தமிழில் ஒரு உலக சினிமா என்று கடந்த சில நாட்களாகவே இந்தப் படத்தைப் பற்றி பலர் பேசிக்கொண்டனர். அவர்கள் சொன்னது அனைத்தும் உண்மை என்பதாலும் இந்தப் படம் நிச்சயம் உலக சினிமா தரம் என்பதாலும் அந்தப் படத்திற்கு தமிழகத்தில் அப்படி ஒரு வரவேற்பு. எந்த அளவுக்கு என்றால் பல மாவட்டங்களில் ரிலீஸ் ஆகாமல் குறிப்பிட்ட ஊர்களில் மட்டும் மொக்க தியேட்டர்களில் பெயருக்கு ஓட்டிக் கொண்டிருக்கும் அளவுக்கு பிரமாதமான வரவேற்பு. என்னத்த சொல்ல… சரி படம் எப்படி இருக்கு என்பதை பார்ப்போம்.
ரங்கசாமி என்ற மனிதர் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏலக்காய் மூட்டை சுமந்து செல்லும் வேலை செய்து வருகிறார். மூட்டைகளை முதுகில் சுமந்து கொண்டு அந்த நீண்ட நெடுகிய ஒத்தையடிப் பாதையில் பல மைல்கள் தூரம் நடந்து செல்ல வேண்டும். அப்படி உயிரைக் கொடுத்து வேலை செய்து சேமித்து வைத்த பணத்தின் வாயிலாக அவர் ஒரு நிலத்தை சொந்தமாக வாங்கி விவசாயம் பார்க்கிறார். அதற்கு இடையில் அவருடைய வேலை பறிபோகும் நிலைமை வருகிறது. சிக்கலில் விழுகிறார். அவர் வாங்கிய நிலம் என்ன ஆனது? தொடர்ந்து விவசாயம் செய்தாரா? அவர் வேலை என்ன ஆனது? என்பது தான் கதைக் களம்.
ஆரம்பக் காட்சியே மிக அற்புதமான காட்சி. கொட்டும் மழைத் தண்ணீரைப் பிடித்து அதில் முகமும் வாயையும் சுத்தம் செய்தபடி அறிமுகமாகிறார் நாயகன். வழக்கு எண் பதினெட்டு படத்தை தொடர்ந்து ஒரு நடிகன் தன் கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருக்கிறார் என்று இந்தப் படத்தின் நாயகன் ஆண்டனியை பெருமையாக சொல்லலாம். நாயகனைப் போலவே படத்தின் ஒவ்வொரு கதாபாத்தரமும் மனதில் ஆழப் பதிகிறது. சில காட்சிகளுக்கை வந்தாலும் கிறுக்கு கிழவி மனதை பதற வைக்கிறார். வட்டார வழக்கு, வாழ்வியல் பதிவுகள், பின்னணி இசை, ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு அனைத்திலும் நூற்றுக்கு நூறு பெற்றிருக்கும் இந்தப் படம் சர்வதேச அளவில் ஆறு விருதுகளை வென்றிருக்கிறது. ஆனால் ஏனோ தேசிய விருதுக்கு அனுமதிக்க படவில்லை. கொடுமை!
உலக சினிமா பார்ப்பவர்களுக்கு இந்தப் படம் ஒரு விருந்து!
Be the first to comment on "மேற்குத் தொடர்ச்சி மலை படம் எப்படி இருக்கு? இது உண்மையிலயே உலக சினிமா தானா?"