“அறம் நீ பழகு! அதுதான் அழகு!” – “கோடியில் ஒருவன்” விமர்சனம்!

Kodiyil Oruvan movie review

மெட்ரோ எனும் அருமையான படத்தை தந்த இயக்குனர் ஆனந்த கிருஷ்ணனின் இரண்டாவது படம் “கோடியில் ஒருவன்”. ஒரு இயக்குனருக்கு இரண்டாவது படம் தான் மிக முக்கியமான படம். அந்தப் படத்தை இயக்குனர் சிறப்பாக எடுத்திருக்கிறாரா என்றால் நிச்சயம் இல்லை என்பதே பதிலாக இருக்கும். கோடியில் ஒருவன் படத்தை அவர் தான் இயக்குனாரா என்று யோசிக்கும்போது குழப்பமாக இருக்கிறது. முதல் படத்தை அவ்வளவு சுவாரஸ்யமாக எடுத்த இயக்குனர் இந்தப் படத்தை ஏன் கோட்டை விட்டார்? சரி வாங்க படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். 

கிராமத்து வில்லன் கதாபாத்திரத்தில் பூ ராமுவை பார்த்ததும் என்னது நம்ம பூ ராமு வில்லனா? என்று ஆச்சரியமாக இருந்தது. அடுத்தடுத்த காட்சிகளில் தனது தேர்ந்த நடிப்பால் அந்தக் கதாபாத்திரத்துடன் நன்கு பொருந்திவிட்டார். பூ ராமு வெளியே தெரியவில்லை. வில்லேஜ் விஜய் ஆண்டனி நகரத்துக்கு வந்த பின் அவருக்கு வில்லனாக கேஜிஎஃப் வில்லன் மெயின் வில்லனாக நடித்துள்ளார். தமிழ் சினிமா இதுவரை எப்படி வில்லன்களை காட்டி இருக்கிறதோ அதை கொஞ்சம் கூட மாற்றாமல் வழக்கமான வில்லனை காட்டுவதும் அவருடைய வசன உச்சரிப்புகளும் நம் பொறுமையை சோதிக்கின்றன.  

நிவாஸ் கே பிரசன்னாவின் பின்னணி இசை நன்று. ஒரு சில இடங்களில் ஓவராக வாசித்திருக்கிறார். அதை தவிர்த்து இருக்கலாம். பாடல்கள் கேட்கும்படி ரசிக்கும்படி  இல்லை என்றாலும் பாடல் வரிகள் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு நன்றாக இருந்தன. “அறம் நீ பழகு… அதுதான் அழகு…” என்ற வரி செம. அதேபோல ஆங்காங்கே சில வசனங்களும் நன்றாக இருந்தன. அம்மா தன் மகனுக்கு சொல்லும் வசன உச்சரிப்புகள் அப்படியே கேஜிஎஃப் படத்தை நினைவூட்டுகிறது. கர்ப்பிணியை மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கும் காட்சியை பார்க்கும்போது பக்கென இருந்தது. அம்மாவின் உயிர் பிரிய போகும் தருணத்தில் பிறந்த குழந்தை தன் அம்மாவின் விரலை பிடிக்கும் காட்சி நன்றாக இருந்தது. தீயில் கருகிய அம்மாவின் முகத்திற்கு போட்ட மேக்கப் சரியில்லை… இப்படியா மேக்அப் இருப்பது? ஒளிப்பதிவு சுமாராக இருந்தது. 

“நமக்கு எல்லா தகுதியும் இருந்து ஒரு விஷயம் தாமதாக கிடைக்கிறது என்றால் அந்த விஷயம் நமக்கு கூடுதல் சிறப்பம்சங்களுடன் கிடைக்கப் போகிறது என்று அர்த்தம்…!” – இந்தப் படத்தில் ஹீரோவின் அம்மா தன் மகன் விஜய் ஆண்டனியை கலெக்டர் ஆக வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் விஜய் ஆண்டனிக்கு எல்லா தகுதியும் இருந்த போதிலும் அவரால் ஐஏஎஸ் ஆக முடியவில்லை. அது ஏன்? கடைசியாக அவர் ஐஏஎஸ் ஆனாரா என்பதே கதை. கிளைமேக்ஸ் என்ஜிகே படத்தையும் ஆர் ஜே பாலாஜியின் எல் கே ஜி படத்தையும் நினைவூட்டுகிறது. ஏற்கனவே அந்த இரு படங்களின் கிளைமேக்ஸை பார்த்து மக்கள் பலர் சிரித்தனர். அப்படி இருக்கையில் மீண்டும் இதே கிளைமேக்ஸை இயக்குனர் ஏன் வைத்தார்.? கோ படத்தில் வசந்தன் கேரக்டர் செய்ததையே நம் சினிமா ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படி இருக்கையில் இந்த கிளைமேக்ஸ் மட்டும் எப்படி எடுபடும். 

