பாண்டிச்சேரி கடற்கரையில் கதறி அழுத மைக்செட் ஸ்ரீராம்! – அசத்தும் “ஷா பூ த்ரி” ஆர்ஜே-ஷா!

துப்பாக்கி முனை படத்தில் ஆஷாத் என்னும் கேரக்டரில் அற்புதமாக நடித்திருந்தார் ஆர்ஜே ஷா.  இவரைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை.  யூடியூப்  வீடியோக்களை அதிகம் விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு கண்டிப்பாக இவரை தெரிந்திருக்கும். பல சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இன்னும் பல மேடைகளில்  இவரது குரல் ஒலித்திருக்கிறது. 

இவரும் ஆர் ஜே விஜய்யும் இணைந்து ஒரு ரேடியோ நிறுவன  யூடியூப் சேனலில்  பல பிரபலங்களை பேட்டி எடுத்துள்ளனர். அந்த பேட்டிகள் பெரும்பாலும் கலகலப்பானதாக இருக்கும். சில சமயம்  பெரிய பெரிய அரசியல்வாதியிடம் கூட  எந்த பயமும் இல்லாமல் ரொம்ப சீரியஸான கேள்வியையும் இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து கேட்டிருக்கிறார்கள். 

இதைத் தொடர்ந்து இருவரும் வேறு வேறு  சாலைகளில் பயணிக்க தொடங்க  ஆர்ஜே விஜய் ஒரு தனியார் டிவி சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். ஆர் ஜே ஷா  பல படங்களில் சிறுசிறு வேடங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.  அதேசமயம் சொந்தமாக ஒரு யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். 

அந்த யூடியூப் சேனலின் பெயர் ஷா பூ த்ரி.  மிகச் சில நாட்களுக்கு முன்பே தொடங்கியுள்ள இந்த சேனலில்  சாதித்த மனிதர்கள் எல்லாம் எவ்வளவு சங்கடங்களையும் அவமானங்களையும் துரோகங்களையும் கடந்து வந்து கைதட்டல்களை பெற்றுள்ளனர் என்பதை மிக  மிக உணர்வுபூர்வமாக விவரிக்கிறார் ஆர்ஜே ஷா. 

அதில் ஒரு வீடியோவில் மைக் செட் ஸ்ரீராம் கடந்து வந்த பாதையை விளக்குகிறார் ஆர்ஜே ஷா. அந்த வீடியோவில் ஆர்ஜே ஷா சொன்னதை பற்றிப் பார்ப்போம். 

பாண்டிச்சேரியில் பிறந்து வளர்ந்த மைக் செட் ஸ்ரீராம் சிறுவயது முதல்  ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்து வந்திருக்கிறார். பிறகு சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக அந்தப் பெண் ஸ்ரீராமை பிரேக்கப் செய்து விட்டுப் போய் விட்டார்.  மனம் உடைந்துபோன ஸ்ரீராம் தன்னுடைய  கவனத்தை கிரிக்கெட் மீது செலுத்த தொடங்குகிறார்.  இப்போது கிரிக்கெட்டை உயிருக்குயிராக நேசிக்கத் தொடங்கி  கிரிக்கெட் தான் உலகம் என்று அதில் தீவிரமாக இறங்கி  விளையாடுகிறார். ஆனால் அவரால் கிரிக்கெட் துறையிலும்  சாதிக்க முடியவில்லை.  வயது இருபதை தாண்டி விட்டது இனிமேல் வேலைக்கு போவதில் தான் கவனம் செலுத்த வேண்டும் என்று வீட்டினர் வற்புறுத்த அவர் ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார். ஆனால் அந்த வேலை அவருக்குப் பிடிக்கவில்லை. அவர் அங்கிருந்து வெளியேறி சொந்தமாக யுடியூப் சேனல் ஒன்றை தொடங்கலாம் என்று முடிவெடுக்கிறார். 

ஆனால் அதற்கு போதுமான டீம் இல்லை. வெறும் கேமராவை மட்டுமே கையில் வைத்துக் கொண்டிருந்த ஸ்ரீராம் நண்பர்களின் உதவியை எதிர்பார்க்கிறார். இந்த அவசர உலகில் நண்பர்களோ அவரவர் வேலைகளில் கவனமாக இருக்க  ஸ்ரீராம் எதிர்பார்த்த உதவி அவர்களிடமிருந்து கிடைக்கவில்லை. 

