“உணவின் வரலாறு” புத்தக விமர்சனம்! – “தேனிலவு”, “ஹனிமூன்” என்ற பெயர் எப்படி வந்தது?

Unavin Varalaru book review

குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக வெளிவந்து பிறகு பாதியில் நிறுத்தப்பட்டு இப்போது முழு புத்தகமாக வடிவம் கொண்டிருக்கும் புத்தகம்தான் “உணவின் வரலாறு”.

முதலில் இந்த புத்தகத்தின் நடையை பற்றி சொல்ல வேண்டும். இது படிப்பதற்கு அவ்வளவு சுவாரஸ்யமாக இருப்பதால் ஜெட் வேகத்தில் செல்கிறது. நீங்கள் புத்தகத்தின் உள்ளே நுழைந்து விட்டால் போதும்,  மற்றவையெல்லாம் எழுத்தாளர் பா. ராகவன் பார்த்துக் கொள்கிறார். முன்னுரையில் இருந்து முடிவு வரை எந்த இடத்திலும் திக்கி நிற்காமல்  சடசடவென செல்கிறது வார்த்தைகள். 

“கடவுளும் கடா மார்க்கும்” என்ற அத்தியாயத்தில் தொடங்கி  “கற்பனையின் முதல் கன்னி” என்ற 43 அத்தியாயம் வரை நாம் அறிந்திராத இதுவரைக்கும் முற்றிலும் கேள்விப்பட்டிராத தகவல்கள் எல்லாம் எக்கச்சக்கமாய் கொட்டிக்கிடக்கின்றன. இந்த புத்தகத்தின் நிறைய இடங்களில்  “ஆச்சரிய குறிகள்” இருப்பதை நீங்கள் கவனிக்கலாம். அதைப் போல நீங்கள் புத்தகம் படிக்க படிக்க “ஆஹா” என்ற வார்த்தையை நீங்கள் உங்களை அறியாமலேயே  உச்சரிப்பீர்கள். அதைவிட முக்கியமான ஒன்று, இது புத்தகத்தை படிக்க படிக்க நிறைய இடங்களில் உங்களை மீறி ரசித்து சிரிப்பீர்கள். 

நிலவு தாவரம் எனப்படும் சைபீரியா காடுகளில் உள்ள “எப்ரடா” என்ற தாவரத்தில் இருந்து பிறக்கும் சோமரசத்தை (சாராயம்) பற்றி… வயிறு நிறைவதற்காக மட்டுமே கண்ட மாமிசத்தையும் எடுத்து தின்றுகொண்டிருந்த மனிதன் “தீ” என்ற ஒரு விஷயம் வந்த பிறகுதான் ருசியான உணவை உண்ண ஆரம்பித்தான் என்பதை பற்றி… தேனிலவு என்ற பெயர் எப்படி ஆங்கிலத்திலும் தமிழிலும் வந்தது? தேன் தான் மனிதனின் ஆதி உணவாக இருந்ததை பற்றி… பண்டைய கிரேக்க ரோமானிய ஜெர்மானிய நாடுகளில் தேன் தான் ஒரு திருமணத்திற்கு சாட்சியாக இருந்ததைப் பற்றி… நெருப்பை கண்டறிவதற்கு முன் ஆதிகால மனிதன் தேனை எடுப்பதற்கு என்ன உத்தியை பயன்படுத்தினான் என்பதை பற்றி… பீர் உருவான கதை பற்றி… இந்தியாவில் ஒரு சாலையோர கடையில் இருந்த சன்னா மசாலா என்கிற ஒரு உணவு வகை  உலகம் முழுக்க சுற்றி வந்த கதையை பற்றி… பதினான்காம் லூயி என்கிற மன்னர் மூட்டையிலிருந்து அவிழ்ந்து ஓடிய முத்துக்கள் போன்ற பட்டாணிகளை பார்த்து ரசித்தது பற்றி… இட்லி உருவான கதைப் பற்றி… மிளகாயை ஆரம்ப காலத்தில் மக்கள் எப்படி சாப்பிட்டார்கள் என்பதை பற்றி… மிளகாய் பொடி தயாரிப்பது பற்றி… உலகிலேயே கரும்பு முதன் முதலில் எங்கு விளைந்தது என்பதை பற்றி… பிறகு அது எப்படி உலகம் முழுக்க பரவியது என்பதை பற்றி… சர்க்கரை உருவான கதையை பற்றி…  சாக்லேட் உருவான விதம் பற்றி… வங்காளிகளுக்கு மிகவும் பிடித்தமான சர்க்கரை சாதம் பற்றி… திருப்பதி லட்டை விட 100 மடங்கு சுவையான வங்காளிகளின் இனிப்பு தயிர் பற்றி…

