இசைக்குத் தாய்ப்பாலு நாதஸ்வரம்! – சஞ்சாரம் புத்தக விமர்சனம்!

Nadaswaram is like a mother of music - Sanchaaram Book review!

2018ம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது பெற்றது எழுத்தாளர் ராமகிருஷ்ணன் எழுதிய சஞ்சாரம் நாவல். இந்த வருட சென்னை புத்தக கண்காட்சியில் அந்தப் புத்தகம் அதிக விற்பனையாகும் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது. சஞ்சாரம் நாவல் எதைப் பற்றியது, உள்ளே என்னென்ன சுவாரஸ்யமான விஷியங்கள் இருக்கிறது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

புத்தகம் முழுக்க இசை… இசை… இசை… இசை வாசிப்பவர்களுக்கோ போகும் இடமெல்லாம் இம்சை… இம்சை… இம்சை… சமீப காலமாக மெட்டி ஒலி புகழ் கோபியை கலாய்த்தோம். ஆனால் அவர் நாதஸ்வரம் தொடரை எடுத்து தன்னால் முடிந்தவரை நாதஸ்வரம் வாசிப்பவர்களின் வலியைப் பதிவு செய்ததற்காகப் பாராட்ட வேண்டும். தவறிவிட்டோம்! தவறு செய்துவிட்டோம்! அதே போல சஞ்சாரத்தையும் மிஸ் பண்ணிவிட்டு பிறகு வருத்தப் படாதீர்கள்!

விறுவிறுப்பூட்டும் கதாபாத்திரங்கள் :

ரத்தினம், கோபித்துக்கொண்டு ஊர்விட்டு ஊர் வந்த சூலக்கருப்ப சாமி, கண் பார்வை மங்கிய கிழட்டுக் குரங்கு, பால் குடம் தூக்கி வரும் பெண், கடவுள் நம்பிக்கையைப் பற்றி எடக்குமடக்கு கேள்வி கேட்கும் குருநாதன், சூலக்கருப்பு சாமிக்கு துணையாளாக விளங்கும் ஆறுமுகம் பூசாரி, தவில்கார பழனி, தண்டபாணி, குடாகார வீரசின்னு, நாதஸ்வரம் வாசிக்கும் பக்கிரி, மூதூர் நாகேந்திரன், பனங்குளத்தூர் பாண்டித்துரை, நாதஸ்வர இசைக்கு காதசைத்த அரட்டானம் கல்யானை, மாலிக் கபூர், ஹக்கீம், சௌகத் அலி, சரக்கூடு லட்சய்யா, மழை வர வைத்த ஊரோடிப்பறைவைகள், துரோகம் செய்த ஊர்வாசிகள், மூக்கன், ஒதியூர் கொண்டம்மாள்,… இப்படி நாவல் முழுக்க ஐம்பதுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் வந்து செல்கிறார்கள். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒரு சுருக்கமான கதை, ஒவ்வொரு கதாபாத்திரத்தின் உடல்மொழிக் குறிப்புகள், ஒவ்வொரு சம்பவத்தைப் பற்றியும் சுருக்கமான கதை என்று புத்தகம் முழுக்க விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் செல்கிறது.

(அத்தியாயம் 1 ஆக வருகிறது ) மூதூரில் நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தின் சுருக்கம் இது:

சூலக்கருப்பசாமி கோயிலில் நாதஸ்வரம் வாசிக்கும் ரத்தினத்தின் தலையில் தட்டுகிறான் குடிபோதையில் இருக்கும் பனங்குளத்தூரைச் சார்ந்த வீரசின்னு. ஏன் அடிச்ச என பக்கிரி திமிரி நிற்க அவனை சாத்துகிறான் வீரசின்னு. நாதஸ்வரம் வாசிக்கும் பக்கிரியோ திருப்பி வீரசின்னுவை தாக்குகிறான். உடனே வீரசின்னுவின் ஆட்கள் பக்கிரி, ரத்தினம் இருவரையும் அடித்து கட்டிப்போடுகிறார்கள். உடன் வந்த தவில் பழனி, தண்டபானி இருவரும் ஓடி மறைகிறார்கள்.

சூலக்கருப்பசாமி வேட்டைத் திருவிழாவுக்குச் செல்ல வேண்டும் என்பதால் முதூர்காரங்க வில் எடுத்துக் கொடுப்பதா இல்லை பனங்குளத்தூர்காரங்க வில் எடுத்துக் கொடுப்பதா என சண்டை வருகிறது. ஒருவழியாக சண்டை முடிந்து சாமி வேட்டைக்கு கிளம்பிய இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் பக்கிரி, ரத்தினாம் இருவரையும் அவிழ்த்து விடுகிறான் ஆறுமுகம் பூசாரி. பக்கிரி அங்கிருந்து வெளியேறி மலம் கழிக்கிறேன் என பொய்க்கூறி கோயில் பந்தலில் தீயை கொளுத்திவிட்டு வருகிறான். பக்கிரி, ரத்தினம் இருவரும் கொடுமுடி செல்ல முடிவெடுக்க, ஈரோடு வரை மட்டுமே செல்லும் லாரியில் தாவிக்கொள்கிறார்கள். இடையில் இரண்டு சிறுவர்கள் அவர்களை படுத்தும்பாடு கவனிக்கத்தக்கது.

