ஒரு படத்தை பார்த்தால் நமக்கு மூன்றுவிதமான உணர்வுகள் ஏற்படும். ஒன்று – படம் சூப்பர்ப்பா… இந்தப் படத்த எத்தன தடவ வேணாலும் பார்க்கலாம் என்று சொல்ல வைக்கும் ரகம். இரண்டு – படம் படுமொக்கைப்பா… உட்கார்ந்திருக்க முடியல என்று சொல்ல வைக்கும் ரகம். மூன்று – பரவால… ரொம்ப மொக்கைனு சொல்ல முடியாது, ரொம்ப சூப்பர்னு சொல்ல முடியாது என்று சொல்ல வைக்கும் ரகம். இந்த மூன்றுவிதமான படங்களை பற்றி பார்ப்போம்.
ஓ மை கடவுளே – சூப்பரான படம்
சிறுவயது முதலே நாயகனும் நாயகியும் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறார்கள். வளர்ந்து திருமண வயதை அடைந்ததும் நாயகிக்கு நாயகன் மீது காதல் வருகிறது. திருமணம் செய்துகொள்ளலாமா என நாயகி கேட்க நாயகனும் யதார்த்தமாக ஓகே சொல்கிறான். தோழியாக இருந்தவரை சந்தேகப்படாத நாயகி மனைவி ஆனதும் நாயகன் மீது சந்தேகப்படுகிறார். இதனால் நாயகன் டைவர்ஸ் வரைக்கும் செல்கிறான். டைவர்ஸ் ஆனதா இல்லையா என்பதே மீதிக்கதை.
முதலில் அழகழகான வசனங்கள் எழுதிய இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவின் கைக்கு முத்தங்கள்.
தேவையில்லாத காட்சிகள் என்று இந்தப் படத்தில் எதுவுமே இல்லை. படத்தின் ஆரம்பத்தில் அணு அர்ஜூனிடம் பைக் ரைடு போலாமா என்பார், அதேபோல அர்ஜூன் நாடக மேடையில் நடித்துக் காட்டி கைதட்டல் வாங்குவார். இந்த இரண்டு காட்சிகளும் போகிறபோக்கில் வருகிற காட்சிகள் என நினைத்தேன். படம் பார்க்க பார்க்க தான் தெரிந்தது எல்லா காட்சிகளுமே ஒன்றோடொன்று தொடர்புடையது என்று.
ஒரு பாரில் தொடங்குகிறது அர்ஜூனின் காதல் கதை. அணு, மீரா, அர்ஜூன், ஷா ரா நான்கு பேரும் அறிமுகமாகிறார்கள். கிளைமேக்ஸில் இதே பாரில் அணு, அர்ஜூன், ஷா ரா மூவரும் இணைகிறார்கள். இந்த இடம் எனக்குப் பிடித்தது.
கக்கூஸ் கம்பெனியில் வேலை பார்ப்பதை கேலிக்குரியது என்பதுபோல காட்டிய காட்சிகள் எனக்கு கோபத்தை உண்டாக்கியது. அடுத்த சில நிமிடங்களில் எம்.எஸ் பாஸ்கர் சார் தான் கக்கூஸ் கம்பெனி தொடங்கியதற்கான காரணத்தை சொல்லும் காட்சியில் மகிழ்ந்தேன். இந்த ஒரு காட்சியில் நீங்கள் என் மனதை கொள்ளை கொண்டுவிட்டீர்கள்.
காதலிக்காக அவளுக்கு தெரிஞ்சவங்களயெல்லாம் வீடியோ எடுத்து அதை பிறந்தநாள் பரிசாக தா என்று அணு சொன்னதும் அர்ஜூன் எதுக்கு அலைச்சல் என்பார். அப்போது நாயகி கூறும் வசனம் சூப்பர். அந்த வசனம் பேசி முடித்ததும் நான் ஒரு பொண்ணுடா என்பார் நாயகி. அதேபோல மீராவின் காதலனை பார்த்து, “நீங்க இன்னும் அவள மறக்கல இல்ல…” என்று நாயகன் வசனம் பேசியதும் அணு அர்ஜூனை ஆச்சர்யமாகப் பார்ப்பார். நாயகனை பார்த்து நாயகி எப்படிடா என்றதும் “நான் ஒரு பையன் அணு” என்பார். இந்த இடங்களை மிகவும் ரசித்தேன்.
கார் டிரைவிங் வேலையை பார்ட் டைமாகப் பார்க்கும் மீராவின் காதலன் பிடித்த வேலையைப் பற்றி பேசும் இடமும் அவருக்கு நேர்ந்த பிரேக்கப் காட்சியின் வசனமும் செம.
ஓ மை கடவுளே என்ற தலைப்பை ஏன் வைத்தார்கள் என்று யோசித்துப் பார்த்தேன். கடவுள் கொடுத்த இன்னொரு வாய்ப்பால் தான் அணுவை அர்ஜூன் புரிந்துகொண்டான் என்பதை உணர்ந்த பிறகு இந்தப் படத்திற்கு இதைவிட பொருத்தமான தலைப்பு கிடைக்குமா என தெரியவில்லை.
