“ஏழைப் பெண்களுக்கு எல்லாம் கனவு காண உரிமையே இல்லை!” – நம் வீட்டுப் பெண்களும் அவர்களின் கனவுகளும்!

கனவு” என்ற ஒரு வார்த்தை பலவிதமான அர்த்தங்களை, விளக்கங்களை தருகிறது. கனவில் பேய் வருவது, கனவில் பாம்பு கடிப்பது, நாய் துரத்துவது, வெள்ளை உருவம் வந்து கழுத்தை நெறிப்பது,  வானத்தில் இருந்து குதிப்பது போன்ற மாதிரியான கனவுகள் வருவதுண்டு. இவையெல்லாம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அர்த்தங்களை தருகின்றன. அதே மாதிரி கனவில் தமக்கு பிடித்த சினிமா நடிகை வருவது அல்லது தோழியோ காதலியோ இந்த மாதிரியான நமக்கு பிடித்தமான மனிதர்கள், பிடித்தமான இடங்கள் வருவது ஒரு வகை. இதே மாதிரி சயனம் காட்டும் கனவுகள் இருக்கின்றன. அதாவது இந்த மாதிரியான மனிதர்கள் இறப்பது போலவோ அல்லது விபத்துக்கு உள்ளாவது போலவோ வீட்டை விட்டு ஓடுவது போலவோ யாரையாவது வீட்டிற்கு அழைத்து வருவது போலவோ அந்த மாதிரியான கனவுகள் அமையும். “நடக்கிறது எல்லாம் கனவு மாதிரி இருந்தா எப்படி இருக்கும்…  எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் கண்ணு முழிச்சிட்டா வெளியே வந்தரலாம் இல்ல…”  என்ற வசனத்தை இயக்குனர் பா ரஞ்சித் மெட்ராஸ் படத்தின் டிரெய்லரில் கபாலி படத்திலும் பயன்படுத்தி இருப்பார்.

இப்படி கனவுகள் நமக்கு பல விதமாக பலவிதமான உணர்ச்சிகளை தருகின்றன. ஆனால் இந்த மாதிரியான கனவுகள் எதுவும் நம் வாழ்க்கையை நல்ல இடத்திற்கு எடுத்துச் செல்லுமா என்று கேட்டால் அது கண்டிப்பாக இருக்காது. இந்த மாதிரியான கனவுகள் நம்மை குழப்பத்திற்குள் தள்ளி விடுமே தவிர எந்த விதத்திலும் உதவாது. அதேபோல இந்த மாதிரியான கனவுகள் எல்லாம் சாத்தியமற்றது. சாத்தியமாகக் கூடிய வகையில்  ஒருவிதமான கனவு உள்ளது. அந்த கனவு என்பது நம் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய லட்சியத்தின் இன்னொரு மொழி. 

அம்மா கணக்கு படத்தில்… ஒவ்வொருவரும் என்ன மாதிரியான கனவுடன் வாழ்கிறார்கள் என்பதை மிக அருமையாக காட்டி இருப்பார்கள்.  கனவே இல்லாமல் வாழ்வது குறித்தும், கனவு காண்பவர்கள் பழித்து பேசுபவர்கள் குறித்தும்  வரும் காட்சி எழுத்து வடிவில் உள்ளது. 

“என் கனவு” என்று போர்டில் எழுதி போட்டு நாளைக்கு எல்லோரும் இந்த தலைப்பில் ஒரு கட்டுரை எழுதிக் கொண்டு வாருங்கள் என்று ஆசிரியர் சொல்லிவிட்டு செல்கிறார். அபி உன் கனவு என்ன என்று நண்பர்கள் அவளிடம் கேட்கிறார்கள்.  அதற்கு அவள், 

மகள்: ஏழையா இருக்கிறவங்களுக்கு எல்லாம் கனவு காண உரிமையே இல்லை… 

அம்மா: வாழ்க்கையில யாருக்கு எல்லாம் கனவே இல்லையோ அவங்க தான் நிஜமான ஏழைங்க…

“எனக்குத் தெரிஞ்சு கனவே இல்லாத பொண்ணு இந்த உலகத்துல நீ மட்டும் தான் இருப்ப…”   என்று கனவு காண்பது தவறு என்றும் ஏழைகள் கனவு காணக் கூடாது, இப்படி அவர்கள் கனவு கண்டாலும் அது பலிக்காது, வெறும் கனவாகவே அது போய்விடும் என்றும் நினைக்கும் மகளை ஆசிரியர் திட்டுகிறார். 

