சுஜாதாவின் ஏன்? எதற்கு? எப்படி? புத்தகத்திலிருந்து 25 கேள்வி பதில்கள்! 

சுஜாதா எழுதிய புத்தகங்களில் ரொம்ப பிராடு தனம் நிறைந்த புத்தகம் என்றால் அது கண்டிப்பாக அவர் எழுதிய “சிறுகதை எழுதுவது எப்படி?” என்ற புத்தகம் தான். அந்த புத்தகத்தின் முன்னுரையில் சுஜாதாவே தன்னுடைய ஏமாற்று தனத்தை ஒப்புக் கொண்டிருப்பார். அந்த மாதிரி புத்தகங்கள் வாங்கி ஏமாறுவதற்கு பதில் அவர் விகடனில் வாசகர் கேள்விகளுக்கு எழுதிய பதில்கள் நிரம்பிய “ஏன் ? எதற்கு ? எப்படி ?” என்ற புத்தகத்தை வாங்கி பயன் அடையலாம். விஞ்ஞானம் சார்ந்த அனைத்து கேள்விகளுக்கும் சுஜாதா சிறப்பாக பதில் அளித்துள்ள இந்த புத்தகம் இப்போது கிண்டிலிலும் கிடைக்கிறது. கீழே இருப்பவை வாசகர் கேட்ட கேள்விகளுக்கு சுஜாதா எழுதிய பதில்களின் தொகுப்பு. இதுபோல இன்னும் நிறைய விஞ்ஞானம் சார்ந்த கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். காலம் மாறினாலும் சில விஞ்ஞான கேள்விகளுக்கான பதில்கள் மாறுவதில்லை. அந்த வகையில் இந்த புத்தகம் வெளியாகி பல வருடங்கள் ஆனாலும் சில கேள்வி பதில்கள் இன்றும் சுவாரஸ்யமாக இருக்கின்றன. படித்து மகிழுங்கள். 

 

  1. அமெரிக்க நாட்டில் வீசும் புயலைக்கூட ஆண்புயல், பெண்புயல் என ‘பால்’ பிரித்துள்ளார்களாமே… இதுபற்றி? 

புயல் வகைகளுக்கு அவர்களுக்கு Hurricane, Typhoon, Tornado, Storm இப்படி பல பெயர்கள் உண்டு. இதில் வானுக்கும் பூமிக்குமாக ராட்சதத் துதிக்கை போல நகர்ந்துவந்து ஊரையே கபளீகரம் செய்யும் டொர்னாடோ, திகிலின் உச்சம். ஒரு குறிப்பிட்ட புயல் ஒரு வாரமோ, பத்து நாளோ இருந்துவிட்டுக் கரைந்து போவதால் டி.வி-யிலும் செய்தித்தாள்களிலும் இதற்குத் தற்காலிகமாகப் பெயரிட வேண்டியுள்ளது. பெண் பெயர் வைத்தால் மக்கள் அதிகம் படிப்பார்கள் என்பது நடைமுறையில் நான் கண்ட உண்மை. பெண்புயல்கள் எப்போதுமே சுவாரஸ்யமானவை.

  1. மாஸ்டர், கொக்கு ஒற்றைக்காலில் நிற்கிறதே, அது ஏன்? இரண்டு கால்களும் சமமில்லையா? 

இல்லை… ஒரே இடத்தில் அதிக நேரம் நிற்பதால் ஏற்படும் வலியா? 

கொக்கு எப்போதும் ஒற்றைக்காலில் நிற்பதில்லை. மீன் வரக் காத்திருக்கும்போது தண்ணீருக்கடியில் அதிகம் தெரியாமல் இருக்க, ஒற்றைக்காலில் நிற்கிறதாம்.

  1. ஒருவரின் தலைமுடியை வைத்தே அவர் உருவத்தையோ, தன்மைகளையோ கண்டுபிடித்து விடலாமா?

உருவத்தை முடியாது. தன்மைகளைக் கண்டுபிடிக்கலாம் – டி.என்.ஏ. அலசல் மூலம். செலவு அதிகமாகும். ஆசாமி உயிருடனிருந்தால் போலீஸ் முறைகள் சிக்கனமானவை. இரண்டு பேரைக் கூப்பிட்டு நாலு தட்டுத் தட்டினால் போதும்… சரித்திரமே கிடைத்துவிடும்.

  1. விலங்குகளில்கூட ‘அலி’ இனம் உள்ளதா? எங்கள் கடைக்கு முன்பாக ஒரு நாய் இருக்கிறது. அதற்கு ஆண் உறுப்பு இல்லை. அது நான்கு வருடமாகக் கர்ப்பமும் ஆகவில்லை. ஆண் நாய்கள் அதைச் சீண்டவில்லை. இது சாத்தியமா? 

இனம் என்பதைவிட, மலட்டுத்தன்மையுள்ள நாய் என்றுதான் உங்கள் நாயைச் சொல்ல வேண்டும். நாய்களுக்கு ஆபரேஷன் பண்ணிவிடுவது இப்போதெல்லாம் சகஜம். தெரு நாய்கள் குறையும். வீட்டு நாய்கள் வருஷா வருஷம் குட்டி போடாது!

  1. ‘அறிவியல் ஹைக்கூ’ ஒண்ணு, ரெண்டை எடுத்து வுடு வாத்யாரே… கேக்கலாம்? 

1.​ஸ்ரீராமஜெயம் எழுதிவிட்டுத் தொடங்கினேன் கம்ப்யூட்டர் ப்ரோக்ராம். 2.​விண்வெளி சென்று திரும்பினால் வயசாகிவிட்டது காதலிக்கு… 3.​அகழ்வாராய்ச்சி தோண்டலில் அகப்பட்டது கோகோ கோலா பாட்டில்.

