“மக்களே”, “ஒரு வேல இருக்குமோ” ! – “பரிதாபங்கள்” கோபி சுதாகரின் வளர்ச்சி!

யூடியூப் என்ற விஷயம் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக நம்ம ஆட்களுக்குத் தெரிய வருகிறது. இந்தியா கிளிட்ஸ், பிகைன்ட்வுட்ஸ் போன்ற சினிமா செய்தி கம்பெனிகள் கொஞ்சம் கொஞ்சமாக அதன் மூலம் வளர்கிறார்கள். அவர்கள் யூடியூப் பயன்படுத்துவதை பார்த்தும், மற்ற மாநில யூடியூப் தளங்கள், வெளிநாட்டு யூடியூப் தளங்கள் பார்த்தும் தமிழ் இளைஞர்கள் கொஞ்சம் கொஞ்சமாக யூடியூப் உலகில் அடியெடுத்து வைக்கின்றனர். 

முதலில் Temple Monkeys என்ற சேனல் மூலமாக சில இளைஞர்கள் கவனம் பெற அடுத்தடுத்து நிறைய இளைஞர்கள் அந்த உலகிற்குள் வர ஆரம்பிக்கின்றனர். இந்நிலையில் தான் திடீரென வைரல் ஆகிறது கோபி சுதாகர் இருவரின் வீடியோக்கள். யாருப்பா இவங்க பின்றாங்க என்று வியக்க வைத்தனர். 

அவர்கள் வந்த பிறகு,  அவர்கள் செய்த பரிதாபங்கள் என்ற  வீடியோக்களின் மூலம் மெட்ராஸ் சென்ட்ரல் என்ற சேனல் மென்மேலும் பிரபலம் ஆகிறது. “மெட்ராஸ் சென்ட்ரல் கோபி சுதாகர்” என்று பிரபலம் அடைகிறார்கள். பிரபலம் அடைந்ததும் வழக்கம்போல கேட்கும் கேள்வியை மற்ற யூடியூப் நிரூபர்கள் கேட்கின்றனர். “நீங்க எப்படி இவ்வளவு தூரம் வந்திங்க… இந்த இடத்த ரீச் பண்ண எவ்வளவு சிரமப்பட்டிங்க?” என்ற கேள்வி தான் அது. 

கல்லூரி காலத்தில் இருந்து அவர்கள் தங்கள் பிளாஷ்பேக்கை விவரிக்கின்றனர். கோபியின் முழுப்பெயர் “கோபி அரவிந்த்”. அவர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர். ப்ளஸ் டூவில் வொக்கேஷனல் குரூப் படித்தவர். 

திருச்சி பொறியியல் கல்லூரியில் கோபியும் சுதாகரும் ஒன்றாகப் படித்தனர். அப்போது முதலே அவர்களுக்கு கலைத்துறை மீது மிகுந்த ஆர்வம் இருந்துள்ளது. அப்போது முதலே பல போட்டிகளில் கலந்துள்ளனர். எப்படியாவது தங்களது திறமையை பெரிய வெளிச்சத்தில் காட்டிவிட வேண்டும் என்று முயன்றனர். யுவராஜ் என்ற சீனியர் அவர்களுக்கு தொடர்ந்து உறுதுணையாக இருந்தார்.  உங்களால் முடியும் தொடர்ந்து முயற்சி பண்ணிட்டே இருங்க கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்று தொடர்ந்து அவர்களை ஊக்கப்படுத்தி கொண்டே இருந்தார்.   பிறகு தான் விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் ஆடிசனில் கோபியும் சுதாகரும் கலந்து கொண்டனர். அவர்கள் அந்த மேடையில் இயன்றவரை சிறப்பாக செயல்பட்டனர். இருந்தாலும் அந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக இருந்த ஈரோடு மகேஷ், தாடி பாலாஜி போன்றோர் அவர்களின் மேடை நடுக்கத்தையும் ஆடியன்ஸ் உடன் கனெக்ட் ஆக முடியாத அவர்களின் காமெடியையும் கலாய்த்து தள்ளி அவமானப்படுத்தி அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே அனுப்பி இருந்தனர். 

