(புத்தகமாக காலச்சுவடு பதிப்பகத்தில் கிடைக்கிறது)
சாகித்திய அகாடமி விருது பெற்ற ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் பீம்சிங், எம்.எஸ்.வி கூட்டணியில் திரைப்படமாக உருவாகி இருக்கிறது.
பலத்த மழை பெய்து கொண்டிருக்கும் போது சாலையில் ஒதுங்குவதற்கு இடமில்லாமல் நனைந்த படி ஒரு கல்லூரிப் பெண் நிற்கிறாள். அவள் முன்பு நிற்கும் ஒரு காரிலிருந்து காருக்குச் சொந்தக்காரர் அவளை உள்ளே அழைக்கிறார். அவள் தயங்குகிறாள். பிறகு இக்கட்டான சூழலிலிருந்து தப்பிக்க, காருக்குள் ஏறுகிறாள். அதை கல்லூரி நூலகத்தில் அட்டண்டராக இருக்கும் ஆர்.கே.வி பார்த்துவிடுகிறார்.
காருக்குள் ஏறிய கங்கா என்ற பெண் இந்திய இலக்கிய செல்வம் என்ற புத்தகத்தைப் படிக்கிறாள். பிறகு, கார் ஓனரால் கற்பழிக்கப்படுகிறாள். அதை அவள் தன் அம்மாவிடம் சொல்லிவிட அவளோ மானம் போச்சே என்று கத்திக் கூப்பாடு போட்டு கங்காவை அசிங்கப்படுத்துகிறாள். கங்காவின் அண்ணன் அவளை வீட்டை விட்டு எங்கயாவது போக சொல்கிறார்.
கங்காவின் மாமா பட்டணத்தில் இருக்கிறார். அவள் வந்து கங்காவை பட்டணத்துக்கு அழைத்துச் சென்று மேற்படிப்பு படிக்க வைத்து வேலை வாங்கித் தருகிறார். அவருக்கு கங்கா மீது ஒரு கண். காம உணர்வுடன் அவளைத் தொட அவளோ விலகி விலகிச் செல்கிறாள்.
ஆனந்தவிகடனில் அக்னி பிரவேசம் என்ற ஆர். கே.வியின் சிறுகதையை அவள் படிக்கிறாள். அவளுக்கு நேர்ந்த கதையை ஆர்.கே.வி வேறொரு கிளைமேக்ஸ் வைத்து கங்கா மீது எந்த தப்பும் இல்லை அவசரப்பட்டு ஊரார் முன் கத்திய அம்மா மீது தான் தவறு என்பது போல் இருக்கும் அந்தக் கதை. ஆர். கே.வியாக நாகேஷ் அட்டகாசம் பண்ணி இருப்பார். குறிப்பாக சைக்கிளில் செல்லச் செல்ல காலை சொறியும் காட்சியும் கல்லூரி மாணவர்களுடனான கலந்துரையாடல் காட்சியும் செம.
படத்தில் பல இடங்களில் காந்தியின் பெண்ணுரிமைக்கு ஆதரவான வாக்கியங்கள் பேசப்படுகின்றன. பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்றும் பலாத்காரம் நேரப் போகிறது என்ற சமயத்தில் பெண்கள் அகிம்சையை தவிர்த்து கை விரல்களில் வளர்த்தி வைத்துருக்கும் நகத்தால் தாக்குதலை தொடங்க வேண்டும் என்ற காந்தியின் கருத்துக்கள் தெளிக்கப்படுவதும், அகலிகையை நினைவூட்டுவதும் அற்புதம்.
நீ சமத்து பிள்ளையா இருந்தா உன்ன கெடுத்தவன கண்டுபிடிச்சு அவங்கூட வாழ்க்க நடத்து பாப்போம்… நீ ஒரு அசடு… அப்படியே கண்டுபுடிச்சாலும் நீ அவனுக்கு வப்பாட்டியா தான் இருப்ப… என்று மாமா சொல்ல ஆர். கே. வி மூலம் தன்னைக் கெடுத்தவனை தேடிச் செல்கிறாள்.
அவனோ அவளிடம் செய்தது தவறு தான் என்றும் பணக்கார பொண்டாட்டிக்கு அடிமை புருசனாக வாழ்ந்து வருவதாகவும் திருமணமாகி மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் தெரிவிக்கின்றான்.
கங்கா அவனுடன் நெருங்கிப் பழகுகிறாள். அவனுடைய வயது வந்த பிள்ளை கங்காவிடம் ப்ரெண்ட்லியாகப் பழகுகிறாள். ஆனால் அவனுடைய மனைவிக்கு அது பிடிக்கவில்லை. அதே போல அவர்கள் பழகுவது கங்காவின் அம்மாவுக்கும் குடும்பத்தினருக்கும் அக்கம்பக்கத்தினருக்கும் பிடிக்கவில்லை. அரசல்புருசலாகப் பேசிக் கொள்கிறார்கள்.
ஒருகட்டத்தில் கங்காவை வேறொரு திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துகிறார்கள். ஆர். கே. வி சம்பந்தம் பார்க்கிறார். கங்காவை கற்பழித்தவனும் அவளை வேறொரு திருமணம் செய்துகொள்ள வேண்டுகிறான். அதோடு கங்கை நதியையும் கங்காவையும் ஒப்பிட்டு படத்தை முடிக்கிறார்கள்.
வியக்க வைக்கும் காட்சிகள்:
- நாகேஷின் காட்சிகள் (எழுத்தாளராக வீட்டில் இருக்கும் தன்மை, காற்றில் பறக்கும் கதை பேப்பரை ஒட்டுமொத்தமாக பறக்க விடுவது) என்று கண்டதைச் சொல்கிறேன் பாடல் வியக்க வைத்தது.
- கங்காவின் அம்மா மொட்டை அடித்துக் கொள்ளும் காட்சி.
- கங்காவின் கெத்தான உடல்மொழி. சோபாக்களில் சேர்களில் அவர் உட்காந்திருக்கும் விதம் செம கெத்தாக இருந்தது.
- குழந்தை குழந்தை என்று தாய்மாமா கங்காவை (பலாத்காரம் செய்யப்பட்டவள் தானே என்ற இளக்காரத்தில், நம்மைவிட்டால் அவளுக்கு ஆதரவு இல்லை என்ற திமிரில்) பலாத்காரம் செய்ய முயல்கிறார். கங்காவுக்கு பலாத்காரம் குறித்து காந்தி கூறிய வரிகள் நினைவுக்கு வர மாமாவை எதிர்த்து நிற்கிறார்.
இது திரைப்படத்தின் அலசல் மட்டுமே. நாவல் இன்னும் வேற லெவலில் இருக்கும். தவறவிடக் கூடாத ஒரு படைப்பு என்றால் நிச்சயம் சில நேரங்களிவ் சில மனிதர்கள் படைப்பைக் குறிப்பிடலாம்.
Be the first to comment on "சில நேரங்களில் சில மனிதர்கள் – பார்க்க வேண்டிய படிக்க வேண்டிய படைப்பு!"