  1. விஞ்ஞானத்தைப் பற்றி ‘A’ கூடத் தெரியாத நான், ‘A to Z’ வரை தெரிந்த உங்களிடம் கேள்வி கேட்பது எதனால் ? விஞ்ஞான ரீதியாக விளக்கம் தாருங்கள் பார்ப்போம். [பி.கு: ‘விஞ்ஞானம் என்று கேள்வியால் எழுதிவிட்டாலே, சுஜாதா பதில் சொல்லி விடுவார்’ ன்று என் நண்பன் சொன்னான், பார்க்கலாம்!] 

உங்கள் நண்பன் சொன்னது தப்பு. இம்மாதிரி என்னை உசுப்பும் கேள்விகளுக்கெல்லாம் பதில்சொல்ல மாட்டேன். ரம்பாவின் மாறுகண்ணுக்கு விஞ்ஞான ரீதியாக விளக்கம் தரவும் என்று ஒருவர் கேட்டார் – எப்படியும் ரம்பாவின் படத்தைப் போடுவார்கள் என்கிற நம்பிக்கையில்! 

  1. சூரியன் உதிப்பதற்கும் தாமரை மலர்வதற்கும் நிஜமாக சம்பந்தமுண்டா? 

தாமரை என்ன… உலகிலுள்ள அனைத்துத் தாவரங்கள் மலர்வதற்கும் வளர்வதற்கும் சூரியனுக்குச் சம்பந்தம் உண்டு. சூரியன்தான் நாம் தொழவேண்டிய உண்மையான கடவுள்! 

  1. அது என்ன.. டக்வொர்த் லீவிஸ் மெத்தட்? அவர்கள் எடுத்த மொத்த ரன்கள், நாம் இழந்த விக்கெட்டுகள்… இவை இரண்டையும் வைத்து ஒரு பொட்டைக் கணக்குப் போட்டு, ‘கடைசி ஓவரில் 100 ரன் அடித்தால் நீ ஜெயிப்பாய்’ என்று சொல்லும் அபத்தம். இதை டக்வொர்த்தைத் தவிர, யாரும் சரியாகப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. எளிமையாக ஒருமுறை தேவைப்படுகிறது. 
  2. இதே வங்காள விரிகுடாவில்தானே அந்தமான் – நிக்கோபார் தீவுகளும் உள்ளன. அங்கு மட்டும் பளிங்கு போன்ற கடல்நீர் எப்படிச் சாத்தியம்? 

கடல்நீரின் தெளிவு – கடலின் அமைதி, சூழ்நிலையின் தூய்மை, கழிசடைகள் கலக்காதது போன்ற விஷயங்களைச் சார்ந்தது. பொறுத்திருங்கள்… சுற்றுலாப் பயணிகள் அதிகமாக, அந்தமான் – நிக்கோபாரும் சென்னை ரேஞ்சுக்கு வந்துவிடும். 

  1. கேயாஸ் தியரி என்பது என்ன? விளக்குங்களேன்… புரிகிறதா பார்க்கிறோம்! 