அது கோபிக்கும் சுதாகருக்கும் பெரிய அவமானமாக இருந்தாலும் அவர்களுக்கு அது ஒரு பெரிய கற்றலாக இருந்தது.  தொடர்ந்து முயன்று கொண்டே இருந்தனர். வேறு ஒரு சின்ன டிவியில் காமெடி நிகழ்ச்சிகள் செய்து வந்தனர். அப்போதுதான் மெட்ராஸ் சென்ட்ரலில் பணியாற்றிக் கொண்டிருந்த முத்து (தமிழ் கிரிக்கெட் கமெண்ட்ரி கொடுப்பவர், ஒய் பிளட் சேம் பிளட் நிகழ்ச்சி தொகுப்பாளர்) என்பவரின் தொடர்பு அவர்களுக்கு கிடைக்கிறது. கண்டிப்பாக உங்களுக்கு நான் வாய்ப்பு வாங்கித் தருகிறேன் அதே சமயம் தொடர்ந்து வேறுபக்கமும் முயன்று கொண்டே இருங்கள் என்று சொன்ன முத்து அண்ணனை விடாமல் அவர்கள் தொடர்ந்து  வாய்ப்பு கேட்டுக்கொண்டே இருந்தனர். முத்துவின் பரிந்துரையின்பேரில் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு கோபியும் சுதாகரும் மெட்ராஸ் சென்ட்ரல் யூடியூப் சேனலில்  பணியில் அமர்கிறார்கள். எல்லோரும் போல அவர்களும் ஆரம்பகட்டத்தில் எப்படி ஸ்கிரிப்ட் எழுதுவது என்ன மாதிரியான கண்டன்ட் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது என்று குழம்பியுள்ளனர். பிறகு சமூகத்தில் நடக்கும் அவலங்களையும் அரசியல்வாதிகளின் தில்லாலங்கடி வேலைகளையும் காமெடி கலந்து கொண்டு சேர்த்தால் மக்களிடம் நல்ல ரீச் ஆகும் என்று அந்த மாதிரியான காட்சிகள் எழுதத் தொடங்கினர். 

அப்படி அவர்களாகவே கான்சப்ட் எழுதி இயக்க அவர்கள் எதிர்பார்த்தது போலவே அந்த மாதிரியான வீடியோக்கள் மக்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக பரவ ஆரம்பித்தது.  அதிலும் குறிப்பாக சீமான் தமிழிசை எச் ராஜா போன்ற அரசியல்வாதிகளை அரசியல் தெளிவுடன் உருவ கேலி இல்லாமல்  அந்த அரசியல்வாதிகளே ரசிக்கும் அளவுக்கு கலாய்த்து தள்ளி புகழ் அடைந்தனர்.  அதிலும் குறிப்பாக கோபி அணிந்த தீபா வளர்மதி தமிழிசை ஆகியோரின் வேடங்கள்  பட்டிதொட்டியெல்லாம் ஹிட்டடித்தது. 

அதிலும் குறிப்பாக சுதாகரின் இன்னொசென்ட் ரியாக்சன்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.   கோபிக்கும் சுதாகருக்கும் நாளுக்கு நாள் ரசிகர் கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. அவர்கள் வளர வளர மெட்ராஸ் சென்ட்ரல் என்ற கம்பெனியும் வளர்ந்தது.  தங்களுக்கு கிடைத்த ரசிகர் பலத்தை தவறான முறையில் பயன்படுத்தி விடாமல் நல்ல நல்ல சேவைகளுக்காக அவர்களிடம் இருந்து உதவி பெற்று  நடுங்கும் உள்ளங்களுக்கு உதவி மேலும் பல மனங்களை வென்றனர். 

இந்த நிலையில் அவர்கள் தனியாக வெப்சீரிஸ் ஒன்று செய்யலாம் என்று ஹாஃப்பாயில் என்கிற ஒரு விப் சீரிஸ் தொடங்கினர். அந்த வெப் சீரிஸ் ஓரளவுக்கு ரசிக்கும்படி இருந்தாலும் கோபி சுதாகர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. பெரிய எதிர்பார்ப்புடன் ஆஃப்பாயில் வெப்சீரிஸ் களத்தில் இறங்கிய கோபிக்கும் சுதாகருக்கும் அது கொஞ்சம் சறுக்கலாகவே இருந்தது. இந்த சூழலில் மெட்ராஸ் சென்ட்ரல் நிறுவனம் உரிமையாளருக்கும் கோபி சுதாகர் இவர்களுக்கும் கொஞ்சம் கருத்து வேறுபாடு வர அவர்கள் அந்த கம்பெனியில் இருந்து வெளியே வர  வேண்டிய சூழல் அமைந்துவிட்டது. 

இப்போது அவர்கள் எதுவுமே இல்லாதது போல் இருக்க ரசிகர்கள் தொடர்ந்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டே இருந்தனர். ரசிகர்கள் என்றைக்கும் நம்மைக் கைவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன்   பரிதாபங்கள் என்ற யூடியூப் சேனலை சொந்தமாக தொடங்குகிறார்கள். அவர்கள் நம்பிக்கை வீண் போகவில்லை.  புதிதாக தொடங்கப்பட்ட சேனல் என்றாலும் மிகக் குறுகிய காலத்தில் அவர்களுக்கு நிறைய சப்ஸ்கிரைபர்கள் குவிந்தார்கள். 

