பேருந்து கட்டண உயர்வை அடுத்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கட்டண உயர்வை எதிர்த்து முதலில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் இந்த போராட்டத்தின் தீவிரம் தமிழகம் முழுக்க பரவியது. இன்று தமிழகத்தின் பெரும்பாலான கல்லூரிகள் இயங்கவில்லை. மாணவர்கள் வகுப்பைப் புறக்கணித்துவிட்டு சாலையில் அமர்ந்து போராடி வருகின்றனர். இவர்களுடன் பொதுமக்களும் தங்கள் வேலைக்குச் செல்லாமல் கலந்துகொள்ள போராட்டம் இன்னும் வலுவடைந்துள்ளது.
போராட்டக்களத்தில் மாணவர்களின் “பன்ச்” முழக்கங்கள்
கடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, ” செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் எங்கடா போன பன்னீர் செல்வம்”
” ஜல்லிக்கட்டுக்கு கேட்[gate]டா! ஓடிப்போ பீட்டா! ” போன்ற இளசுகளின் பன்ச்சுகள் போராட்டக்களம் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் ஹிட்டடித்தது. இப்போது அதே சாயலில் இளசுகளின் பன்ச்சுகள் பறக்கத் தொடங்கிவிட்டது. அவற்றில் ஒன்று தான் ” ஊர் முழுக்க கட் – அவுட்டு! ஊழல் அரசே கெட் – அவுட்டு! “.
பார்ப்பதற்கு காமெடியாய் தெரிந்தாலும் வலியுள்ள வரிகள். எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழாவுக்கு அதிக செலவுகள் செய்துவிட்டு இப்போது மக்களின் தலையில் இடியைப் போட்டுவிட்டு அம்மாவின் திட்டப்படி பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கப்படும் என்று இப்போது நாடகம் நடத்தி வருகிறது தமிழக அரசு.
எங்களுக்கு ஸ்கூட்டி வேண்டாம்! – போராட்டக்களத்தில் பெண்கள்
பிப்ரவரி 5ம் தேதிக்குள் ஸ்கூட்டிக்கு விண்ணப்பிவர்களுக்கு அம்மாவின் பிறந்தநாளன்று ஸ்கூட்டி வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் பெண்களோ, “நீங்கள் ஸ்கூட்டி கொடுத்து கிழிச்சது போதும், அப்படியே ஸ்கூட்டி கொடுத்து அது ரிப்பேரா போச்சுனு அப்பலாம் பஸ்சுல தான போகணும்… முதல்ல பஸ் கட்டணத்த குறைங்க… ” என்று ஆக்ரோசமாக குரல்கொடுத்து வருகின்றனர். இதையடுத்து, இலவசங்களை கொடுத்து மக்களை திண்டாட வைக்கும் தில்லுமுல்லு வேலை இனிமேல் எங்களிடம் செல்லுபடி ஆகாது என்று போராட்டத்தில் இருக்கும் பெண்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
ஆட்சிக்கு ஆயுசு முடிஞ்சுது – ரஜினி, கமல் வரலாம் வா!
பேருந்தில் பயணிக்கும் போதும் சரி, போராட்டக்களத்திலும் சரி, இன்றைக்கு பெரும்பாலான மக்கள் ” இவனுங்க, அட்டூழியம் தாங்க முடியல, எவ்வளவு நாள் இப்படியே அழுவுறது. இனிமேல் திமுகவுக்கும் ஓட்டு கிடையாது. அதிமுகவுக்கும் ஓட்டு கிடையாது. அந்தக்கட்சி காரனுங்க வந்து ஓட்டு கேட்டா, இனி ஓட்டுக்கு இரண்டு லட்சம், ஐந்து லட்சம் கேட்கணும்… அப்பத்தான் ஓட்டுக்கு காசு தர முடியாம தலை தெறிச்சு ஓடுவானுங்க… இன்னும் எத்தனை நாளைக்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பேர சொல்லி இவனங்க தின்பானுங்க… ” என்று பேசிக்கொள்கின்றனர்.
தி.மு.க ஆட்சியின் போது, அவர்கள் செய்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலையும், மின்பற்றாக்குறை பிரச்சினையையும் மக்கள் இன்றும் மறக்கவில்லை. அதனால் தான் தி.மு.கவால் தேர்தல்களில் வெற்றியைப் பெற இயலவில்லை. இனி தி.மு.க வால் எழுந்திருக்க முடியாது, அந்தக்கட்சிக்கு ஆயுசு அவ்வளவுதான் என்றாகிவிட்டது. இனிமேல் அந்தக்கட்சி எழுந்து நிற்க வேண்டுமென்றால் கலைஞர் எழுந்து நின்றால் மட்டுமே சாத்தியம்!
இப்போது அதிமுகவும் அதே தவறை செய்து கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆர் பிரம்மாண்ட விழாவுக்கு கோடிக்கணக்கில் செலவு மற்றும் அவர்கள் செய்த ஊழல் என்று அவர்களால் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்கும் பொருட்டு மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றனர். பாரம் தாங்காத மக்களோ, ” ரத்து செய் அல்லது ராஜினாமா செய் ” என்று உச்சகட்ட கோபத்தில் இருப்பதால் இவர்கள் ஆட்சிக்கும் ஆயுசு முடியப்போகிறது என்பது மட்டும் உறுதி.
போராட்டம் ஒருபுறமிருக்க, ரஜினி கமலின் அரசியல் பயணம் விரைவில் தொடங்க இருக்கிறது. ரஜினி கட்சி சார்பில் வேலூர் மாவட்ட நிர்வாகிக்களுக்கான அறிவிப்புகள் வெளிவந்துவிட்டது. அடுத்தடுத்த நாட்களில் அனைத்து மாவட்ட நிர்வாகிக்களுக்கான அறிவிப்புகள் வெளிவர உள்ளது. கமல், தமிழகம் முழுவதுமான அரசியல் பயணத்தை விரைவில் தொடங்க உள்ளார்.
ஆக மொத்தத்தில் பேருந்து கட்டண உயர்வு என்பது மக்களுக்கான ஸ்கெட்ச் அல்ல. அது ஆளுங்கட்சிக்கான ஸ்கெட்ச். இன்னும் சுருங்கச்சொன்னால், பேருந்து கட்டணத்தை உயர்த்தி ஆளுங்கட்சி தனக்குத்தானே ஆப்பு வைத்துக்கொண்டது.
Be the first to comment on "“ஊர் முழுக்க கட் அவுட்டு! ஊழல் அரசே கெட் அவுட்டு! ” போராட்டக்களத்தில் பொங்கியெழும் மாணவர்கள். #Busfarehike"