கேயாஸ் என்பது கிரேக்க வார்த்தை. ‘பெரும் பாழ்’ என்றுதான் முதலில் அதற்குப் பொருளாக இருந்தது. வெறும் பாழாக இருந்தால் தொந்தரவில்லை. அது குழப்பமாகும்போதுதான் சிக்கல். 1975-ல் கணிதவியலாளர் ஜேம்ஸ் யார்க் இந்தப் பதத்தை முதலில் பிரயோகித்த போது ‘ஒழுங்கான, ஒழுங்கற்ற தன்மை’தான் கேயாஸ் என்றார். கேயாஸ் தியரி, ஒழுங்கற்றது போலிருக்கும் விஷயங்களில் ஒழுங்கைத் தேடும் இயல். 1969-ல் எட்வர்ட் லோரென்ஸ் என்னும் எம்.ஐ.டி. வானிலை ஆராய்ச்சியாளர், பருவ மாற்றங்களை கம்ப்யூட்டரில் அமைத்தார். கேயாஸ் இங்குதான் துவங்கியது என்று சொல்லலாம். வானிலை ஒருநாளைப் போல் ஒருநாள் இருக்காது என்றாலும் வருடம் முழுவதும் பார்க்கும்போது மழையோ, புயலோ, காற்றோ வருவதில் ஒருவிதமான ஒழுங்கு இருப்பதை நாமே கவனித்திருக்கிறோம். ஐப்பசி மாசம் மழை, ஆடி மாசம் வெள்ளம் – காற்று, மே மாசம் வெயில், டிசம்பரில் குளிர். அன்றாட வானிலையை நாம் சரியாகக் கணிக்க முடியவில்லையெனினும் வானிலை ஒழுங்கற்ற ஒழுங்கில்தான் இயங்குகிறது. இதை கம்ப்யூட்டர் மூலம் மாடல் அமைத்துச் சொல்வதற்கு பெரிய்ய சூப்பர் கணிப்பொறிகள் தேவைப்பட்டன. பளிங்கு கடலோரம்… அதெல்லாம் சரி… தாமரைக்கும் ‘நட்சத்திர’த்துக்கும் என்ன சம்பந்தம்?! லோரென்ஸ் ‘வண்ணத்துப்பூச்சி விளைவு’ என்று ஒரு சங்கதி சொன்னார் 1970-ல். அவர் எழுதிய ஒரு கட்டுரையின் தலைப்பு ‘பிரேசிலில் வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்பு, டெக்ஸாஸில் புழுதிச் சுழற்புயலை எழுப்புமா?’ என்பது. அதாவது, சின்னச் சின்ன விளைவுகள் ஒத்துழைத்து, பெரிய விளைவை ஏற்படுத்துமா என்பதே அவர் கேள்வி. பொதுவாக இயற்பியல், வேதியியல், பொறியியல் சார்ந்த ஃபார்முலாக்களை எல்லாம் ‘லீனியர்’ என்பார்கள். மாற்றங்களுக்கும் விளைவுகளுக்கும் நேரான தொடர்பு, இருக்கும். ஒரு காரின் ஆக்ஸிலேட்டரை அழுத்த அழுத்த, காரின் வேகம் அதிகரிக்கும். இது லீனியர். காரில் பிஸ்டன் ரிங்கோ, கிளட்சோ தேய்ந்திருந்தால் ஆக்ஸிலேட்டரை அழுத்தினால் திணறும். ‘இரு வரேன்…’ என்னும். இது நான்-லீனியர். வாழ்வில் பல விஷயங்கள் இவ்வாறு நான்-லீனியர் என்றார் லோரென்ஸ். உதாரணம், மக்கள்தொகைப் பெருக்கம். மக்கள்தொகை பெருகப் பெருக பிள்ளை பெறுபவர்கள் அதிகரிக்கும் வேகம் மாறிக்கொண்டே வரும். அது மாற மாற… மக்கள் தொகை மென்மேலும் பெருகும். பாரதி பாடியபோது முப்பது கோடி. நூற்றாண்டின் இறுதியில் நூறு கோடியாக மாறியது. ஒரு நான்-லீனியர் சமன்பாட்டால்தான் இவை பலவிதத்திலும் நம் வாழ்வில் குறுக்கிடுகின்றன. பருத்தி விலையிலிருந்து இன்ஃபோசிஸ் பங்கின் விலை வரை எல்லாமே நான்-லீனியர். சதாம் உசேன் மேல் புஷ் படையெடுத்தால், மயிலாப்பூர் தண்ணீர்த்துறை மார்க்கெட்டில் தக்காளி விலை அதிகமாகுமே… இதுவும் ஒரு நான்-லீனியர் சமன்பாடுதான் – கேயாஸ் தியரிப்படி! எப்படி என்று சொல்லலாமா… சதாம் உசேன் மேல் அமெரிக்கா படையெடுத்தால், கச்சா எண்ணெய் விலை அதிகமாகும். க.எண்ணெய் விலை அதிகரித்தால், பெட்ரோல் – டீசல் விலை அதிகமாகும். இதிலிருந்து லாரி ரேட்டுகள் அதிகமாகும். இதிலிருந்து லாரி மூலம் சென்னைக்கு வரும் தக்காளி விலை. கேயாஸ்! உங்கள் வாழ்வின் திருப்புமுனை சம்பவங்களும் கேயாஸ் தியரிப்படித்தான் இயங்குகின்றன. அன்று ஆட்டோ பிடிக்காமல் பஸ் பிடித்துப் போயிருந்தால், உங்களுக்கு இப்படியெல்லாம் நிகழ்ந்திருக்குமா? அன்று அந்த போன்கால் வராமலிருந்தால்? அந்தக் கடிதத்தைக் கிழித்துப் போட்டிருந்தால்… பதில் போடாமலிருந்தால்? அந்த வார்த்தையை வாய் தவறிச் சொல்லாமலிருந்தால்? இவை போன்ற தற்செயலான விஷயங்களின் நீண்ட நாள் விளைவுகள் அனைத்தும் கேயாஸ்தான். நான் இதை வைத்துக்கொண்டு ஒரு நாவலே எழுதியுள்ளேன் (விருப்பமில்லாத் திருப்பங்கள்). 

  1. தியானம் மூலம் ஏழு சக்கரங்களையும் உசுப்பி, குண்டலினி சக்தியை எழுப்புவது என்பதெல்லாம் உண்மையா? தங்களுக்கு அந்த அனுபவம் உண்டா? 

எனக்கு அந்த அனுபவம் இல்லை! எனக்கு யோகா செய்கிறவர்களைப் பார்த்தாலே சக்கரங்கள் நின்றுபோகும். 

  1. சும்மா ஒரு கற்பனைதான். உலகின் அத்தனை ஜீவன்களுக்கும் திடீரென காதல் ஹார்மோன்கள் உற்பத்தியாவது நின்றுபோனால் என்னவெல்லாம் நடக்கும்? 