(அத்தியாயம் 3 ல் வரும் கதை) ஊரோடிப் பறவைகள் குறித்த சுவாரஸ்யமான கதை:

கரிசல் பகுதிக்கு 64 ஊரோடிப் பறவைகள் கூட்டமாகப் பறந்து வரும். அவை வானால் பறக்கையில் ஊராரே ஊராரே… மண்ணு வேணுமா… பொன்னு வேணுமா… எனக் கேட்கும். மண்ணு வேணும் என்று ஊரார்கள் சொல்லும் இடத்தில் மட்டும் அவை கூட்டமாகத் தரை இறங்கும். ஊர்மக்கள் அன்போடு கொடுக்கும் தானியங்களை 64 பறவைகளும் கொத்தி தின்றுவிட்டு அன்று மாலை வேறு ஊருக்குச் செல்ல புறப்படும்போது, இடி மழை பெய்யட்டும்… என சொன்னால் அன்று இரவு முழுக்க நல்ல மழை பெய்து குளம், கிணறு நிரம்பும் அளவுக்கு கொட்டித் தீர்க்கும். அப்படி இருந்த நிலையில் நல்ல செழிப்புடன் இருந்தபோது மக்கள் அதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். மண்ணு வேணுமா என கேட்டதற்கு பொன்னு வேணும் எனச் சொல்லி அவற்றின் மனதை புண்படுத்தினர். வெயிலூத்து என்ற ஊரைச்சார்ந்தவர்களோ மண்ணு வேணும் எனச்சொல்லி அவற்றை கீழே வரவைத்து மணியில்லாத சாவிநெல்லை போட்டு ஏமாற்றினார்கள். அன்றோடு கரிசல் பக்கம் எட்டிப்பார்ப்பதை நிறுத்தியது 64 ஊரோடிப் பறவைக் கூட்டம்.

கரிசல் பகுதியில் மழை குறைந்தது. கரையான் புற்றுக்குள் அரிசி தேடுமளவுக்கு வறுமை. ஊரோடிப்பறவையை நாட்கணக்காக எதிர்பார்த்தார்கள். கரிசக்குளம் பகுதியில் ஒரேயொரு பறவையைப் பார்த்ததாக செல்லையா ஆசாரி கூப்பிடுகிறார். அந்தப் பறவையை கெஞ்சிக் கூத்தாடி வரவைத்து அதற்கு நெல் தருகிறார்கள். என்னுடன் இருந்த 63 பேர் இறந்துவிட்டார்கள். என் ஒருத்தனாக மழை கொண்டுவருவது சிரமம். வேண்டுமானால் ஒரு சொட்டு கண்ணீரை தருகிறேன் என்கிறது. அந்த ஒரு சொட்டு கண்ணீரை காய்ந்த வேப்பமரத்தின் வேரில் விழச்செய்கிறார்கள். வேப்பமரம் நன்றாக வளர்ந்து அசைந்து அசைந்து காற்றடித்து மழையை ஊருக்கு கொண்டு வருகிறது. அதன் காரணமாக கரிசல் பகுதிகள் முழுக்க வேப்பமரங்கள் நிறைந்து கிடக்கிறது. ஊரோடிப் பறவையின் குரலை நினைவூட்டும் நாதஸ்வர இசையை கரிசல் நிலப்பகுதி மக்கள் பெரிதும் ரசிக்கிறார்கள்.

நாதஸ்வரக் கலைஞர்களின் வலிமிகுந்த வரிகள் :

