காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் எங்கும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தடைந்தார். அவரைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
காவேரிக்காகத் தொடர் போராட்டங்கள்
காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதைத் தொடர்ந்து தாமதப்படுத்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து தமிழகமெங்கும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருவதால், பிரதமரின் இந்த வருகை பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பி உள்ளது. பிரதமரின் வருகையைத் தொடர்ந்து 5000 காவல்துறை பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து ஐபிஎல்லுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் திரண்டு போராட்டம் செய்தது போலவே பிரதமரின் வருகையையும் எதிர்த்துப் போராட திட்டமிட்டிருந்தனர்.
கருப்பு கொடி போராட்டம்
எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி பிரதமருக்கு கருப்பு கொடி காண்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொண்டர்கள் பலர் கருப்பு உடையணிந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அனைத்திந்திய அளவில் #GoBackModi என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
பிரதமரின் பயண திட்டம்
சென்னை விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடி ,அங்கிருந்து மாமல்லபுரத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக ராணுவ கண்காட்சி நடக்கும் திருவிடந்தை பகுதிக்குச் சென்றார். அங்கு, அவரை அதிகாரிகள், தமிழிசை உள்ளிட்டோர் வரவேற்றனர். மேலும் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் வைர விழா கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், கிண்டி ஐ.ஐ.டி.யில் நடக்கும் நிகழ்விலும் பங்கேற்க இருக்கிறார். கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த பலரைக் காவல்துறை கைது செய்திருக்கிறது. எதிர்ப்பு அதிகம் இருக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து சாலை மார்க்கமாக பயணிப்பதை பெரும்பாலும் பிரதமர் தவிர்த்திருக்கிறார்.
Be the first to comment on "தமிழகம் வந்தடைந்தார் பிரதமர் – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்"