பாலுமகேந்திரா, மகேந்திரன், பிரபஞ்சன் ஆகியோருக்கு சமர்ப்பணம் என்ற அறிவிப்போடு தொடங்குகிறது மெஹந்தி சர்க்கஸ் படம். இந்தப் படத்திற்கு
கதை வசனம் ராஜூமுருகன் எழுதியதாலோ என்னவோ இந்தப் படத்தின் மீது நமக்கு காதல் உண்டாகிறது. ஜிப்ஸி புத்தகத்தில் உள்ள பல விஷியங்கள் இந்தப் படத்தில் உள்ளது.
திரைக்கதை இயக்கம் இரண்டும் சரவண ராஜேந்திரன் செய்துள்ளார். ஒரு சிறுகதையைப் படிப்பது போல அழகாக இயக்கியுள்ளார். ” ஓ பாப்பா லாலி கண்மணி லாலி பொன்மணி லாலி… ” என்ற பாடலை ரசிகர்கள் மனதில் பதிய வைத்துள்ளார் இயக்குனர். அந்த அளவுக்கு இளையராஜா வெறியனாக இருக்கிறார் நாயகன். ராஜ கீதம் மியூக்கல்ஸ் என்ற கேசட் கடை வைத்து நடத்தி வருகிறார். இளையராஜா கேசட் கடை ஒருவகையில் ஊரில் நடக்கும் காதல் திருமணங்களுக்கு காரணமாக இருக்கிறது. அவருடைய அப்பாவோ சாதிவெறியனாக இருக்கிறார்.
ரஜினி ஹேர்ஸ்டைல் வைத்திருக்கும் ஹீரோ நவரச நாயகன் கார்த்தி முக ஜாடை. அவர் வசிக்கும் ஊருக்கு சர்க்கஸ் போட்டு பிழைக்க வரும் வடக்கத்திய பெண் ஒருவரை நாயகன் காதலிக்கிறார். சில நாட்களில் அந்தப் பெண்ணும் ஹீரோவை காதலிக்கிறாள். இருவருடைய காதலும் வெற்றி அடைந்ததா என்பது மீதிக்கதை.
படத்தின் முதல் நாயகன் ஒளிப்பதிவாளர் தான். கொடைக்கானல் பூம்பாறையில் போய் வாழ்ந்தது போன்ற உணர்வை
ஏற்படுத்துகிறது அவருடைய ஒளிப்பதிவு. ஷான் ரோல்டனின் பின்னணி இசை அருமை. குறிப்பாக நாயகியின் மீது கத்தி வீசும் காட்சிக்கான பின்னணி இசை மனதை பதைக்க வைக்கிறது. கர்ப்பிணியை நிற்க வைத்து கத்தி வீசுதல்
கர்ப்பிணி வயிற்றிலிருந்து சூரியன் உதித்தல் போன்ற காட்சிகளுக்கும் பின்னணி இசை அருமை. பாடல்கள் அவ்வளவாக மனதைக் கவரவில்லை.
அறிமுக நாயகன் நன்றாக நடித்துள்ளார். ஒரு சில காட்சிகளில் அவர் சிறுகதை ஓவியம் போல தெரிகிறார். நாயகி பேசும் இந்தி வாடை வீசும் தமிழ் மனதை கவர்கிறது. வில்லன் இவர் தான் என்பதையும் அடுத்தடுத்து இதுதான் நடக்கப் போகிறது என்பதை எளிதில் யூகிக்க முடிவது திரைக்கதையின் பலவீனம். ஆர் ஜே விக்னேசு காமெடியனாக வருகிறார். சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். ஏஆர் ரகுமானை one film wonder என்றும் சின்னபையன் என்றும் சொல்லும்போது ஆர்ஜே விக்னேசை பார்த்து டேய் குண்டா என்று கத்துகிறார்கள் பார்வையாளர்கள். நாயகி அழகு! கத்தி வீசும் சீனில் எப்படி நடித்தார் என்பது வியப்புக்குரியதாகவே இருக்கிறது. நாயகியின் அப்பாவாகவும் கணவனாகவும் நடித்துள்ள இந்தி முகங்கள் தங்கள் வேலை சரியாக செய்திருக்கிறார்கள். வேல ராமமூர்த்தியின் கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் வலிமையாக படைத்திருக்கலாம். சாதிவெறி பிடித்த அப்பாவாக மாரிமுத்து நடித்துள்ளார். பரியேறும் பெருமாளைப் போலவே மெஹந்தி சர்க்கஸும் மாரிமுத்துக்கு பெயர் சொல்லும் படமாக இருக்கும்.
இப்போது தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கி உள்ளது. மழைக்கு இதமான அழகான காதல் படம். படம் முடிந்து வெளிய வரும்போது ஓ பாப்பா லாலி என்று முணுமுணுப்பீர்கள்.
Be the first to comment on "ஓ பாப்பா லாலி – மெஹந்தி சர்கஸ் விமர்சனம்!"