யூட்யூப்பில் இருந்து வளர்ந்து சினிமா துறையில் சாதித்து காட்டிய ஹிப்ஹாப் ஆதி நடித்து எழுதி இயக்கிய அவருடைய  முதல் படமான மீசைய முறுக்கு படத்தில்   கோபியும் சுதாகரும் சில நொடிகள் வந்து சென்றனர்.   இவ்வளவு நாட்கள் போனில் மட்டுமே கோபியையும் சுதாகரையும் ரசித்து மகிழ்ந்த ரசிகர்கள் முதல் முறையாக பெரிய திரையில் பார்த்ததும் குதூகலத்தில் கரகோஷம் எழுப்பி கொண்டாடி மகிழ்ந்தார்கள். அதைத் தொடர்ந்து அட்லியின் மெர்சல் படத்திலும் சில நொடிகள் வந்து சென்றனர்.  அப்போதும்

அவர்களுக்கான கரகோஷம் குறையவில்லை. 

அதைத்தொடர்ந்து சோம்பி என்கிற படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் கோபியும் சுதாகரும் நடித்தனர். ஆனால் அந்தப் படம் படுதோல்வி அடைந்தது. அப்போதும் மனம் தளராத அவர்கள் ரசிகர்களிடம் நாங்கள் சொந்தமாக ஒரு படம் எடுக்க இருக்கிறோம் அதற்கு உங்களுடைய உதவியும் வேண்டும் என்று சொல்ல ரசிகர்களிடமிருந்து அவர்களே எதிர்பார்க்காத அளவுக்கு பணம் வந்து குவிந்தது. 

திரைக்கதை ஜாம்பவான் பாக்கியராஜ் அவர்களின் ஆசியுடன் அவர்கள் தங்கள் சொந்தப் படத்தை தொடங்க ஆயத்தமாகி உள்ளனர்.  இப்போது ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பு என்னவென்றால் சுதாகர் அந்த படத்தில் என்ன கேரக்டரில் நடிக்கிறார் என்பதுதான். உறியடி 2 படத்தில் நடித்தது போல சீரியசான கேரக்டரில் நடிக்கப் போகிறாரா என்ற ஒரு கேள்வியும் இருக்கிறது. எப்படி இருந்தாலும் அவர்களுடைய படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது என்பதுதான் உண்மை. 

கொரோனா வைரஸ் காரணமாக எல்லோரைப் போலவும் அவர்களுடைய படப்பிடிப்பு வேலைகள் பாதிக்க மீண்டும் அவர்கள் பரிதாபங்கள் சேனலில் சமகாலத்து அரசியல் நிகழ்வுகளை  தங்களுடைய ஸ்டைலில் கலாய்த்து மீண்டும் ரசிகர்களை குதுகலம் ஆற்றி வருகின்றனர். கொரோனா மாதிரியான இக்கட்டான கால கட்டங்களில் கோபியும் சுதாகரும் போன்ற மனிதர்கள் தான் தேவைப்படுகிறார்கள்.   

இவர்கள் சொந்தமாக தயாரித்து நடிக்கும் படம் பெரிய வெற்றி அடைகிறது தோல்வியடைகிறது என்பதெல்லாம் படம் ரிலீஸ் சமயத்தில் இருக்கும்  சூழலைப் பொறுத்தது. ஆனால் என்றைக்கும் கோபிக்கும் சுதாகருக்குமான  ரசிகர்களின் அன்பு குறைந்து விடப் போவதில்லை. ரசிகர்கள் கேட்பது ஒன்றே ஒன்றுதான் எவ்வளவு இக்கட்டான சூழல் வந்தாலும் யார் யார் உசுப்பேற்றி விட்டாலும் கோபியும் சுதாகரும் ஒருபோதும் பிரிந்து விடக்கூடாது என்பதே. ஏனென்றால் கவுண்டமணி செந்தில்  நகைச்சுவை கூட்டணிக்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து இந்த மாதிரியான கூட்டணி அமைவது அரிதினும் அரிது. மக்கள் இந்த கூட்டணியை இழக்க விரும்பவில்லை என்பதே உண்மை. 

