பற்றி எரிவது பெற்ற தாயாக இருந்தாலும் வீடியோ எடுக்கும் உலகம்! – மனிதநேயத்தைச் சிதைக்கிறதா “லைக்ஸ்” மோகம்?

video capture by cell phone,Does it distort humanity

செல்போன் ஆடம்பரம் என்று சொன்ன அதே படத்தில் செல்ஃபி புள்ள என்ற பாடல் இடம்பெற்றிருக்கும். செல்போன் தேவை ஆனால் அதன் பயன்பாடு முறையாக இருக்க வேண்டும் என்பதே அவர்கள் சொல்ல வரும் கருத்து. ஆனால் பெரும்பாலானோர் யாரும் செல்போனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. முதலில் இந்த செல்பி என்ற விஷயத்தைப் பார்ப்போம். அவசர அவசரமான இந்த உலகத்தில் சிரிப்பதற்கு கூட நேரமில்லாமல் தூக்கத்தை தொலைத்து கொண்டு மனிதன் வெயில் மழை என்று பாராமல் அலையோ அலை என்று அலைந்து கொண்டிருக்கிறான். சில சிரிக்கத் தெரியாத முகங்களை சிரிக்க வைப்பதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த செல்ஃபி என்று நினைக்கத் தோன்றுகிறது. 

ஆனால் செல்ஃபி எடுக்கப்படும் இடங்கள் குறித்து நமக்குச் சரியான புரிதல் இல்லை. முதலில் எல்லாம் பிரபலங்களை பார்த்தால் ஆட்டோகிராப். இப்போது செல்ஃபி. ஆனால் அந்த செல்ஃபியை முறையாக கேட்டு எடுக்கத் தெரிகிறதா நமக்கு? நடிகர் அமிதாப் பச்சன் ஒருமுறை எதோ ஒரு இறுதிச்சடங்கு நிகழ்வுக்குச் சென்றிருக்கிறார். அப்போது சிறுநீர் கழிக்க சென்றபோது அவரை பின்தொடர்ந்த வந்த ஒருவர், கழிவறையில் போய் அவரிடம் செல்ஃபி எடுக்க முயன்றிருக்கிறார். 

அதேபோல நடிகர் கருணாஸ் ஜெயலலிதா இறுதிச்சடங்கின்போது தன்னுடைய சொந்த ஊர்க்காரர் ஒருவர் கேட்டார் என்பதற்காக ஊரே அழுதுகொண்டிருக்கும் ஒரு நிகழ்விடத்தில் நின்றுகொண்டு சிரித்தபடி செல்ஃபிக்கு போஸ் கொடுத்தார் நடிகர் கருணாஸ். அது பெரிய அளவில் விமர்சனத்துக்கு உள்ளானது. 

ஒரு கடைதிறப்பு விழாவுக்குச் சென்ற நடிகர் சிவக்குமார் தன் அனுமதி இல்லாமல் தன்னுடன் செல்பி எடுக்க நினைத்த இளைஞனின் செல்போனை கோபத்தோடு தட்டிவிட்டார். அது மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது. இதே ஒரு பொம்பள புள்ள இப்படி செல்பி எடுத்திருந்தா, இல்ல பணக்கார வீட்டுப்பையன் ஒருத்தன் செல்பி எடுத்திருந்தா நீ இப்படி பண்ணிருப்பியா என்று சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்தனர். அதற்கடுத்த சில நாட்களில் ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்தார் சிவக்குமார் மகன் நடிகர் கார்த்தி. அப்போது அவரிடம் சென்று, “உங்கப்பா இங்க இல்ல… அதனால தைரியமா ஒரு செல்ஃபி எடுத்துக்குறே” என்று நடிகை காயத்ரி சொல்ல நடிகர் கார்த்தி அதற்கு கோபப்பட்டார். “எந்த இடத்துல எது பேசனுங்கறதே இல்லாம போயிடுச்சு… செல்பி எடுக்கறதுக்கு முன்னாடி கேட்கனும்ங்கற விவஸ்தை இல்லாம போயிடுச்சு” என்று வருந்தினார். பிரபலங்களிடம் செல்பி எடுப்பதற்காக இப்படி எல்லாம் சில மனிதர்கள் அலைந்து திரிகிறார்கள். அப்படி எடுத்த செல்பியின் பிரயோஜனம் என்ன? மிஞ்சிப் போனால் வாட்சப், பேஸ்புக் டிபியாக வைத்து லைக்ஸ் அள்ளுவார்கள். அதை தாண்டி அந்த செல்பியால் என்ன பயன் இருந்துவிடப் போகிறது. மிஞ்சிப்போனால் நமக்கு நன்றாக தெரிந்தவர்கள் அல்லது ஓரளவுக்குத் தெரிந்தவர்கள் என்று ஒட்டு மொத்தமாக சேர்த்து மொத்தம் 100 லைக்குகள் அல்லது 150 லைக்குகள் வரும். இந்த லைக்குகளின் எண்ணிக்கையை பெருக்குவதற்காக, சொந்த வேலையை விட்டுவிட்டு பிரபலங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் சென்று செல்பி எடுத்து விட்டால் நாம் பிரபலம் ஆகி விடுவோமா? 