எப்படி கான்சப்ட் எழுதுவது, யாரை எல்லாம் நடிக்க வைப்பது, எப்படி எடிட் செய்வது போன்ற விஷயங்கள் எல்லாம் அவருக்கு ஆரம்பத்தில் தெரியவில்லை.  இதற்காக எல்லாம் நாம் அடுத்தவர்களை டிபன் (சார்ந்து) பண்ணி இருக்காமல் நாமளே களத்தில் இறங்குவோம் என்று ஒவ்வொரு விஷயத்தையும் கற்றுக் கொண்டு களத்தில் இறங்குகிறார். குறிப்பாக எடிட்டிங்கை அவர் கற்றுக் கொண்ட விதம் சுவாரஸ்யமாக இருக்கிறது.  எடிட்டிங் சாப்ட்வேர் வேண்டுமென்றால் அதை காசு கொடுத்து வாங்க வேண்டும், ஆனால் ஸ்ரீராமிடம் அதற்கான காசு இல்லை.  30 நாள் ட்ரையல் கொடுக்கும் அந்த சாப்ட்வேரை  பயன்படுத்தி 30 நாட்களுக்குள் யூடியூபில் பார்த்து எடிட்டிங்கை கற்றுக்கொண்டு அந்த சாப்ட்வேரை பயன்படுத்தி  வீடியோக்களை எடிட் செய்து அப்லோட் செய்கிறார்.  அவர் எதிர்பார்த்ததை விட ரீச் அதிகமாகவே இருந்தது.  சரி இனிமேல் நாம் இந்த பாதையிலேயே பயணிக்கலாம் என்று அவர் முடிவு எடுக்கும் தருணத்தில்  பாண்டிச்சேரி கிரிக்கெட் கிளப்பில் இருந்து ரஞ்சி போட்டியில் விளையாட அவருக்கு அழைப்பு வருகிறது. இவ்வளவு நாட்கள் ஆசைப்பட்ட வாய்ப்பு இப்போது அந்தத் துறையில் இருந்து வெளியேறிய பிறகு தனக்கு வந்திருக்கிறது என்றதும் அவர் குழம்பி போனார். 

மீண்டும் கிரிக்கெட்டுக்கு போகலாமா என்று அவர் யோசிக்க,  அப்போது சச்சின் மகனை அந்த விளையாட்டில் விளையாட வைப்பதற்கான அரசியல் நடந்து கொண்டிருக்கிறது என்ற தகவல் ஸ்ரீராம் காதுக்கு வருகிறது.  கிரிக்கெட் என்பது ஒற்றை நபர் விளையாடும் விளையாட்டு அல்ல. அது ஒரு டீம் விளையாட்டு.  ஒருவரை ஒருவர் அனுசரித்து ஒருவரை ஒருவர் சார்ந்து இருந்து விளையாடினால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.  ஆனால் மற்றவர்களை டிபன்ட் பண்ணி இருக்க விரும்பாத ஸ்ரீராம் கிரிக்கெட் வேண்டாம் நாம் யூடியூப் லேயே பயணிக்கலாம் என்று யூடியூப் பயணத்தை தொடர்கிறார். 

தன்னுடைய யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் அதிகம் வர வேண்டும் என்று  நண்பர்களின் செல்போன்களை வாங்கி அவர்களுக்கு தெரியாமல் அவர்களுடைய அக்கவுண்டில் இருந்து தன்னுடைய சேனலை அவரே சப்ஸ்கிரைப் செய்து வைக்கிறார். இதை அறிந்த அவருடைய நண்பர்கள்  ஏண்டா இப்படி திருட்டு வேலை செய்ற வீடியோ நல்லா இருந்தா நாங்களாகவே சப்ஸ்கிரைப் பண்ணுவோம் என்று கடிந்து கொண்டனர்.  அப்போதும் அவர் விடுவதாயில்லை தன்னிடம் லிப்ட் கேட்கும் மனிதர்கள் முதல் கொண்டு அத்தனை பேரிடமும் தன்னுடைய சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள் சப்ஸ்கிரைப் செய்யுங்கள் என்று தெரிந்த மனிதர்கள் அத்தனை பேரிடமும் கேட்டுக் கொண்டே இருந்தார்.  இப்படி கஷ்டப்பட்டு அனு அனுவாய் சப்ஸ்கிரைபர்கள் சேகரித்த அந்த சேனல்  யூடியூப் உலகின் காபிரைட் விதிமுறைப்படி இரண்டு காப்பிரைட் ஸ்டிரைக்குகளைப் பெற்றுவிட்டது.  இன்னும் ஒரு ஸ்ட்ரைக் வந்துவிட்டால் 4 மில்லியன் பாலோயர்கள் இருக்கும் அந்த சேனல் ஒட்டுமொத்தமாக காணாமல் போய்விடும் என்பதால் ஸ்ரீராம் பயந்து போனார்.  தெரிந்தவர்களிடம் எல்லாம் என்ன பண்ணலாம் என்று கேட்கும் போது வேறு வழியே இல்லை சேனலில் இருக்கும் அத்தனை வீடியோக்களையும் டெலீட் செய்தால் மட்டுமே சேனலை காப்பாற்ற முடியும் என்று சொல்கிறார்கள். 

