பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என்று தொடர்ந்து வெற்றிப் படங்களையும் விருது படங்களையும் தந்து கொண்டிருப்பவர் இயக்குனர் வெற்றிமாறன். அவரிடம் சமீபத்தில் பேட்டி எடுத்த சினி உலகம் என்ற யூடூப் சேனலில் தான் ” ஒருத்தரோட வாழ்க்கை வரலாற்ற படமா எடுக்கனும்னா யாருடைய வாழ்க்கைய எடுப்பிங்க ” என்ற கேள்வியை எழுப்பினார் நிரூபர்.
இதற்கு உடனே பதிலளிக்க தயங்கிய வெற்றிமாறன், ” இத இப்பவே சொல்ல வேணாம்னு நினைக்குறேன்… இருந்தாலும் சொல்றேன் நான் அற்புதம்மாள் அவர்களுடைய வாழ்க்கைப் போராட்டத்தை படமா எடுக்க விரும்புறேன்… ” என்று பதில் சொன்னார்.
அற்புதம்மாள் யார் என்று நாம் அனைவரும் அறிந்ததே. இருந்தாலும் இங்கு குறிப்பிட வேண்டியது இங்கு அவசியமாகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஏழு பேர்களில் ஒருவரான பேரறிவாளனின் தாய் தான் அற்புதம்மாள். தவறே செய்யாத மகன் சிறை தண்டனை அனுபவிப்பதை எந்த தாயால் தான் பொறுத்துக் கொள்ள முடியும்? மகனுக்கு 29 ஆண்டுகளாக போராடி வரும் இந்த தாயார் சந்தித்த போராட்டங்கள் எத்தனை இருக்கும்?
பெரிய சினிமா நட்சத்திரம், அரசியல்வாதிகள், விஞ்ஞானிகள், விளையாட்டு வீரர்கள், பத்ம விருது பெற்றவர்கள் போன்றவர்களின் வாழ்க்கையை மட்டுமே படமாக எடுக்க தெரிந்த இயக்குனர்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டு நிற்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். இப்படிப்பட்ட ஒரு சாமானிய போராளியை தன்னுடைய படத்தின் மையக்கதாபாத்திரமாக வைக்க தனி துணிச்சல் வேண்டும். அந்த துணிச்சல் இயக்குனர் வெற்றிமாறனிடம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.
நிரூபர் மேற்கண்ட கேள்வியை கேட்டதும், இயக்குனர் வெற்றிமாறன் சற்று தயங்கி பதில் சொல்ல காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம் அரசு எதிர்ப்பு. அரசு வழங்கிய தண்டனையிலிருந்து தன் மகனை மீட்க போராடும் தாய் என்பது கதையாக இருக்கும்போது அது அரசுக்கு எதிரான கதைக்களம் கொண்ட படமாக நம் அரசியல்வாதிகளால் பார்க்கப்படும். இதனால் படத்தை தடை செய்ய வேண்டும், இது போன்ற அரசுக்கு எதிரான படங்களை இனி எடுக்க கூடாது என்று சிலர் அதிகார மிரட்டல் விடுக்க கூடும்.
இரண்டாவது காரணம் சென்சார் போர்டு. தொட்டதுக்கெல்லாம் கட் சொல்லும் சென்சார் போர்டு நிச்சயம் இந்தப் படத்தில் நிறைய கட் வைக்க சொல்லும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
விசாரணை படத்தில் போலீஸ்களின் அராஜகத்தை தோலுரித்து நிஜ போலீஸ்களிடம் இருந்து எதிர்ப்பை பெற்றார், வட சென்னை படத்தில் வட சென்னை பெண்களை தவறாக காட்டியுள்ளார் என்று வட சென்னை மக்களிடமிருந்து எதிர்ப்பை பெற்றார், அசுரனில் ஆண்ட பரம்பரையை தவறாக சித்தரித்துள்ளார் என்று தேவர் சாதியினரின் எதிர்ப்பை பெற்றார். அதுபோல அற்புதம்மாள் படத்திற்கும் அவர் கண்டிப்பாக எதிர்ப்பை பெறுவார் என்பது மட்டும் உறுதி.