காதலுக்கென்று தனி ஹார்மோன் கிடையாது. ஆண்ட்ரோஜென், எஸ்ட்ரோஜென், ப்ராஜெஸ்டெரோன், டெஸ்டோஸ்டிரோன் போன்ற ஸ்டீராய்டுகள்தான். இவை உற்பத்தியாவது நின்று போனால் , பூப்படைவதிலிருந்து மூப்பு அடைவது வரை எல்லாவற்றிலும் கோளாறுகள் ஏற்படும். மீசை முளைக்காது, ஆசை நிலைக்காது. இதனால் கொஞ்ச காலத்துக்கு இன நீடிப்பு தடைப்படும். இதுவே தொடர்ந்தால் பரிணாம விதிகள் மாறி, சில செடி கொடிகள் போல asexual reproduction-க்கு மாறிவிடுவோம். ஆணோ, பெண்ணோ தேவைப்பட்டபோது செக்ஸ் இல்லாமல் பிள்ளை பெற்றுக் கொள்ளலாம். செளகரியம். யோசித்துப் பார்த்தால், இன்றைய க்ளோனிங் பரிசோதனைகளே பரிணாம ஏணியின் அடுத்த கட்டம் என்று தோன்றுகிறது. ஒரு விஷயம் தெரியுமோ? ஆண்களுக்கும் எஸ்ட்ரோஜென்கள் ஓரளவுக்கு உண்டு. இந்த ஆண்ட்ரோ, எஸ்ட்ரோ விகிதாசாரம் மாறிவிட்டால் சிலசமயம் விபரீதமாக ஆண்களுக்கு மந்த்ரா ரேஞ்சுக்கு மார்பகங்கள் பெரிதாக வளரும். படிக்கும்போது ஹாஸ்டலில் எங்கள் நண்பன் ஒருவனுக்கு இந்தக் கோளாறு இருந்தது. திடீரென்று நடுராத்திரியில் அலறிக்கொண்டு காரிடார்களில் அவனைத் துரத்துவார்கள். ரொம்ப கஷ்டப்பட்டான்.

  1. ஒலி, ஒளி இவற்றை அளக்க அளவீடுகளும் குறியீடுகளும் உள்ளன. இதுபோல், மனித உடலில் தோன்றும் வலியை (Pain) அளக்க முடியுமா? தனிமனிதன் எந்தளவு வலியைப் பொறுத்துக் கொள்வான்? வலிகளில் அஞ்சு வகை. லேசான வலி, சங்கடமான வலி, வருத்தும் வலி, தாங்கமுடியாத வலி, செத்துப் போய்விடத் தோன்றும் வலி. எது என்பது பேருக்குப் பேர் மாறுபடும். சிலருக்குப் பல்வலி, சிலருக்குத் தலைவலி, சிலருக்கு நெஞ்சுவலி. பெரும்பாலும் பல்வலிதான் முதலிடம் பெறும். 1-லிருந்து 10 வரை மார்க் போடச் சொன்னால், பல்வலிக்கு 9 கொடுக்கலாம். வயிற்றுவலிக்கு 8.5. மூட்டுவலிக்கு 8. ஒற்றைத் தலைவலிக்கு 7. பைல்ஸுக்கு 6.5… இப்படி உங்களுக்கே ஒரு ஸ்கேல் இருக்கும். டாக்டர்களின் ஒருமித்த கருத்து Anal Fissureதான் ராஜா! 
  2. காந்தப் படுக்கை, ஜட்டி, பிரா… உங்கள் கருத்து? 

எல்லாமே வெற்று. மருத்துவத்தில் காந்தம் நமக்குப் பயன்படுவது ஒரேயொரு விதத்தில்தான். NMR என்னும் நியூக்ளியர் மேக்னடிக் ரெஸானன்ஸ் விளைவைப் பயன்படுத்தும் ஸ்கேன் கருவியில், நம் உடலின் உள்பாகங்களைத் தெளிவாகப் பார்க்க முடியும். இந்தக் கருவியில் மிக அதிக சக்தியுள்ள காந்தம் பயன்படுத்துகிறார்கள். ஆகவே எந்த விதத்திலும் நம் உடல், மனநிலைகளைப் பாதிப்பதில்லை.

  1. அமெரிக்காகாரன், கென்னடி ஆட்சியில் நிலவுக்குப் போனது உண்மைதானா? அல்லது உங்கள் வார்த்தைப்படி ஏதும் ‘உட்டாலக்கடியா’ வாத்யாரே?

 அமெரிக்காகாரன் சொன்னது உண்மைதான். ஆனால், கென்னடி ஆட்சியின்போது இல்லை. கென்னடி, மனிதன் நிலவில் கால் வைக்கும் திட்டத்தை அறிவித்தார். அது நிறைவேறுவதைப் பார்ப்பதற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார்! இதை Fox டெலிவிஷனில் கேசிங் என்பவர்தான் கிளப்பிவிட்டார். ‘மனிதன் நிலவில் இறங்கவே இல்லை. எல்லாம் ஏமாற்று’ என்பதற்கு அவர்கள் சொன்ன காரணங்கள்… 1. தொலைக்காட்சி பிம்பங்களில் நட்சத்திரங்களே தென்படவில்லை. 2. வெற்றிவாய்ப்பு மிகமிகச் சிறியது. 3. Capricone One போன்ற சினிமாப் படங்களின் காட்சியும் நாசாவின் காட்சிகளும் ஒன்றுபோல் இருந்தன. செட் போட்டு எடுத்திருக்கலாம். 4. அவர்கள் பட்மெடுத்த அப்போலோ இறங்குவதற்கு முன், பத்து விண்வெளி பைலட்டுகள் இறந்திருக்கிறார்கள் – அவர்கள் உண்மையைச் சொல்ல விரும்பியதால். 5. சந்திரனில் இறங்கிய கலத்துக்குக் கீழே பள்ளமே இல்லை. ‘நிலா டூர் – டுபாக்கூர்’ என்று நக்கல் பண்ணும் வகையில் குறும்புக்கார போட்டோகிராபர் எடுத்த ‘செட்டப்’ படம்… – இப்படி ‘நிழல் சரியில்லை… விண்வெளி வீரர்களால் நிலா(?)வில் நடப்பட்ட கொடி ஆடின விதம் சரியில்லை’ என்று பதினெட்டு காரணங்கள் சொல்லியிருக்கிறார்கள். இவை அனைத்தும் நாசாவினால் மறுக்கப்பட்டிருக்கின்றன.

