ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 23ம் தேதி உலக புத்தக தினம் என்று கொண்டாடப் படுகிறது. ஆனால் ஏப்ரல் 23ல் கொண்டாடுவதற்கான காரணம் என்ன என்று நம்மில் பாதி பேருக்குத் தெரியாது. அது மட்டுமின்றி புத்தகம் பற்றி நமக்குள் பல கேள்விகள் வந்து செல்லும். இந்தப் பகுதியில் அது போன்ற கேள்விகளுக்கு ஓரளவுக்கு பதில் கிடைக்கும். கொஞ்சம் பெரியதாக இருந்தாலும் மிகுந்த பயனுள்ளவை என்பதால் தயவு செய்து நிதானமாக படிக்கவும்.
ஏப்ரல் இருபத்தி மூன்றில் உலக புத்தக தினம் ஏன்?
ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு பிரிவான யுனெஸ்கோ 1995ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதியை உலகப் புத்தகம் மற்றும் காப்புரிமை தினம் என்று அறிவித்தது. அப்படி ஏப்ரல் 23ம் தேதியை மட்டும் குறிப்பிட்டு அறிவித்ததற்கு சில காரணங்கள் உண்டு.
உலகப் புகழ்பெற்ற ஸ்பெயின் நாட்டு எழுத்தாளர் மிகுள் டி செர்வன்டெஸ் அவர்கள் மறைந்த தினம் – ஏப்ரல் 23
அதே போல் உலகப் புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் வில்லியம் ஷேக்ஸ்பியர் அவர்களின் பிறப்பு மற்றும் மறைவு தினம் – ஏப்ரல் 23. இது போல புகழ் பெற்ற பல எழுத்தாளர்களின் பிறந்த தினமும் இறந்த தினமும் ஏப்ரல் 23ல் அமைந்ததால் உலக புத்தக தினம் அந்நாளில் கொண்டாடப்படுகிறது என்று கூறுகின்றனர். ஆனால் யுனெஸ்கோ அப்படி காரணம் பார்த்து வைக்கவில்லையாம். இருந்தாலும் இந்த நாளில் உலக புத்தக தினம் அமைந்தது அழகான எதேர்ச்சையான நிகழ்வு என்றே கூற வேண்டும். அது மட்டுமின்றி ஏப்ரல் 23ம் தேதி காடலோனியா பகுதி மக்களின் திருவிழா நாளாகும். இந்த நாளில் தான் எத்தனை அம்சங்கள்.
அதே சமயம் இந்த நாளை உலக நாடுகள் அனைத்துமே உலக புத்தக தினமாக கொண்டாடுவதில்லை. இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாட்டினர் மட்டும் மார்ச் முதல் வாரத்தில் ஒரு நாளை புத்தக தினமாக அவர்கள் கொண்டாடி வருகின்றனர். 1995ம் ஆண்டே யுனெஸ்கோ அறிவித்தாலும் நமது நாட்டில் 2007ம் ஆண்டில் இருந்து தான் உலக புத்தக தினம் பரவலாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆரம்ப கால புத்தகம்?
களி மண்ணின் மீது,சுமேரிய எழுத்துக்கள் எழுதப்பட்டு புத்தகம் என்ற நிலையில் கிடைத்துள்ளன. இதனை ஆங்கிலத்தில் டேப்ளெட் என்றனர். இந்த பெயரைத் தான் அண்மையில் உருவாக்கியுள்ள மின்னணு கருவிக்கும் டேப்ளெட் என்று கொடுத்து உள்ளனர். இதன் பிறகு காகிதத்தில் எழுதப்பட்ட புத்தகங்கள் கிடைக்கப் பெற்றன. இந்த காகிதத்தை தயாரிக்க துவக்க காலத்தில் பாப்பிரஸ் என்ற தாவரத்தின் தண்டுகளால் உருவாக்கப்பட்ட தளமே எழுதுவதற்கு இன்றைய காகிதம் போல பயன்படுத்தப் படுகிறது.