Netflixல் வெற்றிமாறனின் ‘ராஜன் வகையறா’
2018ம் ஆண்டில் தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படம் வட சென்னை. இந்தப் படம் அந்த ஆண்டின் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த இசை ஆகிய பிரிவில் ஆனந்த விகடன் விருதுகளை வென்றது. தேசிய விருது பெரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்தப் படத்திற்கு ஒரு தேசிய விருதுகூட கிடைக்கவில்லை. இருந்தாலும் அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். இந்நிலையில் வெற்றிமாறனின் ராஜன் வகையறா என்றொரு படம் நெட் பிலிக்ஸில் ரிலீசாக இருப்பதாக தகவல் வந்துள்ளது.
வட சென்னை படத்தில் அன்பு கதாபாத்திரம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே அளவுக்கு கனமான கதாபாத்திரம் ராஜன். முதலில் அன்புவாக சிம்புவும் ராஜனாக தனுசும் நடிக்க இருந்தது. பிறகு அன்பு கதாபாத்திரம் தனுஷ் செய்ய ராஜன் கேரக்டரை விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. படத்தில் அவர் கமிட்டும் ஆனார். ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக விஜய் சேதுபதி அந்தப் படத்திலிருந்து விலக வேண்டியதாகப் போயிற்று. அதன் பிறகு கடைசி ஆளாக இந்தக் கதாபாத்திரத்துக்குத் தேர்வானவர் தான் இயக்குனர் அமீர்.
ராஜன் வட சென்னை பகுதியில் வாழும் ஒரு ரவுடி. அவன் ரவுடி என்றாலும் தன் நிலத்துக்காகப் போராடக் கூடியவன். அவனுக்கு அடியாட்களாக தம்பிகளாக இருக்கும் செந்தில், குணா, தம்பி ஆகியோர் ஒரு ஹோட்டலில் வைத்து அவரை தீர்த்து கட்டி சொந்தக் காலில் நிற்க ஆசைப்படுகிறார்கள். இந்த ராஜனாக நடிக்காமல் அந்தக் கதாபாத்திரத்தில் வாழ்ந்தவர் அமீர். அமீரின் காட்சிகள் இன்னும் வட சென்னை படத்தில் சேர்க்கவில்லை. நிறைய காட்சிகளை எடிட்டிங்கில் தனியாக எடுத்து வைக்க இப்போது ராஜனின் காட்சிகள் மட்டுமே ஒன்றரை மணிநேர படமாக உருவாகி உள்ளது.
ராஜன் வகையறா படத்தின் ரிலீஸ் பற்றிய அறிவிப்பு எதுவும் இன்னும் அதிகாரபூர்வமாக வரவில்லை. ஆனால் ஒரு பேட்டியில் ” ராஜனுடைய காட்சிகள் மட்டுமே ஒரு தனி படமாக உருவாகி உள்ளது… அதை நெட் பிலிக்ஸில் ரிலீஸ் செய்ய முயற்சிகள் எடுத்து வருகிறோம்…” என்று கூறி இருந்தார். ஆனால் இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் எதுவும் குறிப்பிடவில்லை. ஓடிடி பிளாட்பார்மில் வெளியிட்டால் அடுத்த நாளே ஓரிஜினல் பிரின்டுடன் தமிழ்ராக்கர்ஸில் ரிலீசாகும்… போதிய லாபம் கிடைக்குமா என்பதும் சந்தேகமே. லாபம் கிடைக்காவிட்டாலும் அவார்டு கிடைத்தால் கூட அது வட சென்னை டீமுக்கு சின்ன ஆறுதலாக இருக்கும்.
Be the first to comment on "அற்புதம்மாள் வாழ்க்கையை படமாக எடுக்கிறார் வெற்றிமாறன்! – netflix ல் வெளியாகிறது வெற்றிமாறனின் ராஜன் வகையறா!"