வேலைக்காரியாக இருக்கும் அம்மா தன் மகளை வேலைக்காரி ஆக்கக்கூடாது ஏதாவது ஒரு அரசு அதிகாரி ஆக வேண்டும் என்று கனவு காண்கிறார். ஆனால் மகளோ, அதை கனவு என்கிற பெயரில்  அம்மா தன் மீது திணிக்கும் வன்முறை என்று நினைக்கிறாள். 

அப்படிப்பட்ட அபிக்கு பார்ட் டைம் வேலை பார்த்துக்கொண்டே படிக்கும் அன்பு என்கிற மாணவன் அம்மாவுடைய கனவு எப்படி பட்டது? அவர் உண்மையிலேயே கனவை திணிக்கிறாரா இல்லை கனவின்  அவசியத்தை உணர்த்துகிறார் என்பதை “அவங்களோட கனவை உன்மேல திணிக்கல அபி, அவிங்க கனவே நீ தான்..” என்று அவள் கூட படிக்கும் அன்பு என்கிற மாணவன் அவளுக்கு எடுத்துச் சொல்கிறான். 

அன்புவின் அறிவுரை சொற்களுக்குப் பிறகு அம்மாவின் கனவு எது? கனவின் அவசியம் என்ன? என்பதை புரிந்து கொள்கிறாள் அபி. சாந்தி உங்களுடைய கனவு என்ன அதைச் சொல்லுங்கள் என்று ஆசிரியர் கேட்கிறார். அதற்கு சாந்தியாக நடித்த அமலா பால் திருதிருவென முழிக்க அவரை கிளாஸை விட்டு வெளியே போகச் சொல்கிறார் ஆசிரியர்.

அப்போது சாந்தியின் மகள் அபி எழுந்து நிற்கிறாள். அவிங்க கனவு என்னென்னு நான் சொல்லட்டுமா சார்…  சாந்திக்கு மட்டும் கனவு இல்லாம இருந்திருந்தா அவிங்க இந்த ஸ்கூலுக்கு வந்து இவ்வளவு பேச்சு வாங்க வேண்டிய அவசியமே இல்லை… சாந்தி  நாள் பூரா உழைக்கிறாங்க…  இருந்தாலும் ஸ்கூலுக்கு வராங்க அவங்களோட கனவுக்காக…  சாந்திக்கு சண்டே கூட லீவ் கிடைக்கிறது இல்ல… ஏன்னா வேலைக்காரிக்கு ஏது சார் சண்டே ஹாலிடே எல்லாம்…  இருந்தாலும் மண்டே அட்ணன்ஸ் எடுக்கும்போது பிரசன்ஸ் சார்னு ஃபுல் சிரிப்போடு சொல்லுவாங்க சார்…  அவங்களுக்கு வெயில் மழை உடம்பு வலி எதுவுமே கிடையாது…  எதுக்கு தெரியுமா சார்…  அவங்களுக்கு எல்லாமே அவங்க கனவு தான் சார்… அவங்களுக்கு அவங்க கனவு ரொம்ப முக்கியம் சார்…  அது என்ன கனவு நா அவங்க பொண்ணு,  அடுத்த வாட்டி எல்லோரும் முன்னாடியும் எனக்கு கனவே இல்லன்னு சொல்ல கூடாதுன்னு தான் சார்… என்று அம்மாவின் கனவு என்ன என்பதையும் தன்னுடைய கனவு என்ன என்பதையும் எல்லோர் முன்பும் சொல்லி மனம் உருகி அழுது தன் லட்சியத்தை வெளியே சொல்கிறாள். 

பிறகு ஒருநாள் அம்மாவின் உணர்வுகளைப் புரிந்துகொண்ட அந்த அபி அம்மாவோடு கடற்கரையில் அமர்ந்திருப்பாள்.  அப்போது அம்மா தான் எப்படி தன்னுடைய கனவை அடைய முடியாமல்… வேலைக்காரியாக மாறி அலைந்து கொண்டிருப்பதை… அந்த அனுபவத்தை வைத்து வாழ்க்கையைப் பற்றியும் கனவு பற்றியும் தோல்வி வெற்றி நம்பிக்கை இவை பற்றியும் கூறும் வார்த்தைகள் இவை: 

