சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் சிவப்பு மஞ்சள் பச்சை. இந்தப் படத்தில் ” ஒரு நாடு எப்படி இருக்குங்கறத ரோட வச்சே சொல்லிடலாம் ” என்ற வசனம் இடம் பெற்றிருக்கும். இந்த வசனம் நம் பேருந்து நிலையங்களின் சுத்தத்தைப் பற்றி யோசிக்க வைத்தது. கிட்டத்தட்ட தமிழகத்தில் உள்ள எல்லா பேருந்து நிலையங்களுமே அசுத்தமான பேருந்து நிலையங்கள் என்று குறிப்பிடும் நிலையிலேயே உள்ளது. இந்த அவல நிலைக்கு யார் காரணம் ? எப்போது சுத்தமாகும் ? சிந்திக்க வேண்டிய விஷியமல்லவா இது ?
விதவிதமான தொற்றுநோய்கள் பரவிக்கொண்டிருக்கும் இந்தக்காலத்தில் தமிழகத்திலுள்ள பெரும்பாலான பேருந்து நிலையங்கள் அசுத்தம் நிறைந்ததாகவே காணப்படுகிறது. ஒரு மாநிலத்தில் வசிக்கும் மக்களிடையே சமூக பொறுப்புணர்வு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கக்கூடிய பொது இடங்களின் சுத்தத்தை வைத்தே கணித்துவிடலாம். அந்த வகையில் நம்ம ஊர் பேருந்து நிலையங்களை வைத்து பார்க்கும்போது நம்மிடம் எள்ளளவாவது சமூக பொறுப்புணர்வு இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
புகையிலையை கொதக்கி துப்பிய எச்சில், வாந்தி, உடைந்து தெறித்துக்கிடக்கும் சாம்பார் பாக்கெட், பீடி சிகரெட் துண்டுகள், சுவர் ஓரங்களில் கழித்த சிறுநீர் என்று பேருந்து நிலையங்கள் முழுக்க அசுத்தமாகவே இருக்கிறது. உள்ள நுழைந்ததும் மூக்கில் கர்சீப்பை வைத்துக்கொண்டு தரையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் மிக மிக கவனமாக எடுத்து வைக்க வேண்டிய அவலம்.
பேருந்து நிலையங்களில் நடந்துகொண்டிருக்கும் போது செருப்பு அறுந்துபோனால் அவ்வளவுதான்… நரக வேதனை !
எதோ ஒன்றிரண்டு பேருந்து நிலையங்களில் மட்டும்தான் இப்படி நடக்கிறது என நினைத்தால் தமிழகத்திலுள்ள எல்லா பேருந்து நிலையங்களிலுமே, பேருந்திற்காக காத்திருக்கும் பள்ளி, கல்லூரி மாணவிகள் எல்லோரும் மூக்கில் கர்சீப்பை வைத்துக்கொண்டு தான் நிற்கிறார்கள்…!
துப்புரவு தொழிலாளர்கள் எவ்வளவு தான் சகித்துக்கொண்டு வேலை செய்வார்கள். அவர்களும் மனிதர்கள் தானே…இளைய சமுதாயமும் இதே தவறை செய்யாமல் சுற்றியிருப்பவர்களுக்கு எடுத்துச்சொல்லி புரிய வைக்க முற்பட வேண்டும். தமிழக அரசும் இது குறித்து தீவிர விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும்.
தொற்றுநோய்கள் பரவுவதற்கு அதிகம் வாய்ப்பு இருக்கக்கூடிய இடங்களில் ஒன்று பேருந்து நிலையம் என்பதை சிந்தித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா ? இல்ல வழக்கம் போல தொற்றுநோயால் உயிரிழப்புகள் ஏற்பட்ட பின்னரே விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபடத் துவங்குமா ? என்று தெரியவில்லை.
மக்கள் உடல்நலத்தில் கவனம் கொள் அரசே!
Be the first to comment on "உங்கள் ஊர் பேருந்து நிலையம் சுத்தமாக இருக்கிறதா ? இல்லையா ?"