மீசைய முறுக்கு படத்தில் அழகாய் தெரிந்த ஆத்மிகா இந்தப் படத்தில் சற்று மங்கலாக தெரிகிறார். முகம் சமந்தா போல் கொஞ்சம் மாறி இருக்கிறது. இயற்கை அழகு என்னவோ அதை அப்படியே விட்டிருக்கலாம். படத்தில் ஹீரோயினாக நடித்த ஆத்மிகாவை காட்டிலும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் அதிகம் கவர்கிறார். ஆத்மிகா காட்சிகளை நீக்கிவிட்டு அம்மா கதாபாத்திரத்துக்கான காட்சிகளை இன்னும் கொஞ்சம் சேர்த்திருக்கலாம். 

கேஜிஎஃப் படத்தையும் தனிஒருவன் படத்தையும் கலந்துகட்டி கொடுத்திருக்கிறார்கள். அந்த படங்களின் சாயல் இல்லாமல் இருந்திருந்தால் படம் சலிப்பை தராமல் இருந்திருக்கும். “அறச்சீற்றம்” என்பதை அதிகம் வலியுறுத்தும் கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் விஜய் ஆண்டனி என்பது இந்தப் படத்தை பார்க்கும்போது தெரிகிறது. அப்படிபட்டவர் எதற்கு வீணாய் தேவையில்லாத மாஸ் ஹீரோயிச காட்சிகளையும் ரொமாண்டிக் காட்சிகளையும் தனது படங்களில் வலிந்து திணிக்கிறார் என்பது தெரியவில்லை. இந்தக் காட்சிகள் இல்லாமலும் கமர்ஷியல் சினிமா எடுக்கலாம். 

இந்த தமிழ் சினிமா ஹீரோக்கள் புரட்சி செய்து மக்களை நல்வழிப் படுத்துவது போன்ற கதைகளை தவிர்க்க வேண்டும். படத்தில் புரட்சி செய்வது போல் காட்சிகள் வந்தாலே மக்கள் இப்போது உச்” கொட்டுகிறார்கள். ஹீரோ அரசியலில் நுழைவது, ஹீரோ விவசாயம் செய்வது போன்ற படங்களை தமிழ் சினிமா இயக்குனர்கள் தயவுசெய்து இனி படமாக எடுக்க கூடாது. உலக சினிமா என்ற பெயரில் தியேட்டருக்கு வரும் எளிய மக்களின் பொறுமையை சோதிக்கும் வகையில்… அவர்களுக்கு புரியாத திரைக்கதையில்… படம் எடுக்காமல் சாதாரண கமர்ஷியல் சினிமாவில் மக்களுக்கு நல்லது சொல்லனும் என்று விஜய் ஆண்டனி நினைக்கிறார் என்பது அவருடைய படங்கள் மூலம் புரிகிறது. ஆனால் வாகை சூடவா மாதிரியான படங்கள் தான் எளிய மக்களுக்கான சினிமா என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். இப்ப என்ன படம் பார்க்கலாமா? வேண்டாமா? என்று கேட்பவர்களுக்கு ஒரு முறை பார்க்கலாம் என்பது பதில். விஜய் ஆண்டனி படம் என்று பெரிதாய் எதிர்பார்த்து சென்றால் ஏமாற்றம் தான் மிஞ்சும். 

Related Articles

தனியார் கல்வி நிறுவனங்களிடம் பேரம் பேசும... அரசியல்வாதிகளை தூக்கி சாப்பிடும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்? கடவுளுக்கு தரும் கல்வியைவிட ஒரு ஏழைக்குத் தரும் கல்வி மேலானது என்றார் புரட்சியாளர் அம்பேத்க...
ஒருத்தரை மட்டம் தட்ட எப்படியெல்லாம் யோசி... கடந்த டிசம்பர் 6 ம் தேதி அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினம் இந்தியா முழுக்க அனுசரிக்கப்பட்டது. முன்பிருந்ததை விட இப்போது அம்பேத்கரின் கருத்தியலில் அதிக ...
காவிரி போராட்டங்களுக்கு பணிந்தது பிசிசிஐ... காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து கடந்த செவ்வாய்க்கிழமை பல்வேறு அமைப்புகளால் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன...
நீங்கள் யார் என்பது உங்களுக்குத் தெரியும... Comparing one person with another is brutal ( ஒருத்தர நீங்க ஏன் மத்தவங்க மாதிரி இல்லைன்னு கேட்குறது மிகப் பெரிய வன்முறை ) - இயக்குனர் ராம் எழுதி இயக்...

Be the first to comment on "“அறம் நீ பழகு! அதுதான் அழகு!” – “கோடியில் ஒருவன்” விமர்சனம்!"

Leave a comment

Your email address will not be published.


*