  1. குடித்தால் போதை வரும். சிலர் கவிதை வருகிறது என்கிறார்களே… எப்படி? 

குடித்தால் சிலருக்குத் தூக்கம் வரும். அதிகம் குடித்தால் வாந்தி வரும். பெண்டாட்டியிடமிருந்து திட்டு வரும். காலையில் தலைவலி வரும். கவிதை வருவதை நான் கண்டதில்லை.

  1. இந்த நூற்றாண்டில் எவையெவை அழிந்துபோகும்? 

பெட்ரோலும் கூட்டுக் குடும்பங்களும் கல்யாணமும் பிள்ளைப்பேறும் தாய்ப்பாசமும் விமான, பஸ் பயணமும் செலுலாய்டு சினிமாவும் டெலிபோனும் பெரும்பாலான வியாதிகளும் கடவுள் பக்தியும் கதை, கவிதைகளும் ரூபாய் நோட்டும்… என ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது அழிந்துபோக. தற்கொலை மட்டும் பாக்கியிருக்கும்.

  1. டாடா, ரிலையன்ஸ் எல்லோரும் பெரிதாக விளம்பரம் செய்யும் சி.டி.எம்.ஏ. செல்போன் வாங்கலாமா?

வாங்கலாம்… வாங்கும் முன் ஒரு டிரையல் பார்த்துவிடுங்கள். அவர்கள் சொல்லும் சுக வசதிகள் எல்லாம் பேப்பரில்தானா? உதாரணமாக, soft hand off, கிரிக்கெட் ரீப்ளே, நாற்பது பைசா, உள் கால்கள் ஃப்ரீ என்று வியாபாரமாவதற்கு என்னென்னவோ சத்தியங்கள் செய்கிறார்கள். ஒவ்வொன்றையும் பரிசோதிக்கவும். conditions apply என்று எறும்பு எழுத்தில் விளம்பர ஓரத்தில் இருந்தால், அந்த வசதி இல்லை என்று அர்த்தம். சென்னை கோயம்பேட்டிலிருந்து கேளம்பாக்கம் வரை பல பேட்டைகளுக்கு அதை எடுத்துச்சென்று பி.எஸ்.என்.எல். போனுக்கும் ஜி.எஸ்.எம். போனுக்கும் டயல் செய்து, கனெக்ஷன் வருகிறதா அல்லது இங்கிலீஷில் மெசேஜ் வருகிறதா பாருங்கள். பெரும்பாலும் சி.டி.எம்.ஏ. என்பது உங்கள் வீட்டுக்கு கேபிள் வழியாக டெலிபோன் இணைப்பு கொடுப்பதற்குப் பதில் ஒயர்லஸ் வழியான எக்ஸ்சேஞ்சுடன் உங்களை இணைப்பதுதான். டெக்னாலஜி உயர்தரமானதுதான். அமெரிக்காவில் இது அதிகம் பிரபலம். ஆனால், நம் நாட்டில் எண்பது விழுக்காடு ஜி.எஸ்.எம். என்னும் ஐரோப்பிய டெக்னாலஜி. வெளியூர் போனாலோ, நகருக்கு வெளியே போனாலோ கேட்காது என்றால் வேண்டாம். கே. ரத்தினராஜ், தஞ்சை. 

  1. என்ன டி.வி. வாங்கலாம்?

 நீங்கள் ஃப்ளாட்வாசியாகவோ சிறிய வீட்டில் இருப்பவரோ என்றால், 20 இஞ்ச்சுக்குமேல் வேண்டாம். பத்தாயிரம் ரூபாய் ரேஞ்சுக்குக் கிடைக்கும். அறுபது சேனலாவது கிடைக்க ஹைபாண்ட் (band) உள்ளதாக இருக்கட்டும். எல்லா சேனல்களும் மணல் இல்லாமல் தெரிய வேண்டும். ஆட்டோ ட்யூன் இருக்க வேண்டும். காண்ட்ராஸ்ட், ப்ரைட்னஸ் போன்றவற்றைத் தானே அட்ஜஸ்ட் செய்து கொள்ளுமா… கேளுங்கள். Flat Screen இருந்தால் உத்தமம். கே டி.வி.யில் சினிமா பாட்டுப் போடும்போது சி.டி. ப்ளேயரில் கேட்பது போலக் கேட்க வேண்டும். சர்வீஸ் பண்ணுவதற்கான கியாரண்டியைப் பாருங்கள். அவர்கள் கொடுத்த முகவரியில் ஆபீஸ் இருக்கிறதா பாருங்கள். இந்தியாவில் கிடைக்கும் எல்லா மாடல்களும் கொரியா – ஜப்பான் மாடல்கள்தான். எல்லாமே ஒரு தரத்துக்கு மேல் இருக்கும். செகண்ட் ஹாண்ட் வாங்காதீர்கள். பிக்சர் ட்யூப் போனால் ஸ்பேர் விலைக்கு புது டி.வி. வாங்கிவிடலாம். ஆமாம்… இன்னும் டி.வி. வாங்கவில்லையா? ‘வேர்ல்டு கப்’ முடிந்துவிட்டதே… இதற்குப் பின் எப்படி மெகா சீரியல்களை சகித்துக்கொள்ளப் போகிறீர்கள்?  

  1. வீட்டில் எந்தப் பானையில் கருவாடு இருக்கு, எந்த உறியில் வெண்ணெய் தொங்குது என்று மோப்பம் பிடித்துக் கவிழ்ப்பதில் பூனைதான் சிறந்து விளங்குகிறது. ஆனால், போலீஸ்காரர்கள் மோப்பம் பிடிக்கப் பூனையை விட்டுவிட்டு நாயைப் பயன்படுத்துவது ஏன்? 