என்ன மனிதர்கள் இவர்கள். அவர்கள் பிரச்சினைக்கு நம்மை ஏன் அடிக்கிறார்கள், சாதித்திமிர், என்பது இதுதானா? இப்படி அடியும் அவமானமும் பட்டு நாய்ப்பிழைப்பு எத்தனை நாளைக்குப் பிழைப்பது, எந்த ஊருக்கு வாசிக்கப் போனாலும் தங்களை சாதியைச் சொல்லிக் கேவலமாகத் தான் நடத்துகிறார்கள். சாமி முன்னால் வாசிப்பது மட்டும் தான் கௌரவம், சாப்பாடு தெருவில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கிறோம்னு சொன்னால்கூட கெட்ட வார்த்தையில் திட்டுவார்கள். காற்றடித்து சோற்றில் மண்ணை வாரிப் போட்டாலும் அப்படியே தான் சாப்பிட வேண்டும். இதில் ரெண்டு நாள் கச்சேரி என்றால் மணிக்கணக்காக நின்று வாசித்து கால் வலி வந்துவிடும். படுப்பதற்கு இடம் கிடைக்காது. உருப்படாத சினிமாப்பாட்டுக்களையும் வாசிக்கச் சொல்லி வேறு இம்சைபடுத்துவார்கள். பத்து வயசு பையன்கூட ஒருமையில் தான் பேசுவான். எதிர்த்து யாரையும் கேட்க முடியாது. ஏதாவது கூலிவேலைக்குப் போயிருந்தால் கூட கௌரவமாகக் கஞ்சி குடித்துக்கொண்டு வாழ்ந்திருக்கலாமே, என்ன வாழ்க்கையிது எனத் தன் மீதே அவனுக்கு எரிச்சலாக வந்தது.

நாதஸ்வரம் வாசிப்பவர்களை உயர்சாதிப் பெண்கள் பார்க்கும் விதம் :

சம்பந்தமே இல்லாமல் குடிகாரன் ஒருவன் ரத்தினத்தை அடிக்க… பக்கிரி எதிர்த்து நின்றதால் அவர்கள் இருவரையும் அடித்து தூணில் கட்டி வைத்திருப்பார்கள். அப்போது அவ்வழியே வரும் பெண்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை எழுத்தாளர் இவ்வாறு பதிவு செய்கிறார்.

” வேட்டைத் திருவிழா பார்க்க வந்திருந்த பெண்களில் சிலர் பக்கிரி அடிபடுவதை வேடிக்கை பார்த்தபடியே “கொழுப்பு எடுத்த நாயி, அடி வாங்குறான்… ” எனப் பேசிக்கொண்டார்கள்… ” என்று பெண்கள் மனதிற்குள் எவ்வளவு வக்கிரம் இருக்கிறது என்பதை அம்பலப் படுத்துகிறது.

காது அசைக்கும் கல் யானை :

அரட்டானம் பகுதியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் உள்ள கல்யானையின் காது உடைந்த காட்சிக்கு ஒரு வரலாற்று சம்பவம் விரிகிறது. இந்தக் கோயிலில் பொன் நகைகளை கொள்ளையடிப்பதற்காக மாலிக் கபூர் தன் படையோடு வர அந்த ஊர் மக்கள் பயத்தில் சாமி நகைகளை எடுத்துக்கொண்டு ஊரைவிட்டு காலி செய்கிறார்கள். பல ஆண்டுகளாக கோயிலில் வாழ்ந்த நாதஸ்வர வித்துவானோ எதற்கும் அஞ்சாமல் ஒற்றையாளாக கோயிலில் இருக்கிறான். வெளியே மாலிக் கபூரின் படைகள் திரண்டு நிற்கிறது. கதவை சுவரை இடித்து கோயிலை நாசம் செய்ய மாலிக் கபூர் படை முனைய சரக்கூடு லட்சய்யாவின் நாதஸ்வர இசை ஒலிக்கிறது. இசையால் வியந்து போன மாலிக் கபூர் ஒரு குதிரை நுழையுமளவுக்கு சுவரை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைகிறான். சரக்கூடு லட்சய்யாவிடம் இது என்ன இசை என கேட்கிறான். இது கடவுளின் இசை என லட்சய்யா சொல்ல… கல்லுக்கு காது இருக்கிறதா என மாலிக் கேலியாக கேட்க, கல்லுக்கு காது இருக்கு… இந்தக் கல்யானை என் இசைக்கு காது அசைக்கும் என சொல்ல மாலிக் இங்கே இசைத்துக்காட்டு காது அசைகிறதா என பார்ப்போம் என சொல்ல லட்சய்யா இசைக்கிறார். இசையின் உச்சத்தில் காது அசைய வியக்கிறார் மாலிக் கபூர். அந்தக் காது கல்தானா அல்லது இலையா என சோதிக்கும்பொருட்டு அதை உடைத்து சேதப்படுத்துகிறார். அவர் சேதப் படுத்திய கல்யானை இன்றும் அப்படியே இருக்கிறது.

ஏழு வீட்டுச் சோறு :

எங்க காலத்துல யாராவது திருடன் பிடிபட்டா அவனுக்கு ஏழு வீட்ல இருந்து ஒருவாரம் மூணு வேளையும் சோறு போடுவோம். அவன் ஏழு வீட்டுச் சோற்றையும் மூணு வேளை திங்கணும். முத ரெண்டு நாளைக்கு ஆசையா தின்பான். அப்புறம் சோற்றைப் பார்த்தாலே வயிற்றைப் புரட்டும். ஒருவாரம் இப்படிச் சாப்பிட்டா அவன் மனசு தானா மாறிடும், அதுக்கு அப்புறம் நம்ம ஊருக்குத் திரும்ப திருட வரவே மாட்டான்.