டகால்ட்டி – மொக்கையான படம்
மிகப் பெரிய பணக்காரன் ஒருவன் அழகான பெண்களை ஓவியமாக வரைகிறான். ஓவியமாக உள்ள அந்த அழகான பெண்களை ஆள் அனுப்பி நிஜத்தில் கண்டுபிடித்து அந்த பெண்களை பலவந்தப்படுத்தி உடலுறவு வைத்துக் கொள்கிறான் பணக்கார வில்லன். அப்படி அவன் வரையும் ஓவியங்களில் ஒன்று தான் நாயகியின் முகம். சந்தானமும் அவரது நண்பர் யோகி பாபுவும் தருதலையாக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை பண விஷியத்திற்காக லோக்கல் வில்லன் கொல்ல முற்பட ஓவியமாக இருக்கும் நாயகியின் படம் சந்தானத்தை காப்பாற்றுகிறது. இந்தப் போட்டோ எதுக்காக எல்லா ரவுடிங்க கையிலயும் இருக்கு என்பதை தெரிந்துகொண்ட சந்தானம் நாயகியை நான் அழைத்து வருகிறேன் என உறுதி கொடுக்கிறார்.
நாயகியை தேடுகிறார். அவர் தமிழகத்தில் உள்ள தென் மாவட்டத்தில் இருக்கிறார் என தெரிய வந்ததும் தமிழகத்திற்குப் பயணம் செய்து நாயகியை தேடுகிறார். நாயகிக்கோ சினிமாவில் இயக்குனர் ஆக வேண்டும் என்பது கனவு. கலகலப்பு சந்தானத்தைப் போல காசுக்கு ஆள் செட்டப் பண்ணி அதை வீடியோவாக எடுத்து சுற்றிக் கொண்டிருக்கும் நாயகி சென்னைக்குச் சென்று டைரக்டர் ஆகப் போகிறேன் என வீட்டை விட்டு கிளம்புகிறார். அவரை கண்டுபிடித்த சந்தானம் எனக்கு ஷாருக்கான் தெரியும், நாம ஸ்ட்ரெய்ட்டா இந்திப் படம் பண்ணலாம் என பேசி மயக்கி தன்னோடு பயணிக்க வைக்கிறார்.
மும்பை வந்து வில்லனிடம் நாயகியை ஒப்படைத்த பிறகு நாயகியின் அப்பாவித்தனங்களை எண்ணி பார்க்கிறார், அவள் மீது காதல் வருகிறது. வில்லனிடம் வாங்கிய பணத்தை திருப்பி ஒப்படைத்துவிட்டு நாயகியை மீட்க முயல அங்கு தொடங்குகிறது பிரச்சினை. தமிழ் சினிமாவின் வழக்கப்படி அந்த பிரச்சினையை நாயகன் எளிதாக கடந்து ஹீரோயினை மீட்கிறான். இதுதான் படத்தின் கதை.
இந்தக் கதையை தேர்வு செய்த சந்தானத்திற்கு அறிவு இருக்கிறதா, ஒவ்வொரு சீன் நடித்து முடித்த பிறகும் அதை மானிட்டரில் பார்த்து தொலைத்தாரா என கேட்க தோன்றுகிறது. கதையும் படமாக்கப்பட்ட விதமும் அந்த லட்சணத்தில் இருக்கிறது. யோகி பாபு, பிரம்மானந்தம் இருவரும் இருந்தும் எந்தக் காட்சிக்கும் எள்ளளவும் சிரிப்பு வரவில்லை. பாடல்களும் பின்னணி இசையும் சுமார். ஒளிப்பதிவு ஓகே ரகம். நாயகி நல்ல அழகு. ஆனால் அவரை சரியாக பயன்படுத்த தெரியவில்லை இயக்குனருக்கு.
ராதாரவியின் கெட்டப் செம சிரிப்பாக இருந்தது, இந்த லட்சணத்தில் அவர் டெரர் வில்லனாம். காட்டு மொக்கை தனமான ஒரு கதை எழுதிய இந்த இயக்குனர் பிரம்மாண்ட இயக்குனர் திரு. ஷங்கரின் உதவியாளராம். குருவோடு பேர காப்பாத்துங்க டகால்டி இயக்குனரே!
வானம் கொட்டட்டும் – சுமாரான படம்
முதல் காட்சியே ஒளிப்பதிவு பிரம்மாதமாக இருந்தது. சீன் பை சீன் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது.
சித் ஸ்ரீராமின் பின்னணி இசை சூப்பர். கண்ணு தங்கம் ராசாத்தி பாடல், யாருமில்லா காட்டுக்குள்ள நான்தான் ராஜா, செவ்விழி பாடல் இனிமையாக இருந்தது. சிவா ஆனந்தின் பாடல் வரிகள் நன்றாக இருந்தது. கதை வசனம் இரண்டையும் தயாரிப்பாளர் மணிரத்னமும் இயக்குனர் தனாவும் இணைந்து கதை வசனம் எழுதி இருக்கிறார்கள்.