பூனை, நாய்க்கெல்லாம் நம்மைவிட இரண்டு லட்சம் மடங்கு அதிக மோப்பசக்தி; நம்மைவிட ஐம்பது மடங்கு அதிக அளவில் ‘ரிசெப்டர்’ செல்கள் உள்ளன. நாயின் மோப்பசக்தி ரொம்ப நுட்பமானது. தோசை, வடை, அடையெல்லாம் அதற்கு வித்தியாசம் தெரியும். சூர்யாவில் வாங்கியதா, கற்பகாம்பாள் மெஸ்ஸா… இல்லை, சரவண பவனா என்பதைக்கூட எங்கள் கிவி சொல்லி விடுவான். பூனை சொன்ன பேச்சு கேட்காது. நாய் கேட்கும். மற்றபடி நீங்கள் சொல்வதுபோல் மோப்பசக்தி இரண்டுக்குமே அதிகம்தான்.  

  1. விமானங்களில் இருப்பதைப் போல கொலம்பியா போன்ற ராக்கெட்களிலும் கறுப்புப் பெட்டி உண்டா? 

கறுப்புப் பெட்டி என்ன… அதைவிட படு நுண்ணிய வகையில் தகவல்களைத் திரட்டி, கொலம்பியா விண்கல ஓட்டிகளின் இதயத் துடிப்பிலிருந்து ரத்த அழுத்தம் வரை அத்தனை செயல்பாடுகளையும் டெலிமெட்ரி மூலம் கணத்துக்குக் கணம் பூமிக்கு அனுப்பிக்கொண்டேதான் இருந்தார்கள். இத்தனை வசதி இருந்தும் கடைசி நிமிட அபாயத்தைக் கணித்தோ, கண்டுபிடித்தோ கலத்தில் இருந்தவர்களைக் காப்பாற்ற முடியவில்லை! சொன்ன பேச்சைக் கேட்பதும்… கேட்காததும்… நவீனரக விமானங்களில் கறுப்புப் பெட்டிகளை அதன் வாலில் வைக்கிறார்கள். காக்பிட் பேச்சுகள், லாண்டிங் கியர் நிலைமை, இன்ஜின் சுழல் வேகம், விமானத்தைக் கட்டுப்படுத்தும் எயிலிரான், ரட்டர் ஆகியவற்றின் நிலை அனைத்தையும் இந்தக் கறுப்புப் பெட்டி ரிக்கார்ட் செய்து பத்திரமாக வைத்திருக்கும்.

  1. வாய்மொழி பேச அவசியம் இல்லாத அளவுக்கு நாம் ஒரு தகவலை ஒருவரிடம் சொல்ல விரும்பினால், கையில் ஒரு எலெக்ட்ரானிக் சிப்பைப் பொருத்திக்கொள்வதன் மூலம் மனம் வழியாக எண்ணங்களைச் செலுத்திக்கொள்ள முடியுமாமே… விரைவில் நிஜமாகப் போகிற அறிவியல் புரட்சியா இது? 

சிப் இல்லாமலேயே முடியுமே – காதலர்களுக்கு. என்.சி. ராகவன், தென்காசி. 

  1. ‘ப்ளூடூத் டெக்னாலஜி’ என்று காற்றுவாக்கில் காதில் விழுந்தது. விளக்குங்களேன் ப்ளீஸ்! 

இன்று மொபைல் கம்யூனிகேஷன் – நடமாடும் செய்தித் தொடர்பு என்பது மெள்ள மெள்ள மூன்று வம்சங்களாக வளர்ந்திருக்கிறது. இவற்றை 1ஜி, 2ஜி, 3ஜி என்கிறார்கள். 1ஜி என்பது அனலாக். அமெரிக்கா அவசரப்பட்டு ஆரம்பித்த செல்போன் பழைய முறை. 2ஜி என்பது இப்போது பரவலாகப் பயன்படும் டிஜிட்டல் இணைப்பு முறை. 3ஜி என்பது இப்போது நடுவே பல மாறுதல்கள் வந்தபின் அறிமுகத்தில் உள்ளது. இது நிறைவு பெறும்போது செல்போன், இன்டர்நெட், விடியோ, ஆடியோ, மல்டி மீடியா எல்லாமே ஒரே மாதிரி செய்திகளாகப் பரிமாற்றம் செய்துகொள்ள முடியும். ப்ளூடூத் என்பது 2.4 கிகா ஹெர்ட்ஸ் ரேடியோவைப் பயன்படுத்தி 720 கிலோபிட் வேகத்தில் வீட்டுச் சாதனங்களை ரிமோட்டிலிருந்து உலகில் எங்கிருந்தாலும் நெட் மூலம் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம்! கம்ப்யூட்டர்கள், கீ போர்டுகள், பிரிண்டர்கள், ஸ்டீரியோக்கள், வாஷிங் மெஷின்கள், மைக்ரோவேவ் அவென் எதையும் ப்ளூடூத் வசதி கொடுத்து தூரத்திலிருந்து இயக்க முடியும். ஒவ்வொரு சாதனத்துக்கும் ஒரு டெக்னிக்கல் முகவரி கொடுக்கப்பட்டு, அவற்றை இயக்குவதில் பத்திரமும் ரகசியமும் பாதுகாப்பும் தரப்படும். இந்த டெக்னாலஜியை முதலில் ஆரம்பித்தது எரிக்ஸன் என்னும் ஐரோப்பிய கம்பெனி. பிற்பாடு ஐ.பி.எம்., இன்டெல் மற்றும் ஜப்பானிய கம்பெனிகள் சேர்ந்துகொண்டன. ப்ளூடூத் என்கிற விநோதமான பெயர் எப்படி வந்தது? ப்ளூடூத் என்னும் அரசனின் பெயர் அது. அவன் ஸ்காண்டிநேவிய நாடுகளை இணைத்தானாம். அதுபோல் இந்த டெக்னாலஜி, சாதனங்களை இணைக்கிறது. எதிர்காலத்தில் கேபிளே தேவையின்றி எல்லாமே காற்றில் போய்விடும். 

