சென்னை மனநல காப்பகத்தில் இருந்து படம் துவங்குகிறது. மனநல காப்பகத்தில் வரும் ஆர்யாவின் அறிமுக காட்சியும் பின்னணி இசையும் போதும் இது எப்படிபட்ட படம் என்பதை சொல்ல. அரசியல்வாதிகள் எப்படி தன் கையாள்களை சிக்கலில் சிக்க வைக்கிறார்கள், பெண்ணிடம் பேசிவிட்டான் என்பதற்காக உயர்சாதிக் காரர்கள் எப்படி ஆணவக் கொலை செய்கிறார்கள் அவர்களிடம் மகாவும் முனியும் எப்படி சிக்குகிறார்கள் என்பதே கதை.
சென்னையில் கால் டாக்சி டிரைவராக கொலைகளுக்கு ஸ்கெட்ச் போட்டு தரும் மகாவாகவும், ஈரோடு மேக்கரையில் வள்ளலார் கல்வி நிலையம் வைத்திருக்கும் முனிராஜாகவும் நன்றாக நடித்துள்ளார் ஆர்யா. நான் கடவுள், மதராச பட்டினம் ஆகிய இரு படங்களிற்குப் பிறகு ஆர்யா நடித்த நல்ல படம் மகாமுனி என்பது மறுக்கப்படாத உண்மை.
மகாவின் மனைவியான விஜி கதாபாத்திரத்தில் இந்துஜா நன்றாக நடித்துள்ளார். மேயாத மான் படத்திற்குப் பிறகு இந்தப் படத்தில் நல்ல நடிப்பைத் தந்துள்ளார் இந்துஜா. அதே சமயம் ஓவர் ஆக்டிங் செய்துள்ளாரோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது. மஹிமா நம்பியார் எந்த துறுத்தலும் இல்லாத கச்சிதமான நடிப்பைத் தந்துள்ளார். இளவரசுவின் மனைவியாக நடித்தவர் ஓவர் ஆக்டிங் செய்துள்ளார். ஜெயப் பிரகாஷ், இளவரசு போன்றோர் தங்களுக்கு குடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
முதுகில் குத்தியிருக்கும் கத்தியை எடுக்கும்போது மருத்துவர் ஆயிரம் ரூபாய் கேட்கும் சீன் செம நக்கல். எங்க பொண்ணுகிட்ட என்ன பேசனங்கறது முக்கியமல்ல ஏன் பேசுனங்கறது தான் முக்கியம் என்று சாதி வெறி பிடித்த மனிதர்கள் முனியை சாகடிக்க முயல்கிறார்கள். அந்தக் காட்சிகள் அனைத்தும் சாட்டையடி. கடைசி அரைமணி நேரத்தில் தான் கதையே புரிய ஆரம்பிக்கும். பொறுமைசாலிகளுக்கு இந்தப் படம் ரொம்ப பிடிக்கும். வித்தியாசமான கதைக்களம் குழப்பத்தை உண்டாக்காத திரைக்கதை என்று படம் தரமாக உள்ளது.
மருத்துவர், ஆசிரியர், அரசியல் வாதி ஆகிய மூன்று தரப்பினரையும் பேஸ்புக்கில் சாதி பெருமை பேசும் மாணவர்களையும் கிண்டல் ( உண்மையை சொல்லி இருக்கிறார்கள் ) செய்திருக்கிறார்கள். சவுண்ட் டிசைனிங் டிபார்ட்மெண்ட் நன்றாக வேலை செய்துள்ளது. ஒளிப்பதிவும் பின்னணி இசையும் அருமை. குறிப்பாக இரண்டாம் பாதியில் ஒளிப்பதிவும் பின்னணி இசையும் அருமை. த்ரில்லர் நாவல் படிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. பாடல்கள் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம். அதே போல சில நீண்ட தத்துவ வசனங்களை தவிர்த்திருக்கலாம்.
” கேவலப்படுத்தும் போது எருமை மாதிரி பொறுமையா இருக்கறது தான் அரசியல்… “, ” தெருவுக்கு குப்பை போட வரும்போது கூட அரை கிலோ முக்கா கிலோ நகையோட தான் வரும்… ” , ” நிஜ ரவுடி இருக்கற இடம் தெரியாம இருப்பான்… ” , ” டீச்சருங்கலாம் அன்ப சொல்லி தரலனாலும் பரவால… கோபத்த சொல்லித் தராம இருந்தா போதும்… “, ” என் உசிர நீ மட்டும் தான் வாங்கனும்னு தப்பிச்சு வந்துருக்கேன்… “, ” சாமி… என் புருசன காப்பாத்து… அவனால தான் எங்கள காப்பாத்த முடியும்… ” , ” நிறைய பணத்தையும் அந்தப் பணத்துக்குப் பின்னாடி வில்லங்கத்தையும் வச்சிருக்கறவனுக்கு அரசியல் தான் சேப்டி… ” , ” பொண்டாட்டிகிட்ட சொல்ல முடியாத வேலைய எதுக்குச் செய்யனும்… “, ” பயங்கரமான பசி தான் எல்லோரையும் சகிச்சுக்க வச்சுது… ” , ” நேர்மையா இருக்க முடியாம சூழ்ச்சி பண்றவன் ராஜ தந்திரம்னு சொல்லிக்குவான்… களவாணி தனத்துல என்ன ராஜ களவாணித் தனம்… ” , ” வாய் வழியா வார்த்தைகளா பேழ்ற… ” , ” இல்லாத ஒன்ன இருக்கறதா நம்ப வைக்கறதுக்காக சொல்லப்பட்ட பெரிய பொய் தான் கடவுள்… ” , ” வேலைல என்ன சின்ன வேலை பெரிய வேலை… வேலைக்கு நேர்மையா இருக்கறமாங்கறது தான் முக்கியம்… ராணுவத்துல உயிர விடுறவனுக்கு கொடுக்கற மரியாதைய மலக்குழில இறங்கி சாகறவனுக்கு தற்ரது இல்லயே… ரெண்டும் ஒன்னு தான… ” , ” சீமக் கருவேல மரத்த ஒழிக்கனும்… சாதியும் பிளாஸ்டிக்கையும் மாறி அதுவும் அழிக்க முடியாத ஒன்னா இருக்கு… ” , ” பெரிய மனுசன் மாதிரி நடந்துக்குறவன் தான் பெரிய மனுசன்… ” , ” இந்தியாவ வெள்ளக்காரன் ஆண்டதால இந்தியா புல்லா இங்கிலீஷ் மீடியமா இருந்துச்சு… அதே வெள்ளையனுக்குப் பதிலா குரங்குங்க ஆண்டுருந்தா இந்தியா புல்லா குரங்கு மீடியமா இருந்திருக்கும்… ” , போன்ற வசனங்கள் கவனம் பெறுகின்றன.
மௌன குரு படத்திற்குப் பிறகு எட்டு ஆண்டுகள் கழித்து களம் இறங்கி உள்ளார் இயக்குனர் சாந்த குமார். தமிழ் சினிமாவிற்கு இன்னொரு பாலா கிடைத்துவிட்டார் என்றே சொல்ல தோன்றுகிறது. உலக தரத்தில் ஓர் தமிழ் சினிமா என்று விளம்பரம் செய்திருக்கிறார்கள். விளம்பரத்திற்கு ஏற்றவாறு இது உண்மையில் உலக தரமான சினிமா தான். தேசிய விருதுக்கு தகுதியான படம். இயக்குனர் சாந்த குமார் நீண்ட இடைவெளி எடுக்காமல் கூடிய விரைவில் அடுத்த படத்தை எடுக்க வேண்டும்.
Be the first to comment on "தமிழ் சினிமாவிற்கு இன்னொரு பாலா கிடைத்துவிட்டார்! – மகாமுனி திரைவிமர்சனம்!"