இப்படி எவையெல்லாம் மிகவும் ருசியான மனதுக்கு இனிமையான உணவாக இருக்கிறதோ… அவற்றை எல்லாம் தேடிப் பிடித்து அதன் ஆதி கால வரலாற்றை கண்டறிந்து…  இனிக்க இனிக்க தகவல்களை அள்ளித் தருகிறார் எழுத்தாளர் பா. ராகவன்.

சோமரசம் பற்றிய அத்தியாயத்தில் குத்தாட்டம் போட தோன்றுகிறது, தித்திக்கும் தீ அத்தியாயத்தில் அனல் பறக்கிறது, தேனும் நிலவும் அத்தியாயத்தில் எச்சில் ஊறுகிறது… இப்படி ஒவ்வொரு அத்தியாயத்தைப் படிக்கும் போதும் வெவ்வேறு விதமான உணர்வுகள் தோன்றி இந்த மாதிரியான உணவை எப்படியாவது ருசித்து விட வேண்டும் என்கிற ஒரு ஆர்வம் பிறக்கின்றது. 

பிடித்த வரிகள்: 

1.ருசி பெரிதா? பசி பெரிதா? பசி அடங்கும்வரை அதுதான் பெரிது.

 1. ‘உ’ என்பது எல்லாவற்றுக்கும் முதல். உ என்றால் உலகம். உ என்றால் உயிர்கள். உ என்றால் உணவு.
 2. உலகம் உயிர்களால் ஆனது. உயிர்கள் உணவினால் ஆனவை. உணவு இல்லாமல் ஒன்றுமே இல்லை.
 3. அது வாழ்வா சாவா போராட்டம். கண்டிப்பாகச் சாவுதான். அதற்குத் தெரிந்தே இருக்கிறது. ஆனாலும் தப்பிக்க முயற்சி செய்யாமல் செத்துப் போக முடியாது. கால்கள் இருப்பது ஓடுவதற்காக.
 4. வெறும் பன்னியவிட வெந்த பன்னி சூப்பர்டா!
 5. இந்தியாவில் மட்டுமல்ல. உலகம் முழுதும் ஆதி மனிதர்கள் நெருப்பைக் கடவுளாக்கியிருக்கிறார்கள்.
 6. ஆதி மனிதன் பசியால் உணவையும் பயத்தால் கடவுளையும் ஒருசேரத் தேடத் தொடங்கினான்.
 7. பூவிலிருந்து தேனை உறிஞ்சி எடுத்துச் சென்று அடைகளில் சேகரிக்கும் தேனீக்கள் தான் மனித குலத்தின் முதலாசிரியர்கள். கிடைத்த இடத்தில் உண்பதல்ல. அடுத்த வேளைக்குச் சேகரித்து வை. அது ரொம்ப முக்கியம். வேளாவேளைக்குத் தேடித் தேடி ஓடிக்கொண்டிருக்காதே. உட்கார்ந்து சாப்பிடப் பழகு. நாளைக்கு நீ உட்கார்ந்து சாப்பிட வேண்டுமானால் இன்றைக்கு ஓடித் தேடி உழைத்தால்தான் உண்டு.
 8. இந்தியாவைத் தவிர வேறு எந்த தேசத்திலும் சாப்பாட்டை மதம் தீர்மானிப்பது இல்லை. 

