கழிப்பறை பயன்படுத்தாத சமூகம்
தமிழகத்தில் ஆண்கள், பெண்கள் என்று இருபாலினருக்கும் மட்டுமே இதுவரை பொதுக்கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. அதை இந்த இருபாலினரும் எந்த அளவுக்கு முறையாகப் பயன்படுத்தி வருகிறோம் என்பதை பொது இடங்களில் உள்ள சுவரோரம் கவனித்தால் தெரியும். ஆண்களும் சரி, பெண்களும் சரி கொஞ்சம் கூட கூச்சமின்றி தூக்கிப் பிடித்துக்கொண்டு தான் நிற்கிறார்கள்.
அது போன்ற இடங்களில் இங்கு சிறுநீர் கழிக்காதீர். இங்க இருந்து மிகக் குறைந்த தொலைவில் தான் இலவச சிறுநீர் கழிப்பிடம் உள்ளது என்று அறிவிப்பு பலகைகள் வைத்திருந்தும் யாரும் அதை பொருட்படுத்துவது இல்லை. ஐந்தறிவு விலங்குகளாகவே வாழ்ந்து வருகிறார்கள். படிக்காதவர்கள் தான் இப்படி என்றால் படித்தவர்கள் அதற்கும் மேல். அறிவிப்பு பலகைகளை படித்துக்கொண்டே அந்த இடத்தை நாரடிக்கிறார்கள். என்றைக்குத் தான் கழிப்பறை பயன்படுத்தி பழகப் போகிறார்களோ…
பேருந்து நிலையங்களில் எப்படி?
நம்ம ஊர் பேருந்து நிலையங்களில் நுழையும் போது மூக்கைப் பொத்திக் கொள்வது அனிச்சை
செயல் போலாகிவிட்டது. அந்த அளவுக்கு மூத்திர வாடை விளாசும். அப்போதும் திருந்தாமல்
அதன் மேலயே மீண்டும் தங்களது அநாகரிகச் செயலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
கழிப்பறைகளை முறையாகப் பயன்படுத்த தெரியாமல் இருப்பது மட்டுமில்லாமல் அதை
தப்பித்தவறி அவசரத்திற்கு திருநங்கைகள் பயன்படுத்தி விட்டால் அவ்வளவு தான். அந்த
திருநங்கையை எந்த அளவுக்கு அசிங்கப் படுத்த முடியுமோ அந்த,அளவுக்கு அவரை நார் நாராக
கிழித்து தொங்க விட்டுவிடுகிறார்கள். அவர்கள் பயன்படுத்துகிறார்களோ இல்லையோ
திருநங்கைகள் மட்டும் பயன்படுத்திடக் கூடாது என்று வீம்பு பண்ணித் திரிகின்றனர்.
கூட்டமாக இருக்கும் போது மட்டுமே அவர்களால் கழிப்பறையை பயன்படுத்த முடிந்தது.
மற்றவர்களைப் போல அவ்வளவு எளிதாக கூச்சமின்றி தூக்கிப் பிடித்துக் கொண்டும் நிற்க
முடியாது. அவர்களையே இந்த சமூகம் குருகுருவென்று பார்க்கும். இந்நிலையில் தமிழகத்திலயே
முதல்முறையாக சேலம் மாவட்டம் ஓமலூர் பேருந்து நிலையத்தினுள் குளியலறை மற்றும்
கழிவறை கொண்ட சுகாதார வளாகம் தொடங்கப்பட்டுள்ளது.
இதனை திருநங்கைகள் தினமான ஏப்ரல் பதினைந்தாம் தேதி அன்று ஓமலூர் எம்எல்ஏ
வெற்றிவேல் திறந்து வைத்துள்ளார். தங்களது வேண்டுகோளை நிறைவேற்றிய எம்எல்ஏவுக்கு
நன்றி கூறியது மட்டுமல்லாமல், சுகாதார வளாகம் திறக்கப்பட்டதை அடுத்து கேக் வெட்டி
அனைவருக்கும் பகிர்ந்து ஆட்டம் ஒன்று ஆடி கொண்டாடி மகிழ்ந்தனர். இதே போல் மற்ற
பேருந்து நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும் அவர்களுக்கென்று தனியாக ஒரு சுகாதார
வளாகம் அமைத்து தந்தால் அவர்களுடைய சமூகமும் முன்னேறி வரும். எவ்வளவு நாளைக்குத்
தான் ஏய், ச்சீ, இந்தா ப்போ என்று அவர்களை புறக்கணித்துக் கொண்டே இருப்பது. அவர்களும்
மனிதர்கள் தானே.
தமிழகத்தில் இதுதான் முதல் திருநங்கை சுகாதார வளாகம். ஆனால் மற்ற மாநிலங்களில் இதற்கு முன் ஆங்காங்கே திருநங்கைகள் கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. இது போல் இந்தியாவின் பல இடங்களில் திருநங்கைகளுக்கு என்று தனியாக பொதுக் கழிப்பறை உருவாக்க லக்ஷ்மி நாராயணன் திரிபதி என்ற திருநங்கை சமூக சேவகர் முயற்சிகள் செய்து வருகிறார்.
Be the first to comment on "தமிழகத்திலயே முதல்முறையாக திருநங்கைகளுக்காக பொது கழிப்பறை!"