  1. சமீபத்திய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளிலேயே தங்களை வியப்பில் ஆழ்த்தியது எது? சீறிக் கிளம்பும் கொலம்பியா…

 Embryonic Stem Cells எங்கிற இன்னும் வளராத ஆரம்பகால செல்களைத் தனிப்படுத்துவதுதான் என்னை வியப்பில் ஆழ்த்தியது. எதிர்காலத்தில் Cloning என்பது செல்போன் போல பரவலாகும். கிச்சாமி: ‘டாக்டர், இந்த வாரம் Clone பண்ணிக்கலாமான்னு யோசிக்கிறேன்.’ டாக்டர்: ‘Clone பண்ணிக்கறதுக்கு முன்னாடி ஷேவ் பண்ணிட்டு வாங்க..’  

  1. வயாக்ரா எப்படி வேலை செய்கிறது? ஹி… ஹி… சும்மா தெரிந்து வைத்துக்கொள்ளலாம் என்றுதான்! 

வயாக்ரா பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன் நம் ஆண் உறுப்பு என்னும் அற்புதத்தைப் பற்றிக் கொஞ்சம் சொல்கிறேன். மோனாலிசாவை வரைந்த லியனார்டோ டாவின்ஸி இதற்குத் தனியே ஒரு மனம் இருக்கிறது என்று நம்பினார். நம்மூரிலும் அறிஞர்கள் பல பேர் அப்படி நினைக்கிறார்கள். ‘எப்போ எழுவாயோ எப்போ விழுவாயோ தப்பாமல் சொல்ல முடியலையே – இப்போ எதன்கா ரனமும் இலாது எழுந்தாய் புதன்கிழமை என்னவா னாய்’ என்று ஒரு தனிப்பாடலே இருக்கிறது. நாம் விரும்பும் போது ‘அது’ சுருங்குகிறது… விரும்பாதபோது இரும்பாகிறது. தன் இஷ்டத்துக்குத்தான் செயல்படுவதாகத் தோன்றும். லியனார்டோ பரிசோதனைகள்கூடச் செய்தார். தூக்கிலிடப் பட்டவனின் ஆண் உறுப்பை உடனே நீக்கிப் பிரித்துப் பார்த்ததில் அதில் ரத்த சப்ளை நிறைந்திருப்பதைக் கண்டுபிடித்தார் (பாவம்… கடைசி சமயத்தில் காதலியை நினைத்திருக்கலாம்). மூளை – முதுகுத்தண்டு – ஆணுறுப்பு இணைப்பு இப்படித்தான்! இன்றைய ஆராய்ச்சிகளின்படி, ஆண் உறுப்புக்கு வேலை வரும்போது அதற்குள் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. ஆனால், டாவின்ஸி சொன்னதுபோல் அதற்குத் தனி மனம் கிடையாது. அதைக் கட்டுப்படுத்துவது மூளையும் மைய நரம்பு மண்டலமும்தான். இதைப் பலர் ஆராய்ந்திருக்கிறார்கள். விறைப்பில் வரும் கோளாறுகளை ஆராய எரக்டைல் டிஸ்ஃபங்ஷன் என்று ஓர் இயலே இருக்கிறது. சாதாரணமான தினங்களில் மனிதன் தன் மற்ற வேலைகளைக் கவனித்துக் கொண்டிருக்கையில் செக்ஸ் தேவையில்லை. ‘பினிஸ்’ என்னும் ஆணுறுப்புக்கு ரத்தம் உபரியாகப் போகாமல் சிம்பத்தட்டிக் நெர்வ்ஸ் சிஸ்டம் கட்டுப்படுத்தி விடுகிறது. அதனால் ‘அது’ காற்றடிக்காத நேரத்துக் கொடிபோல் தாழ்ந்து இருக்கும். நம் ஆணுறுப்பின் நடத்தை இரண்டுவிதக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. ஒரு நரம்பு அமைப்பு, அதன் விறைப்பைத் தடுக்கிறது. மற்றொன்று ஏற்படுத்துகிறது. மூளையிலோ, ஏதாவது ஓர் இன்ப ஞாபகத்திலோ, வாசனையாலோ, ஏதாவது ஒரு காதல் எண்ணத்தாலோ… அல்லது பக்கத்தில் இருப்பவர் தொடுகையாலோ, சகவாசத்தாலோ, கையாளுவதாலோ, அதைத் தொந்தரவு செய்வதாலோ, எங்கிருந்தும் சிக்னல் வரலாம். நரம்பு மண்டலம் இதற்கான ந்யூரோ ட்ரான்ஸ்மிட்டர்களை சிக்னல் வந்ததும் அவிழ்த்து விடுகிறது. நைட்ரிக் ஆக்ஸைடு, அசிடைல்கோலைன், டோப்பாமைன் போன்றவை முக்கியம்! இதனால் ஆணுறுப்புக்குப் போகும் ரத்தக்குழாய்கள் பெரிதாகின்றன. அதிக ரத்தம் பாய்கிறது. அதில் இருக்கும் பஞ்சுத்தனமான அறைகள் ரத்தத்தால் நிரம்புகின்றன. இதனால் அறைகள் பெரிதாகி ரத்தக்குழாய்களை மூடிவிடுகின்றன. உள்ளே ரத்தம் நிரம்பி விடுதலை பெறாமல் தேங்கிவிட… ஆணுறுப்பு