தயாரிப்பு: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், விவேகானந்தா பிக்சர்ஸ்
ஒளிப்பதிவு: சத்யன் சூரியன்
எடிட்டிங்: பிலாமின் ராஜ்
இசை: சாம் சிஎஸ்
எழுத்து இயக்கம் : லோகேஷ் கனகராஜ்
வசனம் : பொன் பார்த்திபன், லோகேஷ் கனகராஜ்
தன்னுடைய முதல் படமான மாநகரம் படத்தின் மூலம் பெரிதும் கவனம் பெற்றவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவருடைய முதல் ல்படத்திற்கே 50 மார்க் போட்டது ஆனந்த விகடன். விஜய் அவார்டு, விகடன் அவார்டு உள்ளிட்ட பல விருதுகளும் பெற்ற படைப்பாளி. அடுத்து விஜயை வைத்து இயக்க போகிறார், படத்தில் பாடல் இல்லை, ஹீரோயின் இல்லை இப்படி பல எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி இருக்கும் படம். பிகில் ல்படத்துடன் வெளியானதாலும் கார்த்தி படம் என்பதாலும் இந்தப் படத்திற்கு ஓரளவுக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது.
” ஒரு நாள் இரவில் ஆபத்தில் சிக்கி உள்ள போலீஸ் அதிகாரிகளை காப்பாற்றும் கைதி ” , இதுதான் படத்தின் ஒருவரின் கதை. கதைக் களமும் சில காட்சிகளும் Con air, Assault on percinct 13, The Purge, Escape from new york, பிரிடேட்டர் உள்ளிட்ட படங்களை நினைவூட்டுகின்றன. இந்தப் படங்களிலிருந்து காட்சிகளும் கதையும் திருடப்பட்டுள்ளது என்று பலர் விமர்சித்து வருகிறார்கள். திருட்டு என்பதை விட தாக்கத்தில் உருவான காட்சிகள் என்று கூறலாம். இயக்குனரின் கிரியேட்டிவ் வொர்க் படத்தில் நிறையவே உள்ளது.
நெற்றியில் பட்டையும் கழுத்தில் சாமி மாலையுமாக செமயாக என்ட்ரி ஆகிறார் கார்த்தி. குறிப்பாக கார்த்தி பிரியாணி தின்கும் காட்சிக்கு தியேட்டரே அதறுகிறது. கார்த்திக்கு சிட்டி பாய், சாக்லேட் பாய், போலீஸ் போன்ற கதாபாத்திரங்களை விட இந்த மாதிரியான லோக்கல் கதாபாத்திரங்கள் தான் நன்றாக பொருந்துகின்றன. தேவ் போன்ற படங்களை கார்த்தி தவிர்க்கவும். டில்லி கதாபாத்திரம் கார்த்திக்கு பெயர் சொல்லும் படம். போலீசாக அஞ்சாதே நரேன் நடித்துள்ளார். தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவன் அன்புவாக நடித்தவர் மிரட்டி உள்ளார், குறிப்பாக அவருடைய குரல் கம்பீரமாக இருக்கிறது, அரவிந்த் சாமியின் குரலைப் போலவே உள்ளது அவருடைய குரல். நெப்போலியனாக நடித்தவர் பெரிதும் கவனம் பெறுகிறார். ப்ளாக் ஷீப் புகழ் தீப்தி தமிழ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இன்னும் பெரிதாக சாதிக்க வாழ்த்துக்கள். பவர் பாண்டி படத்திற்குப் பிறகு தீனாவுக்குப் பெயர் சொல்லும் படம் இது. நிறைய இடங்களில் சிரிக்க வைக்கிறார் காமாட்சி லாரி ஓனர் தீனா. கார்த்தியின் மகளாக அமுதா கதாபாத்திரத்தில் நடித்த சிறுமி வெகுவாக மனதை கவர்கிறார்.