மணிரத்னம் இந்தப் படத்தில் இணைந்து எழுத்துப்பணி ஆற்றியிருப்பது இந்தப் படத்தின் பலவீனம். அவருடைய படத்தைப் போலவே இந்தப் படத்திலும் இயல்புக்கு மீறிய ஏகப்பட்ட செயற்கை காட்சிகள். படைவீரன் படம் கவர்ந்த அளவுக்கு இந்தப் படம் கவரவில்லை.
சரத்குமார் செய்யும் கொலையை பிளாஸ்பேக்காக சொல்லாமல் படத்தின் ஆரம்பத்திலயே வைத்தது சிறப்பு. ஐஸ்வர்யா ராஜேஷ் மடோனா செபாஸ்டின் என்ற இரண்டு நடிக்கத் தெரிந்த இளம் நாயகிகள் மனதை கவர்கிறார்கள். மடோனாவுக்கு கன்னத்தில் லேசாக தொப்பை விழுந்துள்ளது, குறைத்தால் பழையபடி அழகாக இருப்பார். விக்ரம் பிரபு, சாந்தனு என்று இரண்டு இளம் நடிகர்கள் இருந்தும் பாலாஜி சக்திவேல் தான் மனதை அதிகம் கவர்கிறார். இரட்டை கதாபாத்திரத்தில் நந்தா. அவருடைய உடைநடை, முறைப்பு, மௌனம் போன்றவற்றை பார்க்கும்போது மிஷ்கின் படங்கள் நினைவுக்கு வருகிறது. நந்தாவுக்கும் பாலாஜி சக்திவேலுக்கும் மேக்கப் என்ற பெயரில் கரியைப் பூசி வைத்திருப்பது ஏனோ?
சரத்குமார் – ராதிகா காதல் ஜோடியை அதிகம் ரசிக்க முடிகிறது. அவர்கள் பேசும் தேனி வட்டார வழக்கு அருமையாக இருந்தது. ஜெயிலில் இருந்து வெளியில் வந்ததும் சரத்குமார் தன் அண்ணனிடம், “நடுவுல போலீஸ் இல்ல கம்பி இல்ல நல்லா கட்டிப்புடிங்கண்ணே…” என்று சொல்லும் காட்சியிலும் தன் மனைவியிடம், “கட்டுன பொண்டாட்டி… ஆசையா பாத்துக்கிட்ட பொண்டாட்டி… ஜெயில இருந்து வந்ததும் உன்ட்ட தொட்டு பேசறதா தள்ளி நின்னு பேசறதான்னு கூட தெரியல…” என்று சொல்லும் காட்சியிலும் சரத்குமார் மிளிர்கிறார்.
“காசு பணம் இல்லாம கூட சமாளிச்சறலாம்… கட்டுன புருசன் இல்லாம சமாளிக்கிறதுதான் கஷ்டமா இருக்கு…”
“நீங்க ல இருந்து நீ னு மாறிடுச்சு… பணம் அதிகமாக அதிகமாக மரியாதை குறைஞ்சிட்டே போகுது…”
“அம்மாவுக்குத் தெரிஞ்சா பிரச்சினை ஆகும்… அப்ப அம்மாட்ட சொல்லாத…”
“கடல நம்ம பாத்துக்கிட்டே இருந்தா கடல் நம்மள வா வான்னு கூப்ட்ற மாதிரி இருக்குல்ல…”
“சில சமயம் புத்தி வேணாம்னு சொல்லும்… மனசு வேணும்னு சொல்லும்… புத்தி சொல்றத விட்டுட்டு மனசு சொல்றத கேட்டா ஜெயிக்கலாம்…”
“பெரிய ஆளுங்க ஏமாத்தனும்னு நினைச்சா ரொம்ப பெருசா ஏமாத்துவாங்க…”
“பங்களா வீட்டுப் பொண்ணுங்க எதாவது வேல நடக்கனும்னா ஈனு வெள்ளக்கட்டி மாதிரி சிரிப்பீங்க…” போன்ற வசனங்கள் கவனிக்கும்படி இருந்தன.
அப்பாவை வெறுக்கும் நாயகன் அப்பாவை இழந்ததால் தவிக்கும் நாயகி என்று அப்பா சென்டிமென்ட் ஓவர் இந்தப் படத்தில். இருந்தாலும் சலிப்பு தட்டவில்லை ஓரளவுக்கு ரசிக்கும்படி இருக்கிறது படம். நந்தா கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் நன்றாக ஆழமாக அழுத்தமாக எழுதியிருக்கலாம். கிளைமேக்ஸ் கொஞ்சம் சொதப்பலாக உள்ளது, பைட் சீன்கள் படுமோசம்.
Be the first to comment on "சூப்பரான படம்! மொக்கையான படம்! சுமாரான படம்! – மூன்றுவிதமான படைப்புகள்!"