அப்படி பிரபலங்களுடன் தேடித் தேடி எடுத்த செல்பிகளில் நிறைய  பிரபலங்கள் சிரித்திருக்க கூட மாட்டார்கள். குரங்கு பையன் குறுக்க வந்து போன நீட்டி விட்டானே என்று அவர்கள் வேண்டா வெறுப்பாக அந்த செல்பிக்கு போஸ் கொடுத்து இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு செல்பி போட்டோவை வைத்துக் கொண்டு ஏதோ சாதனை புரிந்தது போல நம்ம ஆட்கள் ஆடிக் கொண்டிருப்பார்கள். 

அதேபோல வித்தியாசமான செல்பி, பிறரை ஆச்சர்யபடுத்த வைக்கும் செல்பி போன்ற பல செல்பிகளை எடுக்க முயன்று உயிர்விட்ட பலர் இருக்கின்றனர். குறிப்பாக நாமக்கல் மாவட்டம் மோகனூரில் நடந்த சம்பவம் ஒன்றை இங்கு குறிப்பிடலாம். கீழே ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்க மோகனூர் ஆற்றுப் பாலத்தின் திட்டில் தன் குழந்தையை அமர வைத்து செல்பி எடுக்க முயன்றுள்ளார் அந்தக் குழந்தையின் அம்மா. அந்தக் குழந்தை கைதவறீ பாலத்தில் இருந்து பெருக்கெடுத்து ஓடிய அந்த ஆற்றுவெள்ளத்திற்குள் விழுந்து அடித்துக்கொண்டு சென்றுவிட்டது. ஒரு செல்பிக்கு ஆசைப்பட்டு பத்து மாதம் சுமந்து ஆசையாய்ப் பெற்ற குழந்தையை பறிகொடுத்துள்ளார் அந்த அம்மா. இந்த சம்பவம் குறித்து எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அறச்சீற்றத்துடன் ஒரு நிகழ்ச்சியில் பேசி இருந்தார். 

எந்த ஒரு சம்பவம் நடந்தாலும் இப்போது அந்த சம்பவத்தை வீடியோ எடுத்து பேஸ்புக்கில் போட்டு லைக் அள்ளுவதில் தான் எல்லோருடைய முனைப்பும் இருக்கிறது. செய்தி சேனல்களில் கூட “இந்த சம்பவம் நடந்த போது யாரும் வீடியோ எடுக்கவில்லை” என்பது ஆச்சரியம் என்று குறிப்பிட்டு செய்தியைச் சொல்கின்றனர்.  மனிதனை மனிதன் காப்பாற்றுவதே இன்றைக்கு இந்த லைக்ஸ் மோகத்தால் ஆச்சரியமான ஒரு விஷயமாக மாறிவிட்டது. 

ஒரு சிறுவன் தன் செலவுக்காக வீட்டில் பணம் கேட்டிருக்கிறான். அவர்கள் தர மறுத்து இருக்கிறார்கள். மீண்டும் மீண்டும் கேட்டு இருக்கிறான். அவர்களோ எரிச்சலோடு சிறிய தொகையை தர, அவன் பரீட்சை அட்டையை வைத்து தலைதலையாக அடித்துக்கொண்டு வேகவேகமாக வீட்டிலிருந்து கிளம்புகிறான். அதனை ஒருவர் வீடியோ எடுக்கிறார், அவன் தலைதலையாக அடித்துக்கொண்டு செல்ல செல்ல வீடியோ எடுப்பவர் அவனை கேலி செய்யும் விதத்தில் குரல் கொடுக்கிறார். 

இதேபோல இன்னொரு சம்பவம். சிறுவன் ஒருவன் கீழே டவுசர் போடாமல் இருக்க, அவன் குஞ்சுமணியை ஆட்டுக்குட்டி சப்புகிறது. அந்தச் சிறுவன் அழ அழ ஆட்டுக்குட்டு அவன் குஞ்சுமணியை சப்பசப்ப வீடியோ எடுப்பவர்களும் வீடியோ எடுப்பவனை சுற்றி இருப்பவர்களும் சிரித்து மகிழ்கிறார்கள். அந்த வீடியோ பேஸ்புக்கில் வைரல் ஆகிறது. நிறைய பேர் அதற்கு ஹாஹா போட்டு வைத்து இருக்கிறார்கள். 

நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரு தகப்பன் தனக்கும் தன் மனைவி குழந்தைகளுக்கும் நெருப்பு வைத்துக்கொண்டு எரிந்து சாகிறான். அதை ஆரம்பம் முதல் முடிவு வரை ஒருவரின் கேமரா பதிவு செய்கிறது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதும் எல்லோரும் வீடியோ எடுத்தவரை திட்டித் தீர்த்தனர். அது எப்படிடா கண்ணுக்கு முன்னாடி ஒரு உயிர் சிதைந்துகொண்டு இருக்கும்போது உங்களால வீடியோ எடுக்க முடியுது என்று பலரும் விவாதம் செய்தனர். 

 

அதே போல சமீபத்தில் எதோ ஒரு ஊரில் ஒரு பெண் தன்னை கொளுத்திக் கொண்டு சாக அதை தொடக்கம் முதல் இறுதிவரை ஒரு இளைஞன் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்கிறான். வீடியோ வைரல் ஆகிறது. பலரும் வீடியோ எடுத்தவனை திட்டித் தீர்க்க, இறுதியாக வீடியோ எடுத்த இளைஞன் கைது செய்யப்பட்டு உள்ளான். 

அதேபோல தற்கொலை செய்துகொள்பவர்கள் முதலில் எல்லாம் கடிதம் எழுதி வைத்து சாவார்கள். ஆனால் இப்போது தற்கொலை செய்துகொள்வதற்கு முன் பேஸ்புக் லைவ் போடுவது தன் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக பறிபோவதை அப்படியே பேஸ்புக்கில் வெளியாகும்படி செல்போனை பயன்படுத்துவது என்று தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. 

விகடன் தளத்தில் வெளியான “தி ரிப்போர்ட்டர்” என்ற குறும்படத்தில் ஒரு பெண்ணுக்கு நடக்கும் அநீதியை அப்படியே பதிவு செய்து அதை செய்தி ஆக்குகிறான். அந்தப் பெண்ணின் அம்மா, உங்க தொழில் லாபத்துக்காக நீங்க வீடியோ எடுத்த அந்த நேரத்துல என் பொண்ண காப்பாத்திருக்கலாம் என்று சொல்ல அந்த இளைஞன் குற்ற உணர்வுக்கு ஆளாகி தன் பணியைத் துறக்கிறான். 

அதேபோல சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பிளாக்ஷீப் இளைஞர்கள் கூட்டணியில் உருவான “நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு” படத்தில் ஒரு பள்ளி சிறுமியை பணக்கார வீட்டு இளைஞர்கள் சேர்ந்து சிதைத்து கொண்டிருக்க அதை தங்கள் தொழில் லாபத்துக்காக வீடியோ எடுக்கிறார்கள் அந்த யூடியூப் இளைஞர்கள். பிறகு ஒருகட்டத்தில் அது அவர்களுக்கே தவறாகப் போய் முடிந்து விடுகிறது. இப்படி இந்த கேமரா வந்ததும் வந்தது எல்லோரும் கண்முன் நடக்கும் உயிர்ச்சிதைவுகளை தடுக்காமல் அதை தடுக்க முற்படாமல் தங்களை பிரபல படுத்திக் கொள்வதிலயே குறியாக இருக்கிறார்கள். 