“தோக்கறது தப்பு இல்ல…  முயற்சியே பண்ணாம தோல்வியை ஏற்றுக் கொள்வது தான் தப்பு…  வாழ்க்கையில ஒரு விஷயம் நல்லா ஞாபகம் வெச்சிக்கோ…  உன் கனவுங்கிறது எப்பவுமே உன்னுடையது மட்டும்தான்…  சில பேரு இருப்பாங்க உன்னுடைய கனவ பாத்து சிரிப்பாங்க…  நீ அவங்களை பார்த்து சிரிச்சுடு…  அவங்களால உன் கனவை உன்கிட்ட இருந்து பறிக்க முடியாது… அதே மாதிரி சில பேரு இருப்பாங்க உன் கனவ புரிஞ்சுகிட்டு…  உன்னை மதிக்கறவங்க உன்ன சப்போர்ட் பண்ணுவாங்க, அவங்கள எப்பவுமே உன் மனசுக்கு பக்கத்தில வச்சுக்கனும்… வாழ்க்கையில நிறைய கஷ்டம் இருக்கும் எந்த கஷ்டமும் நிலைக்காது…  ஆனா எந்த கஷ்டத்திலும் எந்த காரணத்துக்காகவும் உன் கனவை மட்டும் விட்ராத… ஏன் தெரியுமா,  நம்ம வாழ்க்கையை நிர்ணயிக்கிறதுக்கு நம்ம கையில இருக்கிற ஒரே ஆயுதம் நம்ம கனவு தான்…” இதுவரை தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட மோட்டிவேஷன் வசனங்கள் வந்து உள்ளன. குறிப்பாக முகவரி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற படங்களில்… அஜித் சினிமா துறையில் பணியாற்றும் உதவி இயக்குனர்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கும்  நம்பிக்கையளிக்கும் படியான வசனங்களை பேசி இருப்பார். அதே போல மாயக்கண்ணாடி, படத்திலும் ஜிகர்தண்டா படத்திலும் சினிமா துறையில் சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு ராதாரவியும் சங்கிலி முருகனும் மாறி மாறி மோட்டிவேஷன் வார்த்தைகளைக் கூறுவது போல் காட்சி இருக்கும். 

சினிமாவில் உள்ள ஹீரோவின் அறிமுக பாடல்கள் எல்லாமே கிட்டத்தட்ட மோட்டிவேஷன் வரிகள் நிறைந்த பாடல்களாக தான் இருக்கும்.  அதிலும் குறிப்பாக விஜயின் படத்தில் வரும் அறிமுக பாடல்கள் எல்லாமே முழுக்க முழுக்க மோட்டிவேஷன் வரிகள் நிறைந்த பாடல்களாக இருக்கும். ஆனால் ஒரு அம்மா தன் மகளுக்கு வாழ்க்கை குறித்தும், நம்பிக்கை குறித்தும் தோல்வி, வெற்றிகள் குறித்தும் பேசும்படியான வசனங்கள் “அம்மா கணக்கு” படத்தைத் தவிர மற்ற படங்களில் எதுவும் எவ்வளவு சிறப்பாகச் சொல்லப் படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இயக்குனர் அருண் ராஜா காமராஜாவின் “கனா” படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் அம்மா அவரை வீட்டை விட்டு துரத்தி, “வந்தா நீ ஜெயிச்சுட்டு தான் வரணும்” என்பார். இது ஓரளவுக்கு அம்மா கணக்கு படத்துடன் ஒன்றிப் போனது. மற்ற படங்களில் “அம்மா கணக்கு”, “௧னா” போன்ற படங்களில் இருக்கும் அம்மாக்களை போல் இல்லாமல் சாதிக்க நினைக்கும் பெண்களை வீட்டுக்குள்ளேயே சொந்த பந்தங்களுக்கு அவரையே திருமணம் என்ற பெயரில் முடக்கிப் போடும் அம்மாக்களை தான் நம் சினிமாவிலும் இருக்கிறார்கள்.  நமது சமூகத்திலும் 2020 ஆம் வருடத்தில் கூட சில அம்மாக்கள் மகள்களை முடக்கிப் போடும்படி இருக்கிறார்கள் என்பது உண்மை. அதேபோல மகள்களை அப்துல் கலாம் சொன்னது போல் கனவு காண சொன்ன அம்மாக்கள், தங்களுடைய கனவுகளை நிறைவேற்றிக் கொள்கிறார்களா? அல்லது வயது காரணமாக குடும்ப வேலை காரணமாக, பொருளாதார சூழல் காரணமாக கனவை கனவாகவே விட்டு விடுகிறார்களா என்ற ஒரு கேள்வியும் எழுகிறது. அந்த விதத்தில் பார்த்தால் திருமணமான பிறகும் வயதுக்கு வந்த மகள்களைப் பெற்றவர்களும், ஒரு சில அம்மாக்கள் தங்களுடைய கனவை நிறைவேற்றிக் கொள்வது போல சில சினிமாக்கள் காட்டி இருக்கிறது. உதாரணத்திற்கு அம்மா கணக்கு படத்தைக் கூட எடுத்துக் கொள்வோம். இந்தப் படத்தில் மகளின் கனவை நிறைவேற்றுவதற்காகப் போராடும் அம்மா, படத்தின் கிளைமாக்சில் அவரும் தன்னுடைய கனவை அடைகிறார். கடைசியில் இந்த படத்தில் அமலா பாலும் வேலைக்காரியாக இருந்து  மேக்ஸ் டியூஷன் டீச்சராக மாறி இலவசமாகப் பாடம் நடத்துவார். 