காகிதத்தை கண்டறிந்தவர்கள் சீனர்கள் என்பது நம்மில் பலருக்குத் தெரியும். அதே போல அச்சிடும் வழிமுறையை முதன் முதலில் கண்டறிந்தவர்களும் சீனர்களே. கி.பி 105ஆம் ஆண்டு சீன நாட்டில் ஷீயான் ஸிங் என்ற பேரரசனின் ஆட்சியின் போது சாய்லன் என்பவரால் காகிதம் என்பது கண்டுபிடிக்கப் பட்டதாக கூறப்படுகிறது. அந்தக் காகிதம் கோமகன் காகிதம் என்று அழைக்கப்பட்டது.
1320ம் ஆண்டில் அச்சுக்கலைக்குத் தாயகமாக விளங்கும் ஜெர்மனியின் மெயின்ஸ் நகரத்தில் காகிதம் தயாரிக்கும் ஆலைகள் முதன் முதலில் உருவானது. இந்தியாவில் முதன்முதலாகக் காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டது தமிழ்நாட்டில் மட்டுமே. கி.பி 1715ல் தமிழகத்தின் கிழக்கு கடற்கரை நகரமான தரங்கம்பாடிக்கு அருகே உள்ள பொறையாறு என்ற இடத்தில் பார்த்தலோமியா சீகன்பால்கு என்பவர் கையினால் செய்யப்படும் காகிதத் தொழிற்சாலையை நிறுவியுள்ளார்.
ஜோஹன்னஸ் கூட்டன்பர்க் யார்?
மரக்கட்டைகளால் உருவாக்கப்பட்டு அழுத்தம் கொடுக்க பயன் படுத்தப்பட்ட கருவிகளே அச்சு இயந்திரங்களாக புழக்கத்தில் இருந்தன. இதனை மாற்றி அமைத்து எளிமையாக செயல்படும் அச்சு இயந்திரத்தை உருவாக்கியவர் ஜோஹன்னஸ் கூட்டன்பர்க். அதே போல அச்சு எழுத்துக்களை தனித்தனியாக பிரித்து எடுக்கும் வகையில் உருவாக்கியதும் இவர் தான். இந்த இரண்டு காரணங்களால் இவர் அச்சுக்கலையின் தந்தை என போற்றப்படுகிறார்.
இந்தியாவின் முதல் புத்தகம் – முதல் பத்திரிக்கை
1556ம் ஆண்டு போர்ச்சுக்கல் நாட்டிலிருந்து கடல் வழியாக கப்பல்களில் அச்சு இயந்திரங்கள் ஆப்பிரிக்காவிற்கு கொண்டு சென்றனர் போர்ச்சுக்கீசியர்கள். அப்போது ஏற்பட்ட இயற்கை சீற்றம் காரணமாக கப்பல்கள் வழிமாறி இந்தியாவின் மேற்கு கடற்கரை நகரமான கோவாவிற்கு வந்து சேர்ந்துள்ளன. இதை தொடர்ந்து கேரளத்தின் கொல்லம், அம்பழக்காடு, புன்னைக்காயல் ஆகிய நகரங்களில் அச்சகங்கள் தோற்றுவிக்கப்பட்டன. கொல்லத்தில் இந்திய மொழிகளுக்காக உருவாக்கப்பட்ட அச்சு எழுத்துக்களைப் பயன்படுத்தி கிறிஸ்துவ வேத நூலான பைபிள் முதன்முதலாக அச்சிடப் பட்டது. அவற்றில் தம்பிரான் வணக்கம் என்ற தலைப்பில் தமிழ் மொழியில் கிடைத்துள்ள புத்தகத்தின் மூலம் அதுவே இந்திய மொழிகளில் அச்சிடப்பட்ட முதல் புத்தகம் ஆகும். இந்தியாவின் முதல் பத்திரிக்கையான பெங்கால் கெஸட் என்பது 1780ம் ஆண்டு கொல்கத்தாவில் வார இதழாக ஆங்கில மொழியில் வெளியானது.
இவ்வாறு இந்த உலக புத்தக தினம் பல அம்சங்களை எடுத்துரைக்கிறது. புத்தகத்தைப் பற்றி பேசினால் பேசிக்கொண்டே போகலாம். அன்றாடம் குறைந்தது பத்து பக்கங்களையாவது படித்துப் பழகுங்கள். அருகே இருக்கும் நூலகத்தைப் பயன்படுத்துங்கள். உங்களுடைய அடுத்த தலைமுறைக்கு நூல்களின் பலனை சொல்லித் தாருங்கள்.
Be the first to comment on "உலக புத்தக தினம் – ஏப்ரல் 23"