இவர்களின் வளர்ச்சியை மற்ற  சிலர் எப்படி பயன்படுத்திக்கொள்கிறார்கள் தெரியுமா? பரிதாபங்கள் என்று வேறொரு யூடியூப் சேனலை ஆரம்பித்து கோபியும் சுதாகரும் செய்த வீடியோக்களில் இருந்து சில சில சீன்களை கட் பண்ணி அதை வைத்து ஒரு கான்சப்ட் செய்து  அதன் மூலம் பார்வைகளையும் சஸ்கிரைபர்களையும் பெற்று வருகின்றனர். இதேபோல முகநூலிலும் டிவிட்டர் பக்கங்களிலும் இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும் “கோபி சுதாகர் ஃபேன்ஸ்”, “பரிதாபங்கள் ஃபேன்ஸ்” என்கிற பெயரில் சில பக்கங்கள் இயங்கி வருகின்றன.  உண்மையில் இந்தப் பக்கம் நடத்துபவர்கள் எல்லாம் கோபி சுதாகரின் ரசிகர்கள் அல்ல. அவர்களின் புகழ்ச்சியை பயன்படுத்தி வேறு வேறு  செயல்களுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்று தான் கூற வேண்டும். 

சுதாகர் குறித்து ஆனந்தவிகடன் விமர்சனங்களில் வந்த வரிகள்:  

  1. “சுதாகர் அந்த அப்பிராணி கேரக்டருக்கு பக்கா பொருத்தம்” – உறியடி 2 விமர்சனம்! 
  2. “பரிதாபங்கள்” கோபி – சுதாகர், பிளாக் ஷீப் அன்பு, பிஜிலி ரமேஷ்  என யூடியூப் நடிகர்கள் எல்லோரும் வெள்ளித்திரை நடிகர்களாக மாறி இருக்கிறார்கள். அதில் சுதாகர் தனியாக நம் கவனம் இருக்கிறார். – ஜாம்பி விமர்சனம் 
  3. இந்த படத்துல நம்ம தம்பி சுதாகர் நடிச்சிருக்காரு… அவர் வர முதல் காட்சியே வீடியோ கான்பரன்சில் இன்டர்வியூ பண்ற மாதிரி வச்சிருக்காங்க… படம் முழுக்க அவர் நல்லாவே நடிச்சிருக்காரு – உறியடி 2 ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்! 

சுதாகருக்கு விதவிதமான முகபாவனைகள், டாம் & ஜெர்ரி மாதிரியான உடல்மொழிகள் பலம் என்றால் கோபிக்கு விதவிதமான பிரபலங்களின் குரல்கள், பிரபலங்களின் உடல்மொழிகள் பலம். கோபி, சீமான் மாதிரியே வசனம் பேசி காமெடி செய்த காட்சியை சீமானிடம் காட்டி… இது குறித்து உங்கள் கருத்து என்ன என்று கேட்ட போது இந்த மாதிரியான காட்சிகளை நான் ரசிப்பேன் என்று கூறியிருந்தார். இப்படி அரசியல்வாதிகளே கூறுவதுதான் பரிதாபங்கள் சேனலின் வெற்றியாக இருக்கிறது. 

 

Related Articles

தர்பார் படத்தின் பலம் மற்றும் பலவீனங்கள்... TON தமிழ் என்ற எங்கள் பக்கத்தில் தர்பார் படத்தின் விமர்சனம் பதிவிட்டிருந்தோம். அதன் டைட்டில் "பர்ஸ்ட் ஆஃப் படுத்து தூங்கிட்டு செகண்ட் ஆஃப் மட்டும் பார...
பிக்பாஸ்ஸில் அரசியல் பிரபலங்கள் பங்கேற்ற... " பிக்பாஸ்ஸில் அரசியல் பிரபலங்கள் " பிக்பாஸ் நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் இல்லாமல் சில அரசியல் பிரபலங்கள் கலந்துகொண்டால் எப்படி இருக்கும்?ஒரு சின்...
ஆர்டிஓ பணிக்கு விண்ணப்பிக்க மார்ச் 25 கட... வருகிற பிப்ரவரி 24 ம் தேதி மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தமிழக பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறார். ஸ்கூட்டிக்க...
இந்தியாவில் பதுங்குகுழிகள் அமைக்க பாகிஸ்... குஜராத் மற்றும் ராஜஸ்தான் எல்லைகளில் நிரந்தர பதுங்குகுழிகள் அமைக்க பாகிஸ்தானுக்கு சீனா உதவி செய்துவருகிறது. இந்தியாவை எரிச்சலூட்டச் செய்யும் இந்நிகழ்வ...

Be the first to comment on "“மக்களே”, “ஒரு வேல இருக்குமோ” ! – “பரிதாபங்கள்” கோபி சுதாகரின் வளர்ச்சி!"

Leave a comment

Your email address will not be published.


*