இதேபோல ஜோதிகா நடித்த 36 வயதினிலே படத்தை எடுத்துக்கொள்வோம். அந்த படத்தில் மகளுடைய கனவுக்காக ஜோதிகா ஓடி ஓடி உழைப்பார். ஆனால் இப்படிப்பட்ட அம்மாவை மகள் துளி அளவும் மதிக்க மாட்டாள், ஒரு மெஷினை போல பார்ப்பாள்.  சமுதாயத்தில் அம்மாக்களுக்கும் சில கனவுகள் இருக்கும்டி புரிஞ்சுக்கோ என்று சொல்ல, “நீ உன்னோட சின்ன வயசுல… நீ அலட்சியமாக இருந்துவிட்டு கனவ நிறைவேற்றாமல் இருந்துவிட்டு, கடைசியில் குழந்தைகளுக்காக மகளுக்காகத்தான் கனவை விட்டுக் கொடுத்தேன் என்று சொல்லி சமாளிக்கிறாய் என்று அந்த மகள் திட்டுகிறாள். இதெல்லாம் கேட்டு எரிச்சலடைந்த ஜோதிகா, மாரத்தான் போட்டியில் கலந்து கொள்கிறார். கடைசியில் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் குடியரசுத் தலைவரிடம் பாராட்டு பெறுகிறார்.

 அதேபோல ஜோதிகா நடித்த மகளிர் மட்டும் படத்தில் அம்மாக்களின் சுதந்திரம், அவர்களின் கனவு இதைப்பற்றி எல்லாம் அழகாக விவரித்திருப்பார் இயக்குனர் பிரம்மா. “அம்மா கணக்கு” படத்தைப் போலவே நிஜத்திலும் அம்மாவின் கனவை புரிந்துகொண்டு, அம்மாவின் ஒற்றை மனித உழைப்பை ஏற்றுக்கொண்டு  அம்மாவின் கனவை நிறைவேற்றிய ஒரு பெண் இருக்கிறாள். நீலகிரி மலைப்பகுதியில் இருந்து முதல் பெண் மருத்துவர் ஆக வந்த வைத்தீஸ்வரி என்பவர்தான் அவர். 

“கனவுகள் எல்லாம் நனவாகும்… நிறைய காயங்களுக்குப் பிறகு…” – சார்லி சாப்ளின்

Related Articles

80 வயது முதியவரின் உடலைச் சுமந்து மலை இற... கர்நாடக மாநிலம் தக்சினா கன்னடா பகுதியில் இருக்கும் கொய்லா மலை கிராமத்தில் தைவா நேமா(Daiva Nema) என்ற இறை வழிபாட்டுச் சடங்கு  கடந்த சனிக்கிழமை அன்று அன...
சதுரங்க வேட்டைப் பட பாணியில் டெல்லி தொழி... அறிவியல் ஆராய்ச்சிக்குத் தேவைப்படும் உலோக தகட்டை விற்க இருப்பதாகச் சொல்லி, டெல்லி தொழிலதிபரிடம் 1.43 கோடி வாங்கி ஏமாற்றிய தந்தை, மகன் கைது செய்யப்பட்ட...
24 மணி நேர இலவச கல்வி ஆலோசனை மையம்! R... கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்கல்வித்துறையால் இலவச கல்வி ஆலோசனை மையம் துவங்கப்பட்டது. இப்போது இது மாணவர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது....
“இந்தக் காலத்துல காசு இருக்குற எல்... நிறைகள்: கிளப்புல மப்புல பாடல் பாடியது என் தப்பு என்று கூறும் ஆதி மனசாட்சிக்கு நேர்மையாக இப்போது பாடிய "சிவக்குமார் பொண்டாட்டி" பாடலையும் தப்பான...

Be the first to comment on "“ஏழைப் பெண்களுக்கு எல்லாம் கனவு காண உரிமையே இல்லை!” – நம் வீட்டுப் பெண்களும் அவர்களின் கனவுகளும்!"

Leave a comment

Your email address will not be published.


*