பெரிசாகிறது! நீங்கள் கேட்கும் வயாக்ரா என்பது சில்டினாஃபில் என்னும் வஸ்து. நைட்ரிக் ஆக்ஸைடு இதே வேலையைத்தான் செய்கிறது. ஆணுறுப்பின் தசை இறுக்கத்தை ஒரு நேரத்துக்குப் பிறகு நீக்கிவிடுகிற கெமிக்கல்களை செயலற்றதாக்கிவிடுகிறது. இதனால், ரொம்ப நேரம் உறுப்பு டென்ஷனாகியே நிற்கிறது. முன்னவர்கள் நம்பியிருந்தபடி ஆணுறுப்புக்கு தனிப்பட்ட மனம் இல்லையெனினும் அது அனுப்பும் சிக்னல்கள் மூலம் மூளைக்கு அவ்வப்போது செய்தி போகிறது. காரியம் முடிந்ததும் ரத்த சப்ளை நீக்கப்பட்டு, பழையபடி ஆகிவிடும். முதுகுத்தண்டோடு சேர்ந்து செயல்படும் சிம்பத்தட்டிக் நெர்வ்ஸ் சிஸ்டத்தின் செயல்பாட்டை அதிகமாக்கும் குளிர் ஜுரம், வேண்டாத கூட்டு, சோர்ந்த மனநிலை, வேறு கவனங்கள் போன்ற குறிப்பிட்ட சில சமாசாரங்களும் ஆண் உறுப்பைச் சுருக்கும். இதெல்லாம் இல்லாமல் ஓய்வு பெறும்போதுகூட (உதாரணம்: தூக்கத்தில்) காரணமில்லாமல் விறைத்துக் கொள்ளும். இதுவும் அவ்வப்போது தேவைதான் என்கிறார்கள். தம்பிக்கு அவ்வப்போது புது ரத்தம் பாய்ச்சியாக வேண்டும். லேட்டஸ்ட்டாக இதைக் கட்டுப்படுத்தும் ஸ்தலத்தை கரெக்டாகக் கண்டுபிடித்துள்ளார்கள். நம் நரம்பு மண்டலத்தில் முதுகுத்தண்டில் டி12-க்கும் எஸ் 3-க்கும் இடையே வெர்டிப்ராவில் ஓர் இடம் இருக்கிறதாம். அந்த இடத்தில் தொட்டால் ‘டடாங்’ என்று எழுந்து நிற்குமாம்! (என் நண்பன் ஒருவன் ஐ.நா.வில் பெரிய வேலையில் இருக்கிறான். அவனுக்குத் தொப்புளில் குறுகுறு பண்ணினால் நிற்கிறதாம்!) என்னவெல்லாம் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள் பாருங்கள்! வயாக்ராவை இப்போதெல்லாம் நெட்டில் க்ரெடிட் கார்டில் ஆர்டர் செய்யலாம். அதிகம் சாப்பிட்டு வைக்காதீர்கள். பக்க விளைவு சிலவேளை பயங்கரமாக இருக்குமாம். ‘வசந்த் ஜோக்’ ஒன்று.. ஒருவன் சரியாகக் கேட்டுக்கொள்ளாமல், தினம் ஒரு வயாக்ரா ஏழு நாளைக்கு சாப்பிடுவதற்கு பதில், ஏழு வயாக்ராவை ஒரு நாளைக்குச் சாப்பிட்டு விட்டானாம். ஓயாத இன்பத்தில் செத்தே போய்விட்டானாம். சவப்பெட்டியை மூட முடியவில்லையாம்! ‘அவன்’ செயல் எல்லாமே (மேலே இருக்கும்) மூளையினால்தான் என்று நினைத்திருந்த காலத்தில் உருவான கிரேக்கச் சிற்பம்…

 

Related Articles

ஜடேஜாவிடம் மன்னிப்பு கேட்ட சிஎஸ்கே ரசிகர... ஐபிஎல் தொடர் 11வது சீசனில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா அணிக்கான போட்டியின் போது, ஆட்டம் தொடங்கிய சில நிமிடங...
வதந்திகள் பரவாமல் இருக்க சில புதிய கட்டு... ஆகஸ்ட் ஐந்தாம் தேதி நண்பர்கள் தினமாம். ஆனால் நேற்று யாரோ ஒருவர் வாட்சப்பில் நண்பர்கள் தினம் வாழ்த்துக் கூற, மக்களும் நேற்று தான் உலக நண்பர்கள் தினம் ப...
கடந்த 5 ஆண்டுக ளில் 187 ஆணவ படுகொலைகள்! ... கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாட்சப்பில் சாதி ஆணவ படுகொலை வீடியோ தீயாக பரவியதை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். அந்த வீடியோவில் இள...
அவர் சீக்கிரம் சாக வேண்டும் என்று நினைப்... திராவிட முன்னேற்ற கழக தலைவர் தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷியமே. கடந்த ஜூன் மாதம் தனது ...

Be the first to comment on "சுஜாதாவின் ஏன்? எதற்கு? எப்படி? புத்தகத்திலிருந்து 25 கேள்வி பதில்கள்! "

Leave a comment

Your email address will not be published.


*