்பித்துக் கொள்ள முயன்றாலும் எல்லா விஷயங்களுமே கடைசியில் மனிதனுக்கு சலிப்பை தரக் கூடியதாக இருக்கின்றன என்பதை விவரிக்கும் குறுங்கதை.  வாழ்க்கையின் பெரும்பாலான நாட்கள் அலைச்சலாலும் வறுமையாலும் வாடிய மனிதர்களுக்கு இந்த குறுங்கதை ரொம்பவே பிடிக்கும். “மீசை நாற்காலி” என்கிற ஒரு குறுங்கதையில்  அன்னலட்சுமி என்கிற ஒரு இளம்பெண் சிறுவயது முதலே அழகாக ஸ்டைலாக முகம் முழுக்க மீசைகள் வைத்திருக்கும் ஆண்களை ரசித்து பார்க்கிறாள். குறிப்பாக, அதன் வீட்டில்  இருக்கும் முறுக்கு மீசை ஆண்களை அவளுக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் அந்த மீசைக்கு பின்னால் கம்பீரம் என்று நினைத்துக்கொண்டு  ஜாதி வெறியும் ரத்த வெறியும் பதுங்கி இருப்பதை  அன்னலட்சுமி போன்ற பல இளம்பெண்கள் அறிந்து கொள்வதில்லை என்பதை விளக்கும் குறுங்கதை.  அப்படியே சிறுவயது முதலே மீசைக்காரர் கடைசியாகப் பார்த்த அன்னலட்சுமி திருமண வயது வந்ததும் அதே மீசை காரர்களால் எப்படி மாய்ந்தாள் என்பதை  வலியுடன் பதிவு செய்யப்பட்டிருக்கும். 

“தீர்க்கரேகை” என்கிற குறுங்கதையில் செருப்பு என்பது நம் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமான பொருள் என்பதை அழுத்தமாக பதிவு செய்யப்பட்டிருக்கும்.  மன்னர் காலத்தில் அவருடைய செருப்பை பராமரிப்பதற்கு எவ்வளவு ஏற்பாடுகள் இருந்தது, மன்னனின் செருப்பை சாட்சியாக வைத்து எப்படிப்பட்ட ஆட்சி நடந்தது,  மன்னன் வம்சா வழியில் வந்தவன் செருப்பு தைப்பவரின் மகளை திருமணம் செய்து கொண்ட பிறகு என்ன நடந்தது, இந்த வம்சா வழியில் வந்தவன் கடைசியில் ஒரு  சமூக சீர்திருத்தவாதியின் முகத்தில் செருப்பை தூக்கி எறிந்தது போன்ற பல சுவாரசியமான சம்பவங்களை  இணைத்து ஒரு வரலாற்று குறுங்கதையாக எழுதப்பட்டிருக்கும். 

இப்படி இந்த குறுங்கதை தொடரில் உள்ள எல்லா கதைகளுமே அதிகார வர்க்கத்திற்கும்,  ஜாதி ஒழுக்கத்திற்கும் ஆளாகும் எளிய மனிதர்களை நாயகர்களாக நாயகிகளாக வைத்து எழுதப்பட்ட குறுங்கதைகள். இந்த குறுங்கதை தொகுப்பில் உள்ள ஜீன்ஸ் பெரியார், சாதி வனம், மீசை நாற்காலி, தமிழ் பிணம், நாய் அம்மை போன்ற குறுங்கதைகளை மட்டும் தனியாக எடுத்து ஒரு வெப்சீரிஸ் செய்யலாம். அந்த அளவுக்கு அந்தக் குறுங்கதைகளில் தகவல்களும் அழுத்தமான காட்சிகளும் வசனங்களும் நிரம்பியிருக்கின்றன. 

யாராலும் இதுவரைக்கும் பெரிதாகப் பேசப் படாத நோய்கள், வரலாற்று சம்பவங்கள், புதுமையான பெயர்கள், வித்தியாசமான உவமைகள், சுவாரஸ்யமான கற்பனைகள்,  நுணுக்கமான திருப்பங்கள்,  அழகான தருணங்கள்  போன்ற அம்சங்களால் நிறைந்தது அஞ்சிறைத் தும்பி. இந்த புத்தகத்தை முழுமையாக படித்தால் கண்டிப்பாக நமக்குள் சில மாற்றங்கள் ஏற்படும். நிறைய விஷயங்களை நுணுக்கமாகவும் வித்தியாசமான கண்ணோட்டத்துடனும் பார்க்கத் தொடங்குவோம்.

Related Articles

இன்றைய தண்ணீர் விலை? – லிட்டருக்கு... மனிதர்களாகிய நாம், தனது சுயநலத்துக்காக இயற்கையை கொன்று வருவதோடு மட்டும் அல்லாமல் இன்றைய தண்ணீர் விலை? லிட்டருக்கு எவ்வளவு பைசா உயர்வு? என்று கேட்கும் ...
டெல்லியில் அமையவிருக்கிறது இந்தியாவின் ம... இந்திய காவல்துறையின் சாதனைகளை வெளிப்படுத்தும் விதத்தில் இந்தியாவின் முதல் காவல்துறை அருங்காட்சியகத்தை டெல்லியில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருக்க...
சார்பட்டா வசனங்கள் – உங்களுக்கு பி... பாத்ரூம்லயே பாக்ஸிங் பண்ணா யாரு மேன் உன்ன நம்புவா... ஸ்டேஜ்ல வந்து பாக்ஸிங் பண்ணு...  "யாருக்காக ஆடுற...""சார்பட்டா பரம்பரைக்காக ஆடுறேன் ...
ரஜினியின் நிஜ அரசியல் வாழ்க்கையிலிருந்து... ரஜினியின் நிஜ வாழ்க்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது காலா என்று சொல்லிவிட்டோம். ஆக இது முழுக்க முழுக்க ரஞ்சித் படமா? என்றால் கிட்டத்தட்ட ஆம...

Be the first to comment on "அஞ்சிறைத் தும்பி – உங்களை தீவிர சிந்தனை ஆளராக மாற்ற கூடிய புத்தகம்!"

Leave a comment

Your email address will not be published.


*