புத்தகத்தில் இருக்கும் சில சிலிர்க்க வைத்த தகவல்கள்: 

 1. இன்றைக்குப் பிறந்த குழந்தைக்கு முதல் உணவு தாய்ப்பால். ஆதி காலத்தில் ஒரு குழந்தை பிறந்தால் உடனே அதன் உதட்டில் ஒரு சொட்டுத் தேனைத் தான் தடவுவார்கள். குழந்தையின் முதல் அழுகையைச் சிரிப்பாக மாற்றும் கடவுள் அது.
 2. நாலாயிரத்தி ஐந்நூறு வருடங்களுக்கு முன்னர் ஆரியர்கள், பாபிலோனியர்கள், சுமேரியர்கள், எகிப்தியர்கள் யாராவது இறந்தால், தேன் இல்லாமல் அவர்களைப் புதைக்க மாட்டார்கள்.
 3. பண்டைய மத்திய அமெரிக்க மாயன் நாகரிக காலத்து மனிதர்கள், தேன் எடுக்கும்போது அதை நக்குபவன், ரத்தவாந்தி எடுத்து செத்துப்போவான் என்று தீர்மானமாக நம்பினார்கள்!
 4. நீரிழிவு என்னும் ஒரு கொடிய வியாதி இருக்கிறது, ஏகத்துக்குத் தேனைக் கபளீகரம் செய்தால் சீக்கிரம் பரலோகப் பிராப்தி என்பது தெரிந்த பிறகு தேன் பாட்டில்களின் சைஸ் குறைந்துவிட்டது!
 5. உலகில் முதல் முதலில் தோட்டப்பயிராக வளர்க்கப்பட்டது பீன்ஸ்தான். இந்தியாவிலிருந்தே இந்த வழக்கம் வெளியே போயிருக்கிறது. அதே போல வெஜ்-நான்வெஜ் கலப்பட உணவு வகை என்ற யோசனை மனிதனுக்குத் தோன்றத் தொடங்கியதும் பீன்ஸ் பிறந்த பிறகுதான்.
 6. மாமிசம் சாப்பிடுவோரிலேயே பசுவைக் கொல்லக்கூடாது, பன்றிக்கறி ஆகாது, கோழி அடித்தாலும் வாத்தை அடிக்காதே எருமையைச் சாப்பிடாதே, வேண்டுமானால் எருதுக்கறி முயற்சி செய்து பார் என்று ஏகப்பட்ட தேர்ந்தெடுப்புகள் – நிராகரிப்புகள் ஆதியிலேயே இருந்திருக்கின்றன.
 7. ரொம்பக் கஷ்டப்பட்டு ஒரு கிலோ அரிசி உற்பத்திக்கு ஐயாயிரம் லிட்டர் தண்ணீர் தேவை என்று ஒரு சீன விவசாய வல்லுநர் கி.பி. 12ம் நூற்றாண்டில் கண்டுபிடித்துச் சொன்னார்.
 8. இந்தியாவிலும் கூட ஆதியில் அரிசி, உளுந்து காம்பினேஷன் இட்லி இருந்திருப்பதாகத் தெரியவில்லை. வெறும் உளுத்தம்பருப்பை அரைத்துத் தான் இட்லி செய்திருக்கிறார்கள். பிறகு ஏதோ ஒரு கட்டத்தில் அரிசியைச் சேர்த்து அரைத்துப் பார்த்ததில் கிடைத்த வெண்மையும் மென்மையும் ருசியும் பிடித்துப் போய்விட, இன்றைய இட்லி தற்செயலாகவே பிறந்திருக்கிறது.
 9. நமது இலக்கியங்களில் எந்த இடத்திலும் யாரும் இட்லியைப் பற்றி மூச்சுக்கூட விடவில்லை என்பது ஓர் ஆச்சர்யம். பால்சோறு மூட நெய்பெய்து முழங்கை வழிவாரச் சொன்ன ஆண்டாள் காலத்திலேயே இட்லி கிடையாது என்னும்போது சங்க இலக்கியம், தங்க இலக்கியமென்றெல்லாம் தேடிப்போவது வெறும் நேர விரயம்.
 10. காசநோய்க்கே உளுந்து கைகண்ட மருந்து என்று சிபாரிசு செய்கிறார் அகத்தியர்.
 11. நெய்யில் பொறிக்காமல், நெய் சேர்த்து வேகவைக்கும் இன்னொரு விதமான இட்லி இன்றைக்கும் புழக்கத்தில் இருப்பதை இங்கே நினைவுகூரலாம். அதன்பெயர் காஞ்சீபுரம் இட்லி. காஞ்சீபுரம் வரதராஜர் பெருமாள் கோயிலில் பிரசாதமாகக் கிடைக்கும் இந்த இட்லி சற்று விசேஷமானது. சீரகம், மிளகு, பெருங்காய ஐட்டங்கள் சேர்ந்தது. ஏராளமான நெய் சேர்மானமும் உண்டு. பருப்பின் அளவு அதிகமாகவும் அரிசியின் அளவு சற்றே குறைந்தும் இருக்கும். ஆனால் பொறிக்கிற வழக்கமில்லை. நீராவித் தயாரிப்புதான்.
