இயக்குனர் சமுத்திரக்கனியின் கிட்ணா படம் குறித்து நாம் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. ஆடு மேய்ப்பவர்களின் வாழ்க்கை கதை என்று அங்கும் இங்குமாக அரசல் புரசலாக கேள்விப் பட்டிருப்போம். ஆனால் எந்த நாவலின் தழுவல் என்பது பெரும்பாலானோர் அறியாத ஒன்று. தமிழக அரசின் விருது பெற்ற எழுத்தாளர் சு. தமிழ்ச் செல்வியின் கீதாரி நாவலின் தழுவல் தான் சமுத்திரக்கனியின் கிட்ணா படம்.
சூராங்கண்ணி… சூராங்கண்ணி… சூராங்கணிக்க மாளுக்களாமா… பாடல் வந்த கால கட்டத்தில் ( 2008 ல் )இப்படிபட்ட மனிதர்களும் நம்மைச் சுற்றி இருந்திருக்கிறார்களா ? ஆடு… வெள்ளாடு… கிடா… மன்னாரம்… கூண்டு… பட்டி… ஆட்டுப் புலுக்கை… இவற்றை தவிர வேற எதுவும் தெரியாத மனிதர்கள், தங்குவதற்கு சொந்தமாக இடமில்லாமல் ஊர் ஊராக ஆடு மேய்த்து திரிந்த மக்கள், பேருந்தில் ஒருமுறை கூட பயணம் செய்திடாத மக்கள், லாந்தர் விளக்கை மட்டுமே உபயோகித்து கரண்ட் என்றால் என்ன என்றே தெரியாத மக்கள் நம்மை சுற்றி இருந்திருக்கிறார்களா… என்ற கேள்வியை நமக்குள் எழுப்புகிறது இந்தப் புத்தகம்.
ராமு, இருளாயி, முத்தம்மாள், வெள்ளைச்சாமி, கரிச்சா, சிவப்பி, சம்பாசிவம் போன்ற கதாபாத்திரங்கள் தான் நம்மை நாவலோடு இழுத்துச் செல்கிறது. ராமு என்ற கீதாரி இருளாயி என்ற மனைவியுடன் குடும்பம் நடத்தி முத்தம்மாள் என்ற பெண் குழந்தையுடன் சோற்றுக்கே வழியில்லாமல் ஆடு மேய்ப்பதை தவிர வேறு வேலை தெரியாமல் வாழ்ந்து வருகிறார். அப்படிப்பட்ட ராமு என்கிற கீதாரி, வெள்ளைச் சாமி, கரிச்சா, சிவப்பி என்ற மூன்று புதிய உறவுகளை தன்னோடு சூழல் காரணமாக சேர்த்துக் கொள்கிறார் ? இவர்கள் வாழ்க்கையை ராமு என்கிற கீதாரி எப்படி மாற்றினார் ? அந்த மூன்று கதாபாத்திரங்களும் என்ன ஆனது ? ஆடு மேய்ப்பவர்களை இந்த உலகம் எப்படி நடத்துகிறது ? என்பதே இந்த நாவலின் மையக்கரு.
175 பக்கங்கள் மட்டுமே உடைய இந்த நாவல் படிப்பதற்கு சுலபமாக இருக்கிறது. காரணம் நடை அப்படி. தொட்டால் முழுவதும் படித்து முடிக்காமல் கீழே வைக்க முடியாதது போன்ற நடை. இவ்வளவு நுணுக்கமாக எப்படி அவர்களின் வாழ்க்கையை ஆராய்ந்து, வட்டார வழக்கை கற்றுக் கொண்டு அட்டகாசமான நாவலை எழுதி இருக்கிறார் ? இவரை ஏன் பெரிதும் கொண்டாடவில்லை ? இவருடைய பிற நூல்கள் என்னென்ன ? போன்ற கேள்விகள் இந்த நாவலை படிக்க படிக்க நமக்குள் எழுந்து கொண்டே இருக்கும்.
ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டன் சுவைக்கும் நாம் எப்போதாவது ஆடு மேய்ப்பவர்களின் வாழ்க்கையைப் பற்றி யோசித்திருக்கிறோமா ? அவர்கள் நம்மை போல வாரம் கண்டால் ருசியான சாப்பாடு சாப்பிடக் கூடியவர்களா ? போன்ற கேள்விகளுக்கு இந்தப் புத்தகத்தில் விடை கிடைக்கும். ஒரு முறையாவது படிக்க வேண்டிய புத்தகம்.
இதே போன்று நாடோடி வாழ்க்கை வாழும் மக்களைப் பற்றிய புத்தகங்களில் ராஜூமுருகனின் ஜிப்ஸி ( தொடர் ) புத்தகமும் குறிப்பிடத் தக்கது.
Be the first to comment on "சு. தமிழ்ச்செல்வியின் கீதாரி புத்தக விமர்சனம் !"