படத்தின் இன்னொரு பலம் இசையமைப்பாளர் சாம் சிஎஸ். மிக குறுகிய காலத்தில் பல படங்களுக்கு இசையமைத்து பல ஹிட் பாடல்களை தந்தாலும் பின்னணி இசையில் விக்ரம் வேதா படம் மட்டுமே அவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது. விக்ரம் வேதா படத்திற்குப் பிறகு கைதி அவருக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்துள்ளது. தளபதி 64 படத்திற்கும் அனிருத்திற்குப் பதிலாக சாம் சிஎஸ்ஸையே நியமித்திருக்கலாம் லோகேஷ்!
படம் முழுக்க இருட்டிலயே எடுக்கப் பட்டுள்ளது. ஆனால் அந்த காட்சிகள் அனைத்தும் நம்மை படத்துடன் ஒன்ற வைக்கின்றன. ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியனுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. அடுத்ததாக பாராட்டப்பட வேண்டியவர் எடிட்டர் பிலோமின் ராஜ். துல்லியமான எடிட்டிங். எந்த இடத்திலும் உச் கொட்ட வைக்காமல் ரசிகர்களை படத்தோடு ஒன்ற வைக்க பிலோமின் ராஜ் பெரிதும் உழைத்துள்ளார். பிலோமின் ராஜ் இந்தப் படத்திற்காக பல விருதுகள் வாங்குவார் என எதிர்பார்க்கலாம். சண்டைப் பயிற்சியாளரும் நன்றாக உழைத்து உள்ளார். சில சண்டைக் காட்சிகளில் அனல் பறக்கிறது. சில சண்டைக் காட்சிகள் அடிக்கடி பார்த்த உணர்வை தருகின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை. படத்தின் பரபரப்பான திகிலான ஓட்டத்துக்கு சவுண்ட் டிசைனிங் டிபார்ட்மென்ட் நன்றாக உழைத்துள்ளது. ஆடியோ சிஸ்டம் நன்றாக உள்ள தியேட்டரில் இந்தப் படத்தை பார்த்தால் புதுமையான அனுபவமாக இருக்கும். காமாட்சி என்ற லாரி படத்தின் முக்கிய கதாபாத்திரமாக வருகிறது. லாரி ஓட்டும் சீன்கள் மாசாக இருந்தாலும் இப்படியெல்லாம் ஓட்ட முடியுமா என்ற வியப்பையும் தருகின்றன அதே சமயம் நம்பகத் தன்மையை குறைக்கின்றன. கைதிகள் பற்றிய டீட்டெய்லிங் செம. அருமையாக உழைத்துள்ளது இயக்குனர் குழு.
” மயக்கம் போட்ட அதிகாரிகளை கைதி காப்பாத்துனான்னு பேப்பர்ல போடுவீங்களா… ” , ” ஜெயில் என்ன செவ்வாய் கிரகத்துலயா இருக்கு… உனக்கும் எனக்கும் ஒரு சுவர் தான் வித்தியாசம்… “, ” என் பொண்ணுக்கு ஒரு தனி ரூம், தனி பேன்னு, தனி கட்டிலு, படிக்க நல்ல ஸ்கூலு வேணும்… ” , ” 10 வருசம் உள்ள இருந்தன்னு மட்டும் தான தெரியும்… உள்ள போறதுக்கு முன்னாடி என்ன பண்ணிட்டு இருந்தன்னு தெரியாதுல்ல… “, ” இன்ஜினியரிங் படிச்சிட்டா இப்படி குடிச்சிட்டு சுத்துற… அதனால தான் குடிச்சிட்டு சுத்துறோம்… “, ” ஒரு குழந்தைய பெத்துட்டா நமக்கு சாவே இல்ல… ” போன்ற வசனங்கள் மனதை கவர்கின்றன. முதல் பாதி கொஞ்சம் புரியாமல் இருக்க மாஸ் இடைவேளி வருகிறது. இரண்டாம் பாதியில் கதையை தெளிவுபடுத்தி ரசிகர்களை நெகிழ வைத்து அனுப்புகிறார் இயக்குனர்… கைதி பார்ட் 2 க்கு வெயிட்டிங் லோகேஷ் கனகராஜ்!
Be the first to comment on "இன்ஜினியரிங் படிச்சதால தான் குடிச்சிட்டு சுத்தறோம்! – கைதி விமர்சனம்!"