விரைவில் அனைத்துத் தொழில்நுட்ப, நவீன வசதிகள் கொண்ட ஒரு கடற்கரையாக மாற இருக்கிறது சென்னை மெரினா கடற்கரை. நிறையப் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் இந்த வசதிகள் செய்யப்பட இருப்பதாகத் தெரிகிறது.
என்னென்ன வசதிகள்?
கடற்கரைக்கு வருகை தரும் பார்வையாளர்கள் அனைவருக்கும் இணைய வசதி வழங்கும் வைபை சேவை, கடல் காட்சி அறை, முதல் உதவி செய்யும் வகையிலான பிரத்யேக இட வசதி, மின் கழிப்பறைகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் போன்ற நவீன வசதிகளைச் செய்து தரத் திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்துடன் இணைந்து இந்தத் திட்டங்களை சென்னை மாநகராட்சி செயல்படுத்த இருக்கிறது. மத்திய அரசின் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் இந்த வசதிகள் செய்து தரப்பட இருக்கின்றன.
மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து இந்தத் திட்டத்தினை செயல்படுத்த இருக்கின்றன. மேலும் இந்தத் திட்டத்திற்கான நிதி உதவிகளை மத்திய அரசு செய்யவிருக்கிறது. தமிழகத்தில் ஐந்து மாவட்டங்கள் இந்தத் திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றன. அவை முறையே சென்னை, காஞ்சிபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் ஆகும். இதற்காக 99.91 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
‘சென்னை மாநகராட்சியில் மெரினா கடற்கரை இந்தத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கும்.’ என்று சென்னை மாநகராட்சியின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.
ஐந்து கடற்கரைகள்
மெரினா, பெசன்ட் நகர், மாமல்லபுரம், ராமேஸ்வரம், மணிப்பாடு, கன்னியாகுமரி, மணிகுடி மற்றும் தெக்குறிச்சி ஆகிய கடற்கரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மெரினாவை தொடர்ந்து மற்ற கடற்கரைகளில் இந்தத் திட்டம் செயல் வடிவம் கொள்ளவிருக்கிறது.
தனித்துவமான இடங்கள்
இந்தியாவின் மிக முக்கியமான 10 சுற்றுலா தளங்களில் மகாபலிபுரமும் ஒன்றாக மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சுற்றுலா தளங்களும் மத்திய அரசின் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட்டு மேம்படுத்தப்படும் என்று 2018 – 2019 நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது.
Be the first to comment on "நவீன வசதிகளுடன் வளர்ச்சி காண்கிறது சென்னை மெரினா கடற்கரை"