 12. திருப்பதி வெங்கடாசலபதியும் காஞ்சீபுரம் வரதராஜரும் சிபாரிசு செய்தபடியால்தான் இட்லி நமது அன்றாட உணவாக மாறியது. இட்டு அவிக்கும் (அல்லது அளிக்கும்) பொருளான இட்டவி இங்கே இட்டலியாகி, இட்லியாக மாறி இருக்கிறது. 
 13. கன்னடர்களுக்கு எதையும் எண்ணெயில் பொறித்தால்தான் திருப்தி. ஆந்திரர்களுக்குக் காரமிருந்தால்தான் திருப்தி. கேரளர்களுக்கு எதிலும் கொஞ்சம் இனிப்பு வேண்டும். எனவே மிச்சமிருந்த தமிழன் இட்லியைத் தன் அடையாளமாக்கிக்கொண்டான்!
 14. 1890ம் ஆண்டு DeWitt Clinton என்னும் அமெரிக்கர், மிளகாயைக் காயவைத்துப் பொடியாக்கி உபயோகிக்கும் முறையைக் கண்டுபிடித்தார். அதற்கு முன்னால் மக்கள் குச்சி ஐஸ் மாதிரிதான் சாப்பிட்டிருக்கிறார்கள், அல்லது அப்படியே கசக்கிப் போட்டு சமைத்திருக்கிறார்கள். மிளகாய்ப் பொடி என்கிற கான்செப்ட் அதற்கு முன்னால் கிடையாது. பிறகு 1902ம் வருஷம் William Gebhardt என்னும் இன்னொரு அமெரிக்கர் இந்த மிளகாய்ப் பொடிக்குச் சில அலங்காரங்கள் செய்து பார்த்தார். அதாவது, வெறுமனே மிளகாயைக் காயவைத்துப் பொடி பண்ணுவதில் என்ன இருக்கிறது? அதில் வேறு சில வஸ்துக்களைச் சேர்க்கலாம். கொஞ்சம் தனியா. கொஞ்சம் துவரம்பருப்பு. கடலைப்பருப்பு. மஞ்சள் தூள் கொஞ்சம்.
 15. கி.மு. 510ம் ஆண்டு மத்தியக் கிழக்குப் பகுதியில் இருந்து இந்தியாவுக்குப் படையெடுத்த டேரியஸ் என்னும் மன்னன், வாழ்விலே முதல்முறையாக இந்தியாவின் பஞ்சாப் பகுதியில் கரும்புப் பயிரைப் பார்த்துவிட்டு அசந்து போய் நின்றுவிட்டான். டேரியஸ் வருவதற்கு முன்னால் கரும்பு இந்தியாவைத் தாண்டவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இப்படி மனிதன் தோன்றிய பிறகு அவனுக்கு கிடைத்த உணவுகள் முதல் உலகம் முழுக்கப் பரவி இருக்கும் உணவுகள் பற்றி… ஒவ்வொரு நாட்டில் உள்ள உணவுகள் பற்றி… குறிப்பாக இந்தியாவில் உணவிற்குள் இருக்கும் மத வேறுபாடுகள் ருசி வேறுபாடுகள் போன்றவற்றை எல்லாம் பற்றி தீர ஆராய்ந்து ரசிக்கும்படி தகவல்களை எழுதியிருக்கிறார் எழுத்தாளர். அதிலும் குறிப்பாக இந்தியாவில் வந்தேறிகள் வருவதற்கு முன்பு உணவுப்பழக்கம் எப்படி இருந்தது?  இந்திய கணவாய்கள் மூலமாக ஒவ்வொரு நாட்டினராக பல தரப்பு மக்கள் இந்தியாவிற்குள் நுழைந்ததும் இந்திய உணவு முறைகள் எப்படி படிப்படியாக மாறியது?  ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு உணவு முறையை… ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு உணவு முறையை… ஒவ்வொரு சமுதாய மக்களும் வெவ்வேறு வகையான உணவு முறையை பின்பற்றி வருவதைப் பற்றி எல்லாம்…  இந்த புத்தகத்தைத் தவிர வேற ஏதாவது புத்தகத்தில் இவ்வளவு நுணுக்கமான செய்திகளுடன் எழுதி இருக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்த புத்தகம் படித்த பிறகு எந்த உணவை சாப்பிட்டாலும் அதன் வரலாறை தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வமும் அதை ருசித்து சாப்பிட வேண்டும் என்கிற தன்மையும் உங்களுக்கு பிறக்கும். 