ஒற்றை மனிதனாக பார்த்து பார்த்து செதுக்கி செதுக்கி எடுத்த வீடியோக்கள் அத்தனையும் அந்த நாளின் இரவு 12 மணிக்குள் ஒவ்வொன்றாக டெலிட் செய்கிறார் ஸ்ரீராம்.  டெலிட் செய்து முடித்துவிட்ட பிறகு அந்த இரவில் பாண்டிச்சேரி கடற்கரைக்குச் சென்று அலைகளின் ஓசைகளுக்கு முன்பு ஓவென கதறி அழுகிறார். இருந்தாலும் அவர் மனம் தளரவில்லை. நான் அடுத்தவங்க இசையை பயன்படுத்தியதால் தானே எல்லா வீடியோவும்  அழிக்க வேண்டிய நிலைமை வந்தது. இப்ப நானே இசையை கத்துக்கிறேன் நானே என்னோட ஒரிஜினல் இசையை போடுகிறேன் என்று கீபோர்டு கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். 

இப்படி தன்னைத்தானே செதுக்கிக் கொண்ட மைக்செட் ஸ்ரீராம் பற்றி ஆர்ஜேஷா சொல்லியிருப்பது அதிக பார்வைகளை பெற்று வைரலாகி வருகிறது. 

இதேபோல இவர் நடிகர் யோகிபாபு கடந்து வந்த பாதையையும் அழகாக விவரித்து இருக்கிறார்.  அவர் எடுத்துச் சொன்ன  சம்பவங்களில் சில இங்கே உள்ளன. 

நான் எனக்காகவும் என்னுடைய வெற்றிக்காகவும்  என்னுடைய அடையாளத்துக்காக வும் நான் எவ்வளவு தூரம் நடந்தேன்  என்பது எனக்கும் என்னுடைய செருப்புக்கும் மட்டும்தான் தெரியும் என்று  யோகிபாபு சொல்லியிருக்கிறார்.  யோகி பாபு ஆரம்ப கட்டத்தில் கூட்டத்தில் ஒரு நடிகராக நடிக்கும் போது ஒரு நாளைக்கு 300 ரூபாய் என்று சொல்லி அழைத்து வருகிறார்கள். 10 நாட்களுக்கு 3000 ரூபாய் என்று சொல்லி நடிக்க வைத்துவிட்டு  பத்து நாட்கள் முடிந்ததும் 1500 ரூபாய் கொடுக்கிறார்கள்.  என்னங்க ₹3000 னு சொல்லிட்டு பத்து நாள் நடிக்க வச்சுட்டு வெறும் ஆயிரத்து 500 ரூபாய் தருகிறேன் என்று யோகி பாபு கேட்டால் அதற்கு இந்த மூஞ்சிக்கு எல்லாம் இவ்வளவுதான் கிடைக்கும் என்று துரத்தி அடிப்பார்கள்.  கடைசியாக புரொடியூசர் வீட்டுக்குப் போய் வாங்கிக்கோ என்று அவர்கள் சொல்ல யோகி பாபு புரொடியூசர் வீட்டிற்கு செல்கிறார். புரொடியூசர் வீட்டில் இவர் காத்து கிடக்கும் போது புரொடியூசரின் மனைவி இவரைப் பார்த்து பொறுக்கி மாதிரி இருக்கிறான், திருடன் மாதிரி இருக்கிறான் என்று சொல்லி அவரை நாயை விட்டு கடிக்க வைத்து இருக்கிறார்.  இதேபோல சைக்கோ கொலைகாரர்கள் நிரம்பி வழிந்த காலத்தில் இவரை சந்தேகத்தின் பேரில் போலீஸ் பிடித்து விசாரித்து இருக்கிறது. நான் சினிமாவில் நடிப்பவன் சார் இந்த படத்தில் இந்த மாதிரியான காட்சிகளில் நான் நடித்திருக்கிறேன் என்று யோகி பாபு எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் போலீஸ்காரர்கள் அவரது உருவத்தை பார்த்து அதை நம்ப மறுத்தனர்.  அவரை விடாபிடியாக இழுத்துச்சென்று லாக்கப்பில் வைத்து துன்பப் படுத்தியிருக்கின்றனர். பத்து வருசமா இப்படி அலைந்து கொண்டே இருக்கிறோம் என்று ஒருநாள் புரடக்சன் மேனேஜரிடம் ரொம்ப வருத்தப்பட்டு பேசியிருக்கிறார். அண்ணே எனக்கு எதுவுமே விளங்கலண்ணே. நான் 10 ஃபெயிலுணே. நான் புட்பால்ல  நல்லா விளையாண்டு எப்படியாவது மேல வந்துடலாம்னு பார்த்தேனே புட்பால்ல ஜெயிச்சா எங்கப்பா வேலை செஞ்ச மிலிட்டிரில எனக்கும் வேலை கிடைக்கும்னு நினைச்சேன்…  ஆனா கிடைக்கல…  எங்க வேலை கேட்டு போனாலும்  என் முடியையும் மூஞ்சியையும் பார்த்து விட்டு துரத்திவிட்டுராங்க…  இதுக்காக நான் மொட்டை எல்லாம் அடிச்சு இருக்கேண்ணே என்று வருந்தி இருக்கிறார்.  ஒரு வழியாக வேலை கிடைச்சது மொதல்ல 50 ரூபாய் சம்பளம் கொடுத்தாங்க ஒரு நாளைக்கு, அப்புறம் ஒரு நாளைக்கு 750 ரூபாய் கொடுத்தாங்க…  அப்பாடா நம்ம லைஃப் செட்டில் ஆகிவிடும் என்று சந்தோசப்படும் தருணத்தில் லொள்ளு சபா நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. 

