இயக்குனர் மகிழ்திருமேனி மற்றும் நடிகர் அருண்விஜய் இருவரும் இரண்டாம் முறையாக கைகோர்த்து உருவாக்கி இருக்கும் படம் தடம். இந்தக் கூட்டணிக்கு ஏற்கனவே நல்ல எதிர்பார்ப்பு இருக்க ( தடையறத் தாக்க படம் அப்படிப்பட்ட ஈர்ப்பை பெற்றிருந்தது ) சில தினங்களுக்கு முன் வெளியான இந்தப் படத்தின் சுவாரஸ்யமான ஸ்றீக் பீக் எதிர்பார்ப்பை இன்னும் கொஞ்சம் அதிகப் படுத்தியது. அதனால் தியேட்டரில் ஓரளவு நல்ல கூட்டத்தைப் பார்க்க முடிந்தது.
படம் தொடங்குவதற்கு முன் நிரபராதிகள் தண்டிக்கப்பட கூடாது என்ற அறிவிப்புடன் தொடங்குகிறது. அதன்பிறகு திரையில் தெரிந்த ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை அவ்வளவு ஈர்ப்புடன் வைத்திருந்தது. இடையில் வந்த இரண்டு பாடல்கள் கூட அவ்வளவு அயற்சியை ஏற்படுத்தவில்லை.
எழில், கவின் என்ற இரண்டு கதாபாத்திரங்களாக அருண்விஜய் மிரட்டி இருக்கிறார். ஒரே மாதிரியான ஹேர் ஸ்டைலை வைத்துக்கொண்டு இரண்டு கதாபாத்திரங்களுக்கான வித்தியாசத்தை காட்டுவதெல்லாம் வேற லெவல். அருண்விஜய் இனி உங்களுக்கென்று தனி படை உருவாக வாய்ப்புண்டு. இசையமைப்பாளர் அருண் ராஜுக்கு இந்தப் படம் நல்ல அறிமுகம் என்றாலும் பல இடங்களில் அவருடைய இசை காதை கிழிக்கவே செய்தது. யோகி பாபு காமெடியனாக வராமல் குணச்சித்திர கதாபாத்திரமாக வந்து செல்கிறார். நாயகி அழகாக இருக்கிறார். அவர் தரும் குட்டி குட்டி ரியாக்சன்களும் அவ்வளவு அழகு. படத்தில் ஹீரோயினை காட்டிலும் அதிக கவனம் ஈர்க்கும் கதாபாத்திரங்கள் இருக்கிறது. ஒன்று லேடி போலீஸ் கதாபாத்திரம் இன்னொன்று சோனியா அகர்வால் நடித்த அம்மா கதாபாத்திரம். இருவருமே நடிப்பில் அட்டகாசம் செய்திருக்கிறார்கள்.
ஒரு கொலை, அந்தக் கொலையை செய்தவர்கள் டுவின்ஸ்ஸில் ஒருவன், இருவரில் எவன் அந்தக் கொலையை செய்திருப்பான், கொலை செய்ததற்கு காரணம் என்ன என்று கேள்விகளை ரசிகர்கள் மனதில் ஓடவிட்டு அவர்களை குழப்பி… ரொம்ப யோசிச்சு குழம்பாதிங்க மக்கள்ஸ் என்று கடைசி கிளைமேக்ஸில் ஒவ்வொரு டுவிஸ்டும் அவிழ்கிறது. ஒவ்வொரு டுவிஸ்ட் அவிழும் போதும் உண்மையிலயே மெய் சிலிர்த்துவிடுகிறது.
இயக்குனர் மகிழ் திருமேனி என்ன மனுசன்யா நீ… எப்படிய்யா இவ்வளவு டீடெய்ல் கலெக்ட் பண்ண… இன்னும் ஒருதடவை படத்தைப் பாக்கனும் போல இருக்குய்யா… பார்ட் 2 க்காக வெயிட்டிங்… என்று பார்வையாளர்களை குதூகலிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.
கொலையாளிகள் யார் என்பது இறுதிவரை தெரியாமல் ரசிகர்கள் தவித்தாலும் கொலை செய்ததற்கான காரணம் இதுதான் என்று ஒருசில ரசிகர்கள் முன்பே கணித்துவிட்டனர். இருந்தாலும் அவர்களை இருக்கையில் விட்டு எழாமல் வைத்திருக்கும் திரைக்கதை தான் மாஸ். பிளாஸ்பேக் காட்சிகளில் லேசாக ஆளவந்தான் சாயல் இருந்தாலும் களம் வேறாக அமைந்து வித்தியாசத்தைக் காட்டிவிடுகிறது.
தடையற தாக்க படத்தில் நாயகி நாயகன் இடையே ஜட்டி விவகாரம் இருக்கும். இந்தப் படத்தில் ப்ரா ( ப்ராவுக்குள் ஒளிந்திருக்கும் இன்ஜினியரிங் விஷியத்தைப் பற்றி நாயகன் சொல்லும் இடத்தில் கல்லூரி மாணவர்களிடையே விசில் பறக்கிறது ) விவகாரம் மற்றும் லேடி போலீஸ் முன்பு ஜிப் அவிழ்க்கும் விவகாரம் இருக்கிறது. இதுபோன்ற காட்சிகளை தவிர்த்திருந்தால் யு சர்டிபிகேட் கிடைத்து குடும்பத்துடன் பார்க்க கூடிய படமாக மாறியிருக்கும்.
2018 க்கு “ராட்சசன்” என்றால் 2019 க்கு ” தடம் “
Be the first to comment on "தடம் பார்ட் 2 எப்போது வரும்? – “தடம்” விமர்சனம்"