ஹைதிராபாத் தற்போது அடிக்கடி செய்திகளில் அடிபடுகிறது. சில மாதங்களுக்கு முன்பு வாஸ்து படி இருக்க வேண்டும் என்பதற்காக அரசு கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வாஸ்து முறைப்படி கட்டி முடிக்கப்பட்டன. தற்போது அரசு மற்றும் அரசியல்வாதிகளின் அச்சுறுத்தல் மற்றும் குறுக்கீடு காரணமாக வங்கிகளுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகள் நீங்கும் வகையில் சிறப்பு பிரார்த்தனை ஒன்று ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள சில்கூர் பாலாஜி கோவிலில் நடைபெற்றது. இந்தச் சிறப்பு பிரார்த்தனைக்கு ‘சக்ரபஜா மடல அர்ச்சனா’ என்று பெயர்.
கோவிலின் தலைமை குருக்களான டாக்டர் சவுந்தரராஜன் மற்றும் சிஎஸ் கோபாலகிருஷ்ணா ஆகியோர் இந்தப் பிரார்த்தனையை கோவிலில் செய்யும்படி அறிவுறுத்தி இருக்கின்றனர். இது பற்றி அவர்கள் தெரிவிக்கும் போது ‘ வங்கிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு அதைத் திருப்பி செலுத்தத் தவறியவர்களிடம் இருந்து பணத்தை மீட்டுக் கொண்டு வர இந்தச் சிறப்பு பிரார்த்தனை உதவும்’ என்றனர். ‘இது இந்த நாட்டின் மிகப் பெரிய நெருக்கடிகளில் ஒன்று. இந்தியர்கள் மிகக் கடுமையாக உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தை, கார்ப்பரேட் நிறுவனங்கள் சூறையாடி செல்கின்றன’ என்று மேலும் அவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக சில்கூர் பாலாஜி கோவிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ‘ருன விமோசன நரசிம்ம ஸ்தோத்திரம்’ ஜபித்தனர். இந்த ஸ்தோத்திரம் நரசிம்மரை எழுப்பும் என்பது ஐதீகம். மேலும் தலைமை குருக்கள் நாட்டு மக்கள் அனைவரையும் இந்த ஸ்தோத்திரம் சொல்லும் படி கேட்டுக்கொண்டனர். அப்படிச் செய்யும் பட்சத்தில் வங்கிகள் நெருக்கடிகளில் இருந்து நீங்கிச் சரியான பாதையில் செல்லும் என்பது அவர்களின் நம்பிக்கை.
Be the first to comment on "வங்கி நெருக்கடிகளுக்குத் தீர்வு காண ஹைதிராபாத்தில் சிறப்பு பிரார்த்தனை"