மார்ச் 8 ஆம் தேதி நாடெங்கிலும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்களின்
தியாகங்களை போற்றும் விதத்திலும், அவர்களின் சாதனைகளை அடையாளப்படுத்தும்
வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டில் இயங்கி
வரும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் தங்கள் அலுவலகத்தில் பணி புரிந்து வரும் பெண்களுக்கு
சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தெலங்கானா அரசு மகளிர்
தினத்தை முன்னிட்டு பெண் பணியாளர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. பாலியல்
சமத்துவத்தை உறுதி செய்யும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச
மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.
எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது மகளிர் தினம்?
1900 ஆம் ஆண்டு ஓட்டுரிமை கேட்டு கிட்டத்தட்ட 15000 பெண்கள் நியூயார்க்கில் நடத்திய
பேரணி தான் மகளிர் தினத்தின் மூலம். இந்தப் பேரணி நடந்த பிப்ரவரி 28 ஆம் தேதியை
ஒவ்வொரு ஆண்டும் தேசிய மகளிர் தினமாக கொண்டாடியது அமெரிக்கா. அமெரிக்காவைத்
தொடர்ந்து ஜெர்மனியும் மகளிர் தினத்தை அவர்களின் உரிமைக்காகக் கொண்டாட துவங்கியது.
மார்ச் 19 , 1911 ஆம் ஆண்டு முதன் முதலில் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வை ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மாறும் ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகள்
கொண்டாடின. உலகெங்கிலும் உள்ள ஒரு மில்லியன் ஆண்கள் மற்றும் பெண்கள் பெண்கள்
உரிமைகளை முன்னிறுத்தி பேரணி நடத்தினர்.
1917 ஆம் ஆண்டு தங்களது உரிமைகளுக்காகப் பெருமளவில் ரஷ்யா பெண்கள் கூடி
போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் போராடியது பிப்ரவரியின் கடைசி
ஞாயிற்றுக்கிழமையன்று. கிரேக்க நாட்காட்டியின் படி அன்று மார்ச் 8 ஆம் தேதி.
இருப்பினும் 1975 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச மகளிர் தினத்தை ஒவ்வொரு
ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடுவது என்று முடிவு செய்த பிறகே உலகம் முழுவதும் இது
பிரபலமாக தொடங்கியது.
பெண்களின் மேன்மையை ஒவ்வொரு நாளையும் மகளிர் தினமாக கொண்டாடி
அடையாளப்படுத்துவோம்.
Be the first to comment on "மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் பணியாளர்களுக்கு விடுமுறை அளித்தது தெலங்கானா அரசு"