 

Related Articles

ஜமால் மாலிக் போன்ற சிறுவர்கள் ஜெயிப்பதை ... ஜமால் மாலிக் என்று இங்கு குறிப்பிடப்படுவது ஒரு நிஜ மனிதரை அல்ல. ஏ. ஆர். ரகுமான் எந்த படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கினாரோ அந்தப் படத்தின் கத...
பேசாத பேச்செல்லாம்!  – நீங்கள் யார... மொத்தம் 32 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு தான் எழுத்தாளர் பிரியா தம்பி எழுதிய இந்த "பேசாத பேச்செல்லாம்" புத்தகம். இந்தப் புத்தகம் கற்றுக் கொடுத்த சில விஷ...
வீட்டின் முதல் பட்டதாரிகளின் வலியை சொன்ன... இதை பற்றியெல்லாம் எழுத வேண்டுமா? என்று சிலர் யோசித்தாலும் இதைப் பற்றியெல்லாம் எழுதவில்லை என்றால் வேறு எதைப் பற்றித்தான் எழுதுவது? முதலில் பிளாக்ஷீப் ய...
உலக சினிமா இயக்குனர்களும் அவர்களின் படங்... 1.Meghe dhake tara (1960) படத்தை இயக்கியவர் Ritwik katak Ramkinkar (1975)jukti, takko aar gappo (1974)titash ekti nadir naam (1973)Durbar...

Be the first to comment on "“உணவின் வரலாறு” புத்தக விமர்சனம்! – “தேனிலவு”, “ஹனிமூன்” என்ற பெயர் எப்படி வந்தது?"

Leave a comment

Your email address will not be published.


*