இப்படி ஒரு மனிதர்கள் கண் முன்னே எரிந்து கொண்டு இருக்கும் போது அதை வக்கிர மனதுடன் வீடியோ எடுத்து ரசிப்பது எந்தவிதத்தில் அவர்களின் வாழ்க்கைக்கு உதவுகிறது? அந்த மாதிரியான வக்கிர மனநிலையுடன் ரசித்து எடுக்கக்கூடிய வீடியோக்கள் ஃபேஸ்புக்கில் ரொம்ப நாட்கள் இருப்பதில்லை. ஃபேஸ்புக் நிறுவனம் அந்த மாதிரியான வக்கிர மனநிலை வீடியோக்களை சில குறிப்பிட்ட காலங்களுக்குள் முழுவதுமாக நீக்கி விடுகிறது.  மற்ற சமூக வலைதளங்களிலும் அதே மாதிரியான நிலை தான். அப்படி இருக்கும்போது எதற்காக இன்னும் அந்த மாதிரியான வீடியோக்களை எடுப்பதில் இந்த மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். யாரும் உதவி செய்யலையே? யாரும் உயிரைக் காப்பாற்ற முன்வரவில்லையே? என்பதை சுட்டிக் காட்டுவதற்காகத் தான் நாங்கள் இந்த வீடியோக்கள் எடுக்கிறோம் என்று சிலர் சொல்கின்றனர். உண்மையில் அது மனிதாபிமானமிக்க ஒரு பதிலா? இப்படி லைக்ஸ் மோகத்தால் வீடியோ எடுத்து பதிவிட்ட பலர் இன்று சிறைக்குள் சென்று கொண்டிருக்கின்றனர்.  சென்னையில் பைக் ரேஸ் நடத்தும் இளைஞர்கள், சிறுவனுக்கு மது ஊற்றி விட்டு விளையாடிய இளைஞர்கள், பாம்பை பிடித்து துண்டு துண்டாக வெட்டி கறி தின்ற இளைஞர்கள்  இப்படி பல இளைஞர்கள் ஆர்வக்கோளாறு தனமாக வீடியோ எடுத்து போட்டு தன் தலையில் தாங்களே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வதைப் போல சிறைக்குள் சென்று கை உடைந்து கட்டுப்போட்டு கொண்டு வெளியே வந்தனர். அதனை பார்த்த பிறகும் இன்னும் சிலர்,  வீடியோக்கள் எடுப்பதை நான் விடமாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கிறார்கள். கண்முன்னே ஒரு மனிதன் மரணித்து கொண்டு இருப்பதை,  வேறொரு மனிதன் ரசித்தபடியே வீடியோ எடுத்துக் கொண்டு இருக்கிறான் என்றால் அந்த வீடியோ எடுக்கும் செல்போன் சடாரென்று வெடித்து விடுவதுபோல், ஏதோ ஒரு அப்ளிகேஷன் அல்லது சாப்ட்வேர் ஏதோ ஒரு தொழில்நுட்பம் அந்த போனுக்குள் இருந்தால் இனி எந்த ஒரு மனிதனும் லைக்ஸ் மோகத்திற்காக வீடியோக்கள் எடுப்பதை தொடர மாட்டான். விஜய் ஆண்டனியின் “திமிரு பிடிச்சவன்” படத்தில் சாலையில் சாக்கடை வழிந்து போக அதை ஒரு இளைஞர் வீடியோ எடுத்து பேஸ்புக்கில் போட விஜய் ஆண்டனி அவரை அடித்து துரத்தி விட்டு, அந்த சாக்கடையை அவரே சுத்தம் செய்வார். அந்த மாதிரி களத்தில் இறங்கும் மனிதர்கள் தான் நாட்டை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றனர். 

 

Related Articles

மதுபான கடைகளை அடித்து நொறுக்கிய சகாயம்! ... சகாயம் ஐஏஎஸ் நேர்மையானவர், பெப்சி கம்பெனிக்கு சீல் வைத்தவர் போன்ற ஒன்றிரண்டு தகவல் நாம் அனைவருக்குமே தெரிந்திருக்கும். ஆனால் அவருடைய பல அதிரடியான நடவட...
உலகின் ஆறாவது பணக்கார நாடு இந்தியா!... நம்ப முடியாத செய்தியாகத் தோன்றலாம். ஆனால் உண்மை. இந்தியா ஏழை நாடு, வளர்ந்து வரும் நாடு என்ற செய்திகள் மட்டுமே கேட்ட நமக்கு இது கொஞ்சம் புதுசு தான். ...
பெருமாள் முருகன் எழுதிய பீக்கதைகள் சிறுக... வேக்காடு, பீ வாங்கியின் ஓலம், பீ, கடைசி இருக்கை, கருப்பணார் கிணறு, அத்தை வீட்டுக் கோடை, தோழர் பிஎம்மின் வெற்றி, வராக அவதாரம், கருதாம்பாளை, சந்தனச் சோப...
ஊழல் குற்றவாளியின் உருவ படத்தைச் சட்டமன்... சட்ட சபையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறந்து வைக்கப்படும் என்று அறிவிப்பு வெளிவந்த காலத்திலிருந்தே அது குறித்து பல்வேறு விவாதங்கள் க...

Be the first to comment on "பற்றி எரிவது பெற்ற தாயாக இருந்தாலும் வீடியோ எடுக்கும் உலகம்! – மனிதநேயத்தைச் சிதைக்கிறதா “லைக்ஸ்” மோகம்?"

Leave a comment

Your email address will not be published.


*