இப்படி யோகி பாபுவின் வாழ்க்கையில் நடந்த சில அவமானங்களையும்   சா பூ 3 நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார் மிர்ச்சி ஷா. இப்படி பல சங்கடங்களை சந்தித்து சாதித்துக் காட்டிய தோனி, விஜய் சேதுபதி, அனிருத், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், கங்குலி, சன் டிவி வளர்ந்த விதம், சோனி நிறுவனம் வளர்ந்த விதம் போன்ற மோட்டிவேஷன் வீடியோக்களை தொடர்ந்து செய்து வருகிறார் மிர்ச்சி ஷா. எல்லா வீடியோக்களின் கீழும் அவர் ஒரு கமெண்ட்டை பின் பண்ணி வைத்திருக்கிறார். “என் தந்தைக்கு தந்த வாக்குறுதி மீடியாவில் முடிந்தவரை நல்லதை சொல்வேன்”  என்பதுதான் அந்த கமெண்ட். “துப்பாக்கி முனை” படத்தில் எப்போதெல்லாம் வாழ்க்கை மீது நம்பிக்கை போகிறதோ அப்போதெல்லாம் இந்த மோதிர டப்பாவை திறந்து பார் என்பார் விக்ரம் பிரபு. அந்த டப்பாவை திறந்து பார்க்கும் ஆர்ஜே ஷா, முகம் மகிழ்வார். அதேபோல உங்களுக்கு எப்போதெல்லாம் வாழ்க்கை மீது நம்பிக்கை போகிறதோ அப்போதெல்லாம் இந்த நிகழ்ச்சியைப் பாருங்கள். 

 

Related Articles

சட்டப்பேரவையில் தனிஒருவனாக தினகரன்! R... 2018ம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றி தொடங்கி வைத்தது, தனியொ...
பற்றி எரிவது பெற்ற தாயாக இருந்தாலும் வீட... செல்போன் ஆடம்பரம் என்று சொன்ன அதே படத்தில் செல்ஃபி புள்ள என்ற பாடல் இடம்பெற்றிருக்கும். செல்போன் தேவை ஆனால் அதன் பயன்பாடு முறையாக இருக்க வேண்டும் என்ப...
சென்னை டூ சேலம் பசுமை விரைவு எட்டு வழிச்... சென்னை டூ சேலம் பசுமை விரைவு எட்டு வழிச்சாலை திட்டத்தில் மறைந்திருக்கும் அரசியல் பற்றிய விவாதம் இப்போது நடந்து வருகிறது. இது மக்களுக்கான திட்டம் மக்கள...
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதி... தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அவரது கட்சியான அதிமுக மூன்று அணிகளாக உடைந்தது. பின்னர் எடப்பாடி பழனிச்சாமி அணியும் பன்னீர்செல்...

Be the first to comment on "பாண்டிச்சேரி கடற்கரையில் கதறி அழுத மைக்செட் ஸ்ரீராம்! – அசத்தும் “ஷா பூ த்ரி” ஆர்ஜே-ஷா!"

Leave a comment

Your email address will not be published.


*