சாதியைப் பற்றி :

பருத்தியும் சோளமும் கம்பும் கேப்பையும் விளைந்த ஊர்களில் களையென வளர்ந்து பரவியிருந்தது சாதி. ஊருக்கு வரும் எந்தப் புதிய மனிதரையும் என்ன சாதி எனக் கேட்பதில் யாருக்கும் ஒரு கூச்சமும் இருந்ததில்லை. சாதியில் தாழ்ந்தவர்கள் என ஒதுக்கி வைப்பதும் கடுந்தண்டனைகள் தருவதும் விலக்கி வைப்பதும் தலைமுறையாகத் தொடர்ந்து வந்த அவலம்.

திருவிழாவின் போது மனித இயல்புகள் பற்றி :

திருவிழா மனிதர்களின் இயல்பை மாற்றிவிடுகிறது. அடக்க ஒடுக்கமாக உள்ள மனிதன்கூட கூட்டத்தைக் கண்டால் ஆள் உருமாறிவிடுகின்றன. சந்தர்ப்பத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தவனைப் போல கூச்சலிடுகிறான். இடித்துத் தள்ளுகிறான். வேஷ்டி தரையில் புரள குடித்துவிட்டு ஆடுகிறான். ஆண்களைத் திருவிழா மூர்க்கமாக்கி விடுவதைப் போல பெண்களைப் பேரழகிகள் ஆக்கிவிடுகின்றன. அதிலும் புதிதாக மணமாகி வந்த பெண் திருவிழாவிற்கு வரும்போது அவளிடம் பீறிடும் ஜொலிப்பு நிகரில்லாதது.

இது போன்ற சுவாரஸ்யமான கதைகள், மன மாற்றத்தை உண்டாக்கும் கருத்துக்கள், மக்களின் வாழ்வியல் பதிவுகள் நாவலின் பல இடங்களில் காணப் படுகிறது. இன்னும் சொல்லப் போனால் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதையைப் போல நகர்கிறது.

நாதஸ்வரம் ஏன் வட இந்தியாவில் வாசிக்கப் படுவதில்லை? கரகாட்ட காரர்களும் நாதஸ்வர வித்துவான்களும் என்ன மாதிரியான இன்னல்களை சந்திக்கிறார்கள்? நாதஸ் வரம் எவ்வளவு புகழ் வாய்ந்தது ? முன்னர் வாழ்ந்த நாதஸ்வர வித்துவான்கள் எவ்வளவு செழிப்பாக வாழ்ந்தார்கள் ? போன்ற பல கேள்விகளை எழுப்பி அதற்கு எளிமையான நடையில் பதில் அளித்திருக்கிறார் எழுத்தாளர்.

“இசை தான் கடவுளோடு பேசும் மொழி. அந்த இசைக்குத் தாய்ப்பாலு நாதஸ்வரம்…” என்ற வரிகளால் நாதஸ்வரம் வாசிப்பவர்களுக்கு மரியாதை செலுத்துகிறது சஞ்சாரம் நாவல்.

Related Articles

ஆந்திர முதல்வரின் வாழ்க்கை வரலாறு படத்தி... ஒய் எஸ் ஆர் என்று அழைக்கப்படும் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருக்கிறது.ஆந்திர முதல்வராக இருந்த...
தவறான வழியில் பணம் சம்பாதித்தால் நாம் என... கமல்ஹாசன் தன்னுடைய காதலா காதலா படத்தில் ஒரு வசனம் பேசியிருப்பார். மிக முக்கியமான வசனம் அது.  நல்ல வேலைக்குப் போயி உருப்பட்ற ஐடியா இல்லையா என்று டெல்லி...
அபிநந்தனை வாழ்த்தி வரவேற்ற இந்திய பிரபலங... மார்ச் 1, 2019 இரவு எட்டு மணி முதல் நடந்த சம்பவங்களை இந்தியர்கள் எளிதில் மறக்ககூடியது அல்ல. அப்படிப்பட்ட ஈர்ப்பை பெற்றிருந்த அபிநந்தனை பலர் வாழ்த்தி வ...
“நம்பிக்கை தான் வாழ்க்கை” என... Cast away பறக்கும் விமானம் பழுதாகி கட்டுப்பாடின்றி கடலுக்குள் தரையிறங்க கொட்டும் பெரு மழையில் ஒற்றை ஆளாக ரப்பர் டுயூபை கட்டிப் பிடித்துக்கொண்டு சிக்க...

Be the first to comment on "இசைக்குத் தாய்ப்பாலு நாதஸ்வரம்! – சஞ்சாரம் புத்தக விமர்சனம்!"

Leave a comment

Your email address will not be published.


*