அரசுப் பள்ளிகளில் தொடர்ந்து மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை அடுத்து, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு புதிய தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளிப்பதை நிறுத்தி வைப்பது பற்றி கர்நாடக அரசு பரிசீலித்து வருகிறது. புதிய பள்ளிகள் திறப்பதற்கான 2429 விண்ணப்பங்கள் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை கல்வித்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கின்றன.
அனைவருக்கும் கல்வியுரிமை திட்டத்தின் காரணமாக 25 சதவீத பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்குத் தனியார் பள்ளிகளில் இடமளிக்க வேண்டும், அரசுப் பள்ளிகளுக்கு அருகே ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் பெருகிவரும் தனியார் பள்ளிகள் போன்ற காரணங்களால் அரசுப் பள்ளிகளில் பெருமளவுக்கு மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. ஆகவே புதிதாக தனியார் பள்ளிகள் திறப்பதைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசு திட்டமிட்டுள்ளது, எனினும் இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்று இதுகுறித்து பேசிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
176 முன்மாதிரி பள்ளிகள்
முதன்மை மற்றும் இரண்டாம் நிலை கல்வித்துறை அமைச்சர் என்.மகேஷ் இதுகுறித்து பேசும்போது ‘தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்தத் திட்டமிட்டுள்ளோம். அதன் எண்ணிக்கை குறித்து கவனம் கொள்ள இருக்கிறோம். புதிய பள்ளிகளை திறக்க அனுமதியளிப்பதற்கு முன்பு நிறைய யோசிக்க வேண்டியிருக்கிறது. அரசு சார்பாக ஏற்கனவே 176 முன்மாதிரி பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக உருவாக்கி இருக்கிறோம். அதனால் இனிமேலும் அரசுப் பள்ளிகளின் தரம் குறித்து பேசுவது தேவையற்றது’ என்றார்.
பெங்களுருவில் புதிய பள்ளிகள் திறக்கத் தனியார் ஆர்வம்
அரசிடம் புதிய தனியார் பள்ளிகள் திறக்க அனுமதிகேட்டு பெறப்பட்டிருக்கும் 2429 விண்ணப்பங்களில், அதிக அளவில் பெங்களூரு நகரில் இருந்தே பெறப்பட்டு இருக்கின்றன. பெங்களூரு தெற்கில் இருந்து 369 விண்ணப்பங்களும், பெங்களூரு வடக்கில் இருந்து 216 விண்ணப்பங்களும் பெறப்பட்டு இருக்கின்றன.
கல்வி கட்டண விதிகளைப் பின்பற்ற வேண்டும்
மேலும் பள்ளி கட்டணம் குறித்து தனது கருத்தை தெரிவித்த முதன்மை மற்றும் இரண்டாம் நிலை கல்வித்துறை அமைச்சர் என்.மகேஷ் ‘பள்ளி கட்டணத்தை சட்டப்பூர்வமாகக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது மற்றும் கட்டணம் விதிக்கப்படும் அரசாங்கத்தின் உத்தரவை அறிந்து வைத்திருக்கிறேன். அனைவரும் விதிகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்’ என்று தெரிவித்தார்.
Be the first to comment on "அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கர்நாடகாவில் புதிய தனியார் பள்ளிகளுக்கு அனுமதி கிடையாது"