திருச்சியில் டிராபிக் போலீஸ் காமராஜ் என்பவர் ஹெல்மெட் அணியாமல் வந்த தம்பதியினரை
வாகனத்துடன் எட்டி உதைக்க, கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உலக மகளிர்
தினமான இன்று நடைபெற்ற இந்த துயர சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில்
கண்டனங்களும் திருச்சியில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களால் போராட்டமும் நடைபெற்று
வருகிறது.
நடந்தவை?
திருச்சியில் போக்குவரத்து காவல்துறையின் வரம்பற்ற அதிகாரத்தால் கர்ப்பிணி பெண்ணும்
அவரது வயிற்றில் இருந்த மூன்று மாத சிசுவும் கொல்லப்பட்டுள்ளனர். டிராபிக் போலீஸ்கள்
ஒவ்வொரு நாளும் இன்று இவ்வளவு தொகையை வேட்டையாட வேண்டும் என்று ஒரு
குறிப்பிட்ட தொகையை நிர்ணியித்துக்கொண்டு வருகிறார்கள். அதன்படி சாலையில் யார்
சிக்கினாலும் விடுவதில்லை. அனைவரிடமும் பிடுங்கி பாக்கெட்டை நிரப்பி கொள்வதில் குறியாக இருக்கிறது இந்த காவல் உடையணிந்த வழிப்பறி கூட்டம்! அவ்வாறே, திருச்சியில் கணேஷ் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து காவலர்கள் வசூல் வேட்டையில் ஈடு பட்டிருந்தபோது அந்த வழியாக தன் மூன்றுமாத கர்ப்பிணி மனைவி உஷாவுடன் வந்த ராஜா என்பவர் நிற்காமல் சென்றிருக்கிறார். நிறுத்தினால் இருக்கறதை பிடுங்காமல் விடமாட்டார்கள் என்ற நாம் எல்லோருக்கும் இருக்கிற அச்சம் தான் அவருக்குள்ளும் இருந்திருக்ககூடும்.
இதனால் ஆத்திரமடைந்த டிராபிக் போலீஸ் காமராஜ் மற்றும் அவருடன் பணியில் இருந்த
மற்றொரு காவலரும் வேறொருரு பைக்கில் சென்று தம்பதிகள் சென்ற பைக்கை எட்டி
உதைத்திருக்கிறார்கள்.
இதனால் பைக்கோடு கீழே விழுந்த உஷா மீது வாகனம் ஏறி இறங்கியிருக்கிறது. உஷா
இறந்துபோக வயிறு கிழிந்து வெளியே வந்த அவருடைய சிசுவும் இறந்துள்ளது. இந்த சம்பவம்
நடந்த பிறகும் அவருடைய கணவனை காமராஜூம் இன்னொரு காவலரும் சேர்ந்து
அடித்திருக்கிறார்கள்.
கனவை சிதைத்துவிட்டார்களே?
இன்றைய தம்பதிகளுக்கு பெரும்பிரச்சினையாக இருப்பது கருவுறாமை. உணவு, மன அழுத்தம்,
சுற்றுப்புற சுகாதாரம் போன்ற காரணங்களால் ஆறு, ஏழு வருடங்களாக குழந்தைப்பேறு
இல்லாமல், பல மருத்துவமனைகள் கோயில்கள் ஏறி இறங்கி லட்சக்கணக்கில் செலவு செய்து குழந்தைப்பேறு பெற வேண்டியுள்ளது. அப்படி இருக்கையில் இந்த தம்பதியினர் எவ்வளவு
கனவுடன் இந்தக் கருவை சுமந்திருப்பார்கள். இவர்களின் கனவை சிதைத்துவிட்டடார்களே…
போலீஸ் உடையணிந்தால் மிருகமாகிவிடுவீர்களா?
போலீஸ் அணிந்துவிட்டால் மனித தன்மை அற்று கர்ப்பிணியை சாகடிக்கும் அளவுக்கு
மோசமாக மனம் மரத்துப்போகுமா என்று பலரும் காவல் துறையின் வரம்பற்ற அதிகாரத்தை
எதிர்த்து குரலெழுப்ப தொடங்கியுள்ளனர்.
சமீப காலமாகவே ஹெல்மெட் அணியாமல் சென்ற இளைஞர்களை துரத்திப்பிடித்து அவர்களின்
மண்டையை பிளந்த செய்தியை சமூக வலைதளங்களில் காண முடிகிறது. இதையடுத்து,
நிறுத்தாமல் செல்லும் வாகன ஓட்டிகளை துரத்தி பிடிக்கக்கூடாது என்ற நீதிமன்றமும் தீர்ப்பு
வழங்கியுள்ளது. இருப்பினும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே
தான் இருக்கிறது.
தற்போது திருச்சி மக்கள் ஒன்றுகூடி போராடியதால் டிராபிக் போலீஸ் காமராஜை கைது
செய்துள்ளனர். இவர் இன்னும் சில தினங்களில் ரிலீசாகி விடுவார் என்பதும் அதற்குள் மக்கள்
வேறொரு பரபரப்பான செய்தியில் மூழ்கிவிடுவார்கள் என்பதும் வேற விசியம்.
மாணவியை கொன்று ஆசிரியர் தினம் கொண்டாடுவது, கர்ப்பிணியை கொன்று மகளிர் தினம்
கொண்டாடுவது போன்ற கொடுமைகள் இந்தியாவில் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
இதற்கெல்லாம் என்ன தான் தீர்வு????
Be the first to comment on "கர்ப்பிணி இறப்புடன் தொடங்கியது உலக மகளிர் தினம்! – பிறந்த குழந்தைய சாகடிச்சது போயி கருவுலயே கொல்ல ஆரம்பிச்சிடுச்சு இந்த ” அதிகாரம் “"