பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் எழுதியுள்ள இரண்டாவது புத்தகம் மறக்கவே நினைக்கிறேன். பல வருடங்களுக்கு முன்பே ஆனந்த விகடனில் தொடராக வந்து பின் தொகுப்பாக வந்து நல்ல விற்பனையாகி கொண்டிருக்கும் புத்தகம். இன்றும் நம்மை பேச வைக்கிறது. புத்தகம் முழுக்க அவ்வளவு மனிதர்கள். அவ்வளவு சம்பவங்கள்.
தேடித் தேடி திருடி திருடி திருட்டுத் தனமாக அடுத்தவர் டைரியைப் படித்தது, அதில் உள்ள சுவாரஸ்யம் தன்னை வெகுவாக ஈர்த்தது என்று முதல் அத்தியாயத்தில் இருந்து தன்னுடைய அனுபவங்களை எந்தவித ஒளிவுமறைவும் இல்லாமல் கூறத் தொடங்குகிறார். அவருக்கு டைரியை திருடும் பழக்கம் நீடிக்கிறது.
அப்படி ஒரு முறை திருட்டுத்தனமாக செல்வலட்சுமி டைரி கையில் கிடைக்க, அந்த டைரியால் போலீஸ் ஸ்டேசன் வரை போன அனுபவம், அந்த டைரி தந்த தங்கை என்று முதல் அத்தியாயம் ஒரு சிறுகதையைப் போல நகர்கிறது.
ஆண்கள் மட்டுமே உள்ள உலகம் கொடூரமானது என்பதையும், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எனும் சேவல் பண்ணையில் இருந்த விதவிதமான கோஷ்டிகள் பற்றியும்…
அதில் முக்கியமான கோஷ்டிகளான அஜித்தின் திலோத்தம்மா குரூப், விஜயின் குஷி பாய்ஸ் குரூப் பற்றியும் சாதி ரீதியாக சற்றித் திரிந்த கோஷ்டி பற்றியும்…
தோழிகளின் அன்பு கிடைக்காத ஏக்கம், சோத்துக் களவாணிகள் என்று பெயர் பெற்றது பற்றி மற்றும் ருசியாக சாப்பிட முடியாத நண்பன் பற்றியும் கூறி நம்மை யதார்த்த உலகுக்குள் இந்த இரண்டாவது அத்தியாயம் நம்மை இழுத்துச் செல்கிறது.
அடுத்தடுத்து பறவை எழுதிய கடிதம், பறவைகளை நேசித்த ஸ்டீபன் சுந்தரம் வாத்தியார், அவருடைய மனைவி கன்னியம்மாள் டீச்சர், பறவைகளை இளவட்ட பையன்கள் கண்ணி வைத்து சாகடித்ததும் ஸ்டீபன் சுந்தரம் என்ன ஆனார்? ராஜி யார்? ராஜிக்காக அக்காவின் வேண்டுதல் என்ன? மற்றவர்கள் செய்த பாவத்திற்காக பைபிளை வைத்து கடவுளிடம் வணங்கும் அக்கா, தனக்குப் பிடித்த ராஜியை எப்படி இழந்தார்?
அம்மா தன் பிள்ளைகளுக்கு வைத்த பெயர்களுக்காகன காரணங்கள் கூறும்போது மாரி செல்வராஜுக்கு பெயர் வைத்த காரணத்தை கூறும்போது ஏன் அவருடைய கண் கலங்கியது? முருகன் போலீஸ் அம்மாவின் உயிரை எப்படி மீட்டினார்?
அஞ்சாவது புள்ள ஆம்பளப் புள்ளையா இருந்துட்டா அவ்வளவுதான் அது குடும்பத்துக்கே ஆகாது, நான் தாமிரபரணியில் கொல்லப் படாமல் தப்பித்தவன் மட்டும் இல்லை, என் தாயின் தண்ணீர்க் குடத்திலும் கொல்லப் படாமல் தப்பித்தவன் என்று இவர் யாரை குறிப்பிடுகிறார்?
சம்படி ஆட்டம் என்றால் என்ன? ஆடுபவர்கள் யார் யார் ? என்ன கொடுமைகள் அனுபவிக்கிறார்கள்?
தீவிரவாதி என்றாலே முஸ்லீம் தானா?
கிறிஸ்த்துவ பாதிரியார் கொண்டு வந்த ஓவிய ஆல்பத்தில் இருந்த தீவிரவாதிகள் அனைவருமே முஸ்லீம்களாக இருந்தது ஏன்? நண்பன் ரசூலின் மனமாற்றத்திற்கும் நட்பை இழந்ததற்கும் என்ன காரணம்?
12ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் தற்கொலைகளும் ஏன் பின்னிப் பிணைகிறது? 999 மார்க் எடுத்து மருந்தக் குடிச்ச நண்பன் யார்? தோல் பாவைக்கூத்தில் உச்சிக் குடும்பனும் உளுவத் தலையனும் யார்? உச்சிக் குடும்பனை திருடியவன் யார்? மூக்கையா தாத்தா யார்? அவரை பார்த்து ஊர்ப் பெருசுகள் பயப்பட காரணம் என்ன?
டீச்சருக்கு காதல் கடிதம் எழுதிய மாணவன் யார்? வாங்கிப் படித்து ரசித்தது மட்டும் இல்லாமல் அதை ப்ரேம் செய்து வைத்த டீச்சரின் கணவனுக்கு எப்படி அப்படியொரு ரசனை?
மெட்ராசுக்குப் புதுசு என்றதும் மாரிக்கு கிடைத்தது என்ன வேலை? ஒரு நாள் முழுக்க சிறுவர்களுடன் வீட்டுக்குள்ளயே படுத்துக் கிடந்ததற்கு என்ன காரணம்?
பள்ளி மேடையில் நடன போட்டியில் படையப்பாவாக மாரி செல்வராஜ், நீலாம்பரியாக இருந்த கார்த்திக் இருவரும் பிரிய காரணம் என்ன? வீட்டை விட்டு காணாமல் போன அரவாணி கார்த்திகாவை கண்டுபிடித்தாரா இல்லையா? மணிமேகலை என்ற ரயில் சினேகிதியின் அப்பா இறந்துவிட பெரிய காரியத்தை எப்படி திணறலுடன் செய்து முடித்தார்?
பூங்குழலியின் அக்கா கல்யாணத்துக்கு சென்றபோது என்ன நடந்தது? உதவி இயக்குனர் வாய்ப்பு தேடி அலைந்த போது உதவிய வாட்ச்மேன் தாத்தா எப்படி பலூன் வியாபாரியாக மாறினார்? சுப்பக்கா யார்? சுப்பக்கா தந்த முத்தத்தின் ப்ச் சத்தம்… அதுதான் விடுதலைப் பறை என கூறுவது ஏன்? தியேட்டரில் வேலை செய்த தாத்தா திருட்டு விசிடி விற்க காரணம் என்ன? கலவரம் நடக்கப் போகுது என தெரியாமல் மிக்ஸி ரிப்பேர் பண்ண போன குமார் யார்? வசந்தராஜ் அண்ணன் யார்?
இப்படி பல கேள்விகளுக்கு மறக்கவே நினைக்கிறேன் புத்தகத்தில் மாரி செல்வராஜின் எழுத்தில் படிக்க முடியும். தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை அப்படி அள்ளி இறைத்திருக்கிறார். பரியேறும் பெருமாள் படத்தில் இடம்பெற்ற பெரும்பாலான காட்சிகள் இந்தப் புத்தகத்தில் உள்ள வரிகளே.
படத்தில் உள்ளது போலவே மாரியின் வரிகள் பல இடங்களில் நெஞ்சை பதற வைக்கிறது.
மறக்கவே நினைக்கிறேன் – மறக்க முடியாத பக்கங்கள்!
Be the first to comment on "இயக்குனர் மாரி செல்வராஜின் “மறக்கவே நினைக்கிறேன